Published:Updated:

`ரஜினி டிவி' சலசலப்பு, வாணிஶ்ரீ சொத்து விவகாரம், `விரக்தி' பொன்னார்... கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்!

கழுகு @ மொபைல்
கழுகு @ மொபைல்

இந்த முறை டிஜிட்டல் கழுகார், வாட்ஸ்அப்பில் துணுக்குகள் பாணியில் குறுந்தகவல்களாக அனுப்பியிருக்கிறார்.

`சத்திய’ சோதனை!

உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி, மே மாதம் இறுதியில் பணி ஓய்வுபெறுகிறார். அந்தப் பதவிக்கு புதியவர் யாரும் வர மாட்டார்கள் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல். சத்தியமூர்த்திக்கே பதவி நீட்டிப்பு தர முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துவிட்டார் என்கிறார்கள். ஆனாலும், ஐ.டி ரெய்டு உள்ளிட்ட சோதனைகளை முன்வைத்து டெல்லி தலையிட்டால், இறுதி நேரத்தில் வேறு அதிகாரி நியமிக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள்.

மிஸ்டர் கழுகு: விலைபோகும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்... ஏலம் எடுக்கும் கம்பெனிகள்!

காக்கிகள் வீட்டில் கல்யாணம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

போலீஸ் துறையில் பவர்ஃபுல் பதவிகளில் ஒன்று, மண்டல ஐஜி-கள் பதவி. அந்தப் பதவிகளில் இருப்பவர்கள், தங்களது வாரிசுகளுக்குத் திருமண நிகழ்ச்சி வைத்திருப்பதால், அதுவரை பதவியை விட்டு மாற்ற வேண்டாம் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அந்த வரிசையில், கோவை மண்டல ஐஜி பெரியய்யா (மகன் திருமணம்), திருச்சி மண்டல ஐஜி-யான வரதராஜன் (மகள் திருமணம்), வடக்கு மண்டல ஐஜி நாகராஜ் (மகள் திருமணம்) ஆகியோர் வேண்டுகோள் வைத்திருக்கிறார்களாம்.

ரஜினி டிவி... பரவும் வதந்தி!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ரஜினி, டிவி சேனல் தொடங்கப்போகிறார் என்கிற செய்திக்குப் பின்னால், இன்னொரு செய்தி புதைந்துகிடக்கிறது. ‘ரஜினி டிவி’ என்கிற பெயரில் 2018ல் ஒருவர் சேனல் ஆரம்பிக்க முயன்றார்.

இதைக் கேள்விப்பட்டதும் ரஜினி தரப்பினர், ‘சூப்பர் ஸ்டார் டிவி’, ‘ரஜினி டிவி’, ‘தலைவர் டி.வி’ என்ற சில பெயர்களில் சேனல் ஆரம்பிக்கப் பதிவுசெய்தார்களாம்.

சேனல் ஆரம்பிக்கும் ஐடியா இரண்டாம் பட்சம்தான். ரஜினியின் பெயரை யாரும் பயன்படுத்தக்கூடாது என்பதுதான் இதன் நோக்கமாம். பிரபல பத்திரிகையாளர்கள், வேலைபார்த்த நிறுவனத்தை விட்டு விலகினால், அவர்கள் ரஜினி டிவி-யை நடத்த தலைமை ஏற்கப்போகிறார்கள் என்று வதந்தி கிளம்புவது வழக்கம். அப்படித்தான், ரஜினி டிவி ஆரம்பிக்கும் வதந்தியும் இப்போது பரப்பப்படுகிறதாம்.

சம்பிரதாயத்துக்கா கூடுதல் டிஜிபி?

போராட்டம்
போராட்டம்

தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி. அத்திவரதர் பாதுகாப்பு, பாபர் மசூதி தீர்ப்பு என சென்சிட்டிவ் விஷயங்களின்போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, மேலும் சில கூடுதல் டிஜிபி-களை நியமித்தார்கள். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக இப்போது நடந்துவரும் முஸ்லிம்கள் போராட்டத்தைத் தடுக்க, தமிழகம் முழுவதும் மூன்று கூடுதல் டிஜிபி-கள், சில ஐஜி-கள் என ஒரு டஜன் பேரை சட்டம் ஒழுங்கு பணியில் நியமித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைப்பவர், ஜெயந்த் முரளி என சொல்லப்பட்டாலும் அனைவருமே டிஜிபி திரிபாதியுடன் ஹாட் லைன் தொடர்பில் இருக்கிறார்கள். ஜெயந்த் முரளியிடம் காலதாமதமாக, சம்பிரதாயமாகப் பேசுகிறார்களாம்.

இன்னொரு பக்கம், மாவட்டங்களில் உள்ள காவல்துறை அதிகாரிகள், முக்கியமான தகவல்களை யாருக்கு முதலில் தெரிவிப்பது என்கிற குழப்பத்தில் மூழ்கிக்கிடக்கிறார்கள்.

நடிகை சொத்தை வளைத்த திருச்சி புள்ளி!

வாணிஶ்ரீ
வாணிஶ்ரீ
`கப்சிப்' சிதம்பரம், `புலியா பூனையா' ரஜினி, சிக்கலில் தேனி எம்.பி... கழுகாரின் அரசியல் அப்டேட்ஸ்!

பழம்பெரும் நடிகை வாணிஶ்ரீக்கு கோடம்பாக்கத்தில் நிலம் இருந்ததாம். அதை திருச்சி கட்சிப் பிரமுகர் ஒருவர் திடீரென சொந்தம் கொண்டாடுகிறார். வாணிஶ்ரீக்கு எதுவும் தெரியவில்லை. பிரபல டாக்டரான அவரது மகள், பத்திரபதிவுத் துறை ஐஜி-யான ஜோதி நிர்மலாவிடம் புகார் அளித்திருக்கிறார்.

விஐபி-களில் வயதானவர்கள் யாராவது இருந்தால், அவர்களின் நிலத்தைக் குறிவைத்து ஒரு கூட்டம் வட்டமிடுகிறது. இது, சென்னையில் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

“அண்ணனுக்கா இந்த நிலைமை!”

பொன் ராதாகிருஷ்ணன்
பொன் ராதாகிருஷ்ணன்

மத்திய அமைச்சராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், இப்போது எந்தப் பதவியிலும் இல்லை. ‘அண்ணனை மாநிலங்களவை உறுப்பினராக்கி, மத்திய அமைச்சர் பதவி கொடுப்பார்கள்’ என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்தார்கள். வாய்க்கவில்லை. அடுத்ததாக, ‘ஏதாவது ஒரு மாநிலத்துக்கு ஆளுநராக்குவார்’ என்று நினைத்தார்கள். அதுவும் கைகூடவில்லை. இறுதியாக, ‘அண்ணனுக்கு தமிழ்நாடு மாநில பா.ஜ.க தலைவர் பதவியாவது தருவார்கள்’ என்று எதிர்பார்த்தார்கள். டெல்லி பிடிகொடுக்கவில்லை.

70 வயதைக் கடந்தவர்களுக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்ற கட்சியின் கொள்கை முடிவால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பொன்னாருக்கு சீட் கிடைப்பது கஷ்டம்தான். ‘அண்ணனுக்கா இந்த நிலைமை’ என்று விரக்தியில் இருக்கிறார்களாம் பொன்னாரின் ஆதரவாளர்கள்!
அடுத்த கட்டுரைக்கு