Published:Updated:

மிஸ்டர் கழுகு: உதயநிதி அப்செட்... நள்ளிரவில் ஏர்போர்ட் விரைந்த ஸ்டாலின்!

இன்பநிதி
பிரீமியம் ஸ்டோரி
இன்பநிதி

ஒருகாலத்தில் அ.தி.மு.க-வில் ராமராஜன், எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட நட்சத்திரப் பேச்சாளர்களுக்குப் பதவிகள் கொடுத்து ஜெயலலிதா அழகுபார்த்தார்.

மிஸ்டர் கழுகு: உதயநிதி அப்செட்... நள்ளிரவில் ஏர்போர்ட் விரைந்த ஸ்டாலின்!

ஒருகாலத்தில் அ.தி.மு.க-வில் ராமராஜன், எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட நட்சத்திரப் பேச்சாளர்களுக்குப் பதவிகள் கொடுத்து ஜெயலலிதா அழகுபார்த்தார்.

Published:Updated:
இன்பநிதி
பிரீமியம் ஸ்டோரி
இன்பநிதி

வியர்த்து விறுவிறுத்து அலுவலகத்துக்குள் நுழைந்த கழுகாருக்கு, இளநீர்ப் பாயசத்தை நீட்டினோம். ருசித்துக் குடித்தவர், ‘‘ஒரு விவகாரத்தை கன்ஃபார்ம் செய்வதற்காகச் சென்றேன்...” என்றபடியே செய்திகளுக்குள் நுழைந்தார்...

‘‘கருணாநிதி குடும்பத்தில் உதயநிதி, கிருத்திகா என்று சிலர் சினிமாதுறையில் இருக்கும் நிலையில், உதயநிதியின் மகன் இன்பநிதி விளையாட்டுத்துறையில் நுழைந்திருக்கிறார். கால்பந்து வீரரான இன்பநிதி மணிப்பூரின் ‘நிரோகா’ அணிக்காக விளையாட தேர்வாகியிருக்கிறார். ஸ்பெயினில் நடக்கவிருக்கும் கிளப் போட்டிக்கு இன்பநிதி செல்லவேண்டியிருந்தது. செப்டம்பர் 15-ம் தேதி நள்ளிரவில் ஃப்ளைட் என்பதால், இன்பநிதியை அனுப்பிவைக்க உதயநிதியும், அவரின் மனைவி கிருத்திகாவும் செப்டம்பர் 14-ம் தேதி இரவு சென்னை விமான நிலையம் சென்றார்கள். அங்கு ஏற்பட்ட சிறு தடங்கல் ஒன்று முதல்வர் ஸ்டாலினை டென்ஷனாக்கிவிட்டது என்கிறார்கள்.’’

மிஸ்டர் கழுகு: உதயநிதி அப்செட்... நள்ளிரவில் ஏர்போர்ட் விரைந்த ஸ்டாலின்!

‘‘முதல்வர் பேரனுக்கே தடங்கலா?’’

‘‘கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தடுப்பூசி, கொரோனா நெகட்டிவ் சான்று என்று விமானப் போக்குவரத்துத்துறை பல்வேறு ஆவணங்களைக் கேட்கிறது. இன்பநிதிக்கு தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ்களில் ஏற்பட்ட குழப்பத்தால், விமானம் ஏறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இதில் உதயநிதி கடும் அப்செட்டாகிவிட்டார். இந்தத் தகவல் உடனடியாக முதல்வருக்குச் சொல்லப்பட்டதும், அந்நேரத்துக்கு அவரும் கிளம்பி விமான நிலையம் வந்துவிட்டார். ஒருவழியாக நள்ளிரவு 2 மணிக்கு மேல் இன்பநிதிக்கு கிளியரன்ஸ் கிடைத்த பிறகு பேரனை மகிழ்ச்சியுடன் விமானத்தில் ஏற்றி வழியனுப்பிவிட்டே, முதல்வர் உள்ளிட்டவர்கள் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தார்களாம்.’’

‘‘நட்சத்திரங்கள் இடம்பெயர்கின்றனவாமே!’’

‘‘ஒருகாலத்தில் அ.தி.மு.க-வில் ராமராஜன், எஸ்.எஸ்.சந்திரன் உள்ளிட்ட நட்சத்திரப் பேச்சாளர்களுக்குப் பதவிகள் கொடுத்து ஜெயலலிதா அழகுபார்த்தார். ஆண்டுதோறும் தீபாவளியின்போது சிறப்புப் பண முடிப்புகளும் கொடுக்கப்படும். ஜெயலலிதா இறந்த பிறகு நட்சத்திரப் பேச்சாளர்களை யாரும் சட்டைகூடச் செய்யவில்லை. அதனால், அவர்களில் பலரும் தி.மு.க-வுக்குத் தாவும் மனநிலையில் இருக்கிறார்களாம். சில நட்சத்திரங்களின் சொந்தங்கள் தி.மு.க-விலும் பொறுப்பில் இருப்பதால், அவர்கள் மூலம் தூது சென்றிருக்கிறது.’’

