Published:Updated:

மிஸ்டர் கழுகு: நேர்த்திக்கடன்... ஆன்மிக யாத்திரை கிளம்பும் துர்கா ஸ்டாலின்!

துர்கா ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
துர்கா ஸ்டாலின்

பதினோராவது உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருக்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்

மிஸ்டர் கழுகு: நேர்த்திக்கடன்... ஆன்மிக யாத்திரை கிளம்பும் துர்கா ஸ்டாலின்!

பதினோராவது உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருக்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்

Published:Updated:
துர்கா ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
துர்கா ஸ்டாலின்
மிஸ்டர் கழுகு: நேர்த்திக்கடன்... ஆன்மிக யாத்திரை கிளம்பும் துர்கா ஸ்டாலின்!

சாரல் மழையில் நனைந்தபடியே என்ட்ரி கொடுத்த கழுகாருக்கு, தலை துடைக்க டவலும் சூடான பிளாக் டீயும் கொடுத்தோம்... போனில் யாருடனோ, “உங்கள் ஊரில் சர்ச்சைகள் ஓயாது போலிருக்கிறதே” என்று பேசிவிட்டு, செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்...

“சமீபத்தில் `தமிழகம் நூறு... தளபதி நூறு...’ என்ற தலைப்பில் ‘கலைஞர் விருது’ வழங்கும் விழா, திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. தனியார் அமைப்பு ஒன்று நடத்திய இந்த விழா தொடர்பாக நிதி வசூலிப்பதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இது குறித்து விழாவுக்கு முன்னதாகவே கல்வியாளர்கள் சிலர் முதல்வர் ஸ்டாலின், திருச்சி மாவட்ட அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். இந்த விவகாரத்தைத் தெரிந்துகொண்ட அன்பில் மகேஷ் அந்த நிகழ்ச்சிக்குச் செல்வதைத் தவிர்த்துவிட... விவரம் தெரியாமல் நேரு கலந்து கொண்டிருக் கிறார். மேடையிலிருந்த அமைச்சரிடம் இதைப் பற்றி உளவுத்துறையினர் கிசுகிசுத்ததும் அதிர்ச்சியடைந்தவர், ‘அட, ஏங்க எங்களுக்குச் சிக்கலை ஏற்படுத்துறீங்க?’ என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் கடுகடுத்துவிட்டு, பாதியில் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.’’

‘‘அமைச்சர் இன்னும் உஷாராக இருக்க வேண்டும் என்று சொல்லும்!’’

“சமீபத்தில் குஜராத்தில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், நார்கோட்டிக்ஸ் கன்ட்ரோல் பீரோவும், வருவாய் புலனாய்வுத்துறையும் சென்னையையும் கோவையையும் மையமாகவைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன. இலங்கை வரை நீளும் இந்த விவகாரத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் இருக்கின்றனவாம்.’’

‘‘என்னவென்று சொல்லும்...’’

‘‘ஹெராயின் கடத்தலில் பிடிபட்ட சென்னையைச் சேர்ந்த சுதாகரும், கோவையைச் சேர்ந்த ராஜ்குமாரும் முகப்பவுடரை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் தொழில் செய்துவந்த நிலையில், துபாயைச் சேர்ந்த ஜாவத் என்பவரின் தொடர்பு ராஜ்குமாருக்குக் கிடைத்திருக்கிறது. இந்த ஜாவத், ஆப்கானிஸ்தானின் போதைப்பொருள் கடத்தல் மாஃபியா அசன் உசேன் என்பவரின் கூட்டாளியாம். ஜாவத், ராஜ்குமார் ஆகியோரின் தொடர்பைவைத்து ஆறு முறை இந்தியாவுக்கு வந்து சென்றிருக்கிறார் அசன் உசேன். குஜராத்தில் பிடிபட்ட ஹெராயின் விவகாரத்துக்கும் இலங்கையிலுள்ள போதைக் கடத்தல் புள்ளிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறதாம். குறிப்பாக, இறந்துபோன இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்காவுடன் தொடர்பிலிருந்த சிலரை கோவை போலீஸார் ஓராண்டுக்கு முன்பு கைதுசெய்திருந்தார்கள். அவர்கள் மூலம் இலங்கையிலுள்ள போதைப் பொருள் கடத்தல் புள்ளிகளுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த கடத்தல் புள்ளிகளுக்கும் இருக்கும் தொடர்புகள் பற்றி வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்’’ என்ற கழுகாருக்கு வறுத்த நிலக்கடலையைக் கொடுத்தோம். கடலையைக் கொறித்தபடியே செய்திகளைத் தொடர்ந்தார்...

