Published:Updated:

மிஸ்டர் கழுகு: ஜெயலலிதா இடத்தில் இ.பி.எஸ்... இருப்பதையும் இழக்கும் ஓ.பி.எஸ்!

இ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
இ.பி.எஸ்

ஓ.பி.எஸ்-ஸுக்கு ஒரே பிடிமானமாக இருந்தது பொதுக்குழு வழக்குதான். இரு நீதிபதிகள் பெஞ்சில் எடப்பாடிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தபோதே பலர் சோர்ந்துவிட்டனர்

மிஸ்டர் கழுகு: ஜெயலலிதா இடத்தில் இ.பி.எஸ்... இருப்பதையும் இழக்கும் ஓ.பி.எஸ்!

ஓ.பி.எஸ்-ஸுக்கு ஒரே பிடிமானமாக இருந்தது பொதுக்குழு வழக்குதான். இரு நீதிபதிகள் பெஞ்சில் எடப்பாடிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தபோதே பலர் சோர்ந்துவிட்டனர்

Published:Updated:
இ.பி.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
இ.பி.எஸ்

அலுவலகக் கூட்ட அரங்கில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார் கழுகார். “என்ன கழுகாரே, ராகுல் காந்தி நடைப்பயணத்தின் தாக்கமா?” என்று நாம் கேட்க, “ரொம்ப நாளைக்குப் பிறகு மீட்டிங் ஹாலுக்கு வந்திருக்கிறேன் அல்லவா... அதான் எமோஷன் ஆகிட்டேன்” என்று கண்ணடித்தவர், விஷயத்துக்கு வந்தார்.

“இடைக்காலப் பொதுச்செயலாளராகத் தேர்வான பிறகு, தலைமை அலுவலகத்துக்கு வந்து தன் நாற்காலியில் உட்காரக்கூட முடியாமல் போய்விட்டது இ.பி.எஸ்-ஸுக்கு. 8-ம் தேதி ராகு காலம் முடிந்த பிறகு வீட்டிலிருந்து புறப்பட்டவர், அலுவலகத்தில் நுழையும்போதே வாசலை மூன்று முறை தொட்டுக் கும்பிட்டார். மீட்டிங் ஹாலில் பொறுப்பேற்றவுடன், நேரடியாக ஜெயலலிதாவின் பொதுச்செயலாளர் அறைக்கே போய்விட்டார். காலணிகளை வெளியிலேயே கழற்றிவிட்டவர், பொதுச்செயலாளராக ஜெயலலிதா உட்கார்ந்த நாற்காலியை மறுத்துவிட்டு மற்றொரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். பால்கனியில் நின்றபடி கைகாட்டச் சொன்னவர்களிடமும் மறுத்துவிட்டாராம். ஜெயலலிதா நாற்காலியில், உட்கார்ந்து, ஜெயலலிதாபோலவே கைகாட்டிய சசிகலாவின் கதியைப் பார்த்தே அவர் இப்படித் தயங்கியதாகச் சொல்கிறார்கள். ஆனாலும், ‘முதன்முறையாக அலுவலகம் வருகிறேன், இவ்வளவுதான் கூட்டமா?’ என்று கடுகடுத்திருக்கிறார் இ.பி.எஸ். ‘அவசர அவசரமாக ஏற்பாடு செய்ததால் சென்னையிலிருந்து மட்டும்தான் ஆட்களை வரவழைக்க முடிந்தது’ என்று தலையைச் சொறிந்திருக்கிறார்கள் மாவட்டச் செயலாளர்கள் சிலர்.”

மிஸ்டர் கழுகு: ஜெயலலிதா இடத்தில் இ.பி.எஸ்... இருப்பதையும் இழக்கும் ஓ.பி.எஸ்!

“முந்தைய நாள் அறிவித்து, மறுநாளே தலைமைக் கழகம் செல்லுமளவுக்கு என்ன அவசரமாம்?”

“பல காரணங்கள் இருக்கின்றன. சாவி ஒப்படைக்கப்பட்டு, பொதுக்குழு விவகாரத்தில் சாதகமான தீர்ப்பு வந்த பிறகும் பொறுமை காத்தது, நல்லநாள் பார்த்துத்தானாம். கூடவே, ஓ.பி.எஸ் தரப்பின் வன்முறை குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணை முடியட்டும் என்றும் காத்திருந்திருக்கிறார். ‘8-ம் தேதி ஓணம், பிரதோஷம்... நல்ல நாள் தவறவிடக் கூடாது’ என்பதாலேயே சட்டென வந்திருக்கிறார். இதில் இன்னோர் அரசியலும் இருக்கிறது என்கிறார்கள்.”

