Published:Updated:

மிஸ்டர் கழுகு: புகழ் மாலை! - உதயநிதிக்கு மட்டும் விதிவிலக்கா?

உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

ஆளும்தரப்பும் கொடநாடு விவகாரத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடாது என்றே தெரிகிறது

மிஸ்டர் கழுகு: புகழ் மாலை! - உதயநிதிக்கு மட்டும் விதிவிலக்கா?

ஆளும்தரப்பும் கொடநாடு விவகாரத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடாது என்றே தெரிகிறது

Published:Updated:
உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
உதயநிதி

ஸ்வெட்டர், குல்லா சகிதம் என்ட்ரி கொடுத்தார் கழுகார். ‘‘ஊட்டியிலிருந்து நேராக அலுவலகம் வருகிறேன்... இங்கேயும் க்ளைமேட் கிட்டத்தட்ட அப்படித்தான் இருக்கிறது” என்றவருக்குச் சூடாக ஃபில்டர் காபியை நீட்டினோம். அதைப் பருகியபடியே உரையாட ஆரம்பித்தார் கழுகார்...

‘‘கொடநாடு வழக்கில் மேல் விசாரணைக்குத் தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பதால், எடப்பாடி தரப்பு அச்சத்தில் உறைந்திருக்கிறது. ‘இந்த வழக்கில் சசிகலா, இளவரசி உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்த வேண்டும்’ என்று மற்றொரு வழக்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கலாகியிருக்கிறது. ‘இந்த வழக்கில் விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டு, தனக்கு எதிராக சசிகலா பேசினால் தேவையற்ற பிரச்னைகள் வரும்’ என்று டென்ஷனில் தவிக்கிறாராம் எடப்பாடி. இதற்காக, சசிகலாவுக்கு நெருக்கமான தென்மாவட்ட எம்.எல்.ஏ ஒருவர் மூலமாகத் தூது அனுப்பியிருக்கிறார்.’’

‘‘சசிகலாவின் ரியாக்‌ஷன் என்னவாம்?’’

‘‘தூது சென்ற அந்த தென்மாவட்ட எம்.எல்.ஏ., ‘கட்சிக்குள் உங்களைக் கொண்டுவருவதைப் பற்றி விரைவில் நல்ல முடிவெடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். கொடநாடு விவகாரத்தில் விசாரணை என்று வந்தால், தயவுசெய்து எந்தச் சிக்கலும் ஏற்படுத்த வேண்டாம்’ என்று சசிகலா தரப்பிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், ‘இவ்வளவு பேச்சு பேசின பிறகு அவரை எதுக்கு மன்னிக்கணும்? முதல்ல அவர்கிட்ட இருக்குற கட்சிப் பதவியை ராஜினாமா பண்ணச் சொல்லுங்க... மத்ததையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்’ என்று ஹபிபுல்லா சாலை படபடத்திருக்கிறது.’’

‘‘ஓஹோ!’’

“ஆளும்தரப்பும் கொடநாடு விவகாரத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடாது என்றே தெரிகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஒவ்வொருவரையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறது உளவுத்துறை. குறிப்பாக, சென்னை சி.ஐ.டி நகரிலிருக்கும் ஷில்லி நிவாஸ் அபார்ட்மென்ட் அறை எண் 302-ல் கிடைத்த ஆவணங்களுக்கும், கொடநாடு கொள்ளைக்கும் இருக்கும் தொடர்புகளை மேட்ச் செய்துவருகிறார்கள். ‘எனக்கு மிரட்டல்கள் வருகின்றன’ என்று சயான் தமிழக காவல்துறையிடம் சொல்லியிருப்பதால், அவரையும் பாதுகாப்பு வளையத்தில் வைத்திருக்கிறார்கள். இவையெல்லாம் ஒருபுறம் என்றால், அ.தி.மு.க நிர்வாகி ஒருவரே அந்தக் கட்சியின் தலைமைக்குச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறார்.’’

“இதென்ன புது குண்டு?”

“அ.தி.மு.க முன்னாள் எம்.பி மைத்ரேயன் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகத்துக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வர் தனி கவனம் செலுத்தி, உச்ச நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்குப் பெறப்பட்டுள்ள தடையாணையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதாவின் ஐந்தாம் ஆண்டு நினைவுதினத்துக்கு முன்பாக, அவரது மரணம் குறித்த சந்தேகங்களுக்குத் தீர்வுகாண வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். விரைவில் சட்டமன்றத்திலேயே இது தொடர்பான அறிவிப்பை தி.மு.க அரசு வெளியிடலாம் என்பதே லேட்டஸ்ட் தகவல்.’’

