Published:Updated:

மிஸ்டர் கழுகு: தி.மு.க வைத்த மணிமண்டப செக்! - பா.ம.க ஷாக்...

சட்டசபையில்..
பிரீமியம் ஸ்டோரி
சட்டசபையில்..

கடந்த ஆட்சியில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சரோஜாவுக்கு எதிராக அஸ்திரம் பாயலாம் என்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: தி.மு.க வைத்த மணிமண்டப செக்! - பா.ம.க ஷாக்...

கடந்த ஆட்சியில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சரோஜாவுக்கு எதிராக அஸ்திரம் பாயலாம் என்கிறார்கள்.

Published:Updated:
சட்டசபையில்..
பிரீமியம் ஸ்டோரி
சட்டசபையில்..

‘‘அலுவலகம் வந்துகொண்டிருக்கிறேன். மழைக்கு இதமாக ஐஸ்க்ரீம் வாங்கிவையும்!’’ என்று வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பிய கழுகார், அரை மணி நேரத்தில் என்ட்ரி கொடுத்தார். “மழையில் ஐஸ்க்ரீம்... உமக்கு ரொம்பவே குறும்புதான்” என்றபடியே நாம் நீட்டிய கசாட்டா ஐஸ்க்ரீமைச் சுவைத்தபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்...

‘‘நானாவது மழை நேரத்தில் ஐஸ்க்ரீம்தான் கேட்டேன். ஆனால், தமிழக சட்டசபையில் ஐஸ் மழையே பொழிகிறது... உதயநிதி ஸ்டாலினுக்கு சட்டசபையில் பாடப்படும் புகழ்மாலை குறித்து கடந்த இதழில்தான் சொல்லியிருந்தேன். ஆனாலும், பாராட்டு மழைச்சாரல் கலைவாணர் அரங்கைத் தாண்டியும் தெறிக்கிறது. அமைச்சர் எ.வ.வேலு ‘திராவிட நடிகர்’ என்று உதயநிதிக்கு ‘திடீர்’ பட்டம் கொடுக்க பதிலுக்கு மா.சுப்பிரமணியனோ, ‘அரை நூற்றாண்டுக்குத் தமிழகத்தைக் காக்கவிருக்கும் இளம் தலைவர் உதயநிதி’ என்று எதிர்ப் பாட்டு இசைக்க... உதயநிதியே கொஞ்சம் ஜெர்க் ஆகிவிட்டார். இவர்கள் மட்டுமல்ல... அமைச்சர்கள் பலரும் தங்கள் உரையில் உதயநிதிக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிப்பது ஏற்கெனவே எழுதிவைத்த ஸ்கிரிப்ட்படிதான் என்கிறார்கள் செனடாப் சாலை வீட்டை நன்கறிந்தவர்கள்.”

மிஸ்டர் கழுகு: தி.மு.க வைத்த மணிமண்டப செக்! - பா.ம.க ஷாக்...

‘‘கேட்கும் எனக்கே குளிர்கிறது... சரி சரி, சட்டமன்றத்தில் வேறு எதுவும் ஸ்பெஷல் இருக்கிறதா?”

‘‘ஸ்பெஷல் என்று சொல்ல முடியாது... சர்ச்சை என்று வேண்டுமானால் சொல்லலாம். ‘வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இறந்த 21 தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டப்படும்’ என்று சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தவுடனே, பா.ம.க தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பா.ம.க எம்.எல்.ஏ-க்கள் எழுந்து நின்று நெகிழ்ச்சியுடன் கைகூப்பியிருக்கிறார்கள். இந்த அறிவிப்பை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வரவேற்று அறிக்கை வெளியிட்டிருந்தாலும், பா.ம.க தரப்புக்கு உள்ளுக்குள் ஷாக்தானாம். இதைத் தங்களுக்கு வைக்கப்பட்ட செக் என்றே கருதுகிறதாம் பா.ம.க தரப்பு. ஏற்கெனவே ‘அ.தி.மு.க அரசு கொண்டுவந்த இட ஒதுக்கீட்டை உறுதியாக அமல்படுத்துவோம்’ என்று தி.மு.க அறிவித்திருக்கிறது. இப்போது இட ஒதுக்கீடுப் போராட்ட தியாகிகளுக்கு மணிமண்டப அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள். இதைவைத்து ‘நமக்கு இருக்கும் ஆயுதமே இதுதான். இதையும் தி.மு.க கையிலெடுத்துக்கொண்டால் நமது நிலை என்ன ஆவது? ஒட்டுமொத்தமாக வன்னியர்களின் வாக்குகளை அறுவடை செய்யவே தி.மு.க இப்படியெல்லாம் செய்கிறது’ என்று தைலாபுரம் தோட்டத்தில் காரசார விவாதம் நடந்ததாம்!”

