Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஓ.பி.எஸ் கூட்ட இடமாற்றம்... சசிகலா பாசமா, எடப்பாடி பயமா?

சசிகலா, எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா, எடப்பாடி பழனிசாமி

பண மதிப்பிழப்பு சமயத்தில் ‘தங்கம்’ வாங்கியதாக எழுந்த விவகாரத்தில் வேலுமணிக்கும், அவரின் அண்ணன் அன்பரசனுக்கும் சம்மன் அனுப்பியிருந்தது அமலாக்கத்துறை.

மிஸ்டர் கழுகு: ஓ.பி.எஸ் கூட்ட இடமாற்றம்... சசிகலா பாசமா, எடப்பாடி பயமா?

பண மதிப்பிழப்பு சமயத்தில் ‘தங்கம்’ வாங்கியதாக எழுந்த விவகாரத்தில் வேலுமணிக்கும், அவரின் அண்ணன் அன்பரசனுக்கும் சம்மன் அனுப்பியிருந்தது அமலாக்கத்துறை.

Published:Updated:
சசிகலா, எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா, எடப்பாடி பழனிசாமி

“சென்னைகூட ஊட்டிபோல குளுகுளுவென இருக்கிறது. அ.தி.மு.க-வுக்குள் மட்டும் சூடு குறையவே இல்லை” என்றபடியே அலுவலகத்துக்குள் என்ட்ரியான கழுகார், நேரடியாகச் செய்திகளுக்குள் நுழைந்தார்.

“செப்டம்பர் 15-ம் தேதி, கோவையில் நடைபெறுவதாக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பொதுக்கூட்டத்தை, காஞ்சிபுரத்துக்கு இடம் மாற்றியிருக்கிறார்களாம். இந்தப் பொதுக்கூட்டத்தில் சசிகலாவும் கலந்துகொள்ளத் திட்டமிட்டிருப்பதால், அவரது வசதிக்காகவே காஞ்சிபுரத்துக்கு கூட்டத்தை மாற்றியிருப்பதாக ‘பில்டப்’ கொடுக்கிறது பன்னீர் தரப்பு.”

“ஏன், சசிகலாவின் டிரைவருக்கு கோவைக்கு ‘ரூட்’ தெரியாதாமா?”

“இதே கேள்வியைத்தான் எடப்பாடி தரப்பும் கேட்கிறது. ‘ஊர் ஊராக ஆன்மிகப் பயணம் செய்யும் சசிகலா, கோவைக்கு வரத் தயங்குவதற்குக் காரணம் எடப்பாடி மற்றும் ‘கொங்கு லாபி’ மீதான பயம்தான். எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் கூடவில்லையென்றால், கடும் விமர்சனத்துக்கு உள்ளாக நேரிடும். அதற்காக கூட்டத்தை காஞ்சிக்கு மாற்றிவிட்டு, பேய்க்கதை சொல்கிறார்கள்’ என்கிறது எடப்பாடி தரப்பு.”

“சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையிலான முட்டல், மோதல் அதிகரித்திருக்கிறதாமே?”

மிஸ்டர் கழுகு: ஓ.பி.எஸ் கூட்ட இடமாற்றம்... சசிகலா பாசமா, எடப்பாடி பயமா?

“எல்லாம் கொடுக்கல், வாங்கல் விவகாரம்தான். எடப்பாடி தரப்பிலிருந்து பன்னீர் பக்கம் ஆட்களை வரவேற்பதற்குத் தேவையான ‘ஸ்வீட் பாக்ஸ்’கள் சசிகலா தரப்பிலிருந்து வரத் தொடங்கியிருப்பது பற்றிக் கடந்த இதழிலேயே சொல்லியிருந்தோம் அல்லவா... அது டி.டி.வி.தினகரனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லையாம். ‘உங்களுக்காகத் தனியாகக் கட்சி ஆரம்பித்து... பல்வேறு தோல்விகளையும் அவமானங்களையும் சந்தித்தபடி களத்தில் நிற்பது நான்... இனிப்பு மட்டும் ஓ.பி.எஸ்-ஸுக்கா... இந்த வேலையைச் செய்ய எனக்குத் தகுதியில்லையா அல்லது ஓ.பி.எஸ்-தான் ஒன்றும் இல்லாத ஏழையா?’ என்று சசிகலா தரப்பிடம் டி.டி.வி கொந்தளித்ததாகச் சொல்கிறார்கள்.”

“ஆயிரம் இருந்தாலும், சித்தியிடம் அவ்வளவு கோபப்படுவாரா தினகரன்?!”