‘‘எல்லாம் சரி... மைத்ரேயனுக்கு எதற்கு இந்த திடீர் அக்கறை?”

“எல்லாம் அரசியல்தான். எடப்பாடியும் கண்டுகொள்ளவில்லை... நம்பிச் சென்ற பன்னீரும் கைவிட்டுவிட்டார். இருவருக்கும் செக் வைக்கவே இந்த அறிக்கை என்கிறார்கள்.’’

‘‘சட்டமன்ற சங்கதி ஏதும் உண்டா?’’

“அது இல்லாமலா... முதல்வர் ஸ்டாலின், ‘சட்டசபையில் என்னைப் புகழக் கூடாது. உரையை மட்டும் ஆற்றுங்கள்’ என்று தி.மு.க உறுப்பினர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கெனவே இந்த விஷயம் தி.மு.க எம்.எல்.ஏ-க்களுக்குச் சொல்லப்பட்டும், சிலர் வழக்கம்போல உரையை ஆரம்பிக்கும் முன்பாக முதல்வரைப் பற்றி ஓவராகப் புகழ் மாலை பாடியிருக்கிறார்கள். அதனால்தான் இந்த உத்தரவாம். ஆனால், அதே அவையில் உதயநிதியைப் பற்றிப் புகழ் மாலைகள் பாடப்படுவது ஸ்டாலினுக்குக் கேட்கவில்லையா என்ற முணுமுணுப்பும் சொந்தக் கட்சியினர் மத்தியிலேயே எழுந்துள்ளது.”

மிஸ்டர் கழுகு: புகழ் மாலை! - உதயநிதிக்கு மட்டும் விதிவிலக்கா?

“அதிருக்கட்டும்... சட்டமன்றத்தில் அ.தி.மு.க தரப்பு அமைதியாக இருப்பதை கவனித்தீரா!”

‘‘ம்ம்ம்... கவனித்தேன்... கவனித்தேன். காரசாரமாகப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டவர்களெல்லாம் கப்சிப் ஆகிவிட்டார்கள். பன்னீர், செங்கோட்டையன் என மூத்த தலைவர்களே அரசுக்கு இணக்கமாக நடந்துகொள்கிறார்கள். கடந்த ஆட்சியில் தி.மு.க-வினருக்கு எதிராக வீரவசனம் பேசிய சி.விஜயபாஸ்கர், சட்டமன்றத்தில் இருக்கும் இடம் தெரியவில்லை. ‘என் காலேஜ்மேட்ஸோட அப்பாக்கள்தான் இந்த ஆட்சியில அதிகார மட்டத்துல இருக்காங்க. அவங்களைவெச்சு ஏதோ வம்புதும்பு இல்லாமப் பொழப்பு ஓடுது. தேவையில்லாமப் பேசி ரெய்டு வரவழைச்சுடக் கூடாதுல்ல...’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் லாஜிக்காகச் சொன்னாராம். அமைச்சர்கள் ரகுபதி, பொன்முடி ஆகியோரின் வாரிசுகள் விஜயபாஸ்கரின் கல்லூரி வகுப்பு தோழர்கள் என்பதால், அவர்களைத்தான் இப்படிக் குறிப்பிட்டாராம் விஜயபாஸ்கர்.’’

‘‘சரிதான்!’’

“தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பதவிக்கான ரேஸில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார் கரூர் எம்.பி ஜோதிமணி. பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் ஜோதிமணியும் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அதனால், அண்ணாமலைக்கு எதிராக அரசியல் செய்ய ஜோதிமணி போன்ற துடிப்பான, சாமானியப் பின்னணிகொண்டவருக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கலாம் என்று ராகுல் நினைக்கிறாராம். கடந்த காலங்களில் சீனியர்களுக்குத் தொடர்ந்து பதவி கொடுத்தபோதும், கோஷ்டிகள் அதிகரித்தனவே தவிர, உட்கட்சிப்பூசல் குறைந்தபாடில்லை. அதனால், இளையவரான ஜோதிமணிக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் என்று கட்சித் தலைமையும் நினைக்கிறதாம்.”

“புதுச்சேரியில் கச்சேரி களைகட்டுகிறதே!”

