Published:Updated:

மிஸ்டர் கழுகு: டெல்லியுடன் சமரசம்... இறங்கிவந்த எடப்பாடி!

மோடி, எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
மோடி, எடப்பாடி பழனிசாமி

பழனிசாமியை பலவீனமடையவைக்கும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் நிலையில் இருக்கிறார் அவர்

மிஸ்டர் கழுகு: டெல்லியுடன் சமரசம்... இறங்கிவந்த எடப்பாடி!

பழனிசாமியை பலவீனமடையவைக்கும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் நிலையில் இருக்கிறார் அவர்

Published:Updated:
மோடி, எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
மோடி, எடப்பாடி பழனிசாமி

“உமது நிருபர் குழுவுக்கு எனது வாழ்த்துகளைச் சொல்லிவிடும்” என்றவாரே குலோப் ஜாமூனுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். “தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் தேர்தல் தொடர்பான ஜூ.வி கவர் ஸ்டோரியில் சொன்ன விஷயங்கள் அப்படியே நடந்திருப்பதோடு, அறிவாலயத் திலேயே ஸ்டாலினை இரண்டு நாள்கள் உட்கார வைத்து விட்டீர்களே... அதற்குத்தான் இந்த வாழ்த்து” என்றவர், உரையாடலைத் தொடர்ந்தார்...

“ஒன்றியச் செயலாளர் தேர்தல் களேபரங் களால் களைப்படைந்துவிட்டதால், ‘மாவட்டச் செயலாளர் பதவிக்கு மாவட்டத்துக்கு ஒருவரை மட்டும் வேட்புமனு தாக்கல் செய்யச் சொல்லலாம். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் போட்டியிட விரும்பினால், கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரும், பொறுப்பு அமைச்சரும் பேச்சுவார்த்தை நடத்தி ஒருவரைப் போட்டி யிலிருந்து விலகச் செய்யட்டும். எஞ்சியவரை ஏகமனதாகத் தேர்ந்தெடுத்துவிடலாம்’ என சீனியர்கள் ஆலோசனை சொல்லியிருக்கிறார்கள். தலைமையும் அதற்கு உடன்படவே, அதையே அனைத்து மாவட்ட நிர்வாகிகளுக்கும் வாய்மொழி உத்தரவாக அனுப்பியிருக்கிறார்கள். தன் பங்குக்கு, ‘இளைஞரணி நிர்வாகிகள் சிலருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வேண்டும்’ என்ற உதயநிதியின் பரிந்துரை குறித்தும் ஆலோசித்து ஓ.கே செய்திருக்கிறார்கள்.”

“மாவட்டச் செயலாளர் தேர்தல் இருக்கட்டும்... தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டதாகத் தகவல் வந்ததே?”

மிஸ்டர் கழுகு: டெல்லியுடன் சமரசம்... இறங்கிவந்த எடப்பாடி!

“கொடுத்தது உண்மைதான். அமைச்சர் முத்துசாமியுடனான மோதலே அதற்குக் காரணம். கடந்த மாதம் நடந்த முதல்வரின் ஈரோட்டுப் பயணத்தின்போதே, தன் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டாராம் சுப்புலட்சுமி ஜெகதீசன். அவரைச் சமாதானப்படுத்த, அமைச்சர் மனோ தங்கராஜை அனுப்பியிருந்தது கட்சித் தலைமை. ஆனால், சுப்புலட்சுமியோ இறங்கி வரவில்லையாம். இந்த நிலையில் ஸ்டாலின் தலைமையில் அறிவாலயத்தில் நடந்த தி.மு.க அமைப்புத் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், ராஜினாமா கடிதம் குறித்து, காரசாரமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. கூட்டத்தில், ‘சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு அவரது தொகுதியிலேயே, இப்போது செல்வாக்கு இல்லை. சட்டமன்றத் தேர்தலில் களப்பணி செய்யாமல் தோற்றுவிட்டு, ஈரோடு மாவட்ட, ஒன்றிய தி.மு.க நிர்வாகிகள்மீது பழியைப் போடுகிறார். அவருடைய கணவர் தேவை யில்லாமல், வைகோவையெல்லாம் விமர்சிக்கிறார். ஒரு முடிவோடுதான் இதை யெல்லாம் செய்கிறார்கள். எனவே, அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதுதான் நல்லது’ என்று மூத்த நிர்வாகிகள் சிலர் சொல்லியிருக் கிறார்கள். `இப்போதைக்கு அதிரடியெல்லாம் வேண்டாம். தேவையில்லாமல் பா.ஜ.க வாய்க்கு அவல் கொடுத்ததுபோல் ஆகிவிடும். அமைப்புத் தேர்தல் முடியும்வரை அமைதி காக்கச் சொல்வோம்’ என்று தலைமை கூறியதைத் தொடர்ந்து சுப்புலட்சுமியிடம் மறுபடியும் பேசியிருக்கிறார்கள். அதன் பிறகே துணைப் பொதுச்செயலாளர் பதவியில் தொடர்வதாக அறிவித்திருக்கிறார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.’’

“அதற்குள் அந்தப் பதவிக்கு நிறைய பேர் முண்டியடித்துவிட்டார்கள்போலயே...”

“தி.மு.க அமைப்புச் சட்டத்தின்படி, துணைப் பொதுச்செயலாளராக ஒரு பெண் கட்டாயம் இருக்க வேண்டும். எனவே, சுப்புலட்சுமி ராஜினாமா விஷயம் கசிந்ததிலிருந்தே, தி.மு.க-வின் முன்னாள், இன்னாள் பெண் அமைச்சர் களெல்லாம் அந்தப் பதவிக்கு முட்டிமோதத் தொடங்கிவிட்டார்கள். மகளிரணிச் செயலாளர் கனிமொழிக்கே துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பை வழங்க வேண்டுமென்றும் குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது. ‘அண்ணன் மனமுவந்து கொடுத்தால் ஏற்கத் தயார்’ என்ற மனநிலையில்தான் கனிமொழியும் இருக்கிறாராம்.”

“அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”

“சசிகலா - டி.டி.வி.தினகரன் இடையே சமரச முயற்சி நடந்திருக் கிறது. அ.தி.மு.க-வில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவரும், சசிகலாவுக்கு ஆதரவாக வலம் வருபவருமான முன்னாள் எம்.பி ஒருவர், தினகரனுக்கு ஆதரவாக சசிகலாவிடம் பேசியிருக்கிறார். ‘கட்சியில் எடப்பாடியின் கை ஓங்கிவிட்டது. நிரந்தப் பொதுச்செயலாளரும் ஆகிவிட்டால் நம்முடைய கதி அதோகதிதான். நமக்கும் பெரிய ஆதரவு இல்லை. ஓ.பி.எஸ்-ஸும் இறங்கி வேலை செய்வதாகத் தெரியவில்லை. இப்போதைக்கு ஓர் அமைப்பாக, கட்சியாக இருப்பது அ.ம.மு.க-தான். பேசாம, தினகரனை ஆதரித்து சில வேலைகளைச் செய்யலாமே’ என்பது அவர் சொன்ன ஆலோசனை...”

“அதற்கு சசிகலா என்ன சொன்னாராம்?”

“சில நிமிடங்கள் மௌனமாக இருந்த சசிகலா, ‘என் குடும்பத்துல உள்ளவங்களைத் தவிர்த்து நான் யார்கிட்டயும் பகிர்ந்துக்காத சில விஷயங் களை உங்ககிட்ட சொல்றேன் அண்ணே... அவர் பண்ணுன முந்திரிக்கொட்டை வேலை களாலதான் எல்லாமே கெட்டுப்போச்சு அண்ணே... நான் வெறுமனே கட்சியை மட்டுமா ஒப்படைச்சுட்டுப் போனேன்... துணைப் பொதுச் செயலாளர் பதவியையும், பெரிய தொகையையும் சேர்த்துத்தானே கொடுத்திருந்தேன். ஆனா அதைத் தப்பாப் பயன்படுத்தி, கட்சி, குடும்பம் எல்லாத்தையும் சிதைச்சுட்டாரு. அவரோட அடாவடிதான், இந்த நிலைமைக்கே காரணம். என்ன செஞ்சாலும், அதுல இருந்து நம்மளால இன்னும் மீள முடியலை’ என்று தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறார்.”

“எடப்பாடி தரப்பின் அடுத்தகட்ட மூவ் என்னவாம்?”

“உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கிலும் தங்களுக்குச் சாதகமாகத்தான் தீர்ப்பு வரும் என தீர்க்கமாக நம்புகிறது எடப்பாடி தரப்பு. ஆனால், தேர்தல் ஆணைய அங்கீகாரத்தில்தான் ‘செக்’ இருக்கும் என்பதால், மத்தியில் ஆளுங்கட்சியுடன் பழையபடி இணக்கமாகச் செல்ல முடிவெடுத் திருக்கிறதாம். சமீபத்திய டெல்லி பயணத்தில்கூட அது பற்றிப் பேசியதாகச் சொல்கிறார்கள். ‘2024 நாடாளுமன்றத் தேர்தலில், கடந்த முறையைவிட பா.ஜ.க-வுக்குக் கூடுதலான இடங்களைக் கொடுக்கிறோம்’ எனச் சொல்லியிருக்கிறார்கள். டெல்லி மேலிடம் இரட்டை இலக்க சீட்களை எதிர்பார்ப்பதாகச் சொல்ல, இறங்கி வந்திருக்கிறார் எடப்பாடி. ‘நாடாளுமன்றத் தேர்தலில் இல்லாவிட்டாலும், 2026 சட்டமன்றத் தேர்தலில், நிச்சயமாக உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்கிறோம்’ என்று டீல் பேசி இப்போதைக்குச் சரிக்கட்டியிருக்கிறார்களாம்.”

மிஸ்டர் கழுகு: டெல்லியுடன் சமரசம்... இறங்கிவந்த எடப்பாடி!

“எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘தமிழ்நாட்டில் நான்கு முதலமைச்சர்கள் இருக்கிறார்கள்’ என தடாலடியாகக் குற்றம்சாட்டியிருக்கிறாரே?”

“வெறும் பரபரப்புக்காக அவர் இதைச் சொல்லவில்லையாம். ‘தொழில்துறையில் துர்கா, ரியல் எஸ்டேட் - கான்ட்ராக்டில் சபரீசன், சினிமாத்துறையில் உதயநிதி என்று வெளிப்படையாகத் தெரியும் குற்றச்சாட்டுகளைத் தாண்டி, அரசு நிர்வாகத்திலும் அவர்களது தலையீடு இருப்பதற்கான ஆதாரங்களைத் திரட்டிவைத்திருக்கிறார் எடப்பாடி’ என்கிறார்கள். ஒரு மாதத்துக்கு முன்பே வரவேண்டிய மூத்த அதிகாரிகள் பணியிட மாற்றம், ‘சாஸ்தா’ பிரமுகரின் அழுத்தத்தால்தான் தொங்கிக்கொண்டிருக்கிறதாம். அந்தப் பிரமுகர் கடந்த 13 மாதங்களில் என்னென்ன நிறுவனங் களைத் தொடங்கியிருக்கிறார், எங்கேயெல்லாம் முதலீடு செய்திருக்கிறார் என்பதையும் தோண்டி எடுக்க ஆடிட்டர்கள், வழக்கறிஞர்கள் அடங்கிய குழுவைப் போட்டிருக்கிறார் எடப்பாடி. ஆட்சியை இழந்திருந்த ஜெயலலிதா, 2011 தேர்தலுக்கு முன்பு கருணாநிதிமீது இதே போன்ற குற்றச்சாட்டைச் சுமத்திதான் வெற்றி பெற்றார். அதே ஆசையில்தான் எடப்பாடியும் இப்படிக் கிளம்பியிருக்கிறாராம்.”

“ஓ.பி.எஸ்!?”

“பழனிசாமியை பலவீனமடையவைக்கும் எந்த நடவடிக்கையாக இருந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் நிலையில் இருக்கிறார் அவர். முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டால் குஷியாகி, ‘லஞ்ச ஒழிப்புத்துறை தனது கடமையைச் செய்கிறது, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள்தான் தங்களைக் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டும்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். அவரது இந்தக் கருத்தை வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே..சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரே ரசிக்கவில்லையாம். ‘ஏற்கெனவே தி.மு.க-தான் நம்மை இயக்குகிறது என்று பேசுகிறார்கள். இப்படியெல்லாம் ஸ்டேட் மென்ட் கொடுத்தால், எஞ்சிய தொண்டர்களும் அந்தப் பக்கம் போய்விடுவார்கள்’ என்று வருத்தப்பட்டார்களாம்” என்ற கழுகார்...

“சென்னையின் வியாபார ஏரியாவைச் சேர்ந்த தி.மு.க தோழமைக் கட்சி கவுன்சிலர் ஒருவரின் அட்டகாசம் தாங்க முடியவில்லையாம். பெட்டிக்கடைகளில்கூட மாமூல் கேட்டு மிரட்டிய விவகாரம் முதல்வர் வரை சென்றிருக்கிறது. ‘தூக்கி உள்ளே போடுங்க. அவங்க கட்சித் தலைமைகிட்ட நான் பேசிக்குறேன்’ என்று கறார் காட்டிவிட்டாராம் முதல்வர்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* கொடநாடு வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், உளவுத்துறையிலிருந்து அமலாக்கப் பிரிவுக்கு மாற்றப்பட்ட மூத்த அதிகாரி தலைமையில் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன் குழு அமைத்து இந்த வழக்கை விசாரிக்கத் திட்டமிட்டிருக்கிறதாம் அரசு.

* கனிம வளத்துறையில் உயர்பதவியிலிருக்கும் ‘பணக்காரசாமி’ பெயரைக்கொண்ட அதிகாரியின் பினாமி, அந்தமானில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றை நடத்திவருகிறாராம். கனிம வளத்துறை டீலிங்குகளில் பல அந்த ஹோட்டலில்தான் ரகசியமாக நடக்கின்றனவாம்.

* ஆதிதிராவிடர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 1,324 பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகள் ‘ஆதிதிராவிடர் நல விடுதி’ என்ற பெயரிலேயே செயல்படுகின்றன. விடுதியின் பெயரைவைத்து, தங்களை ஒதுக்குவதாக மாணவர்கள் புகாரளித் திருப்பதால், பெயரை மாற்றுவது குறித்த ஆலோசனை தொடங்கியிருக்கிறது.