Published:Updated:

`அழகிரியின் ஆன்டி அரசியல்’ - தி.மு.க-வுக்கு செக் வைக்கும் பா.ஜ.க?

அழகிரி
அழகிரி

தேர்தல் நெருங்க நெருங்க தி.மு.க-வுக்கு எதிராகத் தனது சீற்றத்தை வெளிப்படுத்த ஆரம்பித்திருக்கிறார் அழகிரி. ஆனால், இந்த முறை தி.மு.க-வுக்கு செக் வைப்பதற்காக அழகிரியை ஆயுதமாக்கிவருகிறது பா.ஜ.க என்று தி.மு.க-வினர் புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மூத்த மகனுமான அழகிரி கடந்த சில காலமாக அரசியல் நடவடிக்கைகளிலிருந்து ஒதுங்கியே இருந்தார். `அவர் கலைஞர் தி.மு.க என்கிற பெயரில் தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார்’ என்கிற செய்திகள் கடந்த சில மாதங்களாகவே உலவிவந்தன.

கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின்
கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின்

இந்தநிலையில், தி.மு.க தலைமையுடன் அழகிரி தரப்பு நடத்திய பேச்சுவார்த்தை உடன்பாட்டுக்கு வராததால், அவரை பா.ஜ.க தரப்பு இழுக்கும் வேலைகளில் இறங்கியது. குறிப்பாக, கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னைக்கு வந்தபோது, அழகிரியுடன் சந்திப்பு நடத்துவார் என்று தகவல்கள் கசிந்தன. பா.ஜ.க உள்விவகாரங்களை அறிந்தவர்களும் இதை உறுதிப்படுத்தினார்கள்.

ஆனால், அமித் ஷா சென்னை வந்து செல்லும்வரை, அழகிரி சந்திப்பு நடக்கவில்லை. அவர் சார்பிலும் யாரும் அமித் ஷாவைச் சந்திக்கவில்லை. இந்தநிலையில், அமித் ஷா சென்னை வந்து சென்ற மறு வாரமே அழகிரிக்கு எதிரான அஸ்திரத்தைக் கையில் எடுத்திருக்கிறது மத்திய அரசு. அழகிரி மகனுக்குச் சொந்தமாக மதுரையிலுள்ள தயா ஐடி பூங்கா நிறுவனத்துக்கு இடம் வாங்கியது, அதற்கான பணப் பரிமாற்றங்களில் முறைகேடு நடந்திருப்பதாக சி.பி.ஐ வசம் ஏற்கெனவே ஒரு வழக்கு நிலுவையில் இருந்தது. நீண்டகாலமாக இந்த வழக்கு கிடப்பில் கிடந்த நிலையில், திடீரென இந்த வழக்குக்கு உயிர் கொடுத்தது மத்திய அரசு. இரண்டு நாள்களுக்கு முன்னர் அழகிரி மகன் துரை தயாநிதிக்கு இந்த வழக்கு குறித்து விசாரிக்க டெல்லி அலுவலகம் வருமாறு சம்மன் அனுப்பியிருக்கிறது சி.பி.ஐ.

மு.க.அழகிரி
மு.க.அழகிரி
என்.ஜி.மணிகண்டன்

உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் சி.பி.ஐ அமைப்பு வருகிறது. உள்துறை அமைச்சராக இருப்பது அமித் ஷா. இதனால் தனக்கு நெருக்கடி வேறு ரூபத்தில் வர ஆரம்பித்திருப்பதை அழகிரி உணர்ந்திருக்கிறார். அதாவது, தி.மு.க-வுக்கு எதிராகத் தன்னை களம் இறக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருப்பதை அழகிரி அறிந்திருக்கிறார். இந்தநிலையில்தான் நீண்ட நாள்களுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அழகிரி, ``வரும் சட்டமன்றத் தேர்தலில் எனது பங்கு இருக்கும். புதிய கட்சி தொடங்குவது குறித்து எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்க இருக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

அழகிரியின் இந்த அறிவிப்பு அறிவாலயத்துக்குள்ளும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. அழகிரி, தேர்தல் நேரத்தில் தி.மு.க-வுக்கு எதிராக ஏதாவது காய்நகர்த்தலாம் என்று ஏற்கெனவே அந்தக் கட்சியினர் மத்தியில் பேச்சு இருந்துவந்தது. இந்தநிலையில், பகிரங்கமாகவே தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என்று சொல்லியிருக்கிறார் அழகிரி. தி.மு.க-வுக்கு எதிரான நடவடிக்கையாகவே இந்தப் பங்களிப்பு இருக்கும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க-வுக்கு எதிராகத் தென்மாவட்டங்களில் அழகிரி தரப்பு வேலை பார்த்தது. இதனால் கணிசமான இடங்களை தி.மு.க பறிகொடுத்தது. வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தி.மு.க-வுக்கு எதிராகக் களம் இறங்கிச் சிக்கல் ஏற்பட்டுவிடக் கூடாது என தி.மு.க-வினர் நினைக்கிறார்கள். இதனால், ஸ்டாலின் தரப்பிலிருந்து சில நாள்களுக்கு முன்னர் அழகிரியிடம் பேசியிருக்கிறார்கள்.

தயாநிதி
தயாநிதி

அப்போது அழகிரி, ``நானும் தலைவரின் பிள்ளைதான். எல்லா சுகபோகத்தையும் அவரே வைத்துக்கொள்வது சரியா... கட்சிக்கும் எங்கள் குடும்பத்துக்கும் எத்தனை அறக்கட்டளைகள் இருக்கின்றன... அவரின் வாரிசை மட்டும் பதவியும் பொறுப்பும் கொடுத்து அழகுபார்க்கிறார். என் பிள்ளைக்கு ஏதாவது கொடுத்திருக்கலாம். இனி நானும் அமைதியாக இருக்க மாட்டேன்” என்று டென்ஷனாகப் பேசியிருக்கிறார்.

இந்தத் தகவல் ஸ்டாலின் காதுக்கு எட்டியிருக்கிறது. ஆனால், அழகிரிக்கோ, அவரின் வாரிசுக்கோ எந்தப் பொறுப்பையும் வழங்க வேண்டாம் என்பதில் ஸ்டாலின் குடும்பம் உறுதியாக இருக்கிறது. இந்த நேரத்தில் மீண்டும் அழகிரியைத் தொடர்புகொண்ட பா.ஜ.க தரப்பு, `கட்சியில் இணையாவிட்டாலும் பரவாயில்லை. தனியாக ஒரு கட்சியையாவது தொடங்குங்கள். அதற்கு வேண்டியதை நாங்கள் செய்கிறோம்’ என்று நெருக்கடி கொடுக்க ஆரம்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் சி.பி.ஐ சம்மன் வேறு வந்திருப்பதால், `இனியும் அமைதியாக இருக்க வேண்டாம்’ என்று தனது குமுறலை வெளிக்காட்ட ஆரம்பித்துவிட்டார் அழகிரி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அடுத்த கட்டுரைக்கு