
பக்கத்திலிருக்கும் குட்டி மாநில காவிக் கட்சியின் ‘சாமி’யான தலைவர், தனது பிறந்தநாள் விழாவுக்காகக் காசியிலிருந்து ஒரு சாமியாரை இறக்குமதி செய்திருக்கிறார்
ஓவியங்கள்: சுதிர்
‘ஆட்சியில் இருப்பதால் ஒரு கோடி புதிய உறுப்பினர் சேர்க்கையை மூன்றே மாத்தத்தில் முடித்துவிடலாம்’ என்று நினைத்தது தி.மு.க. ஆனால், புதிதாகச் சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் பட்டியலைவிட, உறுப்பினர் சேர்க்கை குறித்த புகார்ப் பட்டியல்தான் தலைமைக் கழகத்துக்குக் கட்டுக்கட்டாக வருகிறதாம். ஏற்கெனவே, 30 தொகுதி பார்வையாளர்களை அழைத்து டோஸ்விட்ட தலைமை, அதில் 5 பேரை பொறுப்பிலிருந்தே நீக்கியது. சில மாவட்டச் செயலாளர்களுக்கு போனில் பரேடும் நடந்தது. இதற்கிடையே, உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டதாகப் போலிப்பட்டியல் தயாரித்திருப்பதும் தெரியவர, கடுப்பாகிவிட்டதாம் தலைமை. ‘இதுவரை சேர்த்த உறுப்பினர்கள் பட்டியலைக் கொடுங்க' என்று வாங்கி, வியூக வகுப்பாளர்களின் கால்சென்டர் மூலம் ஒவ்வொரு உறுப்பினருக்கும் போன் போட்டு சரிபார்க்க உத்தரவிட்டிருக்கிறதாம் தலைமை.

‘விஷயம் தெரியாமக் கூப்பிட்டுட்டோமே?’ - நிர்வாண சாமியார்... பதறிய அமைச்சர்!
பக்கத்திலிருக்கும் குட்டி மாநில காவிக் கட்சியின் ‘சாமி’யான தலைவர், தனது பிறந்தநாள் விழாவுக்காகக் காசியிலிருந்து ஒரு சாமியாரை இறக்குமதி செய்திருக்கிறார். இதைக் கேள்விப்பட்ட காவிக்கட்சி அமைச்சர்களும், நிர்வாகிகளும் சாமியாரைப் பார்க்கத் துடியாய்த் துடித்திருக்கிறார்கள். ஒரு அமைச்சர் ரொம்பவே வேண்டிக் கேட்டுக்கொண்டதால், சமீபத்தில் அவரது வீட்டுக்கு ஆசீர்வாதம் கொடுக்க காரில் சென்றிருக்கிறார் அந்தச் சாமியார். அவரை வரவேற்க குடும்பத்தோடு வீட்டு வாசலில் காத்திருந்த அமைச்சர், சாமியாரைப் பார்த்ததும் அதிர்ந்துபோனாராம். அப்படியென்ன சங்கதி என்று பார்த்தால், அவர் ஒரு நிர்வாண சாமியாராம். குடும்பத்தினரை வீட்டுக்குள் துரத்திய அமைச்சர், `சாமி... சாமி... எங்க வீடு சுத்தமா இல்லை. இப்ப நீங்க வந்தா நல்லா இருக்காது’ என்று பாக்கெட்டில் இருந்த பணத்தைக் காணிக்கையாகக் கொடுத்து வாசலோடு திருப்பியனுப்பியிருக்கிறார். சாமியாரிடம் கால்சீட் வாங்கிய முக்கியப் புள்ளிகளெல்லாம், ‘இ்ந்தக் கருமத்த ஏன்யா முதல்லேயே சொல்லல?’ என்று மாநிலத் தலைவரைத் திட்டிக்கொண்டிருக்கிறார்களாம்.
‘கமான்... உங்களால் முடியும்’ - தெம்பு கொடுத்த துணிவானவர்!
கடந்த சில வாரங்களாகவே துணிவானவரை மிகக்கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார் ட்ரிபிள் இன்ஷியல் தலைவர். இதற்கு எப்படியாவது கடிவாளம் போடவேண்டும் என்று திட்டமிட்டார் துணிவானவர். ஒருகாலத்தில், இனிஷியல் தலைவரின் காலடியில்கிடப்பதே பெருமை என்று சொல்லி, அதன் மூலம் பதவிகளையெல்லாம் பெற்று, தன்னைப் போலவே இனிஷியல் குடும்பத்தின் காலைவாரிவிட்ட 'நல்லநிலத்து' நிர்வாகியை இதற்காகத் தேர்ந்தெடுத்தார். ‘டெல்டாவில் தனிப்பட்ட செல்வாக்கு கொண்ட அ.ம.மு.க நிர்வாகிகளை ஒருவர்விடாமல் தூக்கவேண்டும்’ என்பதுதான் அசைன்மென்ட். `கர்மவீரராகக் களமிறங்கிய அந்த நிர்வாகி, இனிஷியல் கட்சித் தலைவரின் மாவட்டச் செயலாளர் ஒருவரை கையோடு, துணிவு பக்கம் தூக்கிவந்துவிட்டாராம்.
மனம்மகிழ்ந்த துணிவானவர், ‘நான் சொன்னேன்ல... உங்களால முடியும்... கமான்... மிச்சம் இருக்கிறவங்களையும் தூக்கிட்டு வாங்க’ எனத் தெம்பூட்டி யிருக்கிறாராம். அந்தத் ‘தெம்பி’ல், இன்னும் நிறையபேரை வளைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறாராம் 'நல்லநிலத்துக்காரர்!'

