கட்டுரைகள்
Published:Updated:

ரத்தான டெண்டர் விவகாரம்... ராஜ் பவனுக்குப் போன புகார்!

ஆர்.என்.ரவி
பிரீமியம் ஸ்டோரி
News
ஆர்.என்.ரவி

மிஸ்டர் கழுகு

மேற்கேயுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் 72 கோடி ரூபாய் மதிப்பில் ஹாஸ்டல் கட்டுவதற்காக டெண்டர்விட முடிவுசெய்யப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் அந்த டெண்டரை நிறுத்திவைத்து விட்டார்களாம். பெரிய குடும்பப் பிரமுகர் ஒருவர் தலையிட்டு, “அந்த டெண்டரை எப்படி நீங்களே முடிவு செய்யலாம்... நான் கைகாட்டும் நபருக்குத் தான் கொடுக்க வேண்டும்” எனக் கறாராகச் சொன்னதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். “எப்படி அறிவித்த டெண்டரை கேன்சல் செய்வது... அவர் கைகாட்டும் நபருக்குக் கொடுப்பது?” என்று மூளையைக் கசக்கிக்கொண்டிருக்கிறதாம் பல்கலை நிர்வாகம். இதற்கிடையே, ‘யாரின் தலையீட்டால், இந்தக் குழப்பம் ஏற்பட்டது?’ என்று ராஜ் பவனுக்குப் போட்டுக்கொடுத்திருக்கிறார்களாம் அதில் ஒரு தரப்பினர். ஆக, விரைவில் இந்த விவகாரத்தை கவர்னர் கையிலெடுக்க வாய்ப்பிருக்கிறது என்று கண்சிமிட்டுகிறார்கள் உள்விவகாரம் அறிந்தவர்கள்.

பதவிச் சண்டை போடும் ரெளடிகள்... கையைப் பிசையும் பா.ஜ.க தலைமை!

`ரெளடிகளையெல்லாம் கட்சியில் சேர்த்துக்கொண்டிருக்கிறது பா.ஜ.க’ என்று சர்ச்சை உருவானதல்லவா... அப்போது கட்சியில் சேர்ந்த இரண்டெழுத்து பெயர்கொண்ட சென்னை புறநகர் ரெளடி ஒருவர் சமீபத்தில் மாநிலத் தலைமையை இனிப்புகளுடன் போய்ச் சந்தித்தாராம். அப்போது, “ரொம்ப நாளா காத்துக்கிட்டு இருக்கிறேன். கட்சியில மாநிலப் பதவி ஏதாவது கொடுங்க” என்று கேட்டிருக்கிறார். அதற்கு கிரீன் சிக்னல் விழுந்திருப்பதை அறிந்த மற்றோர் இளம் ரெளடி, “அவரோட மனைவி கவுன்சிலரா இருக்காங்க... கட்சிப் பதவியும் இருக்கு. எனக்கு ஏதாவது பதவி கொடுக்கலாம்ல” என்று நச்சரிக்கத் தொடங்கிவிட்டாராம். இதற்காக மத்திய அமைச்சரின் சிபாரிசையும் பிடித்திருக்கிறார் அவர் “இப்பதான் சர்ச்சை ஓய்ஞ்சிருக்கு. இவங்களுக்குப் பதவி கொடுத்தா, மறுபடியும் விமர்சனம் கிளம்புமே?!” என்று கையைப் பிசைகிறதாம் மாநிலத் தலைமை.

ரத்தான டெண்டர் விவகாரம்... ராஜ் பவனுக்குப் போன புகார்!

கமென்ட் அடித்த எம்.பி... பதிலடி கொடுத்த அமைச்சர்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக தி.மு.க தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி, தனது மாவட்டத்தில் இரண்டு கூட்டங்களை நடத்தியிருக்கிறார் சென்னை அமைச்சர் ஒருவர். அந்தக் கூட்டங்களில் கலந்துகொண்ட மேலிடத்துக்கு நெருக்கமான எம்.பி., “என்ன... கூட்டம் நடக்குற இடம் மட்டும்தான் மாறுது.... ஆனா, கூட்டத்துல தெரியுற முகங்கள் எதுவும் மாறவே இல்லியே” என நக்கலாகச் சொல்லியிருக்கிறார். இதில் கடுப்பான அமைச்சர், “முதலில் அவரது கண்ணை நல்லா செக் பண்ணச் சொல்லுங்க. இவர் ஏதாவது கூட்டம் நடத்துனாத்தானே, கூட்டத்தைச் சேர்க்க நாம படுற கஷ்டம் தெரியும்” எனக் கடுகடுத்திருக்கிறார்.

மன்னரின் மனமாற்றத்துக்கு யார் காரணம்?

`மலை மாவட்டத்தில் எம்.பி-யாக இருக்கும் மன்னர் பிரமுகர், தலைமைக்குப் பக்கத்திலேயே இருப்பதிலும், டெல்லி அரசியலிலும் காட்டும் ஆர்வத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட தொகுதிமீது காட்டுவதில்லை’ என்பது பொதுவான குற்றச்சாட்டு. இப்போது திடீர் அக்கறை வந்தவராக, தொகுதியைச் சுற்றிச் சுற்றி வருவதுடன், தமிழ்நாட்டில் பல்வேறு துறை அமைச்சர்களையும் தன்னுடைய தொகுதிக்கு அழைத்துவரத் தொடங்கியிருக்கிறார் அவர். பின்னணியை விசாரித்தால், எல்லாவற்றுக்கும் காரணம் மத்திய அமைச்சர் ஒருவர்தான் என்கிறார்கள். அதாவது, 2024 தேர்தலில் அந்த மத்திய அமைச்சர் இந்தத் தொகுதியில்தான் போட்டியிடப்போகிறாராம். அதற்கு முன்னோட்டமாக சமீபத்தில், ‘வெற்றிவேல்’ முழக்கத்துடன் தொகுதி வலம்வந்தார் அவர். அதில் உஷாராகித்தான் சிட்டிங்

எம்.பி-யான மன்னர் பிரமுகர், வேறெங்கும் நகராமல் தொகுதியிலேயே முகாமிட்டிருக்கிறார் என்கிறார்கள். “இத்தனை காலம் தன்னைத் தனிக்காட்டு ராஜாவாக நினைத்துக்கொண்டிருந்தவர், இப்போதாவது ஆக்டிவ் மோடுக்கு வந்தாரே?!” என்பதில் தி.மு.க-வினருக்கும் மகிழ்ச்சி!

ரத்தான டெண்டர் விவகாரம்... ராஜ் பவனுக்குப் போன புகார்!

‘கல்யாணம் பண்ணுனது மாதிரியும் ஆச்சு...’ மதுரை மருத்துவரின் பலே பிளான்!

தேர்தல் நேரத்தில், கறுப்பு சிவப்பிலிருந்து காவிக் கட்சிக்கு மாறிய மதுரை மருத்துவர், ‘சிண்ட்ரெல்லா’ சர்ச்சைக்குப் பிறகு சுவரிலடித்த பந்தாக ‘வாட்ச்’ அமைச்சரிடம் சரணடைந்தார். ஆனாலும் கட்சியில் திரும்ப இணைக்க வேலைகள் எதுவும் நடந்த மாதிரி தெரியவில்லை. இதனால் வீறுகொண்டவர் சென்னைக்குக் கிளம்பி வந்து மேலிடத்தின் கதவுகளைத் தட்டிப் பார்த்திருக்கிறார். தெம்பூட்டும் வகையில் பதில் கிடைத்தாலும், நம் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று யோசித்துவந்தார். தற்போது, மகன் கல்யாணத்துக்கு வருமாறு அமைச்சர் உட்பட ஆளுங்கட்சிப் புள்ளிகள் அத்தனை பேருக்கும் வீடு தேடிப் போய் பத்திரிகை கொடுத்துவருகிறார். ‘பையனுக்குக் கல்யாணம் பண்ணுன மாதிரியும் ஆச்சு... தலைவர்கள் முன்னிலையில் கட்சியில், தான் திரும்ப இணைஞ்ச மாதிரியும் ஆச்சு என்பதே அண்ணனின் பிளான்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

தி.மு.க-விலும் டோக்கன் கலாசாரம்... காத்திருந்து ஏமாந்த பெண்கள்!

பின்னலாடை நகரத்தின் ‘வளமான’ ஆளுங்கட்சிச் செயலாளர், கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்துக்கு வரும் பெண்களுக்கு, ‘வீட்டு உபயோகப் பொருள்கள்கொண்ட தொகுப்பு வழங்கப்படும்’ எனக் கூறி, அதற்காக முதல்வரின் படம் அச்சிடப்பட்ட டோக்கன்களையும் தாராளமாக விநியோகித்திருந்தார். இதை நம்பி, ஏராளமான பெண்கள் குவிந்துவிட்டார்கள். ஆனால், கூட்டம் முடிந்த பிறகு கையில் டோக்கன்களுடன் காத்திருந்த பெண்களில் பாதிப் பேருக்கு மட்டும் ‘ஹாட் பாக்ஸ்’ டப்பா ஒன்றைக் கொடுத்து வழியனுப்பிவைத்திருக்கிறார் அந்தப் புள்ளி. ஏமாற்றமடைந்த பெண்கள், ‘டோக்கன் கொடுக்கும்போதே நாம உஷாராகி இருக்கணும்’ என்று புலம்பிக்கொண்டே நடையைக் கட்டியிருக்கிறார்கள்.