கட்டுரைகள்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: “மீண்டும் அமைச்சரவை மாற்றம்?!” - எச்சரித்த மேலிடம்... கிலியில் அமைச்சர்கள்!

அமைச்சரவை
பிரீமியம் ஸ்டோரி
News
அமைச்சரவை

“நான் கூப்பிடாமல் ஏன் வந்தே... நான் சொல்லும்போது நீ வந்தா போதும்” என ஒருமையில் பேச, பதிலுக்கு அந்தப் பெண் அதிகாரியும் கொதித்துவிட்டாராம்.

அமைச்சரவை மாற்ற அனல் ஓய்வதற்குள், அடுத்த குண்டைப் போட்டிருக்கிறதாம் ஆட்சி மேலிடம். ``இந்த அமைச்சரவை மாற்றம் இறுதியானது அல்ல. துறை மாறியவர்களுக்கும், மாறாதவர்களுக்கும் இது இரண்டாவது வாய்ப்பு. தொடர்ந்து இதேபோல நெகட்டிவ் ரிப்போர்ட் வந்தால் அடுத்த ஆறு மாதங்களில் மீண்டும் அமைச்சரவை மாற்றம் இருக்கும்” என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறதாம் மேலிடம். இதனால், லிஸ்ட்டில் இடம்பெற்றவர்கள், இடம்பெறாதவர்கள் என அனைவரும் கலங்கிப்போய் நிற்கிறார்கள் என்கிறது கோட்டை வட்டாரம்!

பதவிப் பறிப்பைக் கொண்டாடிய உ.பி-க்கள்... வருத்தத்தில் எதிர்க்கட்சி மாஜி!

அமைச்சர் நாசரின் பதவிப் பறிப்பை திருவள்ளூர் மாவட்ட உ.பி-க்கள் பலர் சத்தமில்லாமல் கொண்டாடியிருக்கிறார்கள். பூவின் பெயரைக்கொண்ட நகராட்சியைச் சேர்ந்த சகோதர நிர்வாகிகளோ, ஒரு படி மேலே சென்று தங்களின் ஆதரவாளர்களுக்கு ஸ்பெஷல் பிரியாணி விருந்தே கொடுத்தார்களாம். அடுத்து நாசரின் கட்சிப் பதவியும் பறிக்கப்படலாம் என்ற பேச்சை நம்பி, ‘கல்வித்தந்தை’யாக இருக்கும் எம்.எல்.ஏ ஒருவர், அந்தப் பதவிக்கு காய்நகர்த்தினாராம். ஆனால், ‘கட்சிப் பதவி பறிக்கப்படாது’ எனத் தலைமையிலிருந்து நாசருக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் எட்டியதால், ஏமாற்றத்தில் இருக்கிறாராம் அந்த எம்.எல்.ஏ. நாசரின் பதவிப் பறிப்பைச் சொந்தக் கட்சியினரெல்லாம் கொண்டாடிவரும் நிலையில், அவரால் பயனடைந்துவந்த இலைக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரோ நிஜமாகவே ரொம்ப வருத்தப்பட்டாராம்.

அமைச்சரவை
அமைச்சரவை

கோஷ்டி மோதல்... பட்டாசு வீச்சு... கண்டுகொள்ளாத பொதுச்செயலாளர்!

தி.மு.க பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் சமீபத்தில் குமரியிலிருந்து நெல்லை வழியாக சென்னைக்குத் திரும்பினார். அவரை வரவேற்க நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே, மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் தரப்பு ஏற்பாடு செய்திருந்தது. அதற்குப் பத்தடி தள்ளி, மாநகரச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் தனியாக ஒரு கோஷ்டி வரவேற்பு அளிக்கக் காத்துக்கொண்டிருந்தது. யார் முதலில் வரவேற்பது என்பதில் இரு தரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதுடன், சிறிய கைகலப்பும் நடந்தது. ஆத்திரத்தில் சிலர் அமைச்சரை வரவேற்க வைத்திருந்த பட்டாசுகளைக் கொளுத்தி கூட்டத்துக்குள் வீசிவிட, கட்சியினர் அலறியடித்துக்கொண்டு ஓடியதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. `ஆத்தி... பொதுச்செயலாளர் கண்ணெதிரிலேயே கோஷ்டி மோதலா... செத்தான் சிவனாண்டி' என்று உடன்பிறப்புகள் பேசிக்கொண்டார்கள். ஆனால், பொதுச்செயலாளர் ஊருக்குத் திரும்பி ஒரு வாரத்துக்கு மேலாகியும் எந்த ஒழுங்கு நடவடிக்கையும் இல்லாததால், ‘உச்’ கொட்டுகிறார்கள் உடன்பிறப்புகள்!

மிரட்டிய அமைச்சர் குடும்பம்... மடக்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர்!

எளிய மக்களைக் கைதூக்கிவிடவேண்டிய துறையின் அமைச்சர், தன் அதிகாரத்தால் மற்றவர்களை ஒடுக்குவதையே வேலையாக வைத்திருக்கிறார் என்கிறார்கள். தன்னுடைய சொந்தத் தொகுதியிலுள்ள மகளிர் காவல் நிலைய புதிய அதிகாரி, பொறுப்பேற்றுப் பல மாதங்களாகியும் தன்னை நேரில் சந்திக்கவில்லை என்று உயரதிகாரிகளிடம் சீறினாராம் அமைச்சர். ‘பேசாம அமைச்சரைப் போய்ப் பாருங்கம்மா...’ என்று உயரதிகாரிகள் வற்புறுத்த, சமீபத்தில் அமைச்சரின் வீட்டுப் படியேறியிருக்கிறார் அதிகாரி. அப்போது அவரிடம் முகம் கொடுத்தும் பேசாத அமைச்சர், முதலில் தன் கணவரைச் சந்தித்துவிட்டு வருமாறு கூறினாராம். அமைச்சரின் கணவரைச் சந்திக்கச் சென்ற அதிகாரியிடம், “நான் கூப்பிடாமல் ஏன் வந்தே... நான் சொல்லும்போது நீ வந்தா போதும்” என ஒருமையில் பேச, பதிலுக்கு அந்தப் பெண் அதிகாரியும் கொதித்துவிட்டாராம். அப்போது விட்டுவிட்டாலும், பிறகு போன் போட்டு, “உன்னைத் தூக்கியடிக்கிறேன் பார்” என்று மிரட்டியதாம் அமைச்சர் தரப்பு. அசராத அந்த அதிகாரி, “நீங்கள் என்னை ஒருமையில் பேசிய வீடியோ என்னிடம் இருக்கிறது. அதை வெளியிட்டுவிடுவேன்” என பதிலடி கொடுத்தாராம். ‘இப்போதுதான் நூலிழையில் பதவி தப்பியிருக்கிறது. இந்த நேரத்தில் எதற்கு இந்த வீண் பிரச்னை?’ என `கப்சிப்’ ஆகிவிட்டதாம் அமைச்சர் தரப்பு.

தமிழிசை
தமிழிசை

தமிழிசைக்கு கறுப்புக்கொடி... தடைபோட்ட சிறுத்தை தலைவர்!

நோயாளிகளுக்கான கட்டண வசூல் நடைமுறைக்கு எதிராக, புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு முன்பு போராட்டம் நடத்தியிருந்தது வி.சி.க. அதில், அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன், எம்.பி ரவிக்குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர். இந்தப் போராட்டத்துக்கு எதிராக கண்டனத்தைப் பதிவுசெய்த புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை, ‘விழுப்புரம் எம்.பி-க்கு இங்கென்ன வேலை?’ என வி.சி.க எம்.பி ரவிக்குமாரைச் சாடியிருந்தார். இந்த நிலையில், மே 9-ம் தேதி திண்டிவனம் அருகேயுள்ள தனியார் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவுக்கு தமிழிசை வருவதாக இருந்ததை அறிந்து, ‘இப்போது உங்களுக்கு விழுப்புரத்தில் என்ன வேலை?’ என்ற வாசகத்தோடு தமிழிசைக்குக் கறுப்புக்கொடி காட்டுவதற்கு சிறுத்தைகள் தயாராகியிருக்கின்றனர். இந்தத் தகவல், சிறுத்தை கட்சியின் தலைமைக்குச் செல்ல, “தனியார் பள்ளி நிகழ்ச்சிக்கு வருபவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நாகரிகமாக இருக்காது. இப்போதைக்கு அமைதியாக இருங்கள்” என்று தடைபோட்டுவிட்டாராம்.