கட்டுரைகள்
Published:Updated:

ராஜராஜ சோழனுக்கு பயந்த தி.மு.க... சதய விழாவைத் தவிர்த்த பின்னணி!

அன்பில் மகேஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
அன்பில் மகேஸ்

மிஸ்டர் கழுகு

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் தாக்கத்தாலோ என்னவோ, தஞ்சை ராஜராஜ சோழன் சதய விழாவுக்கு இந்த ஆண்டு நல்ல கூட்டம். ஆனால், விழாவுக்கு வந்த தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கோயிலுக்குள் செல்வதைத் தவிர்த்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, தஞ்சாவூரில் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து நிகழ்ச்சியைத் தொடங்கிவைப்பதை அமைச்சர்கள் அன்பில் மகேஸும், வெள்ளக்கோவில் சாமிநாதனுமே தவிர்த்துவிட்டனர் என்கிறார்கள். ‘என்னடா இது... வழக்கமாக கோயிலுக்குப் போகிற அன்பில்கூட இப்படிச் செய்துவிட்டாரே?’ என்று விசாரித்தால், ‘தஞ்சை பெரிய கோயிலுக்குச் சென்றால் பதவி பறிபோகும்’ என்ற வழக்கமான அரசியல்வாதிகளின் சென்டிமென்ட் காரணமாகவே அவர்கள் கோயிலுக்குள் வரவில்லை என்கிறார்கள். `மூடநம்பிக்கைக்கு எதிராக வாய்கிழியப் பேசும் திராவிடக் கட்சிக்கு வந்த சோதனையா இது?’ என்கிறார்கள் தஞ்சை மக்கள்!

‘தேர்தலே வரலை... வேட்பாளர் அறிமுகமா?’

2024 நாடாளுமன்றத் தேர்தலில், தன் மகனைக் களமிறக்க தீவிரமாக இருக்கிறாராம் மத்திய மாவட்ட சீனியர் அமைச்சர். இந்த விருப்பத்தை நேரம் பார்த்து, தலைமையின் காதில் போட்டு ஓகே வாங்கிவிட்டாராம். “பெரம்பலூர் தொகுதி என் மகனுக்குத்தான்” என இப்போதே ரிசர்வ் செய்து, சத்தமில்லாமல் தேர்தல் வேலையைத் தொடங்கி விட்டாராம். டிசம்பரில் மகன் பிறந்தநாளை அமர்க்களமாகக் கொண்டாடி, அந்த விழாவையே வேட்பாளர் அறிமுகக் கூட்டமாக மாற்றிவிடலாம் என்பதே சீனியரின் திட்டமாம்.

ராஜராஜ சோழனுக்கு பயந்த தி.மு.க... சதய விழாவைத் தவிர்த்த பின்னணி!

‘சேலையைக் கட்டிக்கிட்டு வாங்க!’

நீலகிரி நகர்மன்றக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் பெண் கவுன்சிலர் ஒருவர், “எங்க வார்டுக்குள்ள நுழைஞ்சு நான்தான் கவுன்சிலர்னு சொல்றவங்க, பேசாம புடவையையும் கட்டிக்கிட்டு வாங்க” எனக் கடுமை காட்டினார். பின்னணி இதுதான்... அங்கே தற்போது விதிமீறல் கட்டுமானங்கள் அதிகரித்திருக்கின்றன. கவுன்சிலர்கள் சிலர், கட்டுமானங்கள் நடைபெற்றுவரும் இடத்தைத் தேடிப்பிடித்து வசூல்வேட்டை ஆடுகிறார்களாம். தங்கள் வார்டு மட்டுமல்லாமல் பெண் கவுன்சிலர்களின் வார்டுகளுக்கும் படையெடுத்துச் சென்று கல்லாகட்டுகிறார்களாம். எல்லை தாண்டி கைநீட்டும் ஆண் கவுன்சிலர்களின் அடாவடியால், சில பெண் கவுன்சிலர்கள் கொதிப்பில் இருக்கிறார்கள். அதன் வெளிப்பாடே இது என்கிறார்கள்.

மாப்பிள்ளையைப் புகழ்ந்த எம்.எல்.ஏ!

கொங்கு மண்டல அ.தி.மு.க-விலிருந்து ஒருவரையாவது அதிருப்தி எம்.எல்.ஏ-வாகத் தங்கள் பக்கம் இழுத்துவிட வலை வீசிக்கொண்டிருக்கிறது தி.மு.க. இந்த நேரத்தில், தொழில் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர், தனது நெருங்கிய வட்டாரத்தில் மேலிடத்து மாப்பிள்ளை குறித்து பெருமையாகப் பேசியதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையறிந்த உடன்பிறப்புகள், ‘இந்தப் பக்கம் வாங்க. சிறப்பா கவனிச்சிடலாம்’ என்று வலை விரித்திருக்கிறார்கள். அந்த எம்.எல்.ஏ-வோ, ‘பாஸு... இந்த ரியல் எஸ்டேட் பிசினஸெல்லாம் நல்லா பண்றாருன்னுதான் அவரைப் பற்றிச் சொல்லிக்கிட்டிருந்தேன். அதுக்காகக் கட்சி மாற முடியுமா?’ என்று சொல்லிக் கதவைச் சாத்திவிட்டாராம். ‘வடை போச்சே...’ மனநிலையில் இருக்கிறார்கள் தி.மு.க-வினர்!

சேற்றில் சிக்கிய பெரிய இடத்து கார்!

டெல்டா மாவட்ட எம்.பி ஒருவரின் இரண்டாவது மனைவியின் மகன், சில தினங்களுக்கு முன்பு சென்ற விலையுயர்ந்த சொகுசு கார் வெள்ளத்தில் சிக்கியிருக்கிறது. உடனடியாக அந்த மாவட்ட அமைச்சரிடம் எம்.பி உதவி கேட்டிருக்கிறார். காரை மீட்டு சர்வீஸ் சென்டருக்குக் கொண்டு சென்றிருக்கிறது அமைச்சர் தரப்பு. காரில் மழைநீர் புகுந்ததால், ‘நிறைய செலவாகும்... ஆனால், இன்ஷூரன்ஸ் வர லேட்டாகுமே?’ என சர்வீஸ் சென்டரில் தலையைச் சொரிந்திருக்கிறார்கள். காரில் வந்தது எம்.பி மகன் என்றால், அந்த காரின் உரிமையாளரோ மேலிடத்துக்கு நெருக்கமானவர். சர்வீஸுக்கான செலவை மாவட்ட அமைச்சரே ஏற்றுக்கொண்டாராம்.

ராதாகிருஷ்ணனுக்கு புதிய பதவி!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணைய சர்ச்சையில் சிக்கியிருக்கும் உணவுத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலர் எதிர்பார்த்தார்கள். ஆனால், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் பொறுப்பை அமைச்சர் சக்கரபாணியிடமிருந்து, துறைச் செயலர் ராதாகிருஷ்ணனுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருக்கிறது அரசு. இதில் ராதாகிருஷ்ணனுக்கே ஷாக். மாற்றத்துக்கு என்ன காரணம் என்று விசாரித்தால், கொஞ்ச நாள் கழித்து இந்தத் தலைவர் பொறுப்பு தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவருக்குக் கொடுக்கப்படவிருக்கிறதாம். அப்போது அமைச்சரிடமிருந்து பதவியைப் பறித்தால் தேவையில்லாமல் சர்ச்சையாகும் என்பதால்தான் சத்தமில்லாமல் பதவி மாற்றம் நடந்திருக்கிறது என்கிறார்கள்!