மிஸ்டர் கழுகு: தி.மு.க வைத்த மணிமண்டப செக்! - பா.ம.க ஷாக்...

‘‘ஓஹோ...’’

‘‘கடந்த அ.தி.மு.க ஆட்சியில் தென் மாவட்டங்களில் பரவலாக வசிக்கும் தேவேந்திர குல வேளாளர் சமூக வாக்குகளைக் குறிவைத்து பா.ஜ.க - அ.தி.மு.க கூட்டணி காய்நகர்த்தியது. இப்போது வட மாவட்டங்களிலுள்ள வன்னியர் வாக்குகளை தி.மு.க குறிவைக்கிறது. இவர்களின் அரசியலுக்கிடையே, ‘அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவது இருக்கட்டும்... 1995-ம் ஆண்டு கொடியங்குளம் கலவரத்திலும், 2011-ம் ஆண்டு பரமக்குடி துப்பாக்கிச்சூட்டிலும் இறந்த எங்கள் சமூகத்தினரை தி.மு.க அரசு புறக்கணிக்கலாமா?’ என்று தேவேந்திர குல வேளாளர்கள் குமுறுகிறார்கள். அவர்கள் தரப்பிலிருந்து விரைவில் பரபர அறிக்கையும் வெடிக்கலாம் என்கிறார்கள்!’’

‘‘கொங்கு மண்டல மாஜி பற்றிப் புதிய தகவல் ஒன்று ஓடுகிறதே!”

‘‘கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாஜி அமைச்சர் சம்பந்தப்பட்ட இடங்களில் நடந்த ரெய்டில் பெரிதாக ஏதும் கைப்பற்றப்படவில்லை என்பது ஏற்கெனவே தெரிந்ததுதான். இதில் இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள்... தி.மு.க-வில் தனக்கு வேண்டிய ஸ்லீப்பர்செல்களை வைத்திருக்கும் அந்த மாஜி, அவர்களிடமும் குறிப்பிட்ட தொகையை ஒப்படைத்திருக்கிறார் என்று கிசுகிசுக்கிறார்கள். கொங்கு மண்டலத்தில் சில முக்கிய தி.மு.க நிர்வாகிகள் சொத்துகள் வாங்குவது, முதலீடு செய்வது என்று சமீபகாலமாக பரபரப்பாக வலம்வருகிறார்கள். இதற்குப் பின்னணியில் அந்த மாஜியின் பணப் பரிவர்த்தனைகள் இருந்திருக்கின்றன என்று அறிவாலயத்துக்குச் சிலர் கொளுத்திப் போட்டிருக்கிறார்கள்.’’

‘‘இருக்கட்டும்... அதே கொங்கு மண்டலத்தில் பெண் மாஜி ஒருவருக்குச் சிக்கல் என்கிறார்களே?

‘‘ஆமாம். கடந்த ஆட்சியில் சமூகநலத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் சரோஜாவுக்கு எதிராக அஸ்திரம் பாயலாம் என்கிறார்கள். ராசிபுரத்தைச் சேர்ந்த பத்திரப்பதிவு எழுத்தர் குணசீலன் என்பவர், ‘கடந்த ஆட்சியில் சத்துணவுத்துறையில் வேலை வாங்கித்தருவதாக சரோஜா கூறியதை நம்பி, 15 பேரிடம் 76.5 லட்சம் ரூபாய் வசூலித்துக் கொடுத்தேன். ஆனால், வேலை வாங்கித் தராததுடன், பணத்தையும் திருப்பித் தரவில்லை. அத்துடன் என் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டலும் விடுக்கிறார்’ என்று ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதையடுத்து செப்டம்பர் 1-ம் தேதி சரோஜாவிடம் அவரது ராசிபுரம் வீட்டில்வைத்து ஒரு மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போலீஸார், பணம் கொடுத்ததாகக் கூறப்படும் 15 பேரிடமும் தகவல்களைப் பெற்றிருக்கிறார்கள். இந்த விவகாரத்திலிருந்து சரோஜா மீள்வது அத்தனை எளிதல்ல என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.’’