‘‘பதினோராவது உலகத் தமிழ் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியிருக்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம். சமீபத்தில் மாநாடு நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடந்துள்ளது. இதில், 50-க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் பங்கேற்று கருத்துகளை முன்வைத்துள்ளார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, ‘உலகத் தமிழ் மாநாட்டை தமிழகத்தில் நடத்துவது பற்றி முதல்வர் முடிவெடுப்பார்’ என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார். இப்போது மாநாடு நடத்தும் பணிகளில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் இறங்கியிருக்கும் நிலையில், தமிழக அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்த ரியாக்‌ஷனும் இல்லை என்று வருத்தப்படுகிறார்கள் தமிழ் அறிஞர்கள்.’’

‘‘ஆனால், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு என்று மார்தட்டிக்கொள்கிறார்களே...’’

‘‘இன்னும் இருக்கிறது கேளும்... தமிழக அரசு இந்த விவகாரத்தைக் கண்டுகொள்ளாத நிலையில், இந்த விவரம் மத்திய அரசுக்குச் சென்றுள்ளது. உடனே, இந்த மாநாட்டை சென்னை ஐஐடி வளாகத்தில் நடத்தத் தயாராக இருப்பதாக மத்திய அரசுத் தரப்பிலிருந்து மாநாட்டுக்குழுவுக்குத் தகவல் அனுப்பியிருக் கிறார்கள். ஆனால், உலகத் தமிழ் மாநாட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் தி.மு.க-வைச் சேர்ந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இது தெரிந்து அதிர்ச்சியாகி, விஷயத்தை தமிழக அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். இன்னொரு பக்கம் உலகத் தமிழ் மாநாட்டை மலேசியாவில் நடத்த அந்த நாட்டின் தமிழ்ச் சங்கம் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த தமிழறிஞர்களோ, ‘கடைசியாக 1995-ம் ஆண்டு தஞ்சையில் நடந்த 8-வது உலகத் தமிழ் மாநாடுதான் தமிழகத்தில் நடந்த கடைசி மாநாடு. இந்த முறை அந்த வாய்ப்பை தமிழக அரசு தவறவிடக் கூடாது’ என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.’’

‘‘அரசியல் மாநாடு நடத்த ஆசைப்பட்டவரின் கனவு கலைந்துபோயிருக்கிறதே!’’

‘‘எஸ்.ஏ.சி பற்றித்தான் சொல்கிறீர் என்பது புரிகிறது. நடிகர் விஜய்க்கும், அவரின் அப்பா சந்திரசேகருக்கும் இடையில் விரிசல் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தான் ஆக்டிவாக இருக்கும்போதே விஜய் அரசியலுக்குள் வந்தால் நல்லது என்று நினைக்கிறாராம் எஸ்.ஏ.சி. ஆனால், ‘இன்னும் இரண்டு ஆண்டுகள் ஜாதகரீதியாக எனக்குச் சிக்கல்கள் இருப்பதால் இப்போது அவசரப்பட வேண்டாம்’ என்று தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் விஜய் தன் அப்பாவிடம் பேசியிருக்கிறார். இதுவே விவாதமாக மாறி, கடைசியில் பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்... விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது என்கிறார்கள். தன் கட்டுப்பாட்டிலிருந்து விஜய் சென்றதற்கு அவரின் மனைவி சங்கீதாவே காரணம் என்று வருத்தத்தில் இருக்கிறாராம் எஸ்.ஏ.சி.’’

மிஸ்டர் கழுகு: நேர்த்திக்கடன்... ஆன்மிக யாத்திரை கிளம்பும் துர்கா ஸ்டாலின்!

‘‘அதிருக்கட்டும். முதல்வரின் மனைவி வட மாநிலங்களுக்கு ஆன்மிகப் பயணம் செல்லப்போகிறாராமே?’’

‘‘ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்று ஏற்கெனவே வைத்திருந்த வேண்டுதல்களையெல்லாம் இப்போது நிறைவேற்றிவருகிறார். அதன்படி காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கும், கேதார்நாத் சிவன் கோயிலுக்கும் சென்று சில நேர்த்திக்கடன்களை முடிக்கவிருக்கிறார். அத்துடன் நேபாளத்திலுள்ள பிரபல சிவன் கோயிலுக்குச் செல்லவும் திட்டமிட்டிருக்கிறார். இப்படி ஒருபுறம் கோயில்களுக்குச் சென்றுகொண்டே, மறுபுறம் சில கோயில்களைக் கட்டவும் துர்கா தரப்பில் வேலைகள் தீவிரமாகியிருக்கின்றன.’’

‘‘பகுத்தறிவு குடும்பத்திலிருந்து குடமுழுக்கு... ஆச்சர்யம்தான்!’’

‘‘அதுமட்டுமல்ல... சமீபத்தில் மகாபலிபுரத்தில் பெருமாள் சிலை ஒன்றை வாங்கியிருக்கிறார் துர்கா. இந்தச் சிலையை ஆர்டர் கொடுத்தது இலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா என்கிறார்கள். ஆனால், என்ன காரணத்தாலோ அந்தச் சிலையை சந்திரிகா வாங்காமல் போக, தற்போது துர்கா அதை வாங்கியிருக்கிறார். கிருஷ்ணகிரியில் துர்கா கட்டிவரும் கோயிலில் அந்தச் சிலையை பிரதிஷ்டை செய்யப் போகிறார்கள். அதேபோல், கன்னியாகுமரியிலும், மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு கிராமத்திலும் கோயில்களைக் கட்டிவருகிறார் துர்கா. திருவண்ணாமலையில் பக்தர்கள் வசதிக்காக ஒரு கட்டடம் கட்ட அண்ணாமலையார் கோயில் நிர்வாகத்திடமும் இடம் கேட்டிருக்கிறார்கள்.’’

‘‘சரி... சரி... முதல்வரின் தருமபுரி விசிட்டில் என்ன விசேஷம்?’’

‘‘தருமபுரி செல்லும் முன்பாக சேலம் மாவட்டம், ஆத்தூரில் ஜவ்வரிசி ஆலை அதிபர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை செப்டம்பர் 29-ம் தேதி நடத்தினார் முதல்வர். அன்று மாலை கருப்பூரில் சிப்காட்டிலுள்ள எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களின் அதிபர்களுடன் சந்திப்பு நடந்தது. இந்த இரண்டு இடங்களிலும் செய்தி சேகரிப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தினர் செய்தியாளர்களை அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், நிகழ்ச்சியில் ஆளுங்கட்சித் தரப்பு சேனலைத் தவிர யாரையும் அனுமதிக்கவில்லை. நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வெளியே கால்கடுக்க நிற்க வைத்திருக்கிறார்கள். ‘இதென்ன ஜெயலலிதா ஆட்சியா?’ என்று பொங்குகிறார்கள் செய்தியாளர்கள்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* டெல்டா மாவட்டத்தில் அரசுப் பொறுப்பிலிருக்கும் ‘இல்லத்தரசி’யின் சகோதரர், பல்வேறு அரசுத் துறைகளிலும் வகையாக கல்லாகட்டிவருகிறார். டெல்டா மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லாதது அவருக்கு வசதியாகப் போய்விட்டது என்கிறார்கள்.

* ஆளுங்கட்சி தொலைக்காட்சியில் முக்கியப் பொறுப்பிலுள்ள இதிகாச நாயகனின் பெயர்கொண்டவர், ‘வடமாநில ஆன்லைன் சூதாட்ட நிறுவன அதிபரிடம் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு எந்தச் சிக்கலும் வராது’ என்று பெரும் தொகையைக் கறந்துவிட்டாராம். அத்துடன், அரசு ஒப்பந்தங்களை டீல் செய்வதற்காகவே தனி அலுவலகமும் போட்டிருக்கிறாராம்.

மிஸ்டர் கழுகு: நேர்த்திக்கடன்... ஆன்மிக யாத்திரை கிளம்பும் துர்கா ஸ்டாலின்!

தாமதமான அறிக்கை... பின்னணி என்ன?

செப்டம்பர் 28-ம் தேதி ஜோலார்பேட்டையில் நடந்த தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில், எம்.ஜி.ஆரை துரோகி என்று தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் விமர்சித்தது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், அ.தி.மு.க தலைமையிலிருந்து இதற்கு ரியாக்‌ஷன் வரும் என்று இரண்டு நாள்களாகக் காத்திருந்து எதுவும் வராத நிலையில், செப்டம்பர் 30-ம் தேதி அ.தி.மு.க-வின் ‘நமது அம்மா’ நாளிதழில் ‘யாரய்யா துரோகி... கூறய்யா பாவி...’ என்ற தலைப்பில் ஒரு பக்கத்துக்கு காட்டமான கட்டுரை வெளியானது. அதன் பிறகே, கட்சியின் மூத்த தலைவர்கள் எடப்பாடி, பன்னீரிடம் ‘எம்.ஜி.ஆரையே துரோகியா விமர்சிச்சிருக்காங்க... இப்படி அமைதியா இருந்தா எப்படி?’ என்று கோபப்பட்டிருக்கிறார்கள். அதன் பிறகே செப்டம்பர் 30-ம் தேதி இரவு ‘துரோகி யார்?’ என்று காட்டமான அறிக்கையை வெளியிட்டிருக்கிறது அ.தி.மு.க தலைமை.

அறிக்கை தாமதத்துக்கான பின்னணியை விசாரித்தால், “எடப்பாடி, பன்னீர் இருவருமே ஆளுங்கட்சியை சரிக்கட்ட துரைமுருகனுடன் மென்மையான போக்கைக் கடைப்பிடிக் கிறார்கள். அதனால்தான் அறிக்கை வெளியிடக்கூட யோசித்திருக்கிறார்கள். அறிக்கை தாமதமாக இதுதான் காரணம்” என்கிறார்கள்.