கட்டுரைகள்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: `20 லட்சம் பேரைக் காணோம்...’ - விஷயத்தை அமுக்கும் எம்.ஜி.ஆர் மாளிகை!

எம்.ஜி.ஆர் மாளிகை
பிரீமியம் ஸ்டோரி
News
எம்.ஜி.ஆர் மாளிகை

இந்த விஷயத்தைத் தலைமையிடம் கொண்டுபோனால், நமக்குத்தான் கூடுதல் வேலை. அதை அப்படியே அமுக்கிவிடலாம் என்று எம்.ஜி.ஆர் மாளிகை நிர்வாகிகள் சிலர் முடிவெடுத்திருக்கிறார்களாம்.

‘தமிழ்நாடு அரசியல் களத்தில் இது உறுப்பினர் சேர்க்கைக்கான காலம். `தி.மு.க-வில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்க வேண்டும்’ என்று தலைமை உத்தரவிட்டிருக்கிறது. அதேபோல, அ.தி.மு.க-வும் ஒன்றரைக் கோடித் தொண்டர்களை இரண்டு கோடியாக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. அதற்கான பணியில் இறங்கியபோதுதான், கடந்த நான்கு ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் உறுப்பினர்கள் மாற்றுக் கட்சியில் இணைந்திருக்கிறார்கள் என்ற விவரமே தெரியவந்திருக்கிறது. ஆனால், இந்த விஷயத்தைத் தலைமையிடம் கொண்டுபோனால், நமக்குத்தான் கூடுதல் வேலை. அதை அப்படியே அமுக்கிவிடலாம் என்று எம்.ஜி.ஆர் மாளிகை நிர்வாகிகள் சிலர் முடிவெடுத்திருக்கிறார்களாம்.

எம்.ஜி.ஆர் மாளிகை
எம்.ஜி.ஆர் மாளிகை

‘அவரை நம்பி வராதீங்க...’ - மாற்றுக் கட்சியினருக்கு எச்சரிக்கை!

தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக, மாற்றுக் கட்சியினரை தி.மு.க-வில் இணைக்கும் நிகழ்ச்சியை அடிக்கடி நடத்திவருபவர் ‘ஷாக்’ அமைச்சர். அதுவும், ‘ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கை’ அறிவிப்புக்குப் பிறகு, மனிதர் ஆர்வ மிகுதியில் திரிகிறாராம். ஆனால், அவர் ஆள்பிடிக்க வரும் செய்தியறிந்து, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ பட மாட்டுப்பண்ணை சீனில் வரும் நபர்போல, “வேண்டாம்... அவரை நம்பி வராதீங்க” என்று சிலர் குறுக்கே புகுந்து எச்சரிக்கிறார்களாம். என்னவென்று விசாரித்தால், “எங்களையும் நிறைய வாக்குறுதி கொடுத்துத்தான் கட்சியில சேர்த்தார்... சேர்ந்த பிறகு மனுஷனாகக்கூட மதிக்கிறதில்லை. கட்சி நிகழ்ச்சி எதுலயும் பக்கத்துலயே நிற்கவிடுறதில்லை. இருக்குற கட்சியில இருந்திருந்தாக்கூட மானம், மரியாதையாவது மிஞ்சியிருக்கும்” என்று சோக கீதம் பாடுகிறார்களாம். ஆனாலும், பாரம்பர்ய தி.மு.க-வினரையே பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு ஆள் சேர்ப்பில் அசத்தத் திட்டமிட்டிருக்கிறாராம் ‘ஷாக்’ அமைச்சர்!

‘கட்டடம் உயரலை...கமிஷன்தான் உயருது!’ - கதறும் கான்ட்ராக்டர்!

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 11 ஜில்லாக்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் கட்ட டெண்டர் விடப்பட்டது. அதில், ஒரு `ஜில்'லாவில் கலக்கலாக கண்டராக்டரிடம் கறக்கிறார்களாம் உடன்பிறப்புகள்.. அங்கே சில நூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. மழை, பனி, வேலையாட்கள் பற்றாக்குறை போன்ற பிரச்னைகளால் கட்டுமானப் பணிகள் மந்தமாக நடந்துவருகின்றன. இதைக் காரணமாகவைத்தே கவுன்சிலர் முதல் ஆளும் தரப்பின் முக்கியப் புள்ளிகள் வரை ஆய்வு என்று பெயரில் அந்த மருத்துவக் கல்லூரியை அடிக்கடி வட்டமடிக்கிறார்களாம். திரும்பும்போது `பூந்தி... லட்டு...' என்று பதவிக்கேற்ப ‘வரும்படி’யை எதிர்பார்க்கிறார்களாம். டெண்டர் கொடுத்த காலத்திலிருந்து இதுவரை கொடுத்த ‘இனிப்பு'களை கணக்கு பார்த்து கிறுகிறுத்துப்போயிருக்கிறதாம் கான்ட்ராக்டர் தரப்பு. ‘இதுக்குமேல் தாக்குப் பிடிக்க முடியாது... பேசாமல் மேலிடத்தில் புகார் செய்துவிடுங்கள்’ என்று கான்ட்ராக்டருக்கு யோசனை சொல்கிறார்களாம் நெருக்கமானவர்கள்.

ஆளுநர்
ஆளுநர்

‘எதையும் பிளான் பண்ணிப் பண்ணணும்!’ - யூடியூபர் ஆகிறாரா ஆளுநர்?

‘சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை நிலுவையில் வைத்திருந்தாலே, அது நிராகரிக்கப்பட்டுவிட்டதாகத்தான் அர்த்தம்’ என்ற சர்ச்சை பேச்சு ஆளுநரின் பக்கா பிளான் என்கிறார்கள் ராஜ் பவன் வட்டாரத்தில். ஐந்து மாதங்களுக்கு முன்பே, ‘Raj Bhavan Tamil Nadu’ என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுவிட்டாலும், இதுவரை வெறும் 12 வீடியோக்கள் மட்டுமே போடப்பட்டிருந்தன. ஆனால், ‘எண்ணித் துணிக’ என்ற சர்ச்சைப் பேச்சு நிகழ்ச்சிக்காக செம முன் தயாரிப்போடு இருந்ததால், லைவ் போடச் சொல்லிவிட்டதாம் ஆளுநர் தரப்பு. அவரது முதல் லைவ் நிகழ்ச்சியான இது, இரண்டரை மணி நேரத்துக்கு மேல் நீண்டது. ‘இனிமேல் மனிதர் அடிக்கடி, லைவ் போடுவார்... யூடியூப்பில் உரையாற்றுவார்’ என்கிறது ஆளுநர் மாளிகை. “எல்லாம் சரி... அவ்வளவு தைரியம் இருந்தால், அவர் பேசிய பேச்சை அப்படியே அறிக்கையாக வெளியிடவேண்டியதுதானே... எதற்காகப் பேச்சின் ‘கொடுக்கு’களை நறுக்கி, புனிதப்படுத்திய உரையை ஆளுநர் மாளிகையிலிருந்து பத்திரிகைகளுக்கு அனுப்பினார்கள்?’' என்று கேலி செய்கிறார்கள் உடன்பிறப்புகள்!

மிஸ்டர் கழுகு: `20 லட்சம் பேரைக் காணோம்...’ - விஷயத்தை அமுக்கும் எம்.ஜி.ஆர் மாளிகை!

தி.மு.க-வோடு... அ.தி.மு.க சொத்துப் பட்டியல்... மாஜி காக்கியின் பிளான் - பி

வரும் ஏப்ரல் 14-ம் தேதி தி.மு.க அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் சொத்துப் பட்டியலை வெளியிடுவதாக காவிக் கட்சியின் தலைவராக இருக்கும் மாஜி காக்கியான அண்ணாமலை அறிவித்திருந்தார். கூடவே, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் சிலரது சொத்துப் பட்டியலையும் புலனாய்வு செய்து சேகரித்துவருகின்றனவாம் அண்ணனின் விழுதுகள். ‘காவிக் கட்சிக்கு தி.மு.க எதிரியாக இருக்கலாம்... ஆனால், பர்சனலாக அண்ணனுக்கு இலைக் கட்சிதான் எதிரி. எதற்கும் இருக்கட்டும்’ என்பதே பட்டியல் சேகரிப்புக்கு அண்ணனின் விழுதுகள் வெளியே சொல்லும் காரணமாம். ‘2024 நாடாளுமன்றத் தேர்தலில் நம் எண்ணிக்கைக்கு அ.தி.மு.க ஒத்துவரவில்லையென்றால் பயன்படும்!’ என்று உள்ளுக்குள் கண்சிமிட்டுகின்றனவாம் அந்த விழுதுகள். விஷம்... விஷம்!