அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘அண்ணாத்த’ படத்துக்கு அட்வான்ஸ்... அரண்டுபோன தியேட்டர் உரிமையாளர்கள்!

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

தமிழகத்தில், மல்டிபிளெக்ஸ் உட்பட சுமார் 1,050 தியேட்டர்கள் இயங்குகின்றன. இவற்றில், சிறிய தியேட்டர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.

‘அண்ணாத்த’ படத்தின் டீசரை ரசித்தபடியே என்ட்ரி கொடுத்தார் கழுகார். அவருக்குச் சூடாகக் கேசரியும், அவித்த வேர்க்கடலையும் தட்டில் நிரப்பிவைத்துவிட்டு, ‘‘டீசரை ரசித்தது போதும்... ‘அண்ணாத்த’ படம் தொடர்பாக ஒரு விவகாரம் சினிமா வட்டாரத்தைக் கலங்கடித்திருக்கிறதே, கேள்விப்பட்டீரா?” என்றோம். கேசரியைச் சுவைத்தபடியே, ‘‘75-25 அக்ரிமென்ட் விவகாரம்தானே... கேள்விப்பட்டேன். ‘ஆட்சிக்கு வந்தவுடனேயே ஆட்டமா?’ என்று தியேட்டர் அதிபர்கள் வட்டாரம் கொந்தளிக்கிறது’’ என்ற கழுகார், செய்திகளுக்குள் நுழைந்தார்.

‘‘ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘அண்ணாத்த’ படத்தின் விநியோக உரிமையை ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் வாங்கியிருக்கிறது. தீபாவளியன்று படத்தை வெளியிடுவதற்கு ஏற்பாடுகள் மும்முரமாகின்றன. முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினின் நிறுவனமான ‘ரெட் ஜெயன்ட்’-க்கு இந்த விநியோக உரிமை வழங்கப்பட்டவிதமே ‘மிரட்டல்’ அடிப்ப டையில்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.’’

“விவரமாகச் சொல்லும்...”

‘‘கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, தமிழ்நாட்டில் தியேட்டர் இருக்கைகளுக்கான அனுமதி தற்போது 50 சதவிகிதமாக மட்டும் இருக்கிறது. ‘இருக்கைகளுக்கான அனுமதியை 100 சதவிகிதமாக உயர்த்தினால்தான், ‘அண்ணாத்த’ படத்தில் லாபம் பார்க்க முடியும்’ என்று தியேட்டர் உரிமையாளர்கள் சிலர் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்திடம் முறையிட்டார்களாம். இதை ஆட்சிபீடத்திடம் ‘சன் பிக்சர்ஸ்’ கொண்டு சென்றபோது, ‘உதயநிதியோட ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’க்கு விநியோக உரிமையைக் கொடுத்துடுங்க. 100 பர்சன்ட் இருக்கைக்கு அனுமதித்துவிடலாம்’ என்று டீல் பேசப்பட்டதாம். வேறு வழியில்லாமல், விநியோக உரிமை ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது. விநியோக உரிமை பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் போட்ட நிபந்தனைதான் தியேட்டர் அதிபர்களைக் கொதிப்பாக்கியிருக்கிறது.’’

“அவர்களுக்கு என்ன பிரச்னை?”

மிஸ்டர் கழுகு: ‘அண்ணாத்த’ படத்துக்கு அட்வான்ஸ்... அரண்டுபோன தியேட்டர் உரிமையாளர்கள்!

“இருக்கிறதே... இது போன்ற விநியோக உரிமை கடந்த காலங்களில் வழங்கப்பட்டபோது, தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பும், விநியோகஸ்தர் தரப்பும் சரிபாதியாக லாபத்தைப் பிரித்துக்கொள்வார்கள். விஜய் நடித்த ‘மாஸ்டர்’ போன்ற ஒருசில படங்களில், இந்த விகிதாசாரம் விநியோகஸ்தருக்குக் கூடுதலாகவும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், எப்போதுமே லாபத்தின் பங்கு 70 சதவிகிதத்தைத் தாண்டியதில்லையாம். ‘அண்ணாத்த’ படத்துக்கான விநியோக உரிமையை வாங்கியிருக்கும் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம், லாபத்தில் 75 சதவிகிதம் பங்கு கேட்கிறதாம். 25 சதவிகிதம்தான் தியேட்டர் உரிமையாளர்களுக்குக் கிடைக்கும். இதுவரையில் இது போன்ற நடைமுறை இல்லை என்கிறது தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பு.’’

‘‘அடக் கொடுமையே!’’

‘‘தமிழகத்தில், மல்டிபிளெக்ஸ் உட்பட சுமார் 1,050 தியேட்டர்கள் இயங்குகின்றன. இவற்றில், சிறிய தியேட்டர்களின் எண்ணிக்கைதான் அதிகம். தீபாவளியன்று விஷால் நடித்த ‘எனிமி’ திரைப்படமும் வெளியாகிறது. தியேட்டர் அதிபர்களிடம், ‘பெரும்பாலான தியேட்டர்களில் ‘அண்ணாத்த’ படத்தைத்தான் ஓட்ட வேண்டும்’ என்று மறைமுக அழுத்தம் கொடுக்கிறதாம் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ தரப்பு. இதில் டென்ஷனான தியேட்டர் உரிமையாளர்கள் சிலர், ‘இவர்களின் 75-25 அக்ரிமென்ட்டுக்குக் கட்டுப்பாட்டால், தியேட்டர்களெல்லாம் நஷ்டத்தையே சந்திக்க வேண்டியிருக்கும். 2006-11 தி.மு.க ஆட்சிக் காலத்தில் சினிமாதுறையையே கருணாநிதி குடும்பம்தான் கட்டுப்படுத்தியது. மீண்டும் அது போன்ற காட்சிகள் அரங்கேறுகின்றன. இவர்களைப் பகைத்துக்கொண்டால், லோக்கலில் மாவட்ட ஆட்சியர் மூலமாகக் குடைச்சல் கொடுப்பார்கள். அதனால், யாரும் பொதுவெளியில் எதிர்த்து பேசுவதில்லை’ என்று புலம்பித் தீர்க்கிறார்கள்.’’

“வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்த, 16 மாவட்டங்களுக்குப் பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களே?’’

“எல்லாம் நகராட்சி, மாநகராட்சித் தேர்தலைக் குறிவைத்துத்தான். கோவைக்கு செந்தில் பாலாஜி, சேலத்துக்கு கே.என்.நேரு, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூருக்கு எ.வ.வேலு என ‘வலுவான’ ஆட்களாகப் பார்த்துத்தான் பொறுப்பு வழங்கியிருக்கிறார் ஸ்டாலின். இதில் சில அரசியல் கணக்குகளும் இருக்கின்றனவாம். முன்னாள் அமைச்சர் வேலுமணியுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நெருக்கம் காட்டுவதாகப் புகார்கள் எழுந்தன. ஆட்சி மாறியும், கோவை மாவட்ட அதிகாரிகள் மட்டத்தில், வேலுமணி தரப்பு பவர்ஃபுல்லாகவே வலம்வந்தது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேலுமணியை எதிர்ப்பதற்கு செந்தில் பாலாஜிதான் சரியான ஆள் என்பதால், அவரை அங்கு களமிறக்கியிருக் கிறார்களாம். விரைவில் கோவை மாவட்ட அதிகாரிகள், தி.மு.க நிர்வாகிகளைத் தனித்தனியாகச் சந்திக்கவிருக்கும் செந்தில் பாலாஜி, வேலுமணியின் அதிகாரத்துக்கு செக் வைப்பார் என்கிறது விவரமறிந்த வட்டாரம். அதேபோல, நாகை மாவட்டத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் கௌதமனுக்கும், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனுக்கும் பனிப்போர் நிலவுவதால், நாகை மாவட்டப் பொறுப்பாளராக அமைச்சர் மெய்யநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறாராம்.’’

‘‘ம்ம்...’’

‘‘திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க செயலாளர் தேவராஜி, தன் இளைய மருமகள் காயத்ரி பிரபாகரனை ஆலங்காயம் ஒன்றியத் தலைவர் ஆக்குவதற்காக, மற்ற கவுன்சிலர்களைக் கத்திமுனையில் மிரட்டியதாகக் காவல்துறையில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் அக்டோபர் 20-ம் தேதி இரவு, காட்பாடியிலிருக்கும் தனது வீட்டில் பஞ்சாயத்து நடத்திய துரைமுருகன், மாவட்டச் செயலாளருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிவிட்டாராம். ‘தேவராஜிக்கு எதிரான வேலைகளைத் தூண்டிவிட்டதே துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்தான். பிள்ளையை மகன் கிள்ளிவிட்டுவிட, தொட்டிலை அப்பா ஆட்டிவிடுகிறார்’ என்று நமுட்டுச் சிரிப்புச் சிரிக்கிறது திருப்பத்தூர் தி.மு.க’’ என்ற கழுகாருக்கு, இஞ்சி டீயை நீட்டினோம். டீயைப் பருகியபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: ‘அண்ணாத்த’ படத்துக்கு அட்வான்ஸ்... அரண்டுபோன தியேட்டர் உரிமையாளர்கள்!

