Published:Updated:

மிஸ்டர் கழுகு: திறந்துவைத்த பி.டி.ஆர்... ரெய்டுவிட்ட மூர்த்தி... சிக்கலில் சூரி!

சூரி - பழனிவேல் தியாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
சூரி - பழனிவேல் தியாகராஜன்

தூங்கா நகரத்தை யார் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பதில் பி.டி.ஆருக்கும், மூர்த்திக்கும் இடையே போட்டியிருப்பது ஊரறிந்த விஷயம்

மிஸ்டர் கழுகு: திறந்துவைத்த பி.டி.ஆர்... ரெய்டுவிட்ட மூர்த்தி... சிக்கலில் சூரி!

தூங்கா நகரத்தை யார் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பதில் பி.டி.ஆருக்கும், மூர்த்திக்கும் இடையே போட்டியிருப்பது ஊரறிந்த விஷயம்

Published:Updated:
சூரி - பழனிவேல் தியாகராஜன்
பிரீமியம் ஸ்டோரி
சூரி - பழனிவேல் தியாகராஜன்

இதழ் முடிக்கும் தறுவாயில் ‘என்ட்ரி’ கொடுத்த கழுகார், “தி.மு.க மாவட்டச் செயலாளர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் களைகட்டியிருக்கிறது. தெற்கிலிருந்து அறிவாலயத்துக்குப் படை திரண்டு வந்திருந்த தி.மு.க-வினரைச் சமாளிக்க முடியாமல் தொண்டரணியினர் திணறியதைப் பார்க்கப் பாவமாக இருந்தது” என்றபடி, நேரடியாக செய்திகளைக் கொட்டத் தொடங்கினார்...

“அமைப்புரீதியாக மீண்டும் ஒன்றிணைக் கப்பட்ட மாவட்டங்களில் புதியவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. கூடவே, தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் மா.செ-க்கள் மாற்றம் இருக்கும் என்கிறார்கள். இவை தவிர திருப்பூர், தென்காசி, திருவள்ளூர், நெல்லை, ஈரோடு, கோவை உள்ளிட்ட சில மாவட்டச் செயலாளர்களை அடுத்த ஆறு மாதங்களுக்கு மட்டும் பதவியில் தொடரச் சொல்லியிருக் கிறார்களாம். நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் அவர்களை மாற்றிக்கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறதாம் தலைமை. விருப்ப மனுவை யார் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் என்பதால் அறிவாலயத்தில் கூட்டம் அலை மோதுகிறது. ஆனால், சிட்டிங் மா.செ-க்களுக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தவர்களிடம், ‘மாற்றம் இருக்குமா என்பது தெரியவில்லை... இருந்தாலும் கொடுங்க...’ என்று முன்னெச்சரிக்கையாகச் சொல்லியே மனுவைப் பெற்றிருக்கிறார்கள்.”

“வாழ்க உட்கட்சி ஜனநாயகம்... ‘ஆ.ராசாவின் கருத்துக்கு தி.மு.க அமைச்சர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை’ என்று சொல்லியிருக்கிறாரே அண்ணாமலை?”

“ஆ.ராசா தி.மு.க நிர்வாகி. அவர் சொல்லும் கருத்தில் உடன்பாடு இல்லையென்றால்தான், தி.மு.க தலைமையோ, மற்றவர்களோ மறுப்பறிக்கை வெளியிட வேண்டும். தங்கள் கட்சிக்காரர் சொன்ன கருத்தில் மாற்றுக்கருத்து இல்லாத போது அதைச் சரி என்றோ, தவறு என்றோ சொல்லவேண்டிய தேவை எங்கே வந்தது... அதுமட்டுமல்லாமல், ‘தனது கருத்தை எந்த அளவுக்கு எளிமைப்படுத்திச் சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு எளிமையாகச் சொல்லிவிட்டார் ஆ.ராசா. புரிந்தும் புரியாதது போல அண்ணாமலை வெளியிட்டிருக்கும் அறிக்கை அரைவேக்காட்டுத்தனமானது’ என்கிறார்கள் தி.மு.க உடன்பிறப்புகள்...”

மிஸ்டர் கழுகு: திறந்துவைத்த பி.டி.ஆர்... ரெய்டுவிட்ட மூர்த்தி... சிக்கலில் சூரி!

“நடிகர் சூரிக்குச் சொந்தமான, மதுரை ஹோட்டல்களில் நடந்த திடீர் ரெய்டுக்கு என்ன காரணமாம்?”