சரோஜா
சரோஜா

“கொடநாடு விவகாரத்தில் விசாரணையை ஒத்திவைத்துள்ளதே நீதிமன்றம்?”

“அரசுத் தரப்பு கேட்டுக்கொண்டதால், அக்டோபர் 1-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம். இந்த விவகாரத்தில் இன்னும் தெளிவாக ஸ்கெட்ச் போட்டு சிலரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது காவல்துறை. அதன் காரணமாகவே கூடுதல் அவகாசம் கேட்டிருக்கிறது அரசுத் தரப்பு. இதையொட்டியே இந்த வழக்கை விசாரிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அனுபவ் ரவி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மேல் விசாரணைக்குத் தடை வேண்டும் என்று தாக்கல் செய்த மனுவும் விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. இதற்கிடையே, அனுபவ் ரவியைப் பின்னிருந்து இயக்குவது யார் என்கிற தகவல்களையும் உளவுத்துறை சேகரித்துவருகிறது. முதற்கட்டமாக முன்னாள் அமைச்சர் ஒருவரும், கொங்குமண்டல முன்னாள் எம்.எல்.ஏ ஒருவரும் அனுபவ் ரவிக்கு நெருக்கம் என்கிற தகவல் உளவுத்துறைக்குக் கிடைத்திருக்கிறது.”

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

‘‘சத்தியமூர்த்தி பவன் பக்கம் உமது தலை தென்பட்டதாமே?’’

“காங்கிரஸ் பீட் பார்க்கும் நிருபர் சொல்லிவிட்டாராக்கும்... இருக்கட்டும். தலைவர் மாற்றம் என்று தொடர்ந்து செய்திகள் வருவதால், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கடும் அப்செட்டில் இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பாக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, ‘தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருப்பதால், தலைவர் மாற்றம் இப்போதைக்கு இருக்காது. அழகிரிக்கு ஒத்துழைப்பு கொடுத்து அனைவரும் பணியாற்றுங்கள்’ என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறார். இதனால், தலைவர் பதவியை எதிர்பார்த்திருந்தவர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். ஆனாலும், தலைமைக்கு அழுத்தம் கொடுத்து மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்று டெல்லிக்குப் படையெடுக்கவும் ஒரு டீம் தயாராகிவருகிறது’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

****

எம்.எல்.ஏ மனைவியின் ஆட்டம்!

ஆளுங்கட்சியின் தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் எம்.எல்.ஏ ஒருவரின் மனைவி மீது சர்ச்சை எழுந்துள்ளது. அமலாக்கப் பிரிவில் சிக்கிய சுகேஷ் சந்திரசேகருடன் அந்த எம்.எல்.ஏ-வின் மனைவி பல்வேறு டீலிங்குகளை நடத்தினாராம். தேர்தலுக்கு முன்பாகவே இதே போன்ற ஒரு விவகாரத்தில் அந்த அம்மணியைக் கைதுசெய்ய ஆந்திர காவல்துறை நெருங்க... மேலிட சிபாரிசால் தப்பியிருக்கிறார். கணவருக்கு அமைச்சர் பதவி கிடைக்காமல் போனதற்கு, அம்மணியின் ஆட்டமும் ஒரு காரணம் என்கிறார்கள்!

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, சென்னைக்கு அருகேயுள்ள மதுபான ஆலையை வாங்கிவிட்டாராம் கோல்டு அ.தி.மு.க பிரமுகர். இந்தப் பரிவர்த்தனையில் பல நூறு ஸ்வீட் பாக்ஸ்கள் கைமாறியிருக்கின்றனவாம். இதை மோப்பம் பிடித்திருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை, ஆதாரங்களைத் திரட்டும் வேலையில் மும்முரமாகியிருக்கிறது.

* வீடியோ விவகாரத்தில் சிக்கிய தேசியக் கட்சித் தரப்பு, வீடியோவை வெளியிட்ட பத்திரிகையாளருக்கு எதிராக வழக்கு பாய்ச்ச தயாராகிவருகிறது. வேறு வீடியோக்கள் வெளியாகிவிடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கையும் இதற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism