Published:Updated:

மிஸ்டர் கழுகு: “கட்சி ஆரம்பிக்கலாங்ணா...” - விஜய்யை உசுப்பேற்றும் ரசிகர்கள்!

படம்: கிரண் சா

பிரீமியம் ஸ்டோரி

கையில் மைசூர் பாகுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். புரியாமல் நாம் விழிக்கவும், ‘‘கடந்த இதழில், ‘அள்ளிக் குவிக்கிறாங்க, அட்ராசிட்டி பண்றாங்க’ என்று உமது நிருபர் படை அளித்திருந்த கவர் ஸ்டோரி பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது. ஊர் முழுவதும் இதுதான் பேச்சு. ஆளும் தலைமையும் அமைச்சர்கள் விஷயத்தில் அலர்ட்டாகிவிட்டது. சபாஷ்!’’ என்றபடி மைசூர் பாகை நமக்களித்தார். ‘‘நடப்பதைத்தான் சொல்கிறோம்...’’ என்று பாராட்டை ஏற்றுக்கொண்டோம்.

‘‘அக்டோபர் 23-ம் தேதி, பிரதமருடனான ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பிலும், தி.மு.க அமைச்சரவை பற்றித்தான் பெருமளவு பேசப்பட்டிருக்கிறது’’ என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

‘‘பிரதமருடனான தனது சந்திப்பின்போது, தி.மு.க அரசின்மீது தமிழக பா.ஜ.க அளித்திருந்த ஊழல் புகார்கள் தொடர்பாகவும், மின்சாரம், போக்குவரத்து, ஆவின், உணவுத்துறைகளில் நடைபெறும் சில முறைகேடுகள் தொடர்பாகவும் தனக்கு வந்திருக்கும் புகார்கள் பற்றி விளக்கிக் கூறியிருக்கிறார் ஆளுநர் ரவி. தவிர, நீட் தேர்வு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் பிரதமரிடம் அவர் பேசியிருக்கிறார். அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்ட பிரதமர், ‘தி.மு.க-வைத் தாக்கி, பிரதான எதிர்க்கட்சியாக வேண்டும் என்பதுதான் நமது நிலைப்பாடு. கட்சி நிர்வாகிகளிடம் தி.மு.க-வின் ஊழல்களை அம்பலப்படுத்தச் சொல்லியிருக்கிறேன். அதற்குத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள்’ என்று ரவிக்கு ஆலோசனையளித்திருக்கிறார் மோடி.’’

‘‘ஓஹோ... அப்படியென்றால், பா.ஜ.க-வின் வியூகம் தமிழகத்தில் மாறுகிறதோ?’’

‘‘ஆமாம். மதம், திராவிட எதிர்ப்பு, சமூக அரசியலைக் கையிலெடுத்தவர்கள், அது எடுபடவில்லை என்பதால், ஊழல் எதிர்ப்பு வியூகத்துக்குத் தாவியிருக்கிறார்கள். ‘அ.தி.மு.க-வின் ஊழல்களை தி.மு.க அம்பலப்படுத்தும் நிலையில், அ.தி.மு.க வலுவிழக்கும். தி.மு.க அமைச்சர்கள்மீது தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போது, அது ஸ்டாலின் அரசுக்கு நெருக்கடியாக மாறும். தொடர்ந்து ஆளும் அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைக் களத்திலும் பிடித்துவிடலாம்’ என்று திட்டமிடுகிறது பா.ஜ.க. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள தொழிற்சாலைகளிலிருந்து வருடத்துக்கு சுமார் மூன்று முதல் ஐந்து லட்சம் டன் ‘ஸ்க்ராப்’ வெளியாகிறது. ஆட்சி மேலிடத்தின் குடும்பப் பிரமுகர் ஒருவர்தான் இந்த ஸ்க்ராப் பிசினஸைத் தனது கன்ட்ரோலில் வைத்திருக்கிறாராம். இது தொடர்பாகச் சில தரவுகளைச் சேகரித்துவருகிறதாம் பா.ஜ.க. அதேபோல, சோலார் மின்சாரக் கொள்முதலில் நடந்த முறைகேடு பற்றியும் விரைவிலேயே பேசவிருக்கிறாராம் பா.ஜ.க மாநிலத் தலைவரான அண்ணாமலை. மத்திய உளவுத்துறை மூலமாக ராஜ்பவனுக்குக் கிடைக்கும் தகவல்களை, அண்ணாமலைக்கு பாஸ் செய்யும் வேலையும் துரிதமாகியிருக்கிறது.’’

‘‘ஆளுங்கட்சி விவகாரத்தைத் தோண்டும் அண்ணாமலை, சொந்தக் கட்சி விவகாரத்தில் கோட்டைவிட்டு விடுவார்போலவே?’’

‘‘தமிழ்நாடு பா.ஜ.க-வுக்குப் புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அண்ணாமலை டெல்லி சென்று திரும்பி கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ஆகப்போகின்றன. ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் அறிவிப்பு, விஜயதசமி முடிந்ததும் அறிவிப்பு என்று பல தகவல்கள் வெளியாகி, புஸ்ஸாகிவிட்டது. நிர்வாகிகள் நியமனம் எப்போது என்று அண்ணாமலையிடமே சிலர் கேட்டிருக்கிறார்கள். பதில் இல்லை. அதேசமயம், நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அண்ணாமலை ரகசிய சர்வே நடத்தியிருக்கிறாராம். அதன்படி, மாநிலச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்படவிருப்பவர்கள் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துள்ளார்கள். விஷயம் உள்ளவர்களை மட்டுமே துணைத் தலைவராக நியமிக்கவிருக்கிறார்களாம். ஊடகங்களைச் சந்திக்கும் பொறுப்பை, துணைத் தலைவர்கள் வசம் ஒப்படைக்கும் திட்டத்தில் அண்ணாமலை இருக்கிறார் என்கிறார்கள்’’ என்ற கழுகாருக்கு சூடான மூலிகைத் தேநீரை நீட்டிவிட்டு,

‘‘ ‘அ.தி.மு.க-வில் சசிகலாவைச் சேர்ப்பது குறித்து கட்சியின் நிர்வாகிகள்தான் முடிவெடுப்பார்கள்’ என்கிறாரே பன்னீர்செல்வம்... இரட்டைத் தலைமைகளுக்குள் மீண்டும் முட்டிக்கொண்டதா?’’ என்றோம். தேநீரைச் சுவைத்தபடி செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்.

‘‘முட்டல் மோதல் பஞ்சாயத்து என்றைக்கு ஓய்ந்தது? சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமுமான இளங்கோவன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியதற்கு, எடப்பாடி பழனிசாமி மட்டுமே கட்சியின் அறிக்கை வாயிலாகக் கண்டித்திருக்கிறார். ‘இளங்கோவன் அவர் ஆளுதானே... அறிக்கையில் கையெழுத்து போட முடியாது’ என்று பன்னீர் முரண்டு பிடித்ததால், எடப்பாடி தரப்பு உஷ்ணமாகியிருக்கிறது. தவிர, சசிகலாவைக் கடுமையான வார்த்தைகளால் எடப்பாடி விமர்சித்ததைப் பன்னீர் ரசிக்கவில்லை என்கிறார்கள். தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘இவர் இப்படிப் பேசிட்டுப் போயிடுறாரு. நம்மால சொந்தக்காரங்க முன்னால தலைகாட்ட முடியலை’ என்று விசும்பியிருக்கிறார் அவர். சசிகலாவை விமர்சிப்பதால் சமூதாயரீதியாகத் தனக்குப் பின்னடைவு ஏற்படுவதைத்தான் பன்னீர் இப்படிக் குறிப்பிட்டாராம். அதனால் தான், ‘சசிகலாவை இணைப்பது குறித்து கட்சி நிர்வாகிகள் முடிவெடுப்பார்கள்’ என்று அவர் எடப்பாடிக்கு செக் வைத்ததாகச் சொல்கிறார்கள். கூடவே, இரட்டைத் தலைமைதான் கட்சியில் இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டு, ‘சின்னத்துக்குக் கையெழுத்திடும் அதிகாரத்தை சசிகலாவுக்காகக்கூட விட்டுத் தர முடியாது’ என்பதையும் மறைமுகமாகக் கூறியிருக்கிறார் பன்னீர்.’’

‘‘அலைகள் ஓயாதுபோல...’’

‘‘சில இதழ்களுக்கு முன்னதாக, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பற்றி முதல்வருக்கு மொட்டைக் கடுதாசி வருவதைப் பற்றிக் கூறியிருந்தேன் அல்லவா? அந்தக் கடிதங்கள் யார் தூண்டுதலின் பேரில் வருகிறது என்பதை விசாரிக்கச் சொல்லியிருந்தார் முதல்வர். அதில் ஒரு அப்டேட். இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தான், இந்த மொட்டைக் கடுதாசிக்குக் காரணகர்த்தாக்களாம். தங்களுக்குப் பசையுள்ள துறைகள் ஒதுக்கப்படாததால் வெறுப்பிலிருக்கும் அவர்கள், சக அதிகாரிகளைப் பற்றி இப்படிப் போட்டுக்கொடுப்பதை உளவுத்துறை தோண்டியெடுத்திருக்கிறது. ‘கர்நாடகா, மகாராஷ்டிரா, ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த இரண்டு அதிகாரிகள் பெயர்களிலும் ஏகப்பட்ட சொத்துகள் உள்ளன. இப்படிப்பட்டவர்களுக்கு எப்படிப் பொறுப்புள்ள பதவி அளிக்க முடியும்?’ என்று கொந்தளிக்கிறது ஐ.ஏ.எஸ் வட்டாரம்.’’

மிஸ்டர் கழுகு: “கட்சி ஆரம்பிக்கலாங்ணா...” - விஜய்யை உசுப்பேற்றும் ரசிகர்கள்!

‘‘ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ‘விஜய் மக்கள் இயக்கத்’தின் பேரில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 128 பேரையும் விஜய் சந்தித்தாராமே?’’

‘‘ஆம். அக்டோபர் 25-ம் தேதியன்று மினி பாராட்டுவிழாவாகவே நடந்திருக்கிறது. வெற்றி வேட்பாளர்களிடம், ‘என்ன சொல்லி ஓட்டுக் கேட்டீங்க... என் பேரைச் சொல்லி ஓட்டு கேட்டபோது மக்கள் ரியாக்‌ஷன் என்ன... மக்களுக்கு என்னென்ன செய்யப்போறீங்க?’ என்றெல்லாம் கேட்டு உள்வாங்கிக்கொண்டாராம் விஜய்.’’

‘‘என்னமோ திட்டமிருக்கு!’’

‘‘இருக்கலாம். பல்வேறு மாவட்ட நிர்வாகிகளும் விஜய்யிடம், ‘இது சிறிய அளவிலான தேர்தல்தான். மேயர் தேர்தலில் ஒவ்வொரு கவுன்சிலர் பதவியும் முக்கியமானது. எனவே, நாம் புதிய கட்சி தொடங்கி, அதன் மூலம் தேர்தலைச் சந்திக்க வேண்டும். சுயேச்சையாகத் தேர்தலைச் சந்தித்தால், வெற்றிபெற்றவர்களைப் பெரிய கட்சிகள் விலைக்கு வாங்கிவிட வாய்ப்பு அதிகம். இயக்கமாக இருந்து இந்தத் தேர்தலில் நம் பலத்தைக் காட்டிவிட்டோம். இனி, புதிய கட்சி அடையாளத்தில் மாநகராட்சித் தேர்தலைச் சந்தித்தால்தான் நமக்கு கெத்து. பிரசாரத்துக்கு வரலைன்னாலும் ஒரு வீடியோ வாய்ஸாவது நீங்க குடுக்கணும்’ என்று விஜய்யைக் கேட்டுக்கொண்டார்களாம்’’ என்றபடி புறப்படத் தயாரான கழுகார்,

‘‘சேலத்தில் இளங்கோவன் வீட்டில் நடந்த ரெய்டால், மலைக்கோட்டை நகரிலுள்ள பால் பிரமுகர் அரண்டுகிடக்கிறாராம். இளங்கோவனின் ஆஸ்திகளுக்குக் காவலராக இருந்ததால், எப்போது வேண்டுமானாலும் ரெய்டு வரலாம் என்று புலம்பிவருகிறாராம்’’ என்று சொல்லிவிட்டு விருட்டெனப் பறந்தார்.

*****

சர்ச்சையில் சமூகநீதி கண்காணிப்புக்குழு!

‘கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூகநீதி அளவுகோல் முறையாக, முழுமையாகப் பின்பற்றப்படுகிறதா?’ என்பதைக் கண்காணிக்கும் வகையில் ‘சமூகநீதிக் கண்காணிப்புக்குழு’வை அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அக்டோபர் 23-ம் தேதி உத்தரவிட்டார். பேராசிரியர் சுப.வீரபாண்டியனைத் தலைவராகவும், கவிஞர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட ஆறு பேரை உறுப்பினர்களாகவும்கொண்ட அறிவிப்பு முதலில் வெளியானது. இதில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான கி.தனவேலை உறுப்பினராக நியமித்தது பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது. 1999-ல் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீது காவல்துறையால் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலால், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் மாண்டார்கள். அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்தவர்தான் இந்த தனவேல். கண்ணகி - முருகேசன் கொலை வழக்கில், கொலையாளிகள் தரப்புக்கு ஆதரவாகச் சமரசம் மேற்கொண்டார் எனவும் இவர்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்னொரு விஷயம்... முதலில் வெளியான பட்டியலில் பெண்கள் யாரும் உறுப்பினராக இல்லாதது குறித்துப் பலர் கேள்வியெழுப்பினார்கள். அதைத் தொடர்ந்து, அடுத்த நாள் மருத்துவர் சாந்தி உறுப்பினராக நியமிக்கப்பட்டார்!

மிஸ்டர் கழுகு: “கட்சி ஆரம்பிக்கலாங்ணா...” - விஜய்யை உசுப்பேற்றும் ரசிகர்கள்!

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* மாரத்தான் வேகத்தில் தனது துறைக்குள் செயல்படும் அமைச்சர், தனது துறைசார்ந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இரண்டு லட்டுகள் வீதம் வாங்கிக் குவிக்கிறாராம். இதுபோக, மாவட்ட அளவிலான அதிகாரிகளிடமிருந்தும் மாதம்தோறும் கவனிப்பு வந்துவிட வேண்டும் என்பதும் உத்தரவாம்.

* ஆட்சியின் மூத்த இருக்கைக்குச் சொந்தக்கார நபர், கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 20 ஸ்வீட் பாக்ஸ்களுக்கு மேல் பெற்றுவிட்டாராம். தென் மாவட்டத்தில் எந்த அரசு ஒப்பந்தம் வந்தாலும் மூத்தவர் தரப்பினர் முதலிலேயே இரட்டை இலக்கத்தில் ‘கட்டிங்’கைக் கறாராக வாங்கிவிடுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு