Published:Updated:

மிஸ்டர் கழுகு: குற்றவாளிகள் ஒருபோதும் தப்பிக்கக் கூடாது!

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

- கொடநாடு விவகாரத்தில் கொந்தளிக்கும் சசி...

மிஸ்டர் கழுகு: குற்றவாளிகள் ஒருபோதும் தப்பிக்கக் கூடாது!

- கொடநாடு விவகாரத்தில் கொந்தளிக்கும் சசி...

Published:Updated:
சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

கழுகார் உள்ளே நுழைந்ததும் ஆரஞ்சு கோலி சோடாவைக் கொடுத்தோம். அதைப் பருகியபடியே கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்டவர் “பரவாயில்லை... கட்டுரை டீடெய்லாக இருக்கிறது. ஆவின் தொடர்பாக என்னிடமும் ஒரு தகவல் இருக்கிறது” என்றபடியே செய்திகளுக்குள் நுழைந்தார் கழுகார்.

‘‘ஆவினில் மிச்சமாகும் பாலை, குறைந்த விலைக்குத் தனியார் பால் நிறுவனங்களுக்கு அனுப்பிவிடுவது வழக்கமாக இருந்திருக்கிறது. அந்த வகையில் முன்னாள் ‘கோட்டை’ அமைச்சர் ஒருவர் பினாமி பெயரில் நடத்திவரும் பால் நிறுவனத்துக்கு, கடந்த ஆட்சியில் பல லட்சம் லிட்டர் பால் சென்றிருக்கிறது. ஆனால், நிலுவையிலிருக்கும் கோடிக்கணக்கான தொகை மட்டும் வசூலாகவில்லை. வற்புறுத்திக் கேட்டபோது காசோலை ஒன்றைக் கொடுத்திருக்கிறது அந்த நிறுவனம். வங்கியில் செலுத்தியபோது அதுவும் பவுன்ஸ் ஆகிவிட்டதாம். இந்த விவகாரமும் விரைவில் வீதிக்கு வரலாம் என்கிறார்கள்.”

‘‘நடந்ததையெல்லாம் பார்த்தால், பாலுக்குக் காவலாக பூனையை வைத்திருந்த கதையாக அல்லவா இருக்கிறது! அதிருக்கட்டும்... உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க ஆலோசனைக் கூட்டம் நடத்தியதே?’’

மிஸ்டர் கழுகு: குற்றவாளிகள் ஒருபோதும் தப்பிக்கக் கூடாது!

‘‘ஆமாம், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-களிடம் கட்சித் தலைவர் ஸ்டாலின், தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினார்கள். ஆனால், இந்தக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில அணி நிர்வாகிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. சீட் பரிந்துரை விவகாரங்களைத் தவிர்ப்பதற்காகவே இந்த ஏற்பாடு என்கிறார்கள். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் புலம்பல் சத்தம் அறிவாலயம் வரை கேட்கிறது!”

‘‘கூட்டத்தில் என்ன பேசப்பட்டதாம்?’’

‘‘தலைவர் மு.க.ஸ்டாலின் கையோடு கொண்டுவந்த குறிப்புகளை வைத்துக்கொண்டு நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார். சில நிர்வாகிகள் மட்டும், ‘நகர்ப்புறத் தேர்தலோடு ஒன்பது மாவட்டத்துக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாமே...’ என்று சொல்லியிருக் கிறார்கள். அதற்கு ஸ்டாலின், ‘நீதிமன்றத்தில் தேர்தல் நடத்த நாம் கால அவகாசம் கேட்டதே அதற்காகத்தான். ஆனாலும், அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. எப்போது தேர்தல் நடந்தாலும், அதை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும். எனக்குத் தேவை நூறு சதவிகித வெற்றி மட்டுமே... அதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்று கறாராகச் சொல்லியிருக்கிறார்.’’

‘‘முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்குச் செல்வதாகத் தகவல்கள் வந்தனவே?’’