“இதிலுமா..?”

“ ‘பொதுக்குழு வழக்கில் மாறி மாறித் தீர்ப்பு வருவதால், தொண்டர்களும் நிர்வாகிகளும் குழம்பிப்போயிருக்கிறார்கள். நாமும் அமைதியாக இருந்தால், குழப்பம் இன்னமும் அதிகமாகும். அதனால், கட்சி அலுவலகத்துக்குப் போனால்தான், கட்சி நம் வசம் இருப்பதை அழுத்தமாகப் பதிவுசெய்ய முடியும். நாம் வலுவாக இருக்கிறோம் என்பதைத் தொண்டர்களிடம் வெளிப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால், தொண்டர்கள் நம்பிக்கையிழந்து என்ன முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொன்னாராம். ‘தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் பேசிவருகிறார்கள்’ போன்ற ‘பேய்க்கதை’களும்கூட தொண்டர்களை உற்சாகப்படுத்தத்தான் என்கிறார்கள்.”

“ஓ.பி.எஸ் முகாமில் என்ன நடக்கிறது?”

“சலசலத்துப்போயிருக்கிறது. ஓ.பி.எஸ்-ஸுக்கு ஒரே பிடிமானமாக இருந்தது பொதுக்குழு வழக்குதான். இரு நீதிபதிகள் பெஞ்சில் எடப்பாடிக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தபோதே பலர் சோர்ந்துவிட்டனர். ‘நாங்கள் உங்க பக்கம் வந்துவிடுகிறோம்’ என்று ஏற்கெனவே வாக்கு கொடுத்திருந்த ஒன்றியச் செயலாளர், நகரச் செயலாளர்கள் இப்போது அழைத்தால் போனையே எடுப்பதில்லையாம். ஓ.பி.எஸ் அறிவித்த மா.செ-க்கள் சிலர், ‘ஒன்றாகப் போய் தி.மு.க-வில் சேர்ந்துவிடலாம்’ என்கிற திட்டத்தோடு இருப்பதாகவும் சொல்கிறார்கள். சட்டரீதியான விஷயங்களுக்கு ஓ.பி.எஸ் பர்ஸைத் திறக்காமல் இருப்பதும் அவரின் மீதான நம்பிக்கையிழப்புக்குக் காரணம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்” என்ற கழுகாருக்கு சமோசாக்களைக் கொடுத்தோம். அதை ருசித்தபடியே தி.மு.க செய்திகளுக்குத் தாவினார்.

மிஸ்டர் கழுகு: ஜெயலலிதா இடத்தில் இ.பி.எஸ்... இருப்பதையும் இழக்கும் ஓ.பி.எஸ்!

“சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் பதவி கேட்டு அப்பகுதி தி.மு.க எம்.எல்.ஏ ஒருவர் தலைமையிடம் நேரடியாகவே முறையிட்டாராம். இதேபோல அமைச்சர் மா.சு-வின் மா.செ பதவியைப் பெறவும் சிலர் முயன்று வருகிறார்களாம். சென்னை மாவட்டத்தில் தொடங்கியிருக்கும் இந்த உட்கட்சி முட்டல்கள் தொடர்பாக, இளைய அருணா, மயிலை வேலு, திருவொற்றியூர் சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகளை அறிவாலயத்துக்கு அழைத்து ஆ.ராசாவும் அமைச்சர் தங்கம் தென்னரசுவும் பஞ்சாயத்து செய்திருக்கிறார்கள்.”

“ம்...”

“ஆனால், இந்த விசாரணையில் பங்கேற்காமல் மாதவரம் சுதர்சனம் மட்டும் கம்பி நீட்டிவிட்டார். துரைமுருகன் அழைத்தபோது உடல்நிலை சரியில்லை எனச் சொன்னவர், ஆ.ராசா அழைத்தபோது ‘தொடர்பு எல்லைக்கு வெளியே’ போய்விட்டாராம். இந்த விசாரணை விவகாரம் வெளியில் பரவ... தெற்கிலிருந்து ஒரு கூட்டம் வந்து, தேனி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ மீது புகார் மழை பொழிந்துவிட்டுச் சென்றிருக்கிறது.”

“முதல்வரின் நெல்லை விசிட்டில், புதிய வாரிசு ஒருவர் தலைகாட்டியிருக்கிறாரே கவனித்தீரா?”