‘‘உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்கிறார்களே...’’

‘‘தொடர்ச்சியாக இதையேதான் சொல்கிறார்கள்... எனக்குக் கிடைத்த தகவலின்படி புதிதாக ஓரிருவர் அமைச்சரவையில் இடம்பெறலாம். துரைமுருகனிடம் நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை, எ.வ.வேலுவிடம் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை, செந்தில் பாலாஜியிடம் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, தங்கம் தென்னரசுவிடம் தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, அனிதா ராதாகிருஷ்ணனிடம் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை, மூர்த்தியிடம் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை, மெய்யநாதனிடம் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை என இரு துறைகளை வைத்திருப்பவர்களில், யாரேனும் இருவரிடமிருந்து துறைகள் பிரிக்கப்பட்டு, புதியவர்களுக்குத் தரப்படலாம்’’ என்ற கழுகாருக்கு நேந்திர சிப்ஸைக் கொடுத்தோம். அதைக் கொறித்தபடியே செய்திகளைத் தொடர்ந்தார்...

மிஸ்டர் கழுகு: உதயநிதி அப்செட்... நள்ளிரவில் ஏர்போர்ட் விரைந்த ஸ்டாலின்!

‘‘இந்த விஷயத்தில் இப்படியும் ஒரு தகவல் ஓடுகிறது... கூட்டுறவுத்துறை அமைச்சரான ஐ.பெரியசாமி, தனக்கு முக்கியமான இலாகாவை ஒதுக்கவில்லை என்ற வருத்தத்தில், கடந்த மூன்று மாதங்களாகச் சுணக்கமாகவே இருக்கிறார். முதல்வர் அவரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லையாம். அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு இல்லத்தில்கூட குடியேறாமல் ஹோட்டலில்தான் தங்கிவருகிறார். இதனால், அவரைச் சமாதானப்படுத்த செந்தில் பாலாஜியிடமிருந்து ஒரு துறையைப் பிரிக்கவும் திட்டம் இருக்கிறதாம்.’’

‘‘ஓஹோ!’’

‘‘திருவண்ணாமலையில் செப்டம்பர் 16-ம் தேதி நடைபெற்ற டி.டி.வி.தினகரனின் மகள் ஜெயஹரிணி திருமண நிகழ்ச்சிக்கு, திண்டிவனத்தை அடுத்த சலவாதி கூட்டுச்சாலை வழியாக சசிகலா சென்றிருக்கிறார். அப்போது விழுப்புரம் மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் சிலர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். யாரும் எதிர்பாராத வகையில், விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகி சகாதேவனும் சென்று கைகூப்பி சசிகலாவுக்கு வரவேற்பு அளித்துள்ளார். மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி பொருளாளரான சகாதேவன், சசிகலாவுக்கு எதிராகப் பேசிவரும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் நெருங்கிய ஆதரவாளர். சாமியார் என்று அழைக்கப்படும் இவர், சி.வி.சண்முகம் முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது ஜோசியம் பார்த்துச் சொல்வாராம். அப்படியிருக்க, திடீரென இவர் சசிகலாவைச் சந்தித்து வரவேற்றது, விழுப்புரம் அ.தி.மு.க வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.’’

‘‘சரி, திருமணத்தில் என்ன விசேஷம்?’’

‘‘திருமணத்துக்கு முதல்நாள் மாலை திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில்கூட ‘அருணாசலேஸ்வரர் கோயில் சுந்தரேஸ்வரர் சந்நிதியில் திருமணம் நடைபெறும்’ என்றுதான் படிக்கப்பட்டது. ஆனால், இரவோடு இரவாக அந்த முடிவு கைவிடப்பட்டு, மண்டபத்திலேயே திருமணத்தை முடித்திருக்கிறார்கள். திருமண விழாக்களுக்கு 50 நபர்களுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கியிருக்கிறது தமிழக அரசு. ஆனால், 300 பேருக்கு அனுமதி கேட்டாராம் டி.டி.வி.தினகரன். அதற்கு முதலில், ‘வாருங்கள், பார்த்துக்கொள்ளலாம்’ என்று கூறிய அதிகாரிகள், கடைசி நேரத்தில் கைவிரித்துவிட்டார்களாம். அதனால்தான், இரவோடு இரவாக இடத்தை மாற்றியிருக்கிறார்கள்.’’

‘‘ஓஹோ...’’