‘‘ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தில்லுமுல்லு செய்துவிட்டதாகப் புகாரளித்திருக்கிறார். ஆளுநரைச் சந்திக்கப்போகும் தகவலை, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் எடப்பாடி தரப்பு சொல்லவே இல்லையாம். கோவையில் ஆயுர்வேத சிகிச்சையிலிருந்த பன்னீருக்கு லேட்டாகத்தான் விஷயம் தெரிந்திருக்கிறது. ‘நம்மை மதிச்சு சொல்லாதப்போ, எதுக்கு ஆளுநரைப் பார்க்கப் போறீங்கனு நாம எப்படிக் கேட்கறது? விடுங்க... அவங்க பண்றதைப் பண்ணட்டும்’ என்று தன்னுடன் இருந்தவர்களிடம் விரக்தியாகச் சொல்லியிருக்கிறார் பன்னீர். ஆளுநரை எடப்பாடி டீம் சந்தித்ததே, பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைத் தக்கவைப்பதற்கும், ‘அ.தி.மு.க-வின் உண்மையான உரிமையாளர்கள் நாங்கள்தான்’ என்று சசிகலாவுக்கு ‘செக்’ வைப்பதற்கும்தானாம். ஆளுநரைச் சந்தித்த அன்று இரவே ‘சசிகலாவுக்கும் அ.தி.மு.க-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனாலும், அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளர் எனக் கூறி குழப்பம் விளைவிக்கிறார்’ என மாஜி அமைச்சர் ஜெயக்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் இதற்காகவே என்கிறார்கள்.’’

‘‘வாரிசுக்குப் பதவி கொடுத்துவிட்டாரே?’’

‘‘வைகோவைச் சொல்கிறீரா? ‘பட்டத்து இளவரசருக்குப் பதவி கொடுக்க என்னை வெளியேற்றினார் கருணாநிதி’ என்று தி.மு.க-விலிருந்து வெளியே வந்த வைகோ, இன்று அவருடைய வாரிசுக்குத் தலைமை நிலையச் செயலாளர் பதவியை வழங்கி அழகுபார்த்திருக் கிறார். அக்டோபர் 20-ம் தேதி நடந்த கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், துரை.வைகோ அரசியல் என்ட்ரி குறித்து வாக்கெடுப்பு நடத்தி, அதன் முடிவில் பதவியைக் கொடுத்ததாக வைகோ பிரகடனப்படுத்தினார்.’’

“வாரிசு அரசியலைக் கடுமையாக எதிர்த்த வைகோவே கடைசியில்...”

‘‘காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு அல்லவா? நிர்வாகிகள் கூட்டத்தில் வைகோ பேசும்போது, ‘உங்கள் விருப்பத்தின்படி முடிவெடுங்கள். என் மகன் என்பதற்காக நீங்கள் வாக்களிக்க வேண்டாம்’ என்று சொல்லியே வாக்கெடுப்பு நடத்தியிருக்கிறார். இரண்டு ஓட்டுகள் மட்டும் துரை.வைகோவுக்கு எதிராக விழுந்திருக்கின்றன. துரை.வைகோவின் அரசியல் என்ட்ரிக்குப் பிறகு கட்சிக்குள் முணுமுணுப்புகள் அதிகமாகிவிட்டன. மாநில இளைஞரணிச் செயலாளர் கோவை ஈஸ்வரன், துரை.வைகோவுக்குப் பதவி வழங்கப்பட்டதைக் கண்டித்து, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அத்துடன் ‘மறுமலர்ச்சி மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் பொதுசேவைக்காக இயக்கம் தொடங்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.’’

“ஆளும் தரப்பில் என்ன நடக்கிறதாம்?’’

‘‘அடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகச் சொல்லியிருக்கிறார்கள். ஜனவரி மாத இறுதிக்குள் தேர்தலை நடத்திவிடும் முடிவில் இருக்கிறது தலைமை’’ என்ற கழுகார், “இந்த மாத இறுதியில் பசும்பொன்னில் நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் சசிகலா கலந்துகொள்ளவிருக் கிறார்’’ என்று சொல்லிவிட்டு விருட்டெனப் பறந்தார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* டெல்டா மாவட்டத்தில், கூட்டுறவு சார் பதிவாளராக இருக்கும் முன்னாள் முதல்வரின் பெயர்கொண்டவர், கடந்த ஆட்சியாளர்களுக்கு ரொம்ப நெருக்கம். தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன், திருமதி முதன்மையின் உறவினரிடம் ஒட்டிக்கொண்ட அந்த அதிகாரி, ‘முதலமைச்சர் குடும்பத்துக்கு வேண்டியவன்’ எனச் சொல்லியே பல அடாவடிகளை அரங்கேற்றுகிறாராம்!

* கதர்க் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவர், தன் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத் தலைவரிடமும் இரண்டு லட்டுகள் வீதம் கறந்துவிட்டாராம். “ரெண்டு கிலோ கேக் வெட்டுறதுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய வசூல்?” என்று புலம்புகிறது கதர் வட்டாரம்.