“2016-ல் ஜெயலலிதாவின் உடல்நிலை சரியில்லாமல் போய்... தற்காலிக முதல்வரை நியமிக்கவேண்டிய நிலை ஏற்பட்டபோது, தினகரன், சசிகலா யாருடைய விருப்பப் பட்டியலிலும் ஓ.பி.எஸ் இல்லை. ஆனால், சசிகலாவின் தம்பி திவாகரன்தான் ஓ.பி.எஸ்-ஸுக்காக வக்காலத்து வாங்கி, அவரை அந்தப் பதவிக்குக் கொண்டுவந்தாராம். அப்போது மட்டுமல்ல, இப்போதும் சசிகலா இப்படி படியளப்பதற்குப் பின்னால் திவாகரன்தான் இருக்கிறாராம். இதுவே தினகரனின் கடுங்கோபத்துக்குக் காரணமாம்.”

“பூலித்தேவன் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வரவிடாமல், எடப்பாடி தரப்பை மிரட்டும் வேலையெல்லாம் நடந்ததே...”

மிஸ்டர் கழுகு: ஓ.பி.எஸ் கூட்ட இடமாற்றம்... சசிகலா பாசமா, எடப்பாடி பயமா?

“ஆமாம், ஆர்.பி.உதயகுமாரை போன் போட்டு மிரட்டியவர் கைதுசெய்யப்பட்டுவிட்டார். பூலித்தேவன் பிறந்தநாள் விழாவுக்கு நத்தம் விசுவநாதன், ராஜன் செல்லப்பா, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், தளவாய் சுந்தரம், செல்லூர் ராஜூ உள்ளிட்ட 17 பேர் கொண்ட படையையே அனுப்பியிருந்தார் எடப்பாடி. சட்டம்-ஒழுங்கு பிரச்னையைத் தவிர்ப்பதற்காக, நெற்கட்டும்செவலில் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் தரப்பு அஞ்சலி செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தையே மாற்றியமைத்திருந்தது காவல்துறை. கூடவே, சொந்த கார்களில் வரும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் அறிவுறுத்தப் பட்டிருந்தது. ஆனால், 500-க்கும் மேற்பட்ட கார்களில் வந்தது எடப்பாடி தரப்பு. ஆனால், பன்னீரோ, வைத்திலிங்கம், எம்.பி தர்மர் உள்ளிட்ட சில நிர்வாகிகளோடு போய் வந்திருக்கிறார். அவருக்கும் கூட்டம் இருந்தது என்றாலும், எடப்பாடி தரப்பு இவ்வளவு பெரிய படையை அழைத்துக்கொண்டு வரும் என்று பன்னீர் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லையாம். முக்குலத்தோர் சமூக நிகழ்ச்சிகளுக்கு எடப்பாடி தரப்பு முக்கியத்துவம் தருவதில்லை என்ற பிம்பத்தைக் கட்டமைக்கும் ஓ.பி.எஸ்-ஸின் முயற்சியை இதன் மூலம் தூள் தூளாக்கியிருக்கிறார் எடப்பாடி. வழக்கு, ஆட்சேர்ப்பு என்று ஏறுமுகத்தில் இருந்த பன்னீரை இந்தச் சம்பவம் ரொம்பவே ‘அப்செட்’ ஆக்கியிருக்கிறது.”

சசிகலா
சசிகலா

“இரண்டு ‘மணி’களும் டெல்லி சென்றனராமே?”

“ஆமாம். பண மதிப்பிழப்பு சமயத்தில் ‘தங்கம்’ வாங்கியதாக எழுந்த விவகாரத்தில் வேலுமணிக்கும், அவரின் அண்ணன் அன்பரசனுக்கும் சம்மன் அனுப்பியிருந்தது அமலாக்கத்துறை. அது தொடர்பான விசாரணைக்காக கொச்சியிலுள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கும் சென்று திரும்பியிருந்தார்கள். அமலாக்கத்துறையின் பிடி இறுகுவதால் டெல்லியின் உதவியைக் கேட்டு வேலுமணியும் அன்பரசனும் தலைநகருக்குச் சென்றிருக்கிறார்கள். கட்சி விவகாரங்கள் தொடர்பாக பியூஷ் கோயலைச் சந்திக்கச் சொல்லி வேலுமணியுடன் தங்கமணியையும் அனுப்பிவைத்திருக்கிறார் எடப்பாடி. ‘மோடி, அமித் ஷா நினைத்தாலும் எதுவும் செய்ய முடியாது’ என்று பத்திரிகையாளர்களிடம் எடப்பாடி பேசியதில் கடுப்பிலிருந்தது பா.ஜ.க மேலிடம். எனவே, ‘இதற்கு மேல் இருவருக்குள்ளும் பஞ்சாயத்துப் பேச வாய்ப்பில்லை... நடப்பது நீதிமன்றம் மூலமே நடக்கட்டும். அதுவரை இதே நிலை தொடரட்டும்’ என்று பதில் சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். வேலுமணியின் அமலாக்கத்துறை குறித்த கோரிக்கைக்கும் எந்த உறுதியும் கொடுக்கவில்லையாம். போன காரியம் நினைத்தபடி முடியாததால் இருவரும் சோகத்தோடு ஊர் திரும்பியிருக்கிறார்கள்…” என்ற கழுகாருக்கு சூடான மிளகாய் பஜ்ஜி கொடுத்தோம். அதை ருசித்தபடியே அடுத்த செய்திக்குத் தாவினார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

“ராகுல் காந்தியின் தமிழ்நாட்டு விஜயம் காங்கிரஸ்காரர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அவரது நடைப்பயணம் குறித்துத்தான் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், காங்கிரஸ் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் திக்விஜய் சிங், மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆகஸ்ட் 31-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ‘இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொள்ளும் ராகுல் மூன்று நாள்கள் தமிழகத்தில் இருக்கிறார். உங்கள் பங்கேற்பு முக்கியம். ஆனா, தயவுசெஞ்சு கோஷ்டிச் சண்டை போடாம ஒற்றுமையா இருக்க முயற்சி பண்ணுங்க... நாம செய்யுற சின்னத் தவறுகளையும் தேசிய செய்தியாக்க சிலர் காத்துக்கிட்டு இருக்காங்க. அதனால உள்முரண்களை மூட்டை கட்டிட்டு பயண ஏற்பாடுகளை மட்டும் கவனிங்க’ என்று அட்வைஸ் செய்திருக்கிறார்களாம்.”

“தமிழ்நாட்டைப்போல புதுச்சேரியிலும் மது விற்பனையில் அரசு தலையிட முடிவெடுத்திருக்கிறதுபோல?”

“ஆமாம், மதுக்கடைகளை ஏற்று நடத்தினால் அரசுக்குக் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும், நிதி நெருக்கடியைச் சமாளிக்க உதவியாக இருக்கும் என்றும் புதுச்சேரி அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் நீண்டகாலமாகவே வலியுறுத்திவருகின்றன. அரசுக்கும் அந்த எண்ணம் இருந்தாலும், 80 சதவிகிதம் மதுக்கடைகளை அரசியல் பின்னணி கொண்டவர்களே நடத்துவதால், அதில் கைவைப்பது சவாலாகவே இருந்தது. ஆனால் இப்போது, ‘மதுக்கடைகள் தனியாரிடமே இருக்கட்டும். கொள்முதல், விலை நிர்ணயம் ஆகியவை மட்டும் அரசிடம் இருக்கலாம். அதற்காக ஒரு கார்ப்பரேஷனை உருவாக்கலாம்’ என்று அதிகாரிகளிடம் கூறியிருக்கிறாராம் முதல்வர் ரங்கசாமி. அதிகாரிகள் அதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கும் நிலையில், அந்த முயற்சியை எப்படியாவது முறியடித்துவிட வேண்டுமென்று ‘ஸ்வீட் பாக்ஸ்’களோடு அலைந்துகொண்டிருக்கிறார்களாம் மதுக்கடைகளை வைத்திருக்கும் கரைவேட்டிகள்” என்ற கழுகார்…

“போலீஸ் வாகனங்களைச் சொந்த வாகனம் போல பிள்ளைகளை ஸ்கூலில் விடுவதற்கும், குடும்பத்தினர் கடைகளுக்குச் செல்வதற்கும் பயன்படுத்திவந்தோருக்கு செக் வைத்திருக்கிறது காவல்துறை. `நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக எரிபொருளைப் பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட அலுவலரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்’ என்று சுற்றறிக்கை அனுப்பியது டி.ஜி.பி அலுவலகம். ஆர்டர்லியைத் தொடர்ந்து அடுத்த ஆப்பா என்று சோகத்தில் இருக்கிறார்கள் பல அதிகாரிகள்” என்றபடியே விர்ரெனப் பறந்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்

* ஆளும் தரப்பிலிருந்து இலைக் கட்சி, பூ கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறதாம். டீலிங்குகள் ஓ.கே ஆகும் பட்சத்தில் விரைவில் கரைவேட்டி மாற்றம் நடக்கும் என்கிறார்கள்.

37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் இடமாறுதலுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் ஆன்லைனில் நடந்தது. இதற்காக ஒரு மாறுதலுக்கு ‘10 லட்டுகள்’ வீதம் வசூல் நடந்திருக்கிறதாம். இது குறித்து ஆதாரங்களுடன் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மருத்துவத்துறை எனக் கொதிக்கிறார்கள் டாக்டர்கள்.