
‘நாடாளுமன்றத் தேர்தலில் சீட் வாங்க, அரசியலில் ஆக்டிவாக இருப்பதைப்போலக் காட்டிக்கொள்கிறார் தடா பெரியசாமி. அதற்காகவே மாநாடு, ஆளுநர் சந்திப்பு என ஆக்டிங் அரசியல் செய்கிறார்.
தமிழக பா.ஜ.க-வின் மாநில எஸ்.சி மோட்சா அணித் தலைவர் தடா பெரியசாமி, அதன் பொருளாளர் சங்கர் மற்றும் நிர்வாகிகள் சில தினங்களுக்கு முன்புதான் ஆளுநரைச் சந்தித்தனர். இந்த நிலையில், சங்கர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கட்சிக்குள் கலகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ‘‘சங்கர் மீது 18 குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்புகூட துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக சங்கரை ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் கைதுசெய்தனர். ஜாமீனில் வெளியில் வந்தவரை எப்படி ஆளுநரைச் சந்திக்க அழைத்துச் செல்லலாம்..?’’ என ஏற்கெனவே கமலாலய சீனியர்கள் `தடா’வுக்கு எதிராகத் தடதடத்திருக்கிறார்கள். தற்போது சங்கர் படுகொலை செய்யப்பட்டிருப்பது, சீனியர்களின் கொதிப்பை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது. ‘நாடாளுமன்றத் தேர்தலில் சீட் வாங்க, அரசியலில் ஆக்டிவாக இருப்பதைப்போலக் காட்டிக்கொள்கிறார் தடா பெரியசாமி. அதற்காகவே மாநாடு, ஆளுநர் சந்திப்பு என ஆக்டிங் அரசியல் செய்கிறார். அதற்காகக் குற்றப் பின்னணி உடையவர்களை ஆளுநரைச் சந்திக்க அழைத்துச் சென்றதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. எனவே, இது குறித்து அவரிடம் உரிய விசாரணை செய்ய வேண்டும்’ எனத் தலைமைக்குப் புகார் கடிதமும் கொடுத்திருக்கிறார்களாம்.

அமைச்சர் ஆசையில் சுற்றும் நிர்வாகி... தலைமையிடம் பற்றவைத்த சீனியர்!
வெயில் மாவட்டத்தில், சீனியர் அமைச்சருக்கு எதிராகக் களமாடிவரும் தி.மு.க புள்ளி, ‘விரைவில் தனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கப்போகிறது’ என்ற பேச்சைக் கிளப்பிவிட்டிருக்கிறாராம். ஏற்கெனவே ‘மா.செ., எம்.எல்.ஏ., கோயில் பொறுப்பு, கல்விக்கழகப் பொறுப்பு’ என்று பல பதவிகளைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் அந்த முக்கியப் புள்ளி, அமைச்சராகும் ஆசையில் வாரிசுப் பக்கம் தஞ்சமடைந்திருக்கிறாராம். ‘வாரிசின் கண் பார்வையிலேயே இருக்க வேண்டும் என்பதற்காக, வாரிசு எங்கெல்லாம் செல்கிறாரோ... அங்கெல்லாம் அவரும் தென்படுகிறார்’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இதைப் புரிந்துகொண்ட சீனியர் அமைச்சரோ, ‘‘மாவட்டத்துக்குள் வருவதில்லை. கட்சிப் பணிகளையும், தொகுதிப் பிரச்னைகளையும் கண்டுகொள்வதில்லை. அவரை அழைத்து என்னவென்று கேளுங்கள்” எனத் தலைமையிடம் பற்றவைத்திருக்கிறாராம்.
விசாரணையை வேகப்படுத்தும் அமலாக்கத்துறை... கலக்கத்தில் அமைச்சர்!
2001 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில், அ.தி.மு.க அரசில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சராக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, அப்போதைய எதிர்க்கட்சியான தி.மு.க புகார் கொடுத்தது. இதையடுத்து அனிதாவின் மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்ளிட்ட ஏழு பேர்மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நுழைந்த அமலாக்கத்துறை, அமைச்சர் அனிதா உள்ளிட்ட ஏழு பேரையும் கடந்த ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1-ம் தேதிக்குள் தனித்தனியே விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதன்படி மதுரையிலுள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் முறையே அனைவரும் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து அமைச்சரின் 6.5 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகள் முடக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், தூத்துக்குடி முதன்மை நீதிமன்றத்தில் நடந்துவரும் இந்த வழக்கில், ‘தங்களையும் இணைத்து விசாரணை நடத்த அனுமதியளிக்க வேண்டும்’ என அமலாக்கத்துறையின் உதவி இயக்குநர் சார்பில் தற்போது மனு அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே கழுத்தைச் சுற்றிய பாம்பாக இந்த வழக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அமலாக்கத்துறையும் வம்படியாகத் தலையிடுவது அமைச்சருக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து எப்படித் தப்பிப்பது எனப் புரியாமல் புலம்பிவருகிறாராம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்.

கல்லாகட்டும் அதிகாரிகள்... கல்தா கொடுத்த துறை நிர்வாகம்!
சென்னைக்கு அருகிலுள்ள காவல் மாவட்டத்தில் பணியாற்றும் அந்தப் பெண் அதிகாரி, தன்னிடம் வரும் பெரிய வழக்குகளை, தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களைக்கொண்டு பெரிய அளவில் டீலிங் பேசி முடித்துக்கொண்டிருக்கிறாராம். இவரைத் தொடர்ந்து, இன்னும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் பண மோசடிப் புகார்களில் மட்டும் கவனம் செலுத்துகிறார்களாம். இதில் மோசடி செய்யப்பட்ட தொகை எவ்வளவோ, அதற்கேற்ப கமிஷனைப் பேசி முடிக்கிறார்களாம். சட்டவிரோத மது விற்பனை வழக்கு முதல் அனைத்து விவகாரங்களிலும் இவர்கள் இப்படி நேரடியாகவே தலையிட்டு கல்லாகட்டி வந்ததை டி.ஜி.பி அலுவலகத்துக்கு ரிப்போர்ட் போட்டுவிட்டதாம் உளவுத்துறை. இதையடுத்து, உடனடியாக இவர்களை இடமாறுதல் செய்ய முடிவெடுக்கப்பட்டிருக்கிறதாம். ஒரே நேரத்தில் மூன்று அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாகவிருப்பதால், அந்த இடங்களைப் பிடிக்க அதிகாரிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.

பணிவும் வேண்டும்... துணிவும் வேண்டும்! - மா.செ-வின் இரட்டைச் சவாரி!
துணிவானவரின் அணியிலிருக்கும் பழங்காலத்து மன்னர் பெயர்கொண்ட மாவட்டச் செயலாளர்தான், பணிவானவரின் வரவு செலவுகளைத் தற்போதும் கவனித்துவருகிறாராம். சென்னையில் மூன்றே மூன்று கிளைகளைக் கொண்ட வங்கி ஒன்றில்தான், பணிவானவர் பல ஸ்வீட் பாஸ்க்ஸுகளை முதலீடு செய்திருக்கிறாராம். அதில் தற்போது குறிப்பிட்ட சதவிகித லாபம் கிடைத்திருக்கிறதாம். ‘‘ஆளும் தரப்புக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ரெய்டுகள் நடந்தேறிவருவதால், தொழிலில் அவர்களின் ஆதிக்கம் குறையும். எனவே, நமது லாபத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யுங்கள்’’ எனச் சொல்லியிருக்கிறாராம் பணிவானவர். இதனால், சென்னையில் பல இடங்களை வாங்கிக் குவிக்கிறாராம் அந்த மா.செ. மேலும், துணிவானவர் தரப்பின் வியூகங்களை, பணிவானவரின் கவனத்துக்குத் தொடர்ந்து அப்டேட் செய்து, தனது விசுவாசத்தையும் உறுதிப்படுத்திக்கொண்டேயிருக்கிறாராம் அந்த மா.செ!