“அந்த ரெய்டை நடத்தியது தமிழக வணிக வரித்துறைதான். ஜி.எஸ்.டி இல்லாமல் உணவுக் கட்டணம் வசூலித்தது மற்றும் பொருள்களைக் கொள்முதல் செய்ததற்கான ஆவணங்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள் அதிகாரிகள். இந்தச் சோதனைக்குக் காரணமே வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தரப்புடன் சூரிக்கு ஏற்பட்ட தகராறுதானாம்.”

“சூரியின் ஹோட்டல்களில் ஒன்றை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்தானே திறந்துவைத்தார்?”

“சரியாகச் சொன்னீர்... அதுவும் ரெய்டுக்கு ஒரு காரணம் என்கிறார்கள். தூங்கா நகரத்தை யார் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது என்பதில் பி.டி.ஆருக்கும், மூர்த்திக்கும் இடையே போட்டியிருப்பது ஊரறிந்த விஷயம். ‘நிதியமைச்சர் தொடங்கிவைத்த ஒரு ஹோட்டலிலேயே ஜி.எஸ்.டி முறைகேடு நடக்கிறது...’ என்கிற பேச்சை உருவாக்கவும் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள். 15 நாள்களுக்குள் நேரில் ஆஜராகச் சொல்லி சம்மன் அனுப்பப்பட்டிருப்பதால், விழிபிதுங்கி நிற்கிறார் சூரி” என்ற கழுகார் டேபிளில் இருந்த உளுந்து வடையை ஒரு கை பார்த்தார்.

“அரசு நிகழ்ச்சி எதுவும் இல்லையென்றாலும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாட்டு வருகை முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கமலாலயத்தில் அவரிடம் அந்த அளவுக்கு அரசியல் பேசியிருக்கிறார்கள். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, கரூர், சிவகங்கை, ஈரோடு, மதுரை, தென்காசி, நீலகிரி ஆகிய எட்டு தொகுதிகளைக் குறிவைத்து இப்போதே களமிறங்கியிருக்கிறது பா.ஜ.க. அதற்கான பிரசாரம், நிதி விவகாரங்களை கவனிக்க மத்திய அமைச்சர் ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்படவிருக்கிறார். இந்த எட்டு தொகுதிகளுக்கும், மத்திய அமைச்சர் களையும், பா.ஜ.க பிரபலங்களையும் அடிக்கடி அழைத்துவரப்போகிறார்களாம். 22-ம் தேதி சிவகங்கை பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கலந்துகொண்டதுகூட அதன் ஒரு பகுதிதான். இந்தப் பிரசார ஏற்பாடுகள் குறித்து தர்மேந்திர பிரதானுடன் பா.ஜ.க மாநிலத் தலைவர்கள் விரிவாகப் பேசியிருக்கிறார்கள். அப்படியே ஆளுநர் ஆர்.என்.ரவியையும் சந்தித்து, புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு குறித்துப் பேசியிருக்கிறார் அமைச்சர்.”

ராவணன்
ராவணன்

“சசிகலா உறவினரான ராவணன் மறைவுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துக்கம் விசாரித்தாராமே?”

“வேலுமணியை ஆளாக்கிவிட்டவராச்சே... சசிகலாவின் சித்தப்பா டாக்டர் கருணாகரனின் மருமகன்தான் ராவணன். ஒருகாலத்தில், கொங்கு மண்டல அ.தி.மு.க-வையே தன் விரலசைவில் வைத்திருந்தவர். அந்த விசுவாசத்தில்தான், தஞ்சாவூர்க்காரர்களிடம் துக்கம் விசாரித்திருக் கிறார் வேலுமணி. ராவணனின் உறவுகளிடமும் தன் இரங்கலைச் சொல்லச் சொல்லியிருக்கிறார். அதேநேரத்தில், துக்கத்தில் பங்கெடுக்க நிச்சயம் சசிகலா வருவார் என உறவுகள் எதிர்பார்த்த நிலையில், அவர் வராமல் தவிர்த்துவிட்டார்.

டி.டி.வி.தினகரனும் தலைகாட்டவில்லை. திவாகரன்தான் உடனிருந்து இறுதிச் சடங்கு ஏற்பாடுகளைக் கவனித்திருக்கிறார். முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா, ம.தி.மு.க-வின் தூண்களில் ஒருவரான முராத் புகாரி ஆகியோரின் மறைவும் முக்கியமான அரசியல் இழப்புகள். ஆனால், தன் மாப்பிள்ளை சபரீசனின் பெரியப்பா தினகரனின் மறைவுக்கு மட்டும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.”

“ம்... பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) மீது என்.ஐ.ஏ ரெய்டு தடதடத்ததை கவனித்தீரா?”

‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ அலுவலகத்தில் என்.ஐ.ஏ ரெய்டு...
‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ அலுவலகத்தில் என்.ஐ.ஏ ரெய்டு...

“நாடு முழுவதும் 10 மாநிலங்களில் ரெய்டு நடத்தி, 106 பேரைக் கைதுசெய்திருக்கிறார்களே... கவனிக்காமல் போவேனா... தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதிலிருந்தே, பி.எஃப்.ஐ பற்றிய தகவல்களைத் திரட்டிவந்தார். கடந்த மே மாதம் புத்தக வெளியீட்டுவிழா ஒன்றில் பேசிய அவர், ‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா ஓர் ஆபத்தான இயக்கம். பயங்கரவாதிகளுக்குப் பின்புலமாகச் செயல்படுகிறது. நாட்டைச் சீர்குலைக்கிறது’ என்றெல்லாம் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார். தன்னுடைய உளவுத்துறை நெட்வொர்க் மூலமாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாட்டில் அந்த இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து தரவுகளைச் சேகரித்து, டெல்லிக்கும் ரிப்போர்ட்டுகளை அனுப்பியிருந்தார். அவர் போட்ட பிள்ளையார்சுழியில்தான், இந்த மெகா ரெய்டு நடந்ததாகச் சொல்கிறது என்.ஐ.ஏ வட்டாரம். ரெய்டு முடிந்த கையோடு என்.ஐ.ஏ அதிகாரிகளுடன் ஆலோசனை செய்திருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. பி.எஃப்.ஐ-யைத் தடை செய்வதற்கான பணிகளும் வேகமெடுத் திருக்கின்றன” என்ற கழுகார்...

“2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில், வெளிநாட்டில் பதுக்கிவைத்திருக்கும் ‘பார்ட்டி ஃபண்ட்’ பணத்தை ஹவாலா முறையில் இந்தியாவுக்குக் கொண்டுவர சில அரசியல் கட்சிகள் இப்போதே திட்டம் தீட்ட ஆரம்பித்து விட்டன. தமிழ்நாட்டில்கூட மேலிட குடும்பத்தின் ‘சாஸ்தா’ பிரமுகர், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை கண்ணில் சிக்காமல் பணத்தைக் கொண்டுவருவதற்கு மூன்று திட்டங்களைத் தீட்டியிருக்கிறாராம். தன் ஆடிட்டரிடம் பொறுப்பை ஒப்படைத்து, தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே பணம் தமிழ்நாட்டுக்குள் வந்து சேர வேண்டுமென உத்தரவிட்டிருக்கிறாராம். வாக்காளர்களுக்குக் கொடுக்க வசதியாக, தினம் தோறும் பணம் புழங்கும் பெரிய ஜவுளிக்கடைகள், உணவகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகளில் 100, 200 ரூபாய் நோட்டுகளைப் பெற கமிஷன் அடிப்படையில் ‘டீல்’ பேசப்பட்டிருக்கிறதாம்” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் எக்ஸ்க்ளூசிவ்:

* அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் கோலோச்சிய ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர், திடீர் பவர்ஃபுல் அமைச்சர் ஒருவர் மூலம் சிறைத்துறையின் முக்கியப் பதவிக்கு வரத் துடிக்கிறாராம். அதைப்போலவே உளவுத்துறைக்கு முயற்சி செய்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் அது கிடைக்காததால், சி.பி.சி.ஐ.டி இயக்குநர் பதவிக்குக் காயைநகர்த்துகிறாராம்.

* தி.மு.க ஆட்சி வந்த பிறகு, சுற்றுலாத்துறை சார்பாக கொடைக்கானல் ஹெலிகாப்டர் சுற்றுலா, மெரினாவில் படகு சவாரி என விதவிதமாக 58 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்கள் அல்லவா... அந்த அறிவிப்புகளில், தற்போதுவரை 20% கூட நிறைவேறவில்லையாம். இது குறித்து சி.எம் ஆபீஸில் கேட்கும்போதெல்லாம், ‘இப்ப முடிஞ்சுடும், அரசாணை வெளியிடப்போறோம்’ என்று அமைச்சரும் அதிகாரிகளும் சமாளிக்கிறார்களாம்.