அரசியல்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘பாஷை’ பஞ்சாயத்து! - சபரீசன் மீது அதிருப்தியில் சீனியர்கள்

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

எம்.எல்.ஏ ஒருவரை எடப்பாடி மண்ணைக் கவ்வவைத்த கதையைச் சொல்கிறேன்... கேளும்

“குட்கா ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை முதலமைச்சர் பழனிசாமியும், மத்திய பா.ஜ.க அரசும் வரிந்து கட்டிக்கொண்டு காப்பாற்றுவதிலுள்ள ‘அறிவிக்கப்படாத கூட்டணி’ என்ன?” - தி.மு.க தலைவர் ஸ்டாலினின் அறிக்கையை வாசித்துக்கொண்டே என்ட்ரி கொடுத்தார் கழுகார்.

“என்ன அறிக்கையெல்லாம் பலமாக இருக்கிறதுபோல...” என்று புன்னகைத்தோம்.

“எல்லாம் ‘குட்கா வேண்டுமா முதல்வரே?’ என்று தலைப்பில் உமது நிருபர் படை எழுதிய கட்டுரையின் விளைவுதான். உறங்கிக்கொண்டிருந்த குட்கா விவகாரத்தை மீண்டும் உயிர்பெற வைத்துவீட்டீர்... வாழ்த்துகள்” என்ற கழுகாரிடம், “முதல்வரை ஆர்.கே.நகருக்கு ஓடவைத்துவிட்டீரே?” என்று சூடாக மிளகாய் பஜ்ஜியுடன் கேள்வியையும் நீட்டினோம். அர்த்தம் புரிந்தவராகப் புன்னகைத்த கழுகார், “ஆர்.கே.நகரிலுள்ள அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்ததைத்தானே குறிப்பிடுகிறீர்” என்று பஜ்ஜியைச் சுவைத்தபடியே செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.

“மதுசூதனனுக்கு உடல்நிலை சரியில்லை; புதிய அவைத்தலைவர் பதவிக்கு ரேஸ் நடப்பதாகக் கடந்த இதழில் கூறியிருந்தேன். அதன் விளைவாகத்தான் ஆகஸ்ட் 26-ம் தேதி மதுசூதனனைச் சந்தித்திருக்கிறார் எடப்பாடி. சில வாரங்களுக்கு முன்னர் வாக்கிங் சென்றபோது மதுசூதனன் கீழே விழுந்து லேசாகக் காயம் அடைந்தாராம். அது குறித்து எடப்பாடி விசாரித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டபோது, ‘மதுசூதனன் தலைமையிலான அணிக்குத்தான் சின்னம்’ என்று தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. அப்போது அணிகள் இணைந்திருந்தாலும், ஓ.பி.எஸ் அணியில் மதுசூதனன் இருந்தார். கட்சி தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்றால், சின்னத்தை வைத்திருக்கும் மதுசூதனனும் தன் பிடிக்குள் இருக்க வேண்டும் என்று எடப்பாடி கருதுகிறாராம். இப்போதைக்குப் புதிய அவைத்தலைவர் நியமனத்தை ஓரங்கட்டிவிட்டு, மதுசூதனனைக் கையிலெடுக்க எடப்பாடி தீர்மானித்திருப்பதாகக் கூறுகிறார்கள்.”

மதுசூதனனுடன் எடப்பாடி பழனிசாமி...
மதுசூதனனுடன் எடப்பாடி பழனிசாமி...

“ஓ...”

“எம்.எல்.ஏ ஒருவரை எடப்பாடி மண்ணைக் கவ்வவைத்த கதையைச் சொல்கிறேன்... கேளும். மயிலாடுதுறை அ.தி.மு.க மாவட்டச் செயலாளராக செந்தில்நாதன் நியமிக்கப் பட்டுள்ளார். அவர்மீதும், அவர் தம்பி வி.ஜி.கே.மணி மீதும் பெரிய புகார் பட்டியலுடன் எடப்பாடியைச் சந்தித்திருக்கிறார் மயிலாடுதுறை எம்.எல்.ஏ-வான ராதாகிருஷ்ணன். புகார்கள் அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்ட எடப்பாடி, பதிலுக்கு ஒரு ஃபைலை நீட்டினாராம். அதில், ராதாகிருஷ்ணன் தொடர்பான வில்லங்கப் பட்டியலே இருந்திருக்கிறது. வியர்த்து விறுவிறுத்துப்போன ராதாகிருஷ்ணனைத் தட்டிக்கொடுத்த எடப்பாடி, ‘செந்தில்நாதனை கமிட்டி நியமிச்சிருக்கு. இதுக்கு மேலயும் பிரச்னையை வளர்க்காம, போய் கட்சி வேலையைப் பாருங்க...’ என்று அனுப்பி வைத்தாராம்.”

“பன்னீர் என்ன செய்கிறார்?”

“ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடரும் முடிவில் இருக்கிறார். ‘எனக்கு முதல்வர் வேட்பாளர் பதவி மீதெல்லாம் பெரிய விருப்பம் இல்லை. வரும் தேர்தலில் செங்கோட்டையனை முன்னிலைப்படுத்தினால் எப்படியிருக்கும்?’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் விசாரிக்க ஆரம்பித்திருக்கிறாராம். அதேவேளையில் தினகரன் தரப்பு, பன்னீரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்கிற பேச்சும் கட்சிக்குள் ஓடுகிறது. இதை மறுக்கும் பன்னீரின் முகாம், ‘இரட்டைத் தலைமையில்தானே இடைத்தேர்தல்களையும் நாடாளுமன்றத் தேர்தலையும் சந்தித்தோம். இடையில் தினகரன் எதற்கு? முதலில் தேர்தலைச் சந்தித்துவிட்டு, பிறகு முதல்வர் யாரென முடிவெடுக்கலாம்’ என்கிறது. சமீபத்தில் பன்னீரைச் சந்தித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மனம்விட்டுப் பேசியிருப்பது, ‘முக்குலத்தோர் ஒன்று கூடுகிறார்களோ?’ என்கிற அச்சத்தை கவுண்டர் சமூகத் தரப்பில் விதைத்துள்ளது.”

“சரிதான்... தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”

சபரீசன்
சபரீசன்


“சமீபத்தில் நடந்த பா.ஜ.க மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில், அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பேசும்போது, ‘நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் இனி அரசியலில் இருக்கக் கூடாது’ என்று கடுமை காட்டியிருக்கிறார். இந்தப் பேச்சைக் கூர்ந்து கவனித்த தி.மு.க தலைமை, குடும்பப் பிரமுகர் ஒருவர் மூலமாக டெல்லியைச் சமாதானம் செய்ய ஆரம்பித் திருக்கிறது.”

“ஓ...”

தண்ணீரைப் பருகிவிட்டு தொடர்ந்தார் கழுகார்... “தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் குறித்து கட்சி சீனியர்கள் கலக்கம் தெரிவிக்கிறார்கள். பிரசாந்த் கிஷோரும் ஸ்டாலினும் பேசும்போது, சபரீசனைத் தவிர வேறு யாரும் அருகிலிருக்க இப்போது அனுமதிக்கப்படுவதில்லையாம். ‘ஸ்டாலினுக்கு இந்தி, ஆங்கிலம் இரண்டும் பிடிபடாது. பி.கே என்ன சொல்கிறார், அதை சபரீசன் எப்படி மொழிபெயர்க்கிறார் என்பதே யாருக்கும் தெரிவதில்லை. `கட்சி சீனியர்களுக்கு சீட் கொடுக்க வேண்டாம்’ என்று பி.கே சொன்னதாக சபரீசன் சொன்னால், அதை ஸ்டாலின் ஏற்றுக்கொள்ளத்தான் செய்வார். அதனால், இம்முறை சபரீசன் நிர்ணயிப்பவர்களுக்குத்தான் சீட்’ என்று புலம்பல் கேட்க ஆரம்பித்திருக்கிறது.”

“சரிதான்... கோவை தி.மு.க-வில் ஏதோ பஞ்சாயத்தாமே?”

“கோவை தி.மு.க-வை அமைப்புரீதியாக ஐந்து மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர். பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்குப் பொறுப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ‘உள்ளடி’ வேலை செய்பவர்கள், அமைச்சர் வேலுமணியுடன் ரகசியத் தொடர்பில் இருப்பவர்கள் ஆகியோ ரெல்லாம் பொறுப்புக்குழுவில் நியமிக்கப் பட்டிருப்பதாகச் சர்ச்சை வெடித்துள்ளது.”

“அண்ணாமலை பா.ஜ.க-வில் இணைந்து விட்டாரே?” என்றபடி கழுகாருக்குச் சூடாக ஃபில்டர் காபியை நீட்டினோம். காபியின் மணத்தில் லயித்த கழுகார், ஒருவாய் உறிஞ்சிவிட்டுத் தொடர்ந்தார்.

“ஆகஸ்ட் 27-ம் தேதி மதியம், கோவை விமான நிலையத்தில் வந்திறங்கிய அண்ணாமலைக்கு பா.ஜ.க-வினர் கொடுத்த தடபுடல் வரவேற்பை அவரே எதிர்பார்க்கவில்லையாம். அவருக்கு தேசிய இளைஞரணி துணைத் தலைவர் பதவி கொடுக்கப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. கரூர் மாவட்டத்தில் அண்ணாமலையின் சொந்த ஊரை உள்ளடக்கிய அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் அவர் களமிறங்கப் போவதாகக் கூறுகிறார்கள்.”

“தமிழகத்தில் முக்கிய உயரதிகாரிகளின் கூட்டணி ஒன்று டெல்லியில் முகாமிட்டதாமே?”

ஓ.பி.எஸ் - ஆர்.பி.உதயகுமார்
ஓ.பி.எஸ் - ஆர்.பி.உதயகுமார்

“ஆமாம், தலைமைச் செயலாளர் சண்முகம், உள்துறைச் செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி திரிபாதி, முதல்வரின் செயலாளர் செந்தில்குமார் ஆகிய நான்கு பேரும் ஆகஸ்ட் 26-ம் தேதி டெல்லிக்குச் சென்றிருக்கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகளுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அந்தஸ்து வழங்குவது தொடர்பான நிர்வாக ஆலோசனைக்காக டெல்லி சென்றதாகக் கூறப்பட்டாலும், பின்னணியில் இன்னொன்றையும் சொல்கிறார்கள். அதிகாரிகளிடம் இ-பாஸ் திட்டத்தில் மத்திய அரசின் ஆலோசனைகளைக் கேட்காதது, பிரதமரின் திட்டங்களில் ஊழல்கள் நடப்பது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய டெல்லி தரப்பு, கடுமையாக எச்சரிக்கைவிடுத்து அனுப்பியிருக் கிறதாம்!” என்று கிளம்ப ஆயத்தமான கழுகார்,

“நீண்டநாள்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 26-ம் தேதி, போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் மன்றப் பொறுப்பாளர் சுதாகர், ராகவேந்திரா மண்டப மேலாளர் சிவா உள்ளிட்டவர்களிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்துக் கேட்டறிந்துள்ளார் ரஜினி. ஆனால், அறிவிப்பு வருமா என்றுதான் தெரியவில்லை!” என்றபடி சிறகுகளை விரித்தார்.

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

 சந்தோஷ் பாபுவின் விருப்ப ஓய்வை சில நாள்களுக்கு முன்னர்தான் தமிழக அரசு ஏற்றிருக்கிறது. இந்தநிலையில் ‘பாரத் நெட்’ டெண்டர் விவகாரத்தில் நடந்த முறைகேடுகளைப் பற்றி இவரிடம் தகவல் கேட்க முடிவெடுத்துள்ளதாம் மத்திய அரசு.

 ரஜினிகாந்த் தமிழகத் திரைத்துறைக்குள் வந்து 45 ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னதான் எதிரும் புதிருமாக இருந்தாலும், தி.மு.க தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 நீலகிரி ஆட்சியரான இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்வதற்கான காய்நகர்த்தல்கள் நடக்கின்றன. இதன் பின்னணியில், டிம்பர் மாஃபியாக்கள் மற்றும் ரிசார்ட் முதலாளிகள் இருக்கிறார்களாம். வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில், நீலகிரியில் அ.தி.மு.க காலூன்றுவதற்கு இவரது கெடுபிடி பிரச்னையாக இருக்கும் என்று கருதுகிறது ஆளும் தரப்பு.

 விவசாயிகளுக்கான ‘கிசான் சம்மான்’ திட்டத்தில், முறை கேடுகள் நடந்திருப்பது பிரதமர் அலுவலகம் வரை சென்றுள்ளது. இது தொடர்பாக, தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுமீது மத்திய அரசு அழுத்தமாகப் பார்வையைப் பதித்துள்ளதாம். வருமானவரித்துறையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்கிறது டெல்லி வட்டாரம்.

வீட்டிலிருந்தே அஞ்சலி!

மிஸ்டர் கழுகு: ‘பாஷை’ பஞ்சாயத்து! - சபரீசன் மீது அதிருப்தியில் சீனியர்கள்

கொரோனா காலத்தில், அரசியல் கட்சிகள் பலவும் ஜூம் மீட்டிங்கில் மூழ்கிக்கிடக்க, செல்போனிலேயே நேரடியாக நிர்வாகிகளிடம் பேசிவருகிறார் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன். ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 30-ம் தேதி ஜி.கே.மூப்பனார் நினைவு நாளையொட்டி, தேனாம்பேட்டையிலுள்ள அவரது சமாதியில் அஞ்சலி செலுத்திவிட்டு, 2,000 பேருக்கு அன்னதானம் வழங்குவது வாசனின் வழக்கம். இந்தமுறை முழு ஊரடங்கு தினமான ஞாயிறன்று நினைவுதினம் வருவதால், `அவரவர் வீட்டிலேயே அய்யாவுக்கு அஞ்சலி செலுத்துங்கள். சமாதிக்கு வர வேண்டாம்’ எனக் கூறியிருக்கிறார் ஜி.கே.வாசன்.