Published:Updated:

மிஸ்டர் கழுகு: “மாமா... மாப்ள...!” - முடிவுக்கு வருகிறதா உறவு?

கே.சி.வீரமணி
பிரீமியம் ஸ்டோரி
கே.சி.வீரமணி

லஞ்ச ஒழிப்புதுறையினர் வீரமணி வீட்டில் சோதனையிட்டபோது 551 யூனிட் ஆற்று மணலைப் பதுக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மிஸ்டர் கழுகு: “மாமா... மாப்ள...!” - முடிவுக்கு வருகிறதா உறவு?

லஞ்ச ஒழிப்புதுறையினர் வீரமணி வீட்டில் சோதனையிட்டபோது 551 யூனிட் ஆற்று மணலைப் பதுக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Published:Updated:
கே.சி.வீரமணி
பிரீமியம் ஸ்டோரி
கே.சி.வீரமணி

கேபினுக்கு நுழைந்ததும், சுழல் இருக்கையில் முதுகைக் காட்டி அமர்ந்திருந்த கழுகார் ஸ்டைலாக இருக்கையைச் சுழற்றித் திரும்பினார்... “எப்போது உள்ளே வந்தீர்கள்... ஆச்சர்யமாக இருக்கிறதே!” என்று புருவங்களை உயர்த்தினோம். “அதெல்லாம் ரகசியம்!” என்றவர், செய்திகளைச் சொல்லத் தொடங்கினார்...

“சமீபத்தில் ரெய்டில் சிக்கிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியை, முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன், கருப்பணன், சி.வி.சண்முகம் ஆகியோர் செப்டம்பர் 18-ம் தேதி ஜோலார்பேட்டையிலுள்ள அவரது வீட்டில் ரகசியமாகச் சந்தித்திருக்கிறார்கள். ஏற்கெனவே சசிகலா விவகாரம் உள்ளிட்ட உட்கட்சிப் பிரச்னைகள் தீவிரமாக இருக்கும் நிலையில், எதற்காக அவர்கள் சந்தித்தார்கள் என்று கட்சி வட்டாரத்தில் இந்தச் சந்திப்பு பற்றிப் பரபரப்பாகப் பேசப்பட்டது. பதறிப்போன செங்கோட்டையன், ‘ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திருப்பத்தூர் மாவட்டத்துக்கு அ.தி.மு.க தேர்தல் பணிக்குழுப் பொறுப்பாளர்களாக என்னையும் கருப்பணனையும் நியமித்துள்ளது தலைமை. அதன் அடிப்படையில் திருப்பத்தூருக்குச் சென்றபோது மரியாதை நிமித்தமாக வீரமணியைச் சந்தித்துப் பேசினோம். எங்களுக்குள் வேறெந்த அஜெண்டாவும் இல்லை’ என்று விளக்கம் அளித்தாராம்!”

“அதிருக்கட்டும், ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளியிடம் புலம்பினாராமே வீரமணி?”

“உண்மைதான். `மாமா... மாப்ள’ என்று கூப்பிடும் அளவுக்கு அவர்களுக்குள் இருக்கும் அண்டர்ஸ்டேண்டிங் ஊரறிந்தது. வீரமணி வீட்டில் நடந்த ரெய்டை அடுத்து, ஆளுங்கட்சிப் புள்ளியிடம் வீரமணி தரப்பு, ‘எங்க ஆட்சியில எவ்வளவு உதவி செஞ்சு கொடுத்திருக்கேன்... ரெய்டு பத்தி முன்கூட்டியே தகவல் சொல்லியிருக்கலாம்ல’ என்று வருத்தப்பட்டதாம். அதற்கு ஆளுங்கட்சிப் புள்ளியோ, ‘மாப்ள, எனக்குத் தெரிஞ்சா சொல்லாம இருப்பேனா... ரெய்டு நடக்கப்போகுதுன்னு சத்தியமா எனக்குத் தெரியாது. ஆனா, கட்சித் தலைமை இந்த விஷயத்துல ரொம்ப தீவிரமா இருக்கு. என்னால உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாது’ என்று கைவிரித்துவிட்டதாம். இதையடுத்து, ‘இனி மாமா, மாப்ள நெருக்கம் தொடருமா?’ என்று வேலூர் மாவட்டத்தில் பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருக்கிறார்கள் இரு கட்சிகளின் நிர்வாகிகள்!

“வீரமணியிடமே மணலை அபேஸ் செய்துவிட்டார்களாமே!”

