அலசல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: டெல்லி அசைன்மென்ட்... கண்காணிப்பில் ஆளுந்தரப்பு வாரிசுகள்!

எ.வ.வேலு
பிரீமியம் ஸ்டோரி
News
எ.வ.வேலு

அஃபீஷியலாக அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ம.க வெளியேறிவிட்டாலும், அன்-அஃபீஷியலாக ஆங்காங்கே அ.தி.மு.க-வுடன் பா.ம.க நிர்வாகிகள் அண்டர் டீலிங் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கேபினுக்குள் நுழைந்த கழுகார் தயாராக இருந்த கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டார். “ம்ம்ம்... ரெளடிகள் மட்டுமல்ல... ஆளுங்கட்சியின் புள்ளிகளுமே அடாவடியைத் தொடங்கிவிட்டார்கள்” என்ற கழுகாருக்கு இளநீர் சர்பத்தை நீட்டியபடி “என்ன சொல்லவருகிறீர்கள்?” என்றோம்.

“தி.மு.க-வில் அமைச்சர்கள் முதல் மா.செ-க்கள் வரை இளைஞரணி நிர்வாகிகளுடன் இணக்கமாகத்தான் இருப்பார்கள். ஆனால், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் அக்கா மகனும், சிதம்பரம் நகரச்செயலாளருமான செந்தில்குமார் செய்த காரியம் கட்சிக்காரர்களையே கொந்தளிக்க வைத்துவிட்டது. பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவனின் ஆதரவாளரான இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகேயனைத் தனது வீட்டுக்கு வரவழைத்த செந்தில்குமார், ‘இனிமே கதிரவன் பக்கம் உன்னை நான் பார்க்கக் கூடாது. இளைஞரணியில இருந்தா நீ பெரியாளுன்னு நினைப்பா!’ என்று கேட்டு முக்கால் மணி நேரம் முட்டிபோட வைத்திருக்கிறார்.”

“ஐயோ... சமூகநீதி பேசும் கட்சியில் இப்படியொரு கொடுமையா... என்ன காரணமாம்?”

“ஒருகாலத்தில் செந்தில்குமாருக்கு ஆல் இன் ஆலாக இருந்தவர்தான் இந்த கார்த்திகேயன். இப்போது அமைச்சர் பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் பவர் சென்ட்டராக மாறியதும், கார்த்திகேயன் அவர் பக்கம் வந்துவிட்டார். அந்தக் கடுப்பில்தான் கார்த்திகேயனை முட்டிபோட வைத்தாராம் செந்தில்குமார். இந்த விவகாரம் உதயநிதியின் காதுக்கும் செல்ல... கோபமடைந்தவர், செந்தில்குமார் மீது ஆக்‌ஷன் எடுக்க அவரின் மாமா பன்னீர்செல்வத்துக்கே ஆர்டர் போட்டிருக்கிறார் என்கிறார்கள்.”

“என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்... ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்திருக்கிறது போலவே!”

செந்தில்குமார்
செந்தில்குமார்

‘‘ஆமாம். 2,981 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் பல இடங்களில் களேபரங்கள் தொடங்கிவிட்டன. வாக்குப்பதிவு நாள்களான அக்டோபர் 6, 9 தேதிகளில் எப்படியாவது தேர்தலை அமைதியாக நடத்திவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறது மாநிலத் தேர்தல் ஆணையம். இன்னொரு பக்கம் ஐந்தாண்டுகளாகியும் நடத்தப்படாமலிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த நான்கு மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். அதன்படி 2022, ஜனவரி மாதத்துக்குள் தேர்தலை நடத்த வேண்டும். ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிந்து பதவியேற்பு நடைமுறைகள், முதல் கூட்டம் ஆகியவை முடிவதற்குள் அக்டோபர் மாதம் முடிந்துவிடும். அடுத்த இரண்டு மாதங்களுக்குள் எப்படி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது என்று தி.மு.க அரசு யோசித்துவருகிறதாம். இதற்கிடையே ‘ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெறுவோம். தேர்தல் முடிவுகளைப் பார்த்த பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது பற்றி முடிவு செய்துகொள்ளலாம்’ என்று சீனியர்கள் சிலர் முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்கள்.”

“இரட்டைக் குதிரையில் சவாரி செய்கிறதாமே பா.ம.க?”

‘‘அஃபீஷியலாக அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ம.க வெளியேறிவிட்டாலும், அன்-அஃபீஷியலாக ஆங்காங்கே அ.தி.மு.க-வுடன் பா.ம.க நிர்வாகிகள் அண்டர் டீலிங் வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதையறிந்த ராமதாஸ் தோட்டமே அதிரும்படி கர்ஜித்த விஷயத்தை ஏற்கெனவே சொல்லியிருந்தேன்... ஆனாலும் நிலைமை மாறவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் ஏற்கெனவே அ.தி.மு.க-வுடன் பா.ம.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், இப்போது சிலர் தி.மு.க-விடமும் ரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தி கவுன்சிலர் சீட்டைப் பெற்றுவருகிறார்கள். நெல்லை, தென்காசி மாவட்டங்கள் தவிர மற்ற ஏழு மாவட்டங்களிலும் இது நடந்துவருகிறது என்கிறார்கள்.’’

‘‘தன்மீதான நடவடிக்கையிலிருந்து தப்புவதற்காக மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் வெங்கடாசலம் கடுமையாக முயன்றார் என்கிறார்களே... உண்மைதானா?”

‘‘ஆமாம். சுற்றுச்சூழல்துறையில் ஏற்கெனவே பணிபுரிந்த ஓர் உயரதிகாரியின் அலுவலகத்தில் இருந்தபடி, தன் மீதான நடவடிக்கையிலிருந்து தப்புவதற்கு காய்நகர்த்தினாராம் வெங்கடாசலம். அந்த உயரதிகாரியின் டெல்லி உறவினர் மூலமாக மத்திய அரசின் ஆதரவைப் பெறவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், ‘மாநில அரசின் அதிகார வரம்பில் தலையிட முடியாது’ என்று டெல்லி கைவிரித்துவிட்டதால், லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த திடீர் ரெய்டு நடவடிக்கையை வெங்கடாசலம் தரப்பால் தடுக்க முடியவில்லை என்கிறார்கள். இந்த ரெய்டில், 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தடையில்லாச் சான்று வழங்கியதில் முறைகேடு நடைபெற்றிருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை” என்ற கழுகாருக்குச் சூடாக மசால் வடையை நீட்டினோம்... வடையை ருசித்தபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார்...

மிஸ்டர் கழுகு: டெல்லி அசைன்மென்ட்... கண்காணிப்பில் ஆளுந்தரப்பு வாரிசுகள்!

‘‘வழக்கமாக தமிழக காங்கிரஸ் கட்சிக்குள்தான் கோஷ்டிப்பூசலால் அதிருப்திக் குரல்கள் எழும்... ஆனால், இம்முறை கேரளத்திலிருந்து ப.சிதம்பரத்துக்கு எதிராகக் கொதிக்கிறார்கள் கதர்ச் சட்டைக்காரர்கள். சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதிய ப.சிதம்பரம், ‘நார்கோட்டிக் ஜிகாத் என்பது சிதைந்த சிந்தனையிலிருந்து உருவானது’ என பிஷப் ஜோசப் கல்லறங்காட் பெயரைக் கூறி விமர்சித்ததுடன், இந்த விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன் சிறப்பாகச் செயல்பட்டதாகவும் பாராட்டியிருந்தார். இதற்குத்தான் கேரள காங்கிரஸ் கட்சிக் கடுப்பை காட்டியுள்ளது. கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன், ‘கேரள மாநில விஷயத்தில் கேரளத் தலைவர்கள்தான் கருத்து சொல்ல வேண்டும். ப.சிதம்பரத்திடம் யாரும் இது பற்றிக் கேட்கவில்லை’ என்று ஆவேசமாகப் பொங்கியிருக்கிறார்!”

‘‘பெண் தொழிலதிபரிடம் அமைச்சர் ஒருவர் வாக்குவாதம் செய்த விஷயம் தெரியுமா?”

