அலசல்
Published:Updated:

காணாமல்போன ‘மணிகள்’ முதல் பெரிய குடும்பத்து கடமுடா வரை!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

ஓவியம்: ரமேஷ் ஆச்சார்யா

‘பதவிக்கு வரணும்னா... எதுவும் தப்பில்ல...’

கடலோர தென்மாவட்டத்தின் செயலாளராக கோலோச்சிய ஆளும் கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் பா.ஜ.க-வில் இணையப்போவதாக சமீபத்தில் தகவல்கள் பரவின. விசாரித்தால், ‘அது பரவிய செய்தியில்லை... சம்பந்தப்பட்டவரே பரப்பிவிட்ட புரளிதான்’ என்கிறார்கள். ‘பதவிக்கு வரணும்னா... எதுவும் தப்பில்ல...’ என்று அந்த முன்னாள் அமைச்சரே தன் ஆதரவாளர்களிடம் சொல்லி போட்ட குண்டு இது. ‘பதவி ஏதும் இல்லாமல் சும்மா இருக்கும் அண்ணன் மீது முதல்வரின் கடைக்கண் பார்வை படாதா... அப்படியே நமக்கும் சின்ன பதவியாவது கிடைத்துவிடாதா?’ என்ற நப்பாசையில் புரளியைத் தீயாகப் பரப்பியிருக்கிறார்களாம் அவரது அடிப்பொடிகள்.

லாபத்தில் பால் ஊற்றிய அதிகாரி... புதுவை பாண்லே கூத்து!

புதுச்சேரியில் பால் உற்பத்தியை அதிகரிக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், கூடுதல் தேவைக்கு கர்நாடகாவிலிருந்து பாலை வாங்கி சப்ளை செய்துகொண்டிருந்தது பாண்லே நிறுவனம். சமீபத்தில் அந்த நிறுவனத்தில் புதிதாக தலைமைப் பதவிக்குவந்த இரண்டு அதிகாரிகள் கமிஷனை எதிர்பார்த்தார்களாம். ஆனால், கர்நாடக நிறுவனம் கைவிரித்துவிடவே, உள்ளூர் தனியார் நிறுவனங்களிடம் கமிஷன் பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறார்கள். அதில் இரண்டு அதிகாரிகள், ‘நீயா நானா?’ நடத்திக்கொண்டிருந்த நிலையில், ரூ.2.5 கோடி நிலுவைத்தொகை வராததைக் காரணம் காட்டி பால் சப்ளையை முழுமையாக நிறுத்திவிட்டதாம் கர்நாடக நிறுவனம். நல்ல லாபம் பார்க்க வேண்டிய தீபாவளி நேரத்தில், ‘பாண்லே’ பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு இதுவே காரணமாம்.

காணாமல்போன  ‘மணிகள்’ முதல் பெரிய குடும்பத்து கடமுடா வரை!

கடலூரைக் கட்டுப்படுத்தும் மூவர் குழு... புலம்பலில் தி.மு.க கவுன்சிலர்கள்!

கடலூர் மாநகராட்சி மேயருக்கு நெருக்கமான சிலர், உறங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரமெல்லாம் மாநகராட்சியிலேயே டேரா போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார்களாம். மீட்டிங் என்ற பெயரில் அதிகாரிகளை அழைத்து, வாட்டி வதைக்கிறதாம் இந்த மூவர் குழு. ‘மேற்படி’ விவகாரங்கள் அனைத்தையும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இந்த மூவர் குழுவே டீல் செய்து முடித்துவிடுவதால், பருக்கைகள் கூட கிடைக்கவில்லையே என்று புலம்பிவருகிறார்கள் தி.மு.க கவுன்சிலர்கள். சமீபத்தில், “கடலூர் மாநகராட்சி மேயர் வீட்டில் ‘நான்கு மேயர்கள்’ டெண்டர் விட்டுக்கொண்டிருக் கிறார்கள்” என்று முன்னாள் அமைச்சர் சம்பத் பேசியதற்குக் காரணமும் இதுதான். சம்பத் பேசிய வீடியோவை, தி.மு.க-வினரே சமூக வலைத்தளங்களில் சந்தோஷத்துடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்!

வெளிநாட்டில் முதலீடு... பெரிய குடும்பத்தில் கடமுடா!

மாதத்தில் பாதி நாள் வெளிநாடுகளிலேயே தஞ்சமடையும் ஆட்சி மேலிட குடும்பப் பிரமுகர், சமீபத்தில்தான் ஸ்பெயின், ஜெர்மனி போன்ற வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை முடித்து ஊர் திரும்பியிருக்கிறார். மேலிடத்தின் வருவாயை எல்லாம், அந்தந்த நாடுகளிலுள்ள பிரபல நிறுவனங்களில் அவர் முதலீடு செய்துவிட்டு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதில், பெரிய குடும்பத் தலைவிக்கு பெரும் அதிருப்தியாம். ‘அவரை நம்பியே எல்லாத்தையும் கொடுக்குறீங்க. எங்கே, எவ்வளவு போயிருக்கு, முதலீட்டுக்கு வருமானமாக எவ்வளவு வருதுனு எதுவுமே நமக்குத் தெரியுறது இல்ல. அவர் சொல்றதுதான் கணக்காகிடுது. முழுசா, அவரையே நம்பிட்டு இருக்காதீங்க’ என வீட்டில் சாமியாடிவிட்டாராம். இதற்கிடையே, பெரிய குடும்பப் பிரமுகரின் பயணங்களையெல்லாம் கண்காணித்துவரும் மத்திய அமலாக்கத்துறை, அவர் முதலீடு செய்திருக்கும் நிறுவனங்களின் பட்டியலைத் தனியாகத் தயாரிக்க ஆரம்பித்திருக்கிறதாம்.

காணாமல்போன  ‘மணிகள்’ முதல் பெரிய குடும்பத்து கடமுடா வரை!

பா.ஜ.க-வுக்குத் தாவும் அ.தி.மு.க கவுன்சிலர்கள்?

மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரான அ.தி.மு.க-வின் சோலைராஜா, சில கவுன்சிலர்களை அழைத்துக்கொண்டு பா.ஜ.க-வில் சேரப்போவதாக தகவல் பரவிவந்த நிலையில், செல்லூர் ராஜூ அவரை அழைத்து சமாதானம் செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் பா.ஜ.க மாநில அளவில் நடத்திய ‘மோடி கபாடி லீக்’ போட்டியை தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் துணைத்தலைவர், மாநில கபடிக் கழகத் தலைவர் என்ற முறையில் நடத்திக்கொடுத்தார் சோலைராஜா. இவருடைய ஆர்வத்தை பார்த்து, ‘அடிமை சிக்கிடுச்சி’ என்று உற்சாகமாகிவிட்டாராம் அண்ணாமலை. மொத்தமுள்ள 15 அ.தி.மு.க கவுன்சிலர்களில் சிலரை பா.ஜ.க-வுக்கு இழுத்து வர அண்ணாமலை அசைன்மெண்ட் கொடுத்திருப்பதாகவும், அதன் மூலம் மாநகராட்சியில் எதிர்க்கட்சியாக செயல்பட பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறது என்றும் சொல்கிறார்கள் சோலைராஜாவுக்கு எதிரான அ.தி.மு.க-வினர். செல்லூர் ராஜூ-வின் சமாதானத்தை உதறிவிட்டு, சீக்கிரமே அவர்கள் கட்சி மாறுவார்கள் என்று பா.ஜ.க தரப்பிலும் சிலர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

காணாமல் போன மணி & மணி...காரணம், எடப்பாடியா?

சட்டப்பேரவை புறக்கணிப்பு, அதைத் தொடர்ந்து போராட்டம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தின் அறிக்கை வெளியீடு என அ.தி.மு.க வட்டாரமே 10 தவுசன் வாலா பட்டாசு போல வெடித்துக்கொண்டு இருக்கும்போது, மணி & மணி-களின் சத்தத்தையே காணவில்லை. டெல்லி மேலிடத்துடன் எடப்பாடி கடைபிடிக்கும் மோதல் போக்கை அவர்கள் ரசிக்காததே இதற்குக் காரணமாம். ‘டெல்லியை நீங்கள் பகைத்துக்கொண்டால் பின்விளைவுகளை மடியில் கணமிருக்கும் நாங்கள்தான் அனுபவிக்க வேண்டும்’ என்று சொல்லியும் எடப்பாடி தரப்பு கேட்கவில்லையாம். இந்த நிலையில் வரும் ஜனவரி மாதம் தென்மாவட்டத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யத் திட்டமிடுகிறாராம் எடப்பாடி. இதற்கான செலவில் பங்கு எடுத்துக்கொள்ள மணி & மணியிடம் கேட்டதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்க முடியாமல் இரண்டு பேரும் தவிக்கிறார்களாம்!