‘‘திருச்சி மாநகரில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ள 27 கட்டடங்களை இடிக்கக் கோரி, சமூக ஆர்வலர் சீனிவாசன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கில் விதிமீறல் கட்டடங்களை சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது திருச்சி மாநகராட்சி நிர்வாகம். விசாரித்தால், கட்டட உரிமையாளர்களில் சிலர் அமைச்சர் கே.என்.நேருவுக்கு உறவினர்களாம். அதனாலேயே, அந்தக் கட்டடங்கள் மீது கைவைக்கக் கூடாது என்று நேரு தரப்பிலிருந்து அதிகாரிகளுக்குத் தகவல் வந்ததாம். இதையடுத்து, மீண்டும் நீதிமன்றப் படி ஏறவிருக்கிறாராம் சீனிவாசன்’’ என்றபடி கழுகார் சிறகுகளை விரித்தார்.

மிஸ்டர் கழுகு: உதயநிதி அப்செட்... நள்ளிரவில் ஏர்போர்ட் விரைந்த ஸ்டாலின்!

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்

* பிரபல நிறுவனம் ஒன்றுக்கு மீடியேட்டராகச் செயல்பட்டுவரும் முன்னாள் ஐ.ஏ.எஸ் ஒருவர், டெண்டர் தொடர்பான சில விதிமுறைகளைத் தங்கள் நிறுவனத்துக்குச் சாதகமாக மாற்றும்படி இப்போதிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் தூதுபோனாராம். ஆனால், எக்ஸ் ஆபீஸரின் பேச்சுக்கு இந்நாள் ஆபீஸர் கட்டுப்படாததால், ‘உச்சத்தில் இருக்கும் அதிகாரிக்கே நான் குருநாதர். உன்னை மாற்றாமல் விட மாட்டேன்’ என்று சபதம் போட்டுச் சென்றிருக்கிறாராம்.

* புதிதாக டெல்லிக்குப் போகவிருப்பவர் பட்டியலில் குமார பிரமுகர் பெயரை அறிவித்ததில், சர்ச்சைக்குப் பெயர்போன கொங்கு மண்டல நிறுவனம் ஒன்று ஹேப்பியாம். கடந்த ஆட்சியில் தமிழக அரசுக்கு பருப்பு, முட்டை சப்ளை செய்ததில் கோலோச்சிய அந்த நிறுவனத்துக்கு குமார பிரமுகர் நெருக்கம் என்பதால், அவர் மூலமே தற்போதைய ஆட்சியிலும் டெண்டர் எடுக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறதாம் அந்த நிறுவனம்!

‘‘கட்சிக்கு நல்லதல்ல!’’

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் தொடர்பாக சமீபத்தில் டெல்லி வரை புகார்கள் சென்றன. இதையடுத்தே, தான் சுறுசுறுப்பாகச் செயல்படுவதாகக் காட்டிக்கொள்ள நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறைகளின்மீது கவன ஈர்ப்பு தீர்மானங்களைக் கொண்டுவந்து, அதற்கு பதிலளித்துப் பேசினாராம் எ.வ.வேலு. கட்சியிலும் வடமாவட்டங்களில் தன்னைத் தாண்டி வேறேந்த அமைச்சரும் ‘ஸ்கோர்’ செய்துவிடக் கூடாது; முதல்வரிடம் நெருங்கிவிடக் கூடாது என்பதிலும் தீவிரமாக இருக்கிறாராம் வேலு. இதெல்லாம் கட்சிக்கு நல்லதல்ல’’ என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.

வழக்குகள் வாபஸ் பெறாதது ஏன்?

கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, “கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்” என்று உறுதியளித்தார் ஸ்டாலின். அதன் தொடர்ச்சியாக ஜூன் 24-ம் தேதி சட்டமன்றத்தில் கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது பேசிய முதல்வர், “கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்” என்று அறிவித்தார். ஆனால், இந்த விவகாரத்தை கவனித்துவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ, “போராடியவர்கள் மீது இன்னும் 120 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஆனால், போலீஸ் தரப்பில் 89 வழக்குகள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்கிறார்கள். போலீஸ் சொல்கிறபடி வைத்துக்கொண்டால்கூட, மொத்த வழக்குகளை வாபஸ் பெறாமல் 26 வழக்குகளை மட்டுமே வாபஸ் பெற்றுள்ளனர். மீதமுள்ள வழக்குகளில் 40 வழக்குகள் தேசத்துரோகம் மற்றும் தேசத்துக்கு எதிராகப் போர் தொடுத்த வழக்குகள். அவற்றில் ஒன்று மட்டுமே வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதாகச் சொல்லிவிட்டு, தாமதிப்பது ஏன்?” என்று வேதனை தெரிவிக்கிறார்கள்.