‘‘கோவை விவகாரம்தானே... என் காதுக்கும் அந்த விஷயம் வந்தது. சமீபத்தில் அமைச்சர் எ.வ.வேலு கோவை வந்தபோது பெண் தொழிலதிபர் ஒருவர், ‘கோவையையும் கொஞ்சம் கண்டுக்கோங்க. நிறைய பிரச்னைகள் இருக்கு’ என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். ஆவேசமடைந்த அமைச்சர் எ.வ.வேலு, ‘கோவைதான் எங்களைக் கண்டுக்காமப் போயிடுச்சு. அப்படியும்கூட எங்க தலைவர் ஸ்டாலின் கோவையை விட்டுடக் கூடாதுன்னு சொல்லியிருக்கார். அதுக்குத்தான் நாங்க அடிக்கடி இங்க வந்துக்கிட்டு இருக்கோம்’ என்று பதிலுக்கு மல்லுக்கட்டியிருக்கிறார்” என்ற கழுகார் “விஷயத்தை மட்டும் சொல்கிறேன்... யார் என்பதை யூகித்துக்கொள்ளும்” என்றபடி தொடர்ந்தார்...

மிஸ்டர் கழுகு: டெல்லி அசைன்மென்ட்... கண்காணிப்பில் ஆளுந்தரப்பு வாரிசுகள்!

“சமீபத்தில் டெல்லி சென்றிருந்த அதி முக்கிய அதிகாரப் புள்ளிக்கு முக்கிய அசைன்மென்ட்டை அளித்திருக்கிறது மத்திய அரசு. ஆளுந்தரப்பில் இரண்டு வாரிசுகளைக் கண்காணித்து, நிதி விவகாரங்கள் எங்கேயிருந்து வருகின்றன, அவை எப்படியெல்லாம் பத்திரப்படுத்தப்படுகின்றன என்ற விவரங்களை ‘நோட்’ போட்டு அனுப்பச் சொல்லியிருக்கிறார்கள். விரைவில் இந்த விவகாரம் ஆளுந்தரப்புக்குப் பெரும் சிக்கலாக உருவெடுக்கலாம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* ‘பவர்’ஃபுல் அமைச்சர் தரப்பிலிருந்து தினமும் நான்கு பெரிய ஸ்வீட் பாக்ஸ்கள் சேரவேண்டிய இடத்துக்கு டெலிவரி ஆகிவிடுகின்றனவாம். “வளமான துறையைவெச்சுக்கிட்டு இவர் கொடுப்பாரு... நாங்க எங்க போறது?” என்று புலம்புகிறார்கள் இதர அமைச்சர்கள் தரப்பு!

* எல்காட் டெண்டர்களில் ஒருசில நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளடி வேலை பார்த்த அதிகாரிகள் சிலரை வேறு பிரிவுகளுக்குத் தூக்கியடித்திருக்கிறார் உயரதிகாரி. வருமானம் பறிபோவதால் கொதிப்பிலிருக்கும் சில புரோக்கர்கள் தரப்பு, அந்த உயரதிகாரியைத் துறையிலிருந்து தூக்குவதற்கு ஆட்சி மேலிடம் வரை அழுத்தம் கொடுக்கிறதாம்.

முருகன் பாலியல் வழக்கு... தமிழகத்திலேயே விசாரணை

ஐ.ஜி முருகன் மீது பாலியல் புகார் சொல்லியிருந்த பெண் எஸ்.பி ஏற்கெனவே, ‘இந்த வழக்கைத் தமிழகத்தில் நடத்தினால், எனக்கு நீதி கிடைக்காது. ஐ.ஜி முருகன் சாட்சிகளைக் கலைத்துவிடுவார்’ என்று முறையிட்டதால், விசாரணை தெலங்கானாவுக்கு மாற்றப்பட்டது. அதற்கு முருகன் தடையாணை வாங்கியிருந்த நிலையில், தெலங்கானாவுக்கு விசாரணை மாற்றப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ‘தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் வழக்கைத் தமிழகத்திலேயே விசாரித்தால்தான் தனக்கு நீதி கிடைக்கும்’ என்று அந்தப் பெண் எஸ்.பி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தெலங்கானாவுக்கு விசாரணையை மாற்றிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.