அரசியல்
அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஆளுநர்களின் மும்முனைத் தாக்குதல்... குறி தி.மு.க-வுக்கா, அ.தி.மு.க-வுக்கா?

ஆர்.என்.ரவி, தமிழிசை செளந்தரராஜன், பன்வாரிலால் புரோஹித்,
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.என்.ரவி, தமிழிசை செளந்தரராஜன், பன்வாரிலால் புரோஹித்,

கோயில்கள், பள்ளிக்கூடங்களில் தீண்டாமை அதிகமுள்ள மாநிலமும் தமிழ்நாடுதான்’ என்பதே அவர் வைத்த குற்றச்சாட்டு.

புத்தாடை அணிந்து அலுவலகத்துக்கு வந்த கழுகாரிடம், “தீபாவளியை உற்சாகமாகக் கொண்டாடியிருக்கிறீர்போல?” என்று நாம் கேட்க, “அதெல்லாம் சிறப்புதான்... தீபாவளிப் பட்டாசைவிட, ஆளுநர்கள் வெர்சஸ் திராவிடக் கட்சிகளுக்கு இடையிலான அரசியல் பட்டாசு தான் காதைப் பிளந்தது...” என்று நேரடியாக உரையாடலைத் தொடங்கினார் கழுகார்.

“பன்வாரிலால் புரோஹித், ஆர்.என்.ரவி, தமிழிசை செளந்தரராஜன் என மூன்று ஆளுநர்கள் தமிழ்நாட்டின் மீது மும்முனைத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். ‘நான் ஆளுநராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அங்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி 40 முதல் 50 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனாலும், 27 துணைவேந்தர்களை நான் சட்டப்படி நியமனம் செய்தேன். என்னிடமிருந்து பஞ்சாப் அரசு கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பேசியிருக்கிறார் தற்போது பஞ்சாப் ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோஹித். துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வகைசெய்யும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க, தி.மு.க அரசு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நெருக்கடி கொடுத்துவரும் நிலையில் பன்வாரிலாலின் இந்தக் கருத்து தி.மு.க-வைச் சீண்டுவதாக இருக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க-வைக் கடுமையாக உஷ்ணப்படுத்தியிருக்கிறது ஆளுநரின் பேச்சு.”

மிஸ்டர் கழுகு: ஆளுநர்களின் மும்முனைத் தாக்குதல்... குறி தி.மு.க-வுக்கா, அ.தி.மு.க-வுக்கா?

“ஆளுநர்மீது கோபப்பட, எடப்பாடி என்ன ஜெயலலிதாவா?”

“அதுதான் இல்லை. ‘கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் 50-க்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவருக்கு 50 கோடி என்றால் 50 பேருக்கு 2,500 கோடி ரூபாய் அ.தி.மு.க சம்பாதித்திருக்கிறதா?’ என்ற சர்ச்சையால் இதற்கு பதிலளித்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானது அ.தி.மு.க. எனவே, ‘துணைவேந்தர் நியமனத்தில் அரசுக்கு எந்தத் தொடர்புமில்லை. எந்தத் தவறு நடந்திருந்தாலும் அன்றைக்கு ஆளுநராக இருந்தவர்தான் பொறுப்பு’ என்று முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனைவைத்து அதற்கு பதிலடி கொடுக்கவைத்திருக்கிறது எடப்பாடி தரப்பு.”

“எடப்பாடி முதல்வராக இருந்தபோது, பன்வாரிலாலின் செயலுக்கு சிறு எதிர்ப்பைக்கூட பதிவுசெய்யாதவர்களுக்கு இப்போது எங்கிருந்து வந்தது இவ்வளவு கோபம்?”

“ உட்கட்சிப்பூசல், ஆணைய அறிக்கைகளால் கலகலத்துப்போயிருக்கும் அ.தி.மு.க-வை, இப்போது இருக்கும் சூழலைப் பயன்படுத்தி மேலும் டேமேஜ் செய்து தங்களின் இருப்பைத் தமிழ்நாட்டில் அழுத்தமாகப் பதிவுசெய்யப் பார்க்கிறார்கள் பா.ஜ.க-வினர் என்று எடப்பாடி தரப்பு நினைக்கிறதாம். அதனால்தான் ஆளுங்கட்சியாக இருந்தபோதுகூட அவரை எதிர்க்காத எடப்பாடி தரப்பு, இப்போது வேகமாக எதிர்வினையாற்றியிருக்கிறது.”

“அது சரி... ஆர்.என்.ரவி-யின் குற்றச்சாட்டு கடுமையாக இருக்கிறதே?”

“கொஞ்சம் கடுமையானதுதான். ‘24% பட்டியலின மக்கள் வசித்துவரும் தமிழ்நாட்டில், வெறும் 13 முதல் 14 சதவிகிதப் பட்டியலினக் குழந்தைகளே பள்ளிக்குச் செல்கின்றனர். கோயில்கள், பள்ளிக்கூடங்களில் தீண்டாமை அதிகமுள்ள மாநிலமும் தமிழ்நாடுதான்’ என்பதே அவர் வைத்த குற்றச்சாட்டு. இதற்கு தி.மு.க., மத்திய அரசின் தரவுகளைக்கொண்டே சட்டப்பேரவையில் பதிலடி கொடுத்துவிட்டது என்றாலும், ‘அந்தத் தரவு உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை தொடர்பானது. ஆளுநர் சொன்னது பள்ளிக்கல்வியில் மட்டும்’ என்கிறார்கள். ஆனால், ‘பள்ளிக் கல்வியிலும்கூட வடமாநிலங்களைவிட தமிழ்நாட்டில்தான் அதிக பட்டியலின மாணவர்கள் படிக்கிறார்கள். தீண்டாமை தொடர்பான வழக்குகளில் பா.ஜ.க ஆளும் உத்தரப்பிரதேசத்தைவிட தமிழ்நாட்டில் 10 மடங்கு குறைவான வழக்குகளே பதிவாகின்றன. இதுவும் மத்திய அரசு வெளியிட்டிருக்கும் தரவில்தான் இருக்கிறது. இந்த விவகாரத்தில் தவறான தரவைக் கொடுத்து தேவையில்லாத சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் ஆளுநர்’ என்கிறார்கள் தி.மு.க தரப்பில்.”

“ ‘தமிழ்நாட்டில் மூக்கையும் நுழைப்பேன்... தலையையும் நுழைப்பேன்... காலையும் வைப்பேன்’ என ரைமிங்காக மிரட்டியிருக்கிறாரே தமிழிசை?

மிஸ்டர் கழுகு: ஆளுநர்களின் மும்முனைத் தாக்குதல்... குறி தி.மு.க-வுக்கா, அ.தி.மு.க-வுக்கா?

“தெலங்கானா ஆளுநராகத் தன் மூன்றாண்டுப் பயணம் குறித்த ‘ரீடிஸ்கவரிங் செல்ஃப் இன் செல்ஃப்லெஸ் சர்வீஸ்’ (Rediscovering Self in Selfless Service) என்ற புத்தகத்தை, சென்னையில் வெளியிட்டார் தமிழிசை. அந்தக் கூட்டத்தில்தான் இப்படிப் பேசியிருக்கிறார். இது தி.மு.க அரசுமீதான தாக்குதலாகக் கருதப்பட்டாலும், இன்னொரு கருத்தையும் சொல்கிறார்கள். தமிழ்நாடு பா.ஜ.க-வில் யாரும் அவரை மதிப்பதில்லையாம். குறிப்பாக, மாநிலத் தலைமை. தனக்கு நீண்ட அரசியல் பயணத்துக்கான வாய்ப்பு இருப்பதால், தமிழ்நாடு அரசியலில் தனது தொடர்பு அறுந்துவிடக் கூடாது என்று கருதுகிறாராம் தமிழிசை. அதனால்தான், இப்படியான அதிரடியான பேச்சுகள் அவருக்குத் தேவைப்படுகின்றன என்கிறார்கள்.”

“பா.ம.க-வின் இளைஞரணித் தலைவராக, ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் அறிவிக்கப்பட்டிருப்பதன் பின்னணி...”

“இளைஞரணித் தலைவராக இருந்த அன்புமணி, கட்சியின் தலைவரானதும் அந்தப் பதவி காலியானது. ‘பசுமைத் தாயகம்’ அருள், கட்சியின் துணைத் தலைவர் சாம் பால், முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார் ஆகியோர் அந்தப் பதவிக்கான ரேஸில் இருந்தனர். அன்புமணிக்காகத் தன்னுடைய தலைவர் பதவியை விட்டுக்கொடுத்தவர் ஜி.கே.மணி. இதற்குக் கைமாறாகவே ரேஸில் பலர் இருந்தபோதும் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனை இளைஞரணித் தலைவராக நியமித்திருக்கிறாராம் மருத்துவர் ராமதாஸ். ‘லைக்கா’ நிறுவனத்தில் சி.இ.ஓ-வாகப் பணியாற்றிவரும் தமிழ்க்குமரன், உதயநிதியின் ‘ரெட் ஜெயன்ட்’ நிறுவனத்துடனும் தொடர்பு டையவராம். ‘பசையுள்ள கை... தேர்தல் நேரத்தில், தி.மு.க-வுடன் பேசுவதற்கும் பயன்படுவார் என்பத ற்காகவும் நியமித்திருக்கலாம்’ என்கிறார்கள் மாங்கனி வட்டாரத்தில்...” என்ற கழுகாருக்கு கருப்பட்டிப் பணியாரமும், அச்சு முறுக்கும் கொடுத்தோம். அவற்றை ருசித்தபடியே அடுத்த செய்திக்குத் தாவினார்.

தமிழ்க்குமரன்
தமிழ்க்குமரன்

“போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு நடந்துவருகிறது அல்லவா... அவருக்கு எதிராகப் புகாரளித்த சிலர், ‘போலீஸ் சரியாக விசாரிக்கவில்லை. வழக்கை மீண்டும் விசாரியுங்கள்’ என்று இப்போது உயர் நீதிமன்றப் படி ஏறியிருக்கிறார்கள். ‘இது செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் யுக்தி’ என எதிர்க்கட்சிகள் பொருமும் நிலையில், தன் மீதான வழக்கை ரத்துசெய்யக் கோரி செந்தில் பாலாஜியும் ஒரு மனு போட்டிருக்கிறார். அந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், அமலாக்கத்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ், ‘வேலைக்காக இரண்டரை லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்தவர்கள், இப்போது வழக்கைத் திரும்பப் பெற மூத்த வழக்கறிஞர்களை வைத்து வழக்கை நடத்துவது ஆச்சர்யமளிக்கிறது’ என்றிருக்கிறார். ‘செந்தில் பாலாஜியிடம் கொடுத்த பணம் திரும்பிவந்தால் போதும் என்கிற மனநிலையில் இருந்தவர்களுக்கு, இப்போது வழக்குகளுக்குச் செலவுசெய்ய மட்டும் பணம் எங்கேயிருந்து வந்தது?’ என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பலமாக எழுந்திருக்கிறது.”

“ஓஹோ...”

“தி.மு.க மேலிட சாஸ்தா பிரமுகர், பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ மாடலில், தேர்தல் வியூகம் வகுத்துக்கொடுக்கும் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். நிறுவனத்தை கவனிக்கும் பொறுப்பு அவருடைய உறவுக்கார பெண் வசம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. இதற்காக, லண்டனிலிருந்து சென்னைக்கு வந்திருக்கும் அந்தப் பெண், ‘நான்தான் சீஃப் ஆஃப் ஸ்டாஃப். என்னென்ன கவர்மென்ட் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்கிற தகவலை என்னிடம் சொல்லுங்கள்’ என முதல்வர் அலுவலக அதிகாரிகளை உலுக்க ஆரம்பித்திருக்கிறாராம். ‘இருக்குற பிரச்னை பத்தாதுனு இந்தப் பெண் தரும் குடைச்சல் தாங்க முடியவில்லையே...’ எனப் புலம்பித் தீர்க்கிறார்கள் மூத்த அதிகாரிகள்.”

“தீபாவளி வசூலில் இறங்கிய அதிகாரிகள் பற்றிய செய்தி ஏதாவது..?”

“எதைச் சொல்வது... எதை விடுவது... ஒன்று மட்டும் சொல்கிறார்கள்... தீபாவளி வசூலில் சென்னை புறநகரில் பணியாற்றும் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர்தான் முதலிடத்தில் இருக்கிறாராம். பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வழங்கியது தொடங்கி மற்ற கடைகளைக் கூடுதல் நேரம் திறக்க அனுமதித்தது வரை அனைத்துக்கும் டேரிஃப் போட்டு வசூல்வேட்டையை நடத்தி முடித்திருக்கிறாராம் அவர். டி.ஜி.பி அலுவலகத்துக்கு உளவுத்துறை ரிப்போர்ட் போடும் அளவுக்கு மேட்டர் சீரியஸ் என்கிறார்கள்” என்ற கழுகார்...

“மாநில உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவிலிருக்கும் உளவுத்துறை அதிகாரிகள் சிலர், சமூக விஷயங்களுக்காகப் போராடும் நபர்களை மனரீதியாக ‘அட்டாக்’ செய்யும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, அவர்களின் குடும்பப் பெண்களுக்கு போன் போட்டு, மிரட்டும் தொனியில் பேசுகிறார்களாம். இதை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்ற சமூகச் செயற்பாட்டாளர்கள், `எதிர்க்கட்சியாக நீங்கள் இருந்தபோது போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தீர்கள். இப்போது உங்கள் உளவுத்துறையே போராடுபவர்களை மறைமுகமாக மிரட்டுகிறதே...’ என்றிருக்கிறார்கள். இதில் முதல்வர் உளவுத்துறைமீது ஏக அப்செட்டாம். விரைவில் சாட்டை சுழற்றப்படும் என்கிறது கோட்டை வட்டாரம்’’ என்றபடி சிறகுகளை விரித்தார்.