‘‘சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு செப்டம்பர் 16-ம் தேதி டெல்லி செல்ல முதலில் திட்டமிட்டார்கள். ஆனால், செப்டம்பர் 17-ம் தேதி பெரியார் பிறந்தநாளை ‘சமூகநீதி’ நாளாக தமிழக அரசு அறிவித்திருப்பதால், அன்று டெல்லியில் இருப்பது நன்றாக இருக்காது என்று பயணத்தை இந்த மாத இறுதிக்குத் தள்ளி வைத்துவிட்டார்களாம். தவிர, டெல்லியில் கட்டப்பட்டுவரும் தி.மு.க அலுவலகத்தின் கட்டுமானப் பணிகளும் இந்த மாத இறுதியில்தான் முடிகின்றனவாம். அதன் திறப்புவிழாவை நடத்திவிட்டு, கையோடு பிரதமரைச் சந்திக்கவும் நேரம் கேட்டிருக்கிறார்கள்.”

“டெல்டா அ.தி.மு.க-வுக்குள் சசிகலா பாசம் அதிகரித்துவிட்டதுபோல!”

‘‘கடந்த சட்டமன்றத் தேர்தலில் டெல்டா மண்டலத்துக்கு உட்பட்ட தொகுதிகளின் வேட்பாளர்கள் தேர்வின்போதே அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முட்டிக்கொண்டது. அந்தப் புகைச்சல் இப்போதுவரை தொடர்கிறது. சமீபத்தில் பன்னீரின் மனைவி இறந்ததற்கு பன்னீரின் கரங்களைப் பற்றி சசிகலா ஆறுதல் கூறினார் அல்லவா... இதையடுத்து வைத்திலிங்கம், சசிகலா தரப்பை சந்தித்துப் பேசியிருப்பதாகவும், அவரைக் கட்சிக்குள் கொண்டுவர முயற்சி செய்வதாகவும் டெல்டாவில் தகவல்கள் கசிகின்றன.’’

மிஸ்டர் கழுகு: குற்றவாளிகள் ஒருபோதும் தப்பிக்கக் கூடாது!

“இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையிலும் சூட்டோடு சூடாக ஒன்பது மாவட்டங்களுக்குத் தேர்தல் பொறுப்பாளர்களை அ.தி.மு.க-வில் அறிவித்துவிட்டார்களே..?’’

‘‘அதுவும்தான் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எடப்பாடிக்கு நெருக்கமானவர்களை மட்டுமே பொறுப்பாளர்களாக நியமனம் செய்திருக்கிறார்களாம். கட்சியின் முக்கியத் தலைவர்கள், ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த சீனியர் நிர்வாகிகள் ஆகியோரிடம் எதுவும் கேட்கவே இல்லையாம். முன்னாள் அமைச்சர்கள் சிலரையும் இந்தப் பட்டியலிலிருந்து ஒதுக்கியிருக்கிறார்கள். செல்லூர் ராஜூவின் பெயர் பட்டியலில் இல்லை. ஆனால், ராஜேந்திர பாலாஜிக்கு வாய்ப்பு அளித்துள்ளார்கள். ‘சர்ச்சைக்குரிய வகையில் பேசி கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்திய ராஜேந்திர பாலாஜியின் பெயரை டிக் செய்த எடப்பாடி, கட்சிக்காக உழைத்தவரை மறப்பது நியாயமா?’ என்று புலம்புகிறார்கள் செல்லூர் ராஜூவின் ஆதரவாளர்கள். அதேசமயம், பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட இன்னும் சில மாஜிக்களோ, தேர்தல் செலவுகளை மனதில் வைத்துக்கொண்டு ‘நம்மை எதற்கு அறிவித்தார்கள்?’ என்று புலம்புகிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: குற்றவாளிகள் ஒருபோதும் தப்பிக்கக் கூடாது!

‘‘உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தை மாநிலத் தேர்தல் ஆணையம் கூட்டியதே?’’

‘‘ஆமாம், செப்டம்பர் 6-ம் தேதி நடந்த கூட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தி.மு.க கோரிக்கை வைத்துள்ளது. அ.தி.மு.க தரப்பில், ‘கொரோனாவைக் காரணம் காட்டி, வாக்குப்பதிவு நேரத்தை மாலை 6 மணிக்கு மேல் அதிகரிக்க வேண்டாம்; ஆளுங்கட்சியினர் அதைச் சாதகமாக எடுத்துக்கொள்வார்கள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதையடுத்து, விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பதால், எந்நேரமும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம்.”

‘‘சசிகலா தரப்பில் கொடநாடு வழக்கை உற்று கவனித்துவருகிறார்களாமே?”

‘‘இருக்காதா பின்னே... சசிகலா தனக்கு நெருக்கமானவர்களிடம், ‘அம்மா இருந்தபோது மட்டுமல்ல... அவர் மறைவுக்குப் பிறகும்கூட சில ஆவணங்களை கொடநாடு பங்களாவில் வைக்கச் சொன்னேன். அதையெல்லாம் தெரிந்துகொண்டுதான் இந்தக் கொள்ளையை அரங்கேற்றியுள்ளார்கள். இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ஒருபோதும் தப்பிக்கக் கூடாது’ என்று கடுமையாகக் கொந்தளித்தாராம். மற்றொருபுறம், கொடநாடு மேல் விசாரணைக்கு உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட வேண்டும் என்று ஒரு டீம் டெல்லியில் முகாமிட்டு மூவ் செய்துவருகிறதாம்’’ என்றபடி சிறகுகளை விரித்தார் கழுகார்.

மிஸ்டர் கழுகு: குற்றவாளிகள் ஒருபோதும் தப்பிக்கக் கூடாது!

பத்திரப்பதிவுத்துறை முறைகேடுகள்... முன்னாள் மாஜிகளுக்குக் குறி!

கடந்த ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறையில் நடந்த முறைகேடுகளை விசாரிக்க, சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமிக்கப்போவதாக துறை அமைச்சர் மூர்த்தி அறிவித்திருக்கிறார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரை இதற்காக நியமிக்கவிருக் கிறார்கள். கடந்த ஆட்சியின்போது நிலங்களின் மதிப்பைக் குறைத்துக்காட்டி ஏகத்துக்கு வளைத்துப்போட்ட மாஜிக்களையும், அவர்களுக்குச் சாதகமாக இருந்த பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளையும் விசாரிக்கவிருக்கிறார்கள். அதன்படி இந்தத் துறையின் முன்னாள் மாஜிக்குத்தான் முதல் குறி வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்!

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

 அடுத்த ரெய்டு நமக்குத்தான் என்று அச்சப்படும் மாஜிக்கள் சிலர், ‘ரெய்டுகூட ஓகே. கேஸை நாங்க கோர்ட்டுல பார்த்துக்குறோம். அரெஸ்ட் மட்டும் வேண்டாம். பி.பி., சுகரை வெச்சுக்கிட்டு ஜெயிலிலெல்லாம் காலம் தள்ள முடியாது’ என்று ஆளும் தரப்பின் உறவு பிரமுகரிடம் தூது அனுப்பிவருகிறார்களாம். இதைவைத்து மாஜிக்களிடம் புயல் வேகத்தில் நடக்கிறதாம் வசூல்!

 கலெக்‌ஷனை கவனிப்பதற்கென்றே தன் வாரிசை அலுவலகத்தில் நியமித்திருக்கிறாராம் ‘நடிகர்’ அமைச்சர். மாலையானால் நந்தனத்துக்கு வந்துவிடும் வாரிசு, மூன்றாவது மாடியிலுள்ள அறையிலிருந்தபடி ‘டீல்’களை கவனிக்கிறாராம். கடந்த ஆட்சியில் பாஸ் செய்யப்படாமல் இருந்த பில்களுக்கு சரிபாதி கமிஷனைக் கேட்கிறாராம் வாரிசு. துறையில் டெண்டர் எடுத்திருந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் உதவியாளர் ஒருவரே சமீபத்தில் இந்த டீலுக்கு ஒப்புக்கொண்டு கப்பம் கட்டிவிட்டுத்தான் தனது பில் தொகையைப் பெற்றாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism