கட்டுரைகள்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: உதயநிதி பெயரில் வசூல்... சேப்பாக்கம் தொகுதி மல்லுக்கட்டு!

உதயநிதி
பிரீமியம் ஸ்டோரி
News
உதயநிதி

சின்னச் சின்ன டெண்டர்லருந்து எல்லா கலெக்‌ஷனையும் நீங்க மட்டும் வாங்கிக்கிட்டு, எங்களைச் செலவு மட்டும் பண்ணச் சொன்னா எப்பிடி... முதல்ல எங்க வருமானத்துக்கும் வழி செஞ்சுவிடுங்க. கடை கடையா ஏறி, இறங்கி வசூல் செய்ய வெக்கமா இருக்கு” என்று கொதித்துவிட்டார்களாம்

சென்னை, சேப்பாக்கம் தொகுதியின் வட்டச் செயலாளர்கள் கூட்டம், பகுதிச் செயலாளர்கள் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வட்டச் செயலாளர்கள் சிலர், ‘‘ `தொகுதிக்கு சின்னவர் (உதயநிதி) வர்றார். 500 பேருக்கு நலத்திட்ட உதவி ரெடி பண்ணுங்க. 1,000 பேருக்கு சாப்பாடு தயார் செய்யுங்க’ன்னு அடிக்கடி சொல்றீங்க. நாங்களும் கைக்காசைப் போட்டு செய்யிறோம். ஆனா, உங்களுக்குத்தான் பேர் கிடைக்குது. அதுகூடப் பரவாயில்லை. சின்னச் சின்ன டெண்டர்லருந்து எல்லா கலெக்‌ஷனையும் நீங்க மட்டும் வாங்கிக்கிட்டு, எங்களைச் செலவு மட்டும் பண்ணச் சொன்னா எப்பிடி... முதல்ல எங்க வருமானத்துக்கும் வழி செஞ்சுவிடுங்க. கடை கடையா ஏறி, இறங்கி வசூல் செய்ய வெக்கமா இருக்கு” என்று கொதித்துவிட்டார்களாம். அவர்களுக்கு பதிலளித்த நீண்ட இனிஷியல்கொண்ட பகுதிச் செயலாளர் ஒருவர், “கட்சிப் பணி செய்யணும்னா காசு செலவு செஞ்சுதான் ஆகணும். இதை எங்க வேணும்னாலும் சொல்லுங்க. இங்க, இதுதான் ரூல்ஸ். முடியலைன்னா பதவியை விட்டுட்டுப் போங்க” என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.

இது குறித்து மாவட்டச் செயலாளரிடம் புகார் அளித்தும் எதுவும் நடக்கவில்லையாம். “சின்னவர் பெயரைச் சொல்லி இப்படி அடாவடி செய்கிறார்களே...” என நொந்துகொள்கிறார்கள் வட்டங்கள்.

உதயநிதி
உதயநிதி

அரசியல் வேறு... உறவு வேறு... ஒன்று சேர்ந்த இ.பி.எஸ் - சசி ஆதரவாளர்கள்!

இ.பி.எஸ் தரப்புக்கும், டி.டி.வி தரப்புக்கும் அரசியல் களத்தில் உச்சகட்ட டக்-ஆஃப் வார் நடந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே டி.டி.வி கூடாரம் காலியாகிவிடும் என்று சொல்கிறார்கள் இ.பி.எஸ் ஆதரவாளர்கள். இந்த நேரத்தில் தஞ்சாவூரில் நடைபெற்ற ஒரு திருமண நிச்சயதார்த்தம், இரு தரப்பையும் புருவம் உயர்த்தவைத்திருக்கிறது. சசிகலா உறவினரும், டி.டி.வி.தினகரனின் சகலையுமான டாக்டர் சிவக்குமார் மகனுக்கும், எடப்பாடி அணியைச் சேர்ந்த அ.தி.மு.க திருவாரூர் நகரச் செயலாளர் ஆர்.டி.மூர்த்தி மகளுக்கும் நடந்த நிச்சயதார்த்த நிகழ்வுதான் அது. ‘பெருந்தலைவரின்’ பெயரைக்கொண்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஒருவரின் பினாமி என்றும், அ.ம.மு.க-வுக்கு வைரி என்றும் சொல்லப்படும் ஆர்.டி.மூர்த்தி குடும்பத்துடன் எப்படி சசிகலா குடும்பம் சம்பந்தம் செய்துகொண்டது என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் அ.ம.மு.க-வினர். இந்த நிகழ்ச்சியில் சசிகலா, திவாகரன் போன்றோருடன் டி.டி.வி.தினகரனும் கலந்துகொண்டார் என்றாலும், குரூப் போட்டோவில்கூட சேர்ந்து நின்றுவிடக் கூடாது என்று தனியேதான் வந்து போயிருக்கிறார் தினகரன் என்கிறார்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

தினகரன்
தினகரன்

‘வந்தான்... கத்தினான்... போனான்... ரிப்பீட்டு...’ இ.பி.எஸ் தரப்பிடம் பணியாத என்.ஆர்.ஐ!

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை நோக்கி, ‘துரோகி’ என்று கோஷமிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அ.ம.மு.க நிர்வாகி சிங்கம்புணரி ராஜேஸ்வரன், வந்த ‘வேலை’ முடிந்து மீண்டும் சிங்கப்பூருக்கே போய்விட்டார். போனவர் கையோடு, “என்னையும், என் தாய் தந்தையையும் தொடர்புகொண்டு, ‘உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்’ என்றும், மிரட்டல் தொனியிலும் எடப்பாடி மீதான புகாரை வாபஸ் பெறச் சொன்னவர்கள், பேரம் பேசியவர்கள் எல்லோருக்கும் நன்றி. என்மீதான தாக்குதலுக்குக் காரணமானவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படும் வரை நான் பின்வாங்கப்போவதில்லை” என்று சமூக வலைதளத்தில் போட்டுத் தாக்கிவிட்டார். டி.டி.வி-யே அவரைத் தொடர்புகொண்டு ‘ஊக்கப்படுத்தியது’தான் இந்த வீராவேசப் பதிவுக்குக் காரணமாம். இதற்கிடையே, ‘ராஜேஸ்வரனிடம் பேரம் பேசியது மதுரைக்கார மாஜியா அல்லது சிவகங்கைக்காரர்களா?’ என்று பட்டிமன்றம் நடந்துகொண்டிருக்கிறது தென்பாண்டி மண்டலத்தில்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

‘உறுப்பினரைச் சேர்க்கிறோம்... பதவியைப் பிடிக்கிறோம்!’

தென்கோடி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் உள்ளடி வேலை பார்த்த குற்றச்சாட்டில், மாஜி அமைச்சர் ஒருவர், தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவியை இழந்தார். நீண்ட காத்திருப்புக்குப் பிறகு சில மாதங்களுக்கு முன்புதான், அவருக்குத் தணிக்கைக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. `அப்பாடா... தலைமைக்குக் கோபம் தணிந்துவிட்டது’ என்று நிம்மதிப் பெருமூச்சுவிட்ட அவர், இப்போது தலைமை அறிவித்திருக்கும் உறுப்பினர் சேர்க்கும் பணிக்காக, ‘விசில் அடிக்கும் முன்பே’ ஓடத் தயாராகிவிட்டாராம். இத்தனைக்கும் காரணம் அறிவாலயப் புள்ளி ஒருவர்தானாம். ‘தலைமைக்கு உங்கள் மேல் கோபமெல்லாம் இல்லை... உங்கள் ஊர் அமைச்சரின் நச்சரிப்பால்தான் நீங்கள் தூக்கியடிக்கப் பட்டீர்கள். அமைச்சருக்கு எதிராக ஃபைல்களோடு மீண்டும் தலைமையிடம் பேசினால், உங்களுக்குப் பதவி கன்ஃபார்ம்’ என மாஜியின் காதில் ரீங்காரமிட்டிருந்தாராம் அறிவாலயப் புள்ளி.

வழக்கு போடவும் லட்டு... கிடப்பில் போடவும் லட்டு... இனிப்புமழையில் திளைக்கும் அதிகாரி!

‘பீரங்கி’ நகர் கமிஷனர் அலுவலகத்தின் மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அவரது எல்லைக்குள் பணியாற்றும் ‘மணி’யான அதிகாரிதான் வாங்கிக்கொடுக்கிறாராம். 2022-ம் ஆண்டு தொழிலதிபர் ஒருவர் கொடுத்த புகாருக்கு எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யவே மணியான அதிகாரி மூலம் 5 லட்டுகள் வாங்கினாராம் அந்த ஐ.பி.எஸ் அதிகாரி. ஆனாலும், எஃப்.ஐ.ஆர்-மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் பின்னணியை விசாரித்தால், புகார் கொடுத்தவர் எவ்வளவு லட்டு கொடுத்தாரோ அதைவிட இரு மடங்கு லட்டுகளைக் குற்றம்சாட்டப் பட்டவர் தரப்பும் கொடுத்ததாம். ‘எஃப்.ஐ.ஆர் போடவும் லட்டு, அதன்மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கவும் லட்டு...’ என இனிப்புமழையில் நனைந்த அதிகாரியைப் பொறாமையோடு பார்க்கிறார்களாம் மற்ற அதிகாரிகள்.