Published:Updated:

மிஸ்டர் கழுகு: சிவகார்த்திகேயனை வளைக்கும் பா.ஜ.க!

கட்சி இரண்டாக உடைய வாய்ப்பிருக்கிறது’ என்கின்றன நாம் தமிழர் வட்டாரங்கள்.

பிரீமியம் ஸ்டோரி
“விஷ்ஷ்க்க்க்...” என்ற சத்தம். திரும்பிப் பார்த்தால், கையில் போஸ்டருடன் கழுகார். “தமிழகம் முழுவதும் ‘மாணவர்களின் மனித கடவுளே, எங்கள் ஓட்டு உங்களுக்கே’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி போஸ்டர்கள் முளைத் திருப்பதைப் பார்த்தீரா?” என்றார் கழுகார். சூடாக இஞ்சி ‘டீ’யைக் கொடுத்துவிட்டு, “எல்லாம் ஐ.டி டீமின் ஐடியாதானே?” என்றோம்.

“ஆமாம். இந்த போஸ்டருக்கே அசந்துவிட்டீர்களே...

‘கொரோனாவை வென்ற கதாநாயகன்’ என்றொரு விளம்பரப் படம் கன ஜோராகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஒருகாலத்தில் அதிகாரிகள் கையெடுத்து கும்பிட்டாலே, ‘என்னை ஏங்க கும்பிடுறீங்க... நீங்க மக்களைத்தான் கும்பிடோணும்’ என்று சொன்ன எடப்பாடி, இன்று ஜெயலலிதாவைப்போல தனது பிம்பத்தை உருவாக்க நினைக்கிறார். எடப்பாடியின் கார் டயரை எம்.சி.சம்பத் குனிந்து கும்பிட்டது, எடப்பாடியைப் பற்றி அதிக அளவில் விளம்பரங்கள் வருவது... இவையெல்லாம் இதன் பின்னணியில்தானாம்.

அ.தி.மு.க-வின் தேர்தல் செலவில், இப்படி எடப்பாடியின் விளம்பரச் செலவுக்கே பெரும் தொகை ஒதுக்கப்படும் என்கிறார்கள்” என்று டீயை உறிஞ்சியபடி செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.

“கன்னியாகுமரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மறைவைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த வேண்டியிருக்கிறது. அநேகமாக வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலுடன் கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தலும் நடத்தப்படலாம். பா.ஜ.க சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் களமிறங்கக்கூடும். காங்கிரஸ் சார்பில் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்துக்கு சீட் கிடைக்கலாம் என்கிறார்கள். ‘வசந்தகுமாருக்குப் பணி செய்யக் கொடுத்த நாள்களை அவரின் மகனுக்கு வழங்க வேண்டும்’ என ‘அய்யாவழி’ சமயத் தலைவர் பாலபிரஜாதிபதி அடிகளார் குரல் கொடுத்திருக்கிறார். ஆக மொத்தத்தில் கன்னியாகுமரியில் தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டது.”

“சரிதான்.”

“கோயம்புத்தூர் மாவட்ட தி.மு.க பொறுப்புக் குழுவில், அமைச்சர் வேலுமணியுடன் நெருங்கிய தொடர்பிலிருக்கும் ஸ்லீப்பர் செல்கள் பற்றிக் கூறியிருந்தேன் அல்லவா... அதில் ஒரு அப்டேட். கவுண்டம்பாளையம் தொகுதியில் ஆளுங்கட்சி ஆதரவுடன் கிளப் நடத்திவரும் தி.மு.க பிரமுகர் ஒருவரையும், கணபதி பகுதியைச் சேர்ந்த பெண் உடன்பிறப்பு ஒருவரையும் அ.தி.மு.க வளைத்து விட்டதாம். இவர்கள் மூலமாக கோவை வடக்கு மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில், பூத் கமிட்டி களிலேயே தி.மு.க-வுக்கு எதிராக உள்ளடி வேலைகளைச் செய்யத் திட்டமிட்டுள்ளதாம் அ.தி.மு.க தரப்பு. சமீபத்தில் அ.தி.மு.க-வின் ‘ஆசிரியர்’ பிரமுகர் ஒருவரைச் சந்தித்த இவர்கள் இருவரும் டீல் பேசி முடித்துவிட்டதாகத் தகவல்.”

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

“ஆஹா... கொளுத்திப் போட்டுவிட்டீரே...” என்று கண் சிமிட்டினோம்.

கண்டுகொள்ளாதவராக அடுத்த செய்திக்குள் தாவினார் கழுகார். “சேலம் மாவட்டத்தில், அறிவு பெயர்கொண்ட ஒரு பொறியியல் கல்லூரி பத்து ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்படுகிறது. நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, கல்லூரியின் பங்குதாரர்களுக்குள் முரண்பாடு ஏற்பட்டு, விவகாரம் நீதிமன்றம்வரை சென்றுவிட்டது. பிரச்னையை சுமுகமாகப் பேசி முடிப்பதற்காக, பங்குதாரர்கள் சிலர் அமைச்சர் ஒருவரிடம் சென்றிருக்கிறார்கள். பஞ்சாயத்து முடியாமல் இழுத்துக்கொண்டே போக... இறுதியில், ‘பேசாம காலேஜை எனக்கு முடிச்சிடுங்க’ என்று ‘ஷாக்’ கொடுத்தாராம் அந்த அமைச்சர். பங்குதாரர்கள் அனைவரும் மின்சாரம் தாக்கியதைப்போல வெலவெலத்துப்போய் நிற்கிறார்களாம்.”

“பெரிய பஞ்சாயத்துதான்!”

“அ.தி.மு.க-வில் இன்னொரு பஞ்சாயத்தும் இருக்கிறது. அந்தக் கட்சியின் தலைமைப் பிரமுகர் ஒருவரும், அவரின் மூத்த மகனும் சசிகலாவின் அண்ணன் மகனான டாக்டர் வெங்கடேஷை சில தினங்களுக்கு முன்னர் ரகசியமாகச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். கட்டட ஒப்பந்ததாரர் ஒருவரின் பங்களாவில் இந்தச் சந்திப்பு நிகழ்ந் துள்ளது. ‘இந்த நாலு வருஷத்துல அவங்க மட்டும்தான் சம்பாதிக்குறாங்க. வர்ற எலெக்‌ஷன்ல நம்ம ஆளுங்களுக்கு சீட் கிடைக்கப்போறதில்லை. இனியும் நாம சும்மா இருக்கக் கூடாது’ என்று தலைமைப் பிரமுகரின் மகன் கொந்தளித்தாராம். இதையடுத்து, அதிகாரத்தை மீண்டும் கையிலெடுக்கச் சபதமெடுத்துள்ளார்களாம். கட்சிப் பொதுக்குழு கூட்டப்பட்டால், சசிகலாவின் ஆதரவாளர்கள் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வெங்கடேஷிடம் தலைமைப் பிரமுகர் கேட்டுக்கொண்டாராம். சசிகலாவிடம் பேசிவிட்டு நல்ல தகவல் சொல்வதாகச் சொன்னதாம் வெங்கடேஷ் தரப்பு.”

“யுத்தம் ஓயாதுபோல!”

“கடந்த இதழில், புதுக்கோட்டை மாவட்டத்தில் வைத்திலிங்கத்துக்கு எதிராக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உள்குத்து அரசியலைக் கூறியிருந்தேன் அல்லவா... ஜூனியர் விகடனில் அந்தச் செய்தி வெளியானவுடன், வைத்திலிங்கத்திடம் முக்கால் மணிநேரம் போனில் உருகினாராம் விஜயபாஸ்கர். ‘அண்ணே... நான் போய் உங்களை எதிர்த்து அரசியல் பண்ணுவேனா... இந்த மாவட்டச் செயலாளர் வைரமுத்துதான் என் பேச்சைக் கேட்காம ஆடுறாப்ள. இதுல எனக்குத் துளியும் சம்பந்தமில்லை’ என்று விளக்கமளித்தாராம்.”

வெங்கடேஷ்
வெங்கடேஷ்

“நாம் தமிழர் கட்சியில் ஏதோ உரசலாமே?” என்றபடி, காரசாரமான மசால் கடலையைத் தட்டில் நீட்டினோம்.

தலையாட்டி ஆமோதித்த கழுகார், கடலையைக் கொறித்தபடி தொடர்ந்தார். “நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப் பட்டதிலிருந்தே ராஜீவ் காந்தி (எ) அறிவுச்செல்வன், கல்யாண சுந்தரம் இருவரும் அந்தக் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இருவருமே மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர்களாகப் பொறுப்பு வகிக்கிறார்கள். தொலைக்காட்சி விவாதங்கள், மேடைப் பேச்சுகள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். தன்னைமீறி இவர்கள் இருவரும் செல்வாக்கை உயர்த்திக்கொள்வதாக சீமான் தரப்பில் கருதப்படுகிறதாம். இதையடுத்து, நாம் தமிழர் கட்சி நிகழ்ச்சிகளில் ராஜீவ் காந்தியையும் கல்யாண சுந்தரத்தையும் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளனர். ‘இவர்களின் பொறுப்புகளைப் பறிப்பதற்காகவே மாநில இளைஞரணியைக் கலைக்கும் முடிவுக்கு சீமான் வந்துவிட்டார். ஒருவேளை கட்சியைவிட்டு இருவரையும் சீமான் நீக்கினால், கட்சி இரண்டாக உடைய வாய்ப்பிருக்கிறது’ என்கின்றன நாம் தமிழர் வட்டாரங்கள். ஏற்கெனவே பேராசிரியர் தீரன், வியன்னரசு, அய்யநாதன், மருத்துவர் பாரதி செல்வன் என சீனியர்கள் பலரும் சீமானின் போக்குப் பிடிக்காமல் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார்கள். இந்தச் சூழலில், மீண்டும் ஒரு குழப்பம் நாம் தமிழர் கட்சியில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.”

“தம்பிகளுக்கு இப்படி ஒரு சோதனையா... சரி, தி.மு.க பொதுக்குழு ஏற்பாடுகள் எந்த அளவில் இருக்கின்றன?”

முதல்வரின் காரைத் தொட்டுக் கும்பிடும் எம்.சி.சம்பத்
முதல்வரின் காரைத் தொட்டுக் கும்பிடும் எம்.சி.சம்பத்

“தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், செப்டம்பர் 3-ம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸில் நடந்தது. கூட்டத்தில் நடந்த விஷயங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உங்கள் செய்தியாளர்கள் சொல்லியிருப்பார்கள். எக்ஸ்க்ளூசிவ்வாக ஒரு செய்தி சொல்கிறேன். கூட்டத்தில் பேசிய எ.வ.வேலு, ‘பத்துப் பேர் கொண்ட பூத் கமிட்டியை அமைக்கலாம்’ என்று ஐடியாவை முன்வைக்க, அடுத்து பேசிய செந்தில் பாலாஜி, ‘பத்துப் பேர் போதாது, இருபது பேர் கொண்ட கமிட்டியை அமைக்கலாம்’ எனச் சொல்ல, அதிலிருந்த சூட்சுமத்தைப் புரிந்துகொண்ட ஸ்டாலின், ‘அதை அமைப்புச் செயலாளர் மூலம் பிறகு பேசி முடிவுசெய்யலாம்’ என்று முற்றுப்புள்ளிவைத்துவிட்டாராம்.”

“இதிலென்ன சூட்சுமம் கழுகாரே...?”

“சொன்னது யார் செந்தில் பாலாஜி ஆச்சே... வருகிற தேர்தல் சமயத்தில், பூத் கமிட்டி மூலம்தான் ‘வைட்டமின் ப’ பாயப்போகிறதாம்.

“ஓஹோ, சசிகலாவின்...” என்று சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்ட கழுகார்,

“சசிகலாவின் விடுதலைக்கான வேலைகள் ஒருபுறம் சட்டரீதியாக நடந்துவரும் நிலையில், வருமான வரித்துறையின் நடவடிக்கையும் அவருக்கு எதிராகத் தீவிரமடைந்துள்ளது. டெல்லியில் நடைபெறும் வருமான வரித்துறை வழக்குகளை எதிர்கொள்ள, திவாரி என்கிற வழக்கறிஞரை சசிகலா தரப்பு புதிதாக நியமித்து ள்ளதாம். மறைந்த ம.நடராஜனின் சகோதரர் மூலம் இந்த ஏற்பாடு என்கிறார்கள்.”

வைத்திலிங்கம் - முருகன்
வைத்திலிங்கம் - முருகன்

“நடக்கட்டும்... நடக்கட்டும். பா.ஜ.க செய்திகள் ஏதேனும்?”

“ரஜினியைத்தான் நம்பியிருந்தார்கள். ‘கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வரை நோ சினிமா... நோ பாலிட்டிக்ஸ்’ என்று கறாராகச் சொல்லிவிட்டாராம் ரஜினி. இப்போது புதிய திட்டமாக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வலைவிரித்துள்ளாராம் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன். ‘நடிகர் விஜய்க்குப் பிறகு, குடும்ப ஆடியன்ஸிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பவர் சிவகார்த்திகேயன். அவரை நமக்கு வாய்ஸ் கொடுக்கவைத்தால் நன்றாக இருக்கும்’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிவருகிறாராம் முருகன். சொந்தமாகப் படங்களைத் தயாரித்த வகையில் சிவகார்த்திகேயனுக்கு சில பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதையெல்லாம் கோடிட்டுக் காட்டும் முருகன் தரப்பு, தங்கள் கட்சியில் ‘பசையாக’ ஒட்டிக்கொள்ளும்படி சிவகார்த்திகேயனிடம் பேசிவருவதாகத் தகவல்” என்ற கழுகார் சிறகுகளை விரித்துப் பறந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கிசான் சம்மான் மோசடி - அதிகாரிகள் சஸ்பெண்ட்!

கடந்த 30.8.2020 தேதியிட்ட ஜூ.வி இதழில் “கோடிக்கணக்கில் பண மோசடி! லட்சக்கணக்கில் போலி விவசாயிகள்” என்கிற தலைப்பில் பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் நடந்திருக்கும் ஊழலை அம்பலப்படுத்தியிருந்தோம். இந்தநிலையில் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஊழலில் ஈடுபட்ட வேளாண் உதவி இயக்குநர்கள் உட்பட வேளாண்துறை ஊழியர்கள் பலரும் கண்டறியப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் இரண்டு லட்சம் போலி விவசாயிகள் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரதமரின் திட்டம் என்பதால், தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளை பிரதமர் அலுவலகம் உன்னிப்பாக கவனித்துவருகிறது!

கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!

* மறைந்த முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோம சுந்தரத்தின் மகன் எஸ்.டி.எஸ்.செல்வம், அ.ம.மு.க- விலிருந்து தி.மு.க-வுக்குத் தாவ முடிவெடுத்துள்ளாராம். இது தொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

* தி.மு.க சட்ட விவகாரங்களை ஒருங்கிணைக்க நீலகண்டன், அருண், முத்துக்குமார் ஆகியோரை நியமித்திருக்கிறார் ஸ்டாலின். இவர்கள் மூவருமே மாநிலங்களவை உறுப்பினரான என்.ஆர்.இளங்கோவிடம் பணிபுரிபவர்கள். இவர்களைத் தவிர கட்சியில் வேறு ஆட்களே இல்லையா என்கிற குமுறல் கட்சியில் ஏற்பட்டுள்ளது.

* ஜெயலலிதாவைப் போன்று அதிகாரிகள் இடமாற்றத்தை அதிரடியாக நடத்திவருகிறார் எடப்பாடி. இந்த இடமாற்றப் பட்டியல் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் பரிந்துரையின் பெயரில் தயாரானதாம். தேர்தலை முன்வைத்தே இந்த இடமாற்றங்கள் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு