
கடுப்பான மாவட்ட அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தற்போதைய மாவட்டச் செயலாளரான பி.கே.வைரமுத்துவைத் தூண்டிவிட, வைரமுத்துவுக்கும் வைத்திலிங்கத்துக்கும் முட்டிக்கொண்டதாம்.
அறைக்குள் என்ட்ரி கொடுத்த கழுகார், கையிலிருந்த பஸ் டிக்கெட்களை டேபிளில் பரப்பினார். ஆச்சர்யமாகப் பார்த்தபடி, “என்னது டிக்கெட்?” என்று சூடான காபியை அவரிடம் நீட்டினோம். “பேருந்துகள் இயக்கம் தொடங்கிவிட்டதல்லவா... அதுதான் ஐந்தாறு வழித்தடங்களில் ரவுண்ட் அடித்துவிட்டு வந்தேன். பொதுப் போக்குவரத்து இல்லாமல் முடங்கியிருந்த மக்களுக்குப் பெரும் ஆறுதல் தந்திருக்கிறது இது. ஆனாலும், ‘மாவட்டம்விட்டு மாவட்டம் செல்ல முடியாது, சமூக இடைவெளிக்காக, முழு இருக்கையையும் நிரப்பக் கூடாது’ உள்ளிட்ட விதிமுறைகளால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் புலம்புகிறார்கள்” என்றபடி காபியைப் பருகிக்கொண்டே செய்திகளுக்குள் புகுந்தார் கழுகார்.
“ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியைப் பற்றிய தகவலிலிருந்து ஆரம்பிக்கிறேன். கடந்த ஆகஸ்ட் 29-ம் தேதி, ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டார்கள். இவர்களில், பழநி கோயில் நிர்வாக அதிகாரியாக இருந்த ஜெயசந்திரபானு ரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுதான் ஆளுங்கட்சியினர் பலரையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. இந்த மாற்றத்துக்குப் பின்னணியில் சசிகலாவைக் கைகாட்டுகிறார்கள். ‘கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக இவரை நியமிக்க வேண்டும்’ என்று சசிகலா தரப்பிலிருந்து வந்த கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றிவிட்டார் என்பதே ஆளுங்கட்சியினரின் ஆச்சர்யத்துக்குக் காரணம். இதற்கும் அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் முட்டல் மோதல்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்!”
“சரிதான்... கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த ஷ்ரவன் குமார் ஜடாவத்தை மாற்றிவிட்டார்களே..?”
“அவர் ஆணையராகப் பொறுப்பேற்ற திலிருந்தே சர்ச்சைதான். முதலில் அவர் தன் மனைவியை மாநகராட்சியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் அம்பாஸிடராக நியமித்தது சர்ச்சையானது. அடுத்து, கோவை மாநகராட்சியில் பினாயில், பிளீச்சிங் பவுடர் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்திருப்பதாக தி.மு.க புகார் கிளப்பியது. இது தொடர்பான ஒப்பந்த விவகாரத்தில் துறை அமைச்சருக்கே தெரியாமல், ஷ்ரவன் குமார் சில முடிவுகளை எடுத்தாராம். அப்போதே மேலிடத்தின் கோபப் பார்வை அவர்மீது பாய்ந்தது. உடனடியாக மாற்றினால் சர்ச்சையாகிவிடும் என்பதால், மாநகராட்சி துணை ஆணையாளராக ஒருவரைப் பணிக்கு அமர்த்திவிட்டு, ஷ்ரவன் குமாரை ஓரங்கட்டிவைத்தனர். இப்போது அவரை வேளாண்மைத்துறைக்கு மாற்றிவிட்டு, சென்னை மாநகராட்சி துணை ஆணையாளராக இருந்த குமரவேல் பாண்டியனை கோவை மாநகராட்சி ஆணையாளராக நியமித்துள்ளனர்.”
“முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘திருவாரூரை ஸ்பெஷலாக கவனிக்கிறேன்’ என்றாராமே..?”

“ஆமாம். ஆகஸ்ட் 28-ம் தேதி, திருவாரூரில் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தினார் எடப்பாடி. இதற்கு முன்பு வேலூர், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் நடந்த கலந்தாய்வுக் கூட்டங்களுக்கு எதிர்க்கட்சியினர் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு தி.மு.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில்தான், திருவாரூரில் நடந்த கூட்டத்துக்கு மன்னார்குடி தி.மு.க எம்.எல்.ஏ-வும், டி.ஆர்.பாலுவின் மகனுமான ராஜா வந்திருந்தார். ஆரம்பத்தில் அவரை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. விஷயம் எடப்பாடியின் காதுக்குச் சென்றதும், ‘அவரை உள்ளே விடச் சொல்லுங்கப்பா...’ என்று சொல்லியிருக்கிறார். அதன் பிறகே ராஜா கூட்டத்தில் உள்ளே அனுமதிக்கப் பட்டிருக்கிறார். ராஜா, எடுத்த எடுப்பில் எடப்பாடியிடம், ‘திருவாரூர் மாவட்டம் தொடர்ச்சியா புறக்கணிப்படுது’ என்று புகார் வாசித்திருக்கிறார். பதிலுக்கு எடப்பாடியோ, ‘இது உங்க தலைவர் மாவட்டம்ங்க. அதனாலேயே கூடுதல் கவனம் செலுத்துறேன். உங்க தலைவர்கிட்ட இதை எடுத்துச் சொல்லுங்க’ என்று அழுத்தமாகவே பேசி அனுப்பியிருக்கிறார்.”
“வைத்திலிங்கம் கடுப்பில் இருக்கிறாராமே..?”

“புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு சரவணன் என்பவரைக் கொண்டுவர வைத்திலிங்கம் முயன்றார். கடுப்பான மாவட்ட அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தற்போதைய மாவட்டச் செயலாளரான பி.கே.வைரமுத்துவைத் தூண்டிவிட, வைரமுத்துவுக்கும் வைத்திலிங்கத்துக்கும் முட்டிக்கொண்டதாம். விஜயபாஸ்கரின் உள்குத்து விளையாட்டை லேட்டாகப் புரிந்துகொண்ட வைத்திலிங்கம், விஜயபாஸ்கரோடு நேரடியாக மோதுவது என முடிவெடுத்துவிட்டாராம். மாவட்ட அரசியலில் விஜயபாஸ்கரின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளிவைக்க, முன்னாள் எம்.எல்.ஏ-வான நெடுஞ்செழியன் அல்லது மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக் தொண்டைமானை மாவட்டச் செயலாளர் ஆக்கலாம் எனப் புதிய முயற்சியைத் தொடங்கியிருக்கிறார் வைத்திலிங்கம். விஷயத்தைக் கேள்விப்பட்ட விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், ‘விழுப்புரம் கட்சி விவகாரத்துல சி.வி.சண்முகமாச்சும் சும்மா சவுண்டுவிட்டாரு. எங்க அண்ணனைச் சீண்டினா கட்சியையே ரெண்டா உடைச்சுடுவோம். 35 எம்.எல்.ஏ-க்கள் அண்ணன் பக்கம் இருக்காங்க’ என்று சிலம்பம் ஆடுகிறார்களாம். தகிக்கிறது புதுக்கோட்டை அரசியல்!”
“சரிதான்...”
“அதிருப்தியிலிருந்த நயினார் நாகேந்திரனுக்கு, தென் மண்டலப் பொறுப்பாளர் பதவியைக் கொடுத்து சாந்தப்படுத்தியிருக்கிறது பா.ஜ.க. இந்த நிலையில், தென் மாவட்டங்களில் பொன்.ராதாகிருஷ்ணன் ஆட்களுக்கு மட்டுமே பொறுப்புகள் வழங்கப்படுவதால், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருக்கிறார்கள். கட்சியின் மாநில விவசாய அணி பொதுச்செயலாளராக இருந்த கணேஷ்குமார் ஆதித்தன் சமீபத்தில் ஸ்டாலினைச் சந்தித்து தி.மு.க-வில் இணைந்துவிட்டார். பொன்.ராதாகிருஷ்ணனால் புறக்கணிக்கப்பட்ட மேலும் சிலரும் கட்சி மாறுவதற்குக் காத்திருக்கிறார்களாம்.”
கழுகாருக்குச் சூடாக மெதுவடையைத் தந்தபடியே, “வருமானவரித் துறையிலும் அதிரடிகள் நடந்திருக்கின்றனபோல” என்று கேட்டோம். காரச் சட்னியைத் தொட்டு, வடையை ருசித்த கழுகார், “உமக்கும் விஷயம் வந்துவிட்டதோ” என்றபடி செய்தியைத் தொடர்ந்தார்.

“சென்னையில் டைரக்டர் ஜெனரல் (விசாரணை) பதவியிலிருக்கும் டி.சி.பட்வாரி என்பவர்தான் தமிழகத்தில் நடந்த பல்வேறு ரகசிய ரெய்டுகளுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவர். அவர் பதவி உயர்வு பெற்று, விரைவில் வேறு இடத்துக்குச் செல்லவிருக்கிறார். அதற்கு முன்பாக, ஒரு சில ‘முக்கிய’ அசைன்மென்ட்களை முடித்துத் தரச் சொல்லியிருக்கிறதாம் மத்திய அரசு” என்று சிறகுகளைச் சிலுப்பிய கழுகார்...
“தி.மு.க-வின் மூத்த நிர்வாகிகள் இருவர் கட்டிவரும் மருத்துவக் கல்லூரிகளுக்கான தடையில்லா சான்றிதழ்களை வழங்கியது தமிழக அரசு. அதேசமயம், அ.தி.மு.க-வின் தம்பிதுரை தொடர்புடைய மருத்துவக் கல்லூரி ஃபைல் மட்டும் நகராமல் இருந்திருக்கிறது. இது குறித்து முதல்வர் தரப்பினரிடம், ‘நான் என் வேலையைக் காட்டட்டுமா?’ என்று கொதித்திருக்கிறார் தம்பிதுரை. அதன் பிறகே முதல்வர் அலுவலகத்திலிருந்த அந்த ஃபைல் கிளியர் செய்யப்பட்டு, சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகத்துக்குச் சென்றுள்ளது. சுகாதாரத்துறை சார்பில் ஃபைலை கிளியர் செய்த அமைச்சர் தரப்பு, ஃபைலைக் கட்சித் தலைமையிடம் கொடுத்துவிட்டு, ‘இதற்கு ஈடான ‘மதிப்பை’ எங்கள் சார்பிலான கட்சியின் தேர்தல்நிதியாகச் சேர்த்துக்கொள்ளவும்’ என்று கணக்கு காட்டிவிட்டதாம். இதைக் கேட்டு, ‘கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளருக்கே இந்தக் கதியா?’ என நொந்துபோனதாம் தம்பிதுரை தரப்பு” என்றபடி சிறகுகளை விரித்தார்.
கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!
* சென்னை வண்டலூரில் ஆகஸ்ட் 31-ம் தேதி நடந்த பா.ஜ.க நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், உறுப்பினராக இணைவதற்குப் பிரபல ரெளடி ஒருவர் வந்திருக்கிறார். அவர்மீது ஏழு கொலைகள் உட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதால், போலீஸாரும் அங்கு காத்திருந்தனர். இந்தத் தகவல் கடைசி நேரத்தில் அந்த ரெளடிக்கு கிடைக்கவே... கட்சியில் சேரும் முடிவைத் தற்காலிகமாகக் கைவிட்டிருக்கிறாராம் அவர்.
* ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலைக்கு பா.ஜ.க துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டதில் நடிகர் எஸ்.வி.சேகர் தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளதாம். விரைவில் அவர் மக்கள் நீதி மய்யத்தில் இணையலாம் என்கிறார்கள்.
* ஜெ.வின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் கோயில், குளம் எனச் சுற்றிவருகிறார். அவரது பெயரில்தான் சுமார் 20 அ.தி.மு.க மாவட்ட அலுவலகங்கள் வாங்கப்பட்டுள்ளன. அவற்றை எப்படியாவது கட்சிப் பெயருக்கு மாற்ற வேண்டும் என்கிற தவிப்பில், கட்சித் தலைமை பூங்குன்றனை அணுகியுள்ளதாம்.
* சென்னையில் புகழ்பெற்ற மால் ஒன்றின் உரிமையாளரும், மத்திய அமைச்சர் ஒருவரும் நெருக்கமானவர்கள். “தமிழகத்தில் மால்களைத் திறக்கும் உத்தரவுக்காக ஆளும்தரப்பைப் பெரிய அளவில் கவனித்திருக்கிறோம்” என்று பேச்சுவாக்கில் மத்திய அமைச்சரிடம் அந்த மால் உரிமையாளர் சொல்லியிருக்கிறார். இதைக் கேட்டதும் டென்ஷனான மத்திய அமைச்சர், விவகாரத்தை டெல்லி மேலிடத்துக்குக் கொண்டுபோக... “எங்களுக்கு எதுவும் பங்கு வரவில்லையே” எனக் கொந்தளித்ததாம் மேலிடம்.