Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் போட்டுக்கொடுத்த ரூட்... ஓ.கே சொன்ன ராகுல்!

ராகுல்காந்தி - ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ராகுல்காந்தி - ஸ்டாலின்

டி.டி.வி.தினகரன் கடும் அப்செட். எடப்பாடிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது மட்டும் காரணமில்லை... அவரின் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகனை ஓ.பி.எஸ் தரப்பு தூக்கியிருப்பதும் ஒரு காரணம்

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் போட்டுக்கொடுத்த ரூட்... ஓ.கே சொன்ன ராகுல்!

டி.டி.வி.தினகரன் கடும் அப்செட். எடப்பாடிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது மட்டும் காரணமில்லை... அவரின் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகனை ஓ.பி.எஸ் தரப்பு தூக்கியிருப்பதும் ஒரு காரணம்

Published:Updated:
ராகுல்காந்தி - ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ராகுல்காந்தி - ஸ்டாலின்

“அரசுப் பள்ளியில் படித்து மேற்படிப்புக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தைத் தொடங்கி, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் புதிய அடியை எடுத்துவைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு” என்றபடியே என்ட்ரி கொடுத்த கழுகாருக்கு சூடான பாதாம் பால் கொடுத்தோம். அதைப் பருகியபடியே உரையாடலைத் தொடங்கினார்.

“குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை கொடுப்பதன் தொடக்கம்தான், இந்தப் புதுமைப்பெண் திட்டம் என்கிறார்கள். அதேநேரத்தில், குடும்பத்தலைவிகள் எல்லோருக்கும் உரிமைத்தொகை கொடுப்பது சாத்தியமற்றது என்பதால், அரசுப் பணியாளர்கள், வேறு திட்டங்களின்கீழ் உதவித்தொகை பெறுவோரைத் தவிர்த்துவிட்டு, எஞ்சிய பெண்களுக்கு மட்டுமாவது கொடுக்கலாம் என்ற யோசனையில் இருக்கிறதாம் அரசு. 2024 மக்களவைத் தேர்தலுக்குள் தேர்தல் வாக்குறுதிகளில் கணிசமானவற்றை நிறைவேற்றவேண்டிய நிலையில் தி.மு.க இருப்பதே இதற்குக் காரணம்.”

“தேர்தலை மனதில்வைத்து, ராகுல் காந்திக்கு ஸ்டாலின் யோசனை கூறியிருப்பதாகச் சொல்கிறார்களே... என்னவாம்?”

“ ‘பா.ஜ.க ஒரு தேர்தல் முடிவதற்கு முன்பே அடுத்த தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி விடுகிறது. காங்கிரஸும் இதை கவனத்தில்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டைப்போல கேரளா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா என்று எல்லா மாநிலங்களிலும் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும். அப்படி அமைத்தால்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற முடியும். இல்லையென்றால், இந்த முறையும் தோல்வியைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும்’ என ஆலோசனை சொல்லியிருக்கிறாராம் ஸ்டாலின். அவர் போட்டுக்கொடுத்த ரூட்டில் இருக்கும் அக்கறையை உணர்ந்த ராகுல், ஓ.கே சொல்லி யிருக்கிறாராம். ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ மூலம் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி, வலுவான கூட்டணிக்கான அச்சாரத்தையும் ஏற்படுத்துவார் ராகுல் என்கிறார்கள் காங்கிரஸார்.”

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் போட்டுக்கொடுத்த ரூட்... ஓ.கே சொன்ன ராகுல்!

“பெரிய கோயில்களின் கும்பாபிஷேகத்தையே மிஞ்சிவிட்டதாமே, துர்கா ஸ்டாலினின் குலதெய்வக் கோயில் கும்பாபிஷேகம்?”

“ஆமாம். 33 யாக குண்டங்களை அமைத்து, பிரமாண்டமாக நடத்தியிருக்கிறார்கள். அந்தக் கோயில் திருப்பணியை துர்கா ஸ்டாலின் தொடங்கிவைத்தது முதலே அமைச்சர்கள், எம்.பி-க்களெல்லாம் போட்டி போட்டு நன்கொடை கொடுக்க ஆரம்பித்தார்கள். திருப்பணிகள் முடிவுற்று, செப்டம்பர் 5-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தபோது, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், சகோதரர் ஜெய.ராஜ மூர்த்தி, சகோதரி ஜெயந்தி ஆகியோருடன் துர்கா பங்கேற்றார். சபரீசனுக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செய்திருக்கிறார்கள். மகன் உதயநிதி, மருமகள் கிருத்திகா ஆகியோருக்கு கோயிலுக்கு வர விருப்பம் இல்லாததால், துர்கா அவர்களை வற்புறுத்தி அழைக்கவில்லையாம்.”

“ஓஹோ...”

“இறை வழிபாடு செய்வது அவரவர் நம்பிக்கை சார்ந்தது. அதை நாம் விமர்சனத்துக்கு உட்படுத்தவில்லை. ஆனால், கும்பாபிஷேகத்தின்போது பக்தர்களிடம் கெடுபிடி காட்டிவிட்டு, துர்காவின் குடும்பத்தினர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களும் கோயில் மேல் தளத்துக்கு அனுமதிக்கப்பட்டதாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது. பக்தர்களுக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டில்களில்கூட துர்காவின் படம், தி.மு.க கொடி, கட்சி நிர்வாகிகளின் பெயர்களையெல்லாம் அச்சிட்டுக் கொடுத்ததும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது. கும்பாபிஷேகச் செலவுகள் அனைத்தையும் உள்ளூர் நிர்வாகிகள் பகிர்ந்துகொள்ள, அமைச்சர் மெய்யநாதனும், பூம்புகார் எம்.எல்.ஏ நிவேதா முருகனும் மருமகன் சபரீசனுடனேயே இருந்து உபசரித்திருக்கிறார்கள்.”

“எல்லோருக்கும் ‘அம்பாள்’ அருள் பாலிக்கட்டும். கோவைக்கு முதல்வர் சென்றுவந்த பிறகு உட்கட்சி மோதல் அதிகரித்திருக்கிறதாமே?”

“ஆமாம்... மாவட்டப் பொறுப்பு அமைச்சருக்கும், மாவட்டப் பொறுப்பாளர்களுக்கும் இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. மாவட்டப் பொறுப்புகளுக்குத் தனக்கு விசுவாசமானவர்களைக் கொண்டுவர அமைச்சர் காய்நகர்த்துவதே இதற்குக் காரணம். சமீபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக அந்த மாவட்டத்துக்கு முதல்வர் வந்தபோது, அவரை வரவேற்க அமைச்சர் தலைமையில் மாவட்டப் பொறுப்பாளர்களும் சென்றுள்ளனர். ஆனால், எந்த மாவட்டப் பொறுப்பாளரையும் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கவில்லையாம் அமைச்சர் தரப்பு. இதில் அப்செட்டான மாவட்டப் பொறுப்பாளர்கள் அறிவாலயப் புள்ளிகளைத் தொடர்புகொண்டு, ‘சென்னையிலதான் தலைவரைப் பார்த்துப் பேச முடியலை. எங்க ஊர்லயாச்சும் பார்த்துப் பேசலாம்னா, இங்கேயும் எங்களைத் தலைவரிடம் நெருங்க விட மாட்றார்’ என்று அந்த அமைச்சர்மீது புகார்ப் பட்டியல் வாசித்திருக்கிறார்கள். ‘அமைச்சர் என்ன சொல்கிறாரோ அதைக் கேளுங்கள். இப்போதைக்கு அதுதான் நல்லது’ என அறிவாலயத்திலிருந்து பதில் வர, நொந்துபோயிருக்கிறார்கள் கோவை உடன்பிறப்புகள்” என்ற கழுகார் டேபிளில் இருந்த சர்க்கரைப் பொங்கலைப் பதம் பார்த்தார். ‘குக்கரில் வைத்த பொங்கல்போல...’ என்று கமென்ட் அடித்தவர், அ.ம.மு.க செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் போட்டுக்கொடுத்த ரூட்... ஓ.கே சொன்ன ராகுல்!

“டி.டி.வி.தினகரன் கடும் அப்செட். எடப்பாடிக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்தது மட்டும் காரணமில்லை... அவரின் ஆதரவாளரான முன்னாள் எம்.எல்.ஏ அன்பழகனை ஓ.பி.எஸ் தரப்பு தூக்கியிருப்பதும் ஒரு காரணம். வீசப்பட்ட முதல் தூண்டிலிலேயே மீன் சிக்கியிருப்பதால், தொடர்ந்து அந்தக் குளத்திலேயே வலை வீசலாம் என்று ஐடியா கொடுத்திருக்கிறாராம் வைத்திலிங்கம். ‘அங்க சுத்தி, இங்க சுத்திக் கடைசியில என் மடியிலேயே கைவெக்கிறீங்களா?’ என ஓ.பி.எஸ் தரப்பிடம் கொதித்திருக்கிறார் டி.டி.வி.தினகரன்.”

“ஓ.பி.எஸ் வீட்டுக்குள்ளும் பிரச்னை வெடித்திருக்கிறதாமே?”

“எல்லாம் பண நெருக்கடிதான். பணம் இல்லாததால் ஏற்பட்ட பிரச்னை இல்லை. யார் வெளியே எடுப்பது என்பதில்தான் சண்டையாம். மலேசியா, துபாய் போன்ற நாடுகளில்தான் குடும்பப் பணத்தில் பெரும் பங்கை முதலீடு செய்திருக்கிறார்கள். அதை நிர்வகிக்கும் ஒருவர், ‘இப்போது இருக்கும் சூழலில் சசிகலா தருவதை வைத்து எத்தனை நாளைக்குக் காலம் தள்ள முடியும்... நம் முதலீட்டை வெளியில் எடுத்தால்தான் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுக்கு உதவியாக இருக்கும்’ என்று மற்றொருவரிடம் சொல்லியிருக்கிறார். ஆனால், உடனடியாக அவ்வளவு பெரிய தொகையை வெளியில் எடுக்க இயலாது எனத் தொழில் பார்ட்னர்கள் சொல்லிவிட்டதாக அவர் கையை விரித்துவிட்டாராம். கோபத்தில் முதலாமவர் எகிற, ‘அரசியலுக்கென நீங்கள் வைத்திருக்கும் பணத்தை எடுத்துச் செலவு பண்ண வேண்டியது தானே’ என மற்றவர் கேட்க வாக்குவாதம் முற்றியிருக்கிறது. ஓ.பி.எஸ் மருமகன்தான் அவர்களிடையே சமரசம் செய்துவைத்திருக்கிறார். கட்சிப் பிரச்னைபோல குடும்பப் பிரச்னையும் கோர்ட் படியேறாமல் இருந்தால் சரிதான் என்கிறார்கள் தேனி ர.ர-க்கள்!” என்ற கழுகார்....

மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் போட்டுக்கொடுத்த ரூட்... ஓ.கே சொன்ன ராகுல்!

“சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு ஒற்றர் படை அனுப்பும் ரகசியத் தகவல்கள் காவல்துறையிலிருக்கும் கறுப்பு ஆடுகள் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கே போய்விடுகின்றனவாம். சமீபத்தில் வடசென்னையில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய ஒருவரின் அந்தரங்க லீலை குறித்து ஒற்றர் படையினர் போட்ட ரிப்போர்ட், சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரின் காதுக்கே போய்விட்டது. டென்ஷான அவர் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி, ரிப்போர்ட் கொடுத்த ஒற்றர் படையினரை இடம் மாற்றிவிட்டாராம். பிரச்னை பெரிதான பிறகே, உயரதிகாரிகள் தலையிட்டு சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டரை ஆயுதப்படைக்கு மாற்றினார்களாம். இதேபோல பிரபல ரௌடி குறித்து ஒற்றர் படை கொடுத்த ரிப்போர்ட்டை, அந்த ரௌடிக்கே போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். உடனே அந்த ரெளடி கும்பல், ஒற்றர் படைக்குக் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறது. ரகசிய ரிப்போர்ட்டுகளை இப்படிக் கசியவிடும் காவல் துறை கறுப்பு ஆடுகள் யாரென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்த இன்டர்னல் மீட்டிங்கில் காரசாரமாக விவாதிக் கப்பட்டிருக்கிறது. அதன் பிறகும் முக்கியமான ரிப்போர்ட்டுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனவாம். சீக்கிரமே பெரிய அளவில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என்கிறார்கள். அது குறித்து அடுத்த சந்திப்பில் சொல்கிறேன்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* சென்னை நந்தனத்தில் அலுவலகம் வைத்திருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி, இரவானால் ‘உற்சாக’த்துடன் டென்னிஸ் விளையாடுவது வழக்கமாகிவிட்டது. காலையில் ‘ஹேங்ஓவர்’ அதிகமாகி, மதியம் 12 மணிக்குத்தான் அலுவலகமே வருகிறாராம். கிரீன் டீ ஒன்றைக் குடித்துவிட்டு, அலுவலகத்திலேயே தூங்கிவிடுகிறாராம்.

* துறைரீதியான தகவல்களை உடனுக்குடன் பார்த்து நடவடிக்கை எடுக்க வசதியாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் `சி.எம் டேஷ்போர்டு’ தொடங்கப்பட்டது. ‘டேஸ்போர்டுக்கு அவ்வப்போது அப்டேட் கொடுங்க’ என்று அனைத்துத் துறைகளுக்கும் பலமுறை எச்சரிக்கைவிடுத்தும், பெரும்பாலானவர்கள் எந்தத் தகவலையும் பதிவேற்றம் செய்வதே இல்லையாம்.