Published:Updated:

`தி.மு.க-வோடு ஏன் முரண்படுகிறது காங்கிரஸ்?!' - ரஜினியை முன்வைத்து நடக்கிறதா அரசியல் ஆட்டம்?

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அழகிரியின் அறிக்கையெல்லாம் ஸ்டாலினின் கோபத்துக்குக் காரணம் இல்லை என சந்தேகம் கிளப்புகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

கே.எஸ்.அழகிரி, ஸ்டாலின்
கே.எஸ்.அழகிரி, ஸ்டாலின்

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றிபெற்றது. உள்ளாட்சித் தேர்தல் வெற்றி அறிவாலயத்துக்கு மகிழ்ச்சி தந்தாலும் சத்தியமூர்த்திபவனுக்குள் அதிருப்தி குரல் எழுந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றியம் மற்றும் மாவட்ட அளவில் போதிய இடங்களில் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர் பதவிகள் கிடைக்கவில்லை என்பதே இதற்குக் காரணம். இதுகுறித்து காங்கிரஸ் தலைமையிடம் மாவட்ட நிர்வாகிகள் தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மாவட்ட அளவிலும் தி.மு.க நிர்வாகிகளிடம் இருந்து சரியான ஒத்துழைப்பு இல்லை. உள்ளாட்சித் தேர்தல் கூட்டணியில் அப்படி என்னதான் பேசி முடிவு செய்யப்பட்டது என கொதிப்புடன் கேட்டுள்ளனர். இந்த நிலையில்தான், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவருமான கே.ஆர்.ராமசாமியும் இணைந்து தி.மு.க-வுக்கு எதிராக ஒரு கூட்டறிக்கையை வாசித்தனர்.

காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்., அழகிரி
காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்., அழகிரி

அதில், ``உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட அளவில் எங்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. தி.மு.க தலைமை அறிவுறுத்தப்பட்ட இடங்களில் கூட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 303 ஊராட்சித் தலைவர் பதவியில் 2 இடங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவியில் ஒன்று கூட வழங்கப்படவில்லை. இது கூட்டணி தர்மத்துக்குப் புறம்பானது” என வருத்தத்துடன் பதிவு செய்தனர். அழகிரியின் இந்த அறிக்கையை அறிவாலயம் தரப்பு ரசிக்கவில்லை. அழகிரியின் அறிக்கை தொடர்பாக சோனியாவுக்கு அறிவாலயம் தரப்பிலிருந்து மெசேஜ் பாஸ் ஆனது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், அறிக்கை தொடர்பாக அழகிரியிடம் பேசியுள்ளார். காங்கிரஸை மட்டுப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுவரும் நிலையில் இதுபோன்ற அறிக்கைகள் தேவையா எனக் கேட்டுள்ளார். இதையடுத்து, அழகிரி தரப்பிலிருந்து மீண்டும் ஓர் அறிக்கை ரெடியானது. தி.மு.க தரப்போ சமாதானமானதாகத் தெரியவில்லை.

தேசிய குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுகளுக்கு எதிராக சோனியா தலைமையில் நேற்று நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், தி.மு.க தலைவர் ஸ்டாலின் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தி.மு.க தரப்பிலும் யாரும் இதில் பங்கெடுக்கவில்லை. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அழகிரியின் அறிக்கையெல்லாம் ஸ்டாலினின் கோபத்துக்கு காரணம் இல்லை. தி.மு.க தரப்பு எதிர்காலத்தை திட்டமிட்டே இந்த ஆட்டத்தை ஆடுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் ``தி.மு.க-வின் இந்த மூவ் 2021 சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டது. ப.சிதம்பரத்துக்கு எதிராக வைக்கப்படும் செக் என்று கூட வைத்துக்கொள்ளலாம். 2016-ல் சிதம்பரம் எடுத்த மூவை இப்போது ஸ்டாலின் கையிலெடுத்துள்ளார். பா.ஜ.க தரப்பில் இருந்து தி.மு.க-வுக்கு துணை சபாநாயகர் பதவி கொடுக்கத் தயாராகவுள்ளது. வாக்கு வங்கியை மனதில் வைத்துக்கொண்டு ஸ்டாலின் அந்தப் பதவியை வாங்க மாட்டார். பா.ஜ.க கொடுக்கும் அந்தப் பதவியை வாங்கிக்கொண்டால், தமிழகத்தில் தி.மு.க-வுக்கு இருக்கும் சிறுபான்மையினர் வாக்குவங்கி குறையும் என்பது ஸ்டாலினுக்குத் தெரியும். அதனால் பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி அமைக்காது என்பதை காங்கிரஸ் திடமாக நம்புகிறது. ரஜினியின் அரசியல் வருகையையும் காங்கிரