கட்டுரைகள்
Published:Updated:

தி.மு.க நிறுவனத்துக்கு கைமாறிய பெருஞ்சொத்து முதல் விசாரணை வளையத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி வரை!

 சேகர் பாபு
பிரீமியம் ஸ்டோரி
News
சேகர் பாபு

மிஸ்டர் கழுகு

கூவம் நதியோரம்... பெருஞ்சொத்து... இனிப்பு மழையில் தி.மு.க புள்ளிகள்!

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், கூவம் ஆற்றையொட்டி சிவனின் பெயரைக்கொண்ட தி.மு.க கவுன்சிலர் ஒருவருக்குச் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் இருந்தது. அந்த இடத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபைனான்ஸியர் ஒருவரிடம் 2 கோடி ரூபாய்க்கு அடமானம் வைத்திருந்தாராம் அந்த கவுன்சிலர். அவருக்கு சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த தி.மு.க புள்ளியின் நட்பும், அவர் மூலம் தி.மு.க நிழலானவரின் தொடர்பும் கிடைத்திருக்கிறது. அந்த தைரியத்தில் ஃபைனான்ஸியருக்கு அசலையும் வட்டியையும் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார் கவுன்சிலர். ஒருகட்டத்தில் வட்டி, அசலுக்காக இடத்தை எழுதிக் கொடுக்கும்படி ஃபைனான்ஸியர் கேட்க, “இடத்தையும் தர முடியாது... பணத்தையும் தர முடியாது. உன்னால் முடிஞ்சதைப் பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டாராம் கவுன்சிலர். இதையடுத்து ஃபைனான்ஸியர், மூத்த தி.மு.க அமைச்சர் ஒருவரைவைத்து பஞ்சாயத்துப் பேசியிருக்கிறார். கவுன்சிலரோ தி.மு.க-வின் நிழலானவரை அணுகியிருக்கிறார். அவரோ தி.மு.க கவுன்சிலர், ஃபைனான்ஸியர் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வில்லங்க இடத்தைத் தங்கள் தரப்பு ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு அடிமாட்டு விலைக்கு வாங்கிக்கொடுத்துவிட்டாராம். பெரிய வில்லங்கச் சொத்து பணமாக மாறிய உற்சாகத்தில் தொடர்புடைய அத்தனை பேரும் இனிப்பு மழையோடு தீபாவளி கொண்டாடியிருக்கிறார்கள்!

ஜப்பான் சென்ற மாவட்டச் செயலாளர்... ஆக்டிங் மா.செ-வான வாரிசு!

ஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பன்னாட்டு கைத்தறிக் கண்காட்சியைப் பார்வையிடுவதற்காகத் தமிழக கைத்தறித்துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க செயலாளருமான காந்தி ஜப்பானுக்குச் சென்றிருக்கிறார். வேலூர் மாவட்ட தி.மு.க செயலாளரும், அணைக்கட்டுத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான நந்தகுமாரும் உடன் சென்றிருக்கிறார். இருவரும் வெளிநாட்டுக்குப் பறந்த மறுநாளிலிருந்தே, அமைச்சர் காந்தியின் மகன் வினோத், இரண்டு மாவட்டங்களுக்கும் நிழல் மாவட்டச் செயலாளராக உருவெடுத்துவிட்டார் என்கிறார்கள். கட்சி நிர்வாகிகளுக்கு தீபாவளிப் பரிசு கொடுப்பது, மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, உட்கட்சி விவகாரங்களைப் பஞ்சாயத்து செய்வது என்று முழு சந்திரமுகியாக மாறி

விட்டாராம். டோக்கியோ பயணம் முடிந்து சிங்கப் பூருக்கும் அமைச்சரோடு, மா.செ சென்றுவருவதால் இந்த நிழல் மாவட்டச் செயலாளரின் ஆதிக்கம் அதுவரை தொடருமாம்!

தி.மு.க நிறுவனத்துக்கு கைமாறிய பெருஞ்சொத்து முதல்  விசாரணை வளையத்தில் ஐ.பி.எஸ் அதிகாரி வரை!

பிறந்தநாள் விருந்து... சிக்கலில் ஐ.பி.எஸ் அதிகாரி!

தன்னுடைய பிறந்தநாளைச் சில தினங்களுக்கு முன்பு ஆடல், பாடலுடன் ஜோராகக் கொண்டாடியிருக்கிறார் மத்திய மாவட்ட ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர். அந்த விழாவில் மாவட்டத்தைச் சேர்ந்த சில முக்கிய வி.ஐ.பி-க்களும் கலந்துகொண்டிருக்கின்றனர். விழாவில் விருந்து பரிமாறும் வேலைகளைக் காவலர்களே செய்யவைக்கப்பட்டார்களாம். விழாவில் கலந்துகொண்டு ‘உற்சாகமடைந்த’ வி.ஐ.பி-க்கள் சிலர், விருந்து பரிமாறிய காவலர்கள் சிலரை ஏளனமாகப் பேசியிருக்கிறார்கள். அதனால் வேதனையடைந்த காவலர்கள், நடந்த சம்பவம் பற்றிச் சமூக வலைதளங்களில் கொட்டித்தீர்த்திருக்கிறார்கள். இந்த விவகாரம் டி.ஜி.பி அலுவலகம் வரை செல்ல, தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கும் அந்த ஐ.பி.எஸ் அதிகாரி, அதிலிருந்து மீள அந்த வி.ஐ.பி-கள் யாராவது உதவ மாட்டார்களா என்று ஏங்குகிறாராம்.

ஈகோவில் தகிக்கும் எழும்பூர் பகுதி...

தீபாவளிப் பண்டிகைக்குத் தன் சார்பில் கட்சிக்காரர்களுக்கு ஸ்வீட் பாக்ஸ், வெடியெல்லாம் கொடுத்திருக்கிறார் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன். அதைப் பார்த்த மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான சேகர் பாபு, தன் பங்குக்கும் ஸ்வீட் பாக்ஸ் உள்ளிட்டவற்றை வழங்க உத்தரவிட்டதோடு, அதைக் கண்காணிக்க இரண்டு பகுதிச் செயலாளர்களையும் நியமித்தாராம். அதனால், ‘அண்ணா, ஸ்வீட் வாங்குனீங்களாண்ணா?” என்று இரு தரப்பும் மாறி மாறி உடன்பிறப்புகளை விசாரித்திருக்கிறது. ‘தலைகளின் ஈகோவால் நமக்கு இரண்டு பக்கமும் லாபம்தான்’ என்று உற்சாகமாக தீபாவளியைக் கொண்டாடியிருக்கிறார்கள் அந்தப் பகுதி உடன்பிறப்புகள்.

ஊட்டியில் ஊடுருவும் பா.ஜ.க... கண்டுகொள்ளாத காங்கிரஸ்!

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படும் தொகுதிகளில் ஒன்று, ஊட்டி சட்டமன்றத் தொகுதி. அடுத்த தேர்தலில் அது தகர்ந்துவிடும் என்று சொல்லும் அளவுக்கு அங்கே பா.ஜ.க வேகமாகக் கிளை பரப்பிவருவதாக ஆதங்கப்படுகிறார்கள் காங்கிரஸார். ‘அதற்கு பா.ஜ.க-வினரின் உழைப்புதான் காரணமா?’ என்றால் ‘அதுமட்டுமில்லை’ என்பவர்கள், ‘ஊட்டியில் இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ-வாக இருக்கும் கட்சியின் ஊட்டி மாவட்டத் தலைவர் கணேஷ் கொஞ்சம்கூட செயல்படவே இல்லை. அதுதான் முக்கியக் காரணம்’ என்கிறார்கள். அவரின் செயல்பாடுகள்மீது அதிருப்தியடைந்து காங்கிரஸ் உறுப்பினர்களே கட்சி தாவுவதாகவும், அவர்களுக்கு பா.ஜ.க-வும் முக்கியப் பதவிகளைக் கொடுத்துவருவதாகவும் சொல்கிறார்கள். `இவ்வளவு நடந்தாலும், அது குறித்து எந்தச் சங்கடமும் இல்லாமல் வேடிக்கை பார்க்கிறார் எம்.எல்.ஏ’ எனப் புலம்புகிறார்கள் கதர்ச்சட்டைத் தொண்டர்கள்!