“கவனித்தேன்... கவனித்தேன். சபாநாயகர் அப்பாவு, தன் மகன் அலெக்ஸை முன்னிறுத்தியிருக்கிறார். சபாநாயகராக இருந்துகொண்டு உள்ளூர் அரசியலில் ஈடுபட முடியவில்லை என்பதால், தன்னுடைய மகனைத் தீவிர அரசியலில் இறக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் அப்பாவு. அதன் முன்னோட்டமே இது என்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு கட்சி விவகாரங்களிலிருந்து விலகியிருந்த அலெக்ஸ், நெல்லையில் முதல்வருக்கு வரவேற்பு கொடுத்ததுடன், அடுத்த நாள் நிகழ்விலும் தன்னை முன்னிறுத்திக்கொண்டிருக்கிறார்.”

மிஸ்டர் கழுகு: ஜெயலலிதா இடத்தில் இ.பி.எஸ்... இருப்பதையும் இழக்கும் ஓ.பி.எஸ்!

“ஓஹோ... அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிடி இறுகியிருக்கிறதுபோலவே?”

“ஆமாம். அரசு வேலை வாங்கித் தருவதாக 81 பேரிடம் பண மோசடி செய்ததாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார் பதிவானது. செந்தில் பாலாஜி தரப்பும், புகார்தாரர்கள் சிலரும் சமாதானமாகப் போய்விட்டதாகத் தெரிவித்ததும், அதை ஏற்று வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். இந்தத் தீர்ப்புக்கு எதிராக, சேலம் தர்மராஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டில்தான், `செந்தில் பாலாஜி மீதான புகாரை மீண்டும் விசாரியுங்கள்’ என்று தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ‘விசாரணை மீண்டும் நடந்தால், செந்தில் பாலாஜிக்குச் சிக்கல்தான்’ என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.”

“இன்னொரு பக்கம், டெண்டர் முறைகேடு வழக்கில் வேலுமணிக்குச் சாதகமாகக் காய்கள் நகர்த்தப்படுகின்றனவாமே?!”

“இந்த வழக்கை ரத்துசெய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலுமணி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, வேலுமணி தரப்பில் டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் ராஜூ ஆஜரானார். ஆனால், `ராஜூ மத்திய அரசின் வழக்கறிஞர். அதுவும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சார்பான வழக்குகளில் ஆஜராகும் ‘கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்’ பொறுப்பில் இருப்பவர். கேபினெட் அந்தஸ்துள்ள முக்கியப் பொறுப்பில் இருப்பவர் எப்படிக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக ஆஜராகலாம்?’ என தமிழ்நாடு அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்” என்ற கழுகார்...

“இப்படி ஆஜராகிக் கொண்டிருப்பது விசாரணையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் நீதித்துறையைச் சார்ந்தவர்கள். அதுமட்டுமல்ல, செப்டம்பர் 12-ம் தேதியோடு பணிநிறைவு பெறவிருக்கும் தலைமை நீதிபதி இந்த வழக்கை விசாரிப்பதும் சர்ச்சையாகியிருக்கிறது. பொதுவாக இப்படியான சந்தர்ப்பத்தில், தலைமை நீதிபதிகள் இந்த மாதிரியான வழக்குகளில் ஆஜராவதில்லை. சமீபத்தில் அடிக்கடி டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சர்களைச் சந்தித்துவந்தார் வேலுமணி. மத்திய அரசின் சட்ட அமைச்சகத்தின் அனுமதியோடு மத்திய அரசின் வழக்கறிஞர், வேலுமணிக்காக ஆஜரானது வேலுமணிமீதான மத்திய அரசின் அக்கறையையே காட்டுகிறது என்கிறார்கள்” என்றபடி விருட்டெனப் பறந்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* தென் சென்னையில் இருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர், காலையில் அமைச்சர் ஒருவரின் போட்டோவில்தான் கண்விழிக்கிறாராம். அமைச்சரின் தயவில் வசூல் ஏரியாவுக்கு மாறுதலாகி வந்த அந்த அதிகாரி, அமைச்சர் தரப்பிலிருந்து வரும் அசைமென்ட்களையே முதல் கடமையாகச் செய்து முடிக்கிறாராம்.

* தீயணைப்புத்துறையில் ஒரே நேரத்தில் 384 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த ஊருக்கு மாற்றப்பட்டிருக்கிறார்களாம். இதைச் செய்த பிரகாசமான உயரதிகாரி அடிக்கடி விமானத்தில் பறப்பதுடன், வார இறுதியில் ஈ.சி.ஆரிலும் சுற்றிவருகிறாராம்.