Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஆள்பிடிக்கும் ஆட்டம்... தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க கண்ணாமூச்சி!

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி. உதயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி. உதயகுமார்

சினிமாவிலும், இயக்குநர் சங்கத் தேர்தலிலும் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால் வெளியே தலைகாட்டாமல் இருந்த பாக்யராஜுக்கு மீண்டும் அரசியல் ஆசை வந்திருக்கிறது.

மிஸ்டர் கழுகு: ஆள்பிடிக்கும் ஆட்டம்... தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க கண்ணாமூச்சி!

சினிமாவிலும், இயக்குநர் சங்கத் தேர்தலிலும் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால் வெளியே தலைகாட்டாமல் இருந்த பாக்யராஜுக்கு மீண்டும் அரசியல் ஆசை வந்திருக்கிறது.

Published:Updated:
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி. உதயகுமார்
பிரீமியம் ஸ்டோரி
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி. உதயகுமார்

மழையில் லேசாக நனைந்தபடி ‘என்ட்ரி’ கொடுத்தார் கழுகார். துடைக்க டவலும், குடிக்க சுக்கு மல்லிக் காபியும் கொடுத்து உபசரித்தோம். “என்ன கவனிப்பெல்லாம் பலமாக இருக்கிறது... ஐயப்பனுக்கு, ஓ.பி.எஸ் மீது வந்த ‘திடீர் பாசம்’ போலல்லவா இருக்கிறது உம் பாசம்?” என்று கிண்டலடித்தபடியே செய்திக்குள் நுழைந்தார் கழுகார்.

“உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செயலாளராக இருக்கும் மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில்தான் வருகிறது. அவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாகத்தான் ஐயப்பன் ஓ.பி.எஸ் அணிக்கே தாவினாராம். ஓ.பி.எஸ்-ஸை ஓரங்கட்டுகையில், தென்மாவட்டங்களில் எந்தவிதச் சலசலப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் அசைன்மென்ட்டையே ஆர்.பி. உதயகுமாரிடம்தான் கொடுத்திருந்தார் இ.பி.எஸ். சீனியரான ராஜன் செல்லப்பா கடுமையாக மோதியும்கூட, ஓ.பி.எஸ் வகித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஆர்.பி.உதயகுமாருக்குக் கொடுத்த காரணமும் அதுதான். ஆனால், தன் மாவட்டத்திலேயே அவர் கோட்டைவிட்டு நிற்பது இ.பி.எஸ்-ஸை எரிச்சலூட்டியிருக்கிறது. ‘ஒரு ஆள்தானே அண்ணே’ என ஆர்.பி சொல்ல, ‘பொறுப்பில்லாம பேசாதீங்க... முதல்ல ஒரு ஆளுனுதான் ஆரம்பிக் கும்...’ என்று பொரிந்து தள்ளியிருக்கிறார். தேனி மாவட்டத்துக்குள் இறங்கி ஓ.பி.எஸ் ஆட்களை அள்ளிவர வலை விரித்தபோது, கண்ணா மூச்சிபோல தன் மந்தையிலேயே ஓர் ஆட்டைத் தூக்கிவிட்டார்களே என்ற கோபத்தில்தான், ஓ.பி.எஸ்-ஸைக் கடுமையாக விமர்சித்து அறிக்கையை யும் வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார் உதயகுமார்.”

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி. உதயகுமார்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், ஆர்.பி. உதயகுமார்

“அப்புறம்...”

“இது ஆரம்பம்தான் என்று கண் சிமிட்டுகிறது பன்னீர் தரப்பு. மொத்தம் 36 எம்.எல்.ஏ-க்களுக்கு வலை விரித்திருக்கிறார்களாம். அவர்களை வரவேற்பதற்குத் தேவையான ‘ஸ்வீட் பாக்ஸ்’கள் சசிகலா தரப்பிலிருந்து வரத் தொடங்கிவிட்டதால் உற்சாகமாகக் களமிறங்கியிருக்கிறார்கள். பூலித்தேவர் ஜெயந்தியை முடித்த கையோடு, வைத்திலிங்கம் போட்டுக் கொடுத்த ரூட்டில் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்கிறார் பன்னீர். ‘இணைப்பே வேண்டாம்னு எடப்பாடி சொல்றார். இணைந்து செயல்படுவோம்னு நாம சொல்லுவோம். கட்சி உடையுறதை விரும்பாத தொண்டர்களுக்கு எடப்பாடி வில்லனா மாறிடுவார். நாம ஹீரோவா மாறிடலாம்’ எனத் திட்டமிட்டு காய்நகர்த்துகிறது பன்னீர் தரப்பு. ‘எனக்குப் பதவி வேண்டாம்; கட்சி ஒற்றுமையாக இருந்தால் போதும்’ என்று பன்னீர் பேசியதெல் லாம் இந்தத் திட்டத்தின் ஒரு பகுதிதானாம்.”

“நடிகர் பாக்யராஜ் ஓ.பி.எஸ்-ஸைச் சந்தித்து அ.தி.மு.க-வில் இணைந்திருக்கிறாரே... அது என்ன கதை?”

பா.ஜ.க-வில் இணைந்த தி.மு.க-வினர்
பா.ஜ.க-வில் இணைந்த தி.மு.க-வினர்

“சினிமாவிலும், இயக்குநர் சங்கத் தேர்தலிலும் அடுத்தடுத்து தோல்வியடைந்ததால் வெளியே தலைகாட்டாமல் இருந்த பாக்யராஜுக்கு மீண்டும் அரசியல் ஆசை வந்திருக்கிறது. அ.தி.மு.க தற்போது பிரிந்திருப்பதால், எடப்பாடி பக்கம் செல்லவே முதலில் திட்டமிட்டிருக்கிறார் பாக்யராஜ். ஆனால், எடப்பாடி தரப்பில் பெரிய வரவேற்பில்லையாம். அதன் பிறகே ஓ.பி.எஸ் பக்கம் பேசினாராம். ஆள்பிடிக்கும் ஆட்டத்தில் அவர்கள் ஆர்வமாக இருப்பதால், உடனே வரச் சொல்லி சேர்த்துக்கொண்டார்கள்.”

“எடப்பாடி முகாமில் நிறைய பேர் நம்பிக்கை இழந்துவிட்டார்களாமே?”

“அது ஒரு பெரிய கதை. சுருக்கமாகச் சொல் கிறேன். பழனிசாமி அணிக்கான சட்டரீதியான பணிகளை ஆரம்பம் முதலே சி.வி.சண்முகம், இன்பதுரை உள்ளிட்டவர்கள்தான் செய்து வருகிறார்கள். தன்னைத் தவிர்த்துவிட்டு அவர்கள் இருவரும் ஸ்கோர் செய்வது பிடிக்காத தளவாய் சுந்தரம், எடப்பாடி அணி சட்டரீதியாக வீக்காக இருக்கிறது என்று கிளப்பி விட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அதேபோல அந்த முகாமில் மூத்த நிர்வாகிகள் நம்பிக்கை யிழந்து, எடப்பாடியை நெருக்குவதாக வெளியான செய்திகளுக்குப் பின்னும் அவரேதான் இருக்கிறார் என்கிறார்கள் எடப்பாடிக்கு நெருக்கமான சிலர்.”

ஸ்டாலினுடன் முன்னாள் எம்.எல்.ஏ தினகரன்
ஸ்டாலினுடன் முன்னாள் எம்.எல்.ஏ தினகரன்

“ஓஹோ...”

“அ.தி.மு.க-வில் மட்டுமல்ல, தி.மு.க – பா.ஜ.க-வுக்குள்ளும் ஆள்பிடிக்கும் வேலைகள் தீவிர மடைந்திருக்கின்றன. முதல்வர் ஸ்டாலினின் கோவை சுற்றுப்பயணத்தின்போது, அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, தே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏ தினகரன், தமிழக பா.ஜ.க மகளிரணி மாநிலச் செயலாளராக இருந்த மைதிலி வினோ ஆகியோர் தி.மு.க-வில் இணைந்தனர். அதேசமயம், செந்தில் பாலாஜிக்கு கொங்கு மண்டலத்தில் கிடைக்கும் முக்கியத்துவத்தை ரசிக்காத தி.மு.க சீனியர் நிர்வாகிகளைத் தன் பக்கம் இழுக்கும் வேலையில் இறங்கியது பா.ஜ.க. தி.மு.க திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலமுருகன், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செந்தில்நாதன், விக்னேஷ் உள்ளிட்டோர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ.க-வில் சேர்ந்தது இப்படித்தானாம். செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டிலுள்ள கொங்குப் பகுதியிலிருந்து மேலும் பல அதிருப்தி யாளர்களை இழுக்க பா.ஜ.க திட்டமிட்டிருக் கிறதாம்” என்ற கழுகார் டேபிளில் இருந்த சாக்லேட்களில் ஒன்றை வாயில் போட்டுக் கொண்டார். அது கரையும் வரையில் கண்களை மூடி ருசித்தவர் அடுத்த செய்திக்குள் நுழைந்தார்.

“திருப்பூரில் அமையவிருக்கும் புதிய பேருந்து நிலையத்துக்கு முதல்வர் ஸ்டாலினின் பெயரை வைக்க முடிவுசெய்து, மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார் மேயர் தினேஷ் குமார். அப்படி நடந்துவிட்டால், `மு.க.ஸ்டாலின் பெயரிடப்பட்ட தமிழ்நாட்டின் முதல் பேருந்து நிலையம்’ என்று அத்தனை ‘கிரெடிட்’டும் மேயருக்குச் சென்றுவிடும் என்று சிலரைத் தூண்டிவிட்டு அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவைத்திருக்கிறாராம் அப்பகுதி அமைச்சர். இந்த நெருக்கடி ஒருபக்கம் இருக்க, கோவை, ஈரோடு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஆகஸ்ட் 24-ம் தேதி திருப்பூருக்கு முதல்வர் வந்த நிகழ்ச்சிக்கான அனைத்துச் செலவுகளையும் மேயர் தலையில் கட்டிவிட்டாராம் மாவட்டச் செயலாளர். தனக்கு எப்படியும் மா.செ பதவி திரும்பக் கிடைக்கப்போவதில்லை என்பதாலேயே அவர் ஒதுங்கிக்கொண்டதாகச் சொல்கிறார்கள்.”

தி.மு.க-வில் இணைந்த மைதிலி வினோ
தி.மு.க-வில் இணைந்த மைதிலி வினோ

“மாநகர் மாவட்டங்களுக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை அறிவித்திருக்கிறதே தி.மு.க?”

“ஆமாம்… சென்னை, கோவை, மதுரை தவிர மற்ற மாநகரங்களுக்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகளை நியமித்திருக்கிறது தலைமை. பெரும்பாலான மாநகரங்களில் பழைய ஆட்களையே தொடரச் செய்த தலைமை தஞ்சாவூர், திருநெல்வேலி செயலாளர்களை மட்டும் மாற்றியிருக்கிறது. தஞ்சாவூரில் எம்.எல்.ஏ நீலமேகத்துக்கு பதிலாக இளைஞரணி யைச் சேர்ந்த சண்.ராமநாதன் மாநகரச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நீலமேகம் மீதிருந்த அதிருப்திதான் மாற்றத்துக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள். திருநெல்வேலி மாநகரச் செயலாளராக இருந்த ஏ.எல்.எஸ்.லட்சுமணனுக்குப் பதிலாக தி.மு.க தொழில்நுட்ப அணியின் மாநிலத் துணைச் செயலாளர் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டிருக்கிறார்” என்ற கழுகார்…

“பறப்பதற்கு ஆசைப்பட்டு, இருப்பதையும் இழந்திருக்கிறார் லட்சுமணன். சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடம் வெற்றிவாய்ப்பை இழந்தவர், மேயராகக் கனவு கண்டார். ஆனால், நெல்லை மத்திய மாவட்டச் செயலாளரான அப்துல் வஹாப் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், வஹாபுக்கு எதிராக மேலிடத்தில் தொடர்ச்சியாகப் புகார் செய்துவந்தார். ‘மாவட்டச் செயலாளரை மாற்றுங்கள். அப்துல் வஹாப் பொறுப்பில் இருக்கும் வரை அவருக்குக் கீழ் மாநகரச் செயலாளராகப் பணிசெய்ய விரும்பவில்லை’ என்று சொன்னவரை பதவியிலிருந்தே தூக்கியிருக்கிறது தலைமை” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* இரும்பு தேசத்தில் எம்.பி-யாக இருக்கும் ஒருவர், சொந்தக் கட்சி நிர்வாகிகள்மீது ஏக வருத்தத்தில் இருக்கிறாராம். எல்லாம் தொழில்ரீதியிலான பிரச்னைதான். விஷயத்தை மோப்பம் பிடித்த தேசியக் கட்சி அந்த எம்.பி-யை வளைக்க, தூதுவிட ஆரம்பித்திருக்கிறது.

* பரந்தூரில் விமான நிலையம் அமையவிருக்கும் பகுதியின் அருகே 260 ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டிருக்கிறது மேலிடத்துக்கு நெருக்கமான சர்ச்சைக்குரிய ரியல் எஸ்டேட் நிறுவனம். அந்த இடத்தில் சர்வதேச தரத்தில் ‘டவுன்ஷிப்’ ஒன்றை அமைக்கத் திட்டமாம்.

* டி.ஜி.பி அலுவலகத்தில் பணியாற்றும் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிக்கு ஓய்வுபெறும் தேதி நெருங்குகிறது. சமீபத்திய நிகழ்வுகளால், ஓய்வுபெறுவதற்கு முன்பே லீவில் சென்றுவிடும் மூடில் இருக்கிறாராம் அவர். அந்தப் பதவியைப் பிடிக்க இப்போதே இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகள் முட்டி மோதுகிறார்கள்.