கட்டுரைகள்
Published:Updated:

மிஸ்டர் கழுகு: ‘ரோட்டை நீ போடு, மத்ததை நாங்க பாத்துக்குறோம்...’ வனத்துறை அதிகாரிகளின் ஏகபோகம்!

மிஸ்டர் கழுகு
பிரீமியம் ஸ்டோரி
News
மிஸ்டர் கழுகு

பெரிய பொறுப்பிலிருக்கும் தமிழ் பேசும் மத்திய அமைச்சர் அவர். சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தவர், வழக்கமாகத் தங்கும் இந்தியன் வங்கி கெஸ்ட் ஹவுஸ் நோக்கிச் சென்றிருக்கிறார்.

வடமாவட்ட மணக்கும் மலை வாசஸ்தலத்தில், தார்ச்சாலை சமீபத்தில் அமைக்கப்பட்டது. சாலை பழுதடையாமல் இருப்பதற்காக வெளியிலிருந்து மண் எடுத்து வந்து, சாலையின் இரண்டு பக்கங்களிலும் போட வேண்டும். ஆனால், அந்தப் பகுதிக்கான வனத்துறை அதிகாரிகள் இருவரை ‘இனிப்பு’ கொடுத்து மயக்கிவிட்டு, சாலையோர காப்புக்காட்டிலிருந்து சட்டவிரோதமாக மண் எடுத்திருக்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள். ‘ரோட்டை நீ போடு, மத்ததை நாங்க பாத்துக்குறோம்’ என்று அதிகாரிகள் பச்சைக்கொடி காட்டிவிட்டதால், பச்சை மரங்களும் வெட்டப்பட்டிருக்கின்றன என்று குமுறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு

‘கிடைச்சதை தக்கவெச்சுக்கத் தெரியலயே?’

யாத்திரைக்குப் பெயர்போன மாவட்டத்தின் ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளராக அப்பாவும் மகனும் மாறி மாறி வந்தும் கட்சி வளரவில்லை என்று புகார் உண்டு. அதனால்தான் நீண்ட பெயர்க்காரரை மாவட்டச் செயலாளராக நியமித்தது கட்சி. ஆனால், அவர் பொறுப்புக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் எந்த முன்னேற்றமும் இல்லையாம். கூடவே, சாதி அரசியல் செய்வதாகக் குற்றச்சாட்டு வேறு. தான் வம்பு, வழக்குகளில் சிக்கியது போதாது என்று, தன் தம்பியையும் ஆடவிட்டு ரசிக்கிறாராம் அவர். எதிர்க்கோஷ்டியினர் அறிவாலயத்துக்குப் புகாருக்கு மேல் புகார் அனுப்பியிருக்கிறார்கள். எப்படியும் பதவி பறிபோய்விடும் என்று சொல்லப்படுவதால், ‘கிடைச்சதைத் தக்கவெச்சுக்கத் தெரியலயே?’ என்று அவர் காதுபடவே பேசுகிறார்களாம் உடன்பிறப்புகள்.

‘யதார்த்தமா... திட்டமிட்ட செயலா?' கொதித்தெழுந்த மத்திய அமைச்சர்!

பெரிய பொறுப்பிலிருக்கும் தமிழ் பேசும் மத்திய அமைச்சர் அவர். சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தவர், வழக்கமாகத் தங்கும் இந்தியன் வங்கி கெஸ்ட் ஹவுஸ் நோக்கிச் சென்றிருக்கிறார். அந்த நேரம் பார்த்து அந்தப் பகுதியில், அறிவிக்கப்படாத ‘பவர் கட்’ ஏற்பட, ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். `இப்போது நமது கான்வாய் அங்கு சென்றால், மக்கள் நம்மை முற்றுகையிடக்கூடும்' என்று சொல்லி, மாற்றுப்பாதையில் ஊரைச் சுற்றி அழைத்துச் சென்றிருக்கிறார்கள் பாதுகாப்பு அதிகாரிகள். ‘இது யதார்த்தமாக நடந்ததா... இல்லை திட்டமிட்ட செயலா என எனக்குத் தெரிந்தாக வேண்டும். இல்லையென்றால், நானே டி.ஜி.பி., முதல்வர் வரைக்கும் பேச வேண்டியிருக்கும்’ எனப் பொங்கித் தீர்த்துவிட்டாராம் அமைச்சர். அடுத்த நாள் என்ன நினைத்தாரோ, ‘கான்வாய் வேண்டாம்’ எனச் சொல்லி, தன் துறை அலுவலகக் காரிலேயே நிகழ்ச்சிகளுக்குச் சென்று திரும்பியிருக்கிறார்!

மிஸ்டர் கழுகு
மிஸ்டர் கழுகு

‘சர்வ வழக்காய ஸ்வாஹா...’

கடந்த ஆட்சியில் ‘மணி’ நிறைய பார்த்த மாஜி அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் தீவிரப்படுத்தவிருக்கிறதாம் லஞ்ச ஒழிப்புத்துறை. `எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு மண்டலத்தில் இலைக் கட்சியின் கை ஓங்க வாய்ப்பிருக்கிறது' என ஆளுங்கட்சிக்காகத் தேர்தல் வேலை பார்க்கும் இரண்டு நிறுவனங்கள், ரிப்போர்ட் கொடுத்ததே இதற்குக் காரணமாம். காவிக் கட்சிக்கு அவர் ஓவர் ஜால்ரா அடிப்பதும் கோபத்துக்கு இன்னொரு காரணம் என்கிறார்கள். விஷயத்தை மோப்பம் பிடித்துவிட்ட மாஜி, வழக்கறிஞர்கள் குழுவுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறாராம். கூடவே, தன் சகோதரர் குடும்பத்தினர் மூலம் கேரளாவில் யாகம் ஒன்றையும் நடத்தியிருக்கிறாராம். டெல்லிக்குக் காவடி எடுக்கும் திட்டமும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

‘பந்திக்கு முந்து, படைக்கு பிந்து’ எள்ளி நகையாடப்படும் எளிமை எம்.எம்.ஏ!

சூரியன் உதிக்கும் மாவட்டத்தில், சூரிய கட்சி வேட்பாளரைத் தோற்கடித்த மலர்க் கட்சி ச.ம.உ அவர். ‘செருப்புகூட போடாத எளிய மனிதர்... ஏழைப் பங்காளர்’ என்று புகழப்பட்ட அவரின் சமீபத்திய போக்கு சரியில்லையாம். முன்பெல்லாம் கட்சி நிகழ்ச்சி, தொண்டர்கள் வீட்டு நல்லது கெட்டது, கோயில் விழாக்கள் என அனைத்திலும் ஆர்வமாகக் கலந்துகொண்டவர், இப்போது அங்கெல்லாம் தலையே காட்டுவதில்லை. ஆனால், சில தொழிலதிபர்கள், குவாரி உரிமையாளர்கள் அழைத்தால் ஆப்சென்டாகாமல், முதல் ஆளாக `டாண்’ என்று ஆஜராகிறாராம். விருந்துகளிலும் மறக்காமல் கைநனைக்கிறாராம். “தேர்தல் நெருங்குகிறது... இவரோ பந்திக்கு முந்துகிறார்... படைக்குப் பிந்துகிறாரே?” என சோக கீதம் பாடுகிறார்கள் மலர்க் கட்சி நிர்வாகிகள்.