‘பொறுமைக்கும் எல்லை இருக்கு...’ - தலைமையை எகிறவைத்த நெல்லை!
நெல்லையில் தி.மு.க மேயருக்கும், மாவட்டச் செயலாளராக இருக்கும் எம்.எல்.ஏ-வுக்கும் இடையிலான மோதலே இன்னும் முடிவுக்கு வராத நிலையில், மேலும் சிலரும் கோதாவில் குதித்திருக்கிறார்களாம். மாநகர கட்சிப் பொறுப்பில் இருக்கும் முருகக்கடவுள் பெயர் கொண்டவரும், பொறுப்பு அமைச்சர் தரப்பினரும் காண்டிராக்டர்களிடம் கை நீட்டுகிறார்களாம். ‘ஏற்கெனவே மேயர், எம்.எல்.ஏ ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு திசைக்கு இழுக்கிறார்கள். இதில் இவங்க வேறயா?’ என்று அரண்டுபோயிருக்கிறார்களாம் காண்டிராக்டர்கள். ‘இனிப்பு’ கிடைக்காத ஆத்திரத்தில் நால்வரும் ஒருவர்மீது ஒருவர் குற்றம்சாட்டி அறிவாலயத்துக்குப் புகார் மனுக்களை அனுப்ப, டென்ஷனாகிவிட்டதாம் தலைமை. ‘நெல்லைப் பிரச்னையை மட்டுமே கவனிக்கத்தான் நாம பொறுப்புக்கு வந்திருக்கோமா... பொறுமைக்கும் ஓர் எல்லை இருக்கு!’ என்று எகிறிவிட்டதாம் தலைமை.
‘நெல்லை எங்களுக்கு எல்லை. குமரி எங்களுக்குத் தொல்லை' என்றார் தலைவர் கலைஞர். தளபதிக்கோ நெல்லையும் தொல்லையாகிடுச்சு!’ என்கிறார்கள் உடன் பிறப்புகள்!

லோக்கலில் இருந்து இன்டர்நேஷனல்... ரூட்டை மாற்றிய மாஜியின் பினாமி!
கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அதிகம் ‘மணி’ சம்பாதித்த அமைச்சர்களில் அவரும் ஒருவர். கூடவே நிறைய பினாமி நிறுவனங்களைத் தொடங்கியும் கல்லா கட்டினார். ஆட்சி மாறியதும் நடந்த ரெய்டுகள் காரணமாக அவரது பினாமிகள் எல்லாம் டெண்டர், காண்ட்ராக்ட் எல்லாவற்றையும் அப்படியே நிறுத்திவிட்டார்களாம். ‘இனி தமிழ்நாட்டில் வேலையில் இறங்கினால், மாட்டிக்கொள்வோம்’ என நினைத்த மாஜி, பினாமிகளை வெளிநாட்டு டூருக்கு அனுப்பியிருக்கிறாராம். அதன் பலனாக இன்டர்நேஷனல் டெண்டருக்கான அஸ்திவாரம் போடப்பட்டிருக்கிறதாம். முக்கியமாக அந்த மூன்றெழுத்து நிறுவனம் அமெரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் டெண்டர்களை எடுக்கும் வேலையில் தீவிரமாக இறங்கிவிட்டதாம். ‘விரைவிலேயே கைமேல் பயன்கிடைக்குமென’ சொல்லிச் சிரிக்கிறாராம் அந்த மாஜி அமைச்சர்!