“அது என்றைக்கு ஓய்ந்திருக்கிறது... புதுச்சேரியில் ராஜ்யசபா எம்.பி பதவியைக் கைப்பற்றுவதற்காக என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க இடையே கடும் போட்டி நிலவுவதை ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன் அல்லவா... தேர்தலில் வெற்றிபெறாமல் இரண்டு முறை நியமன எம்.எல்.ஏ பதவியைப் பெற்ற பா.ஜ.க மாநிலத் தலைவர் சாமிநாதன், அதே ஃபார்முலாவில் எம்.பி-யாகிவிட வேண்டுமென்று தீவிரமாகச் செயல்படுகிறார். முதல்வர் ரங்கசாமியோ தனக்காக ஏனாம் தொகுதியில் ‘வாரியிறைத்த’ மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். அதனால் மீண்டும் ஸ்வீட் பாக்ஸ்களுடன் எம்.எல்.ஏ-க்களைச் சந்திக்கத் தொடங்கிவிட்டார் மல்லாடி கிருஷ்ணா ராவ். மல்லாடியின் கில்லாடித்தனத்தைப் பார்த்து அரண்டுகிடக்கிறது புதுச்சேரி பா.ஜ.க தரப்பு’’ என்றபடியே சிறகுகளை விரித்தார் கழுகார்.

****

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்

* சேலத்து பிரமுகருக்கு நெருக்கமான காப்பிய நாயகன் மீது கண்வைத்திருக்கிறது ஆளும்தரப்பு. பெண் விவகாரம் ஒன்றைவைத்து விரைவில் இவரை கஸ்டடிக்குள் கொண்டுவரும் வேலைகள் ஆரம்பித்துவிட்டனவாம்!

* வாரிசு பிரமுகரை சில அமைச்சர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சந்திக்கும்போது சிரித்துக் கொண்டே, “என்னங்க டெபுடி... எப்படி இருக்கீங்க?” என்று விசாரிக்கிறார்களாம். இதைக் கேட்டு அகமகிழ்ந்து பதிலளிக்கிறாராம் அந்த வாரிசு!

நெருங்கும் வழக்கு... உருகும் மாஜி!

ஆவினில் நடந்த முறைகேடுகளைவைத்து தனக்கு எதிராக ஆளுங்கட்சி ஆட்டத்தை ஆரம்பித்துவிடும் என்று அச்சப்படுகிறாராம் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இந்தச் சிக்கலிலிருந்து விடுபட திருச்சி திருவெறும்பூரிலுள்ள திருநெடுங்களநாதர் கோயில் மற்றும் எறும்பீஸ்வரர் கோயிலில் இருபது நிமிடங்களுக்கும் மேலாக மனமுருகி வேண்டியிருக்கிறார் பாலாஜி. இந்தக் கோயிலில் வழிபட்டால் வழக்கு, வம்புகள் நீங்கும் என்பது ஐதிகமாம்.

தொடரும் கந்துவட்டிக் கொடுமை... தீர்வு என்ன?

 விழுப்புரத்தில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை!

 சென்னை கொரட்டூரில் கந்துவட்டிக் கொடுமையால் மளிகைக்கடைக்காரர் ஒருவர் தற்கொலை!

 நாகர்கோவிலில் கந்துவட்டிக் கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

 கந்துவட்டிக் கொடுமையால் திருநெல்வேலியில் பெண் ஒருவர் தற்கொலை..!

இது என்ன கொடுமை... கந்துவட்டிப் பிரச்னைக்கு தற்கொலை மட்டும்தான் தீர்வா?

‘கந்துவட்டி சிக்கல்: மீள்வது எப்படி?’ என்கிற ஆலோசனை நிகழ்ச்சியை ஜூனியர் விகடனும் நாணயம் விகடனும் இணைந்து நடத்துகின்றன. இதில் பங்கேற்றால் கந்துவட்டிக் கொடுமையிலிருந்து விடுபடுவதற்கான தீர்வுகள் வழங்கப்படும்.

05.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5:30 மணி தொடங்கி 7:00 மணி வரை ஆன்லைனில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். கந்துவட்டிச் சட்டங்கள் குறித்து ஆடிட்டர் வி.தியாகராஜன், கந்துவட்டிச் சிக்கலிலிருந்து மீள்வது குறித்து வழக்கறிஞர் ஆர்.சரவணன் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.

இது ஒரு கட்டணமில்லா வெபினார்.

முன்பதிவு செய்ய https://bit.ly/3fMNn9n