மிஸ்டர் கழுகு: “மாமா... மாப்ள...!” - முடிவுக்கு வருகிறதா உறவு?

“எனக்கும் அந்தச் செய்தி வந்தது. லஞ்ச ஒழிப்புதுறையினர் வீரமணி வீட்டில் சோதனையிட்டபோது 551 யூனிட் ஆற்று மணலைப் பதுக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், வீரமணியின் வீட்டில் கிடைத்த ஆவணங்களிலோ மணல் இருப்பு 900 யூனிட் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ‘ஏன் இந்த வித்தியாசம்?’ என்று வீரமணியிடம் விசாரித்தபோது, ‘என்னிடமும் 900 யூனிட் மணல் என்றுதான் இறக்கிவைத்தார்கள். ஆனால், நீங்கள் சொல்லித்தான் அதில் 500 யூனிட் தான் இருக்கிறது என்று தெரிந்தது. இப்படித்தான் ஒவ்வொரு முறையும் என்னை ஏமாற்றியிருக்கிறார்கள்’ என்று புலம்பியிருக்கிறார்!”

“எத்தனுக்கு எத்தன்கள் என்று சொல்லும்... சரி, ஆளுங்கட்சி அமைச்சர்கள் சிலருக்குச் சிக்கல் வரலாம் என்கிறார்களே?”

“உமது கேள்வி சரிதான். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கப் பிரிவு ஏற்கெனவே பதிவுசெய்த வழக்கில் விரைவில் அவர் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பவிருக்கிறார்கள். மதுரை அமலாக்கப் பிரிவு இதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. அதேபோல் கே.என்.நேரு, பொன்முடி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தி.மு.க அமைச்சர்கள் சிலர்மீது சொத்துக்குவிப்பு வழக்குகளும், அமலாக்கப் பிரிவு பதிந்த வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றனவாம். அவையெல்லாம் எந்நேரமும் தூசுதட்டப்படலாம் என்று கோட்டை வட்டாரத்தில் கிசுகிசுக்கிறார்கள்!”

“அப்பா, மகன் இடையே உரசல் வந்துவிட்டதாமே?”

“ம்க்கும்... நேற்று, இன்று கதையா இது... ஒவ்வொரு தேர்தலிலும் நடப்பதுதானே! உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டி என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருக்கிறார். ஆனால், வடமாவட்டங்களில் நிலைமையே வேறாம். அங்குள்ள பா.ம.க-வினர் அ.தி.மு.க-வுடன் இணைந்து செல்லும் மூடில் இருக்கிறார்களாம். அந்தந்த மாவட்ட அ.தி.மு.க செயலாளர்களுடன் பா.ம.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார்கள். அதிலும், செங்கல்பட்டு மாவட்ட பா.ம.க நிர்வாகிகள் ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கே வந்து ‘இணைந்து பணியாற்றலாம்’ என்று கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அன்புமணியின் ஆஃப் தி ரிக்கார்டு உத்தரவுப்படியே இந்தப் பேச்சுவார்த்தைகள் நடந்தனவாம். இந்த விவகாரம் ராமதாஸுக்குத் தெரிந்ததும் தோட்டமே அதிரும்படி கர்ஜித்தாராம். அதன் பிறகே கட்சித் தலைவர் ஜி.கே.மணி, ‘அ.தி.மு.க-வினர்தான் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்’ என்று சமாளித்திருக்கிறார். உண்மையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அ.தி.மு.க-விடம் வலியச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியது பா.ம.க தரப்புதானாம். இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டால் அது தி.மு.க-வுக்குச் சாதகமாகிவிடும் என்றே இந்த அதிகாரபூர்வமற்ற பேச்சுவார்த்தையை நடத்தியதாகச் சொல்கிறார்கள் பா.ம.க-வினர்”

மிஸ்டர் கழுகு: “மாமா... மாப்ள...!” - முடிவுக்கு வருகிறதா உறவு?

“சர்ச்சைக்குரிய நிறுவனம் பற்றி வரிசையாகத் தகவல் வந்துகொண்டே இருக்கின்றனவே!”

“ஆமாம்... ஏற்கெனவே டெல்லிக்குத் தேர்வானவரை வைத்து மளிகைப் பொருள்களை சப்ளை செய்ய காய்நகர்த்திய அந்த நிறுவனம், இப்போது வெண்மைத்துறை பிரமுகரின் வாரிசிடம் டீல் பேசியிருக்கிறதாம். அந்தத்துறையில் பொருள்களைக் கொண்டு செல்லும் மொத்த வாகனங்களுக்கான டெண்டரைக் கேட்டிருக்கிறது அந்த நிறுவனம். முதற்கட்டமாக அதற்கு 10 சதவிகித கமிஷனைக் கொடுக்கவும் சம்மதித்திருக்கிறது” என்றபடி ‘சர்’ரென்று சிறகுகளை விரித்தார் கழுகார்!

*****

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* சென்னை மாவட்ட ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவர் சில நாள்களுக்கு முன்பு நள்ளிரவில் உற்சாகத்தில் மிதந்தபோது, சில கிளுகிளுப்பு படங்களைத் தன் நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறார். மறுநாள் காலை ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளிகள் வரிசையாக அந்த நிர்வாகிக்கு போன் போட்டிருக்கிறார்கள். பிறகுதான் தெரிந்திருக்கிறது... உற்சாக மிகுதியில் நண்பர்களோடு சேர்த்து, அவர் ஆளும் தரப்பின் முக்கியப் புள்ளிகளுக்கு படங்களை அனுப்பிய விவகாரம்!

* கடல் மாவட்டத்திலும் மத்திய மாவட்டத்திலும் பணியாற்றும் உளவுத்துறை உச்ச அதிகாரிகள் இருவர், ‘துறையின் மூத்த அதிகாரி எங்களுக்கு வேண்டியவர்; நாங்கள் ‘நோட்’ போட்டால்தான் எதுவும் நடக்கும்’ என்று சொல்லி ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்கே அதிர்ச்சி கொடுக்கிறார்களாம். `இந்த விஷயம், உளவுத்துறையின் உச்ச அதிகாரிக்குத் தெரியுமா?’ என்று புலம்புகிறார்கள் அந்த மாவட்டங்களின் ஆளுங்கட்சிப் பிரமுகர்கள்!

மனு கொடுக்க வந்தவர்மீது வழக்கு

தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சமீபத்தில் ஆலோசனைக் கூட்டத்தை முடித்துக்கொண்டு காரில் ஏறச் சென்றார் முதல்வர் ஸ்டாலின். அப்போது பாதுகாப்பு காவலர்களைத் தாண்டி உள்ளே நுழைந்த இளைஞர் முதல்வரிடம் கடிதம் ஒன்றைக் கொடுக்க முற்பட்டார். அவரைக் காவல்துறையினர் பிடித்து இழுத்துச் சென்றனர். இதைப் பார்த்தும் பார்க்காததுபோலச் சென்றுவிட்டாராம் ஸ்டாலின். தலைமைச் செயலகத்தின் கேன்டீனில் வேலை பார்க்கும் அந்த இளைஞர், தன் மனைவிக்கு வேலை கேட்டு முதல்வரிடம் மனு கொடுக்க வந்தவராம். காவல்துறையோ அந்த இளைஞர்மீது வழக்கும் போட்டுவிட்டது என்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: “மாமா... மாப்ள...!” - முடிவுக்கு வருகிறதா உறவு?

“ஆதாரமற்ற குற்றச்சாட்டு” - அமைச்சர் எ.வ.வேலு பதில்!

செப்டம்பர் 22-ம் தேதியிட்ட ஜூனியர் விகடனில், `கட்கரி ட்வீட்... எ.வ.வேலுவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா?’ என்கிற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். இந்தச் செய்தி தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலுவிடம் பதில் பெற அந்த இதழ் அச்சுக்குச் செல்லும் வரை முயன்றோம். ஆனால், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்த இதழ் கடைகளில் வெளிவந்த அன்று நம்மைத் தொடர்புகொண்ட அமைச்சர் எ.வ.வேலு, “தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அந்த ஒப்பந்தங்கள் மாநில அதிகார வரம்புக்குள்ளேயே வராது. நெடுஞ்சாலை ஒப்பந்தத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ‘பேக்கேஜ் டெண்டர்’ முறையை நான் ஒழித்திருக்கிறேன். மூன்று மாவட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே செய்துவந்த பணிகளைப் பரவலாக்கியிருக்கிறேன். இதனால், சுமார் 200 ஒப்பந்ததாரர்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை பிடிக்காத சிலர்தான் என்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புகிறார்கள். சில தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக, சமீபத்தில் நிதின் கட்கரி கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக நான் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி கனிம வளம், வனம் உட்பட நான்கு துறைகளின் அமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். கமிஷன் வாங்குவதாக என்மீது கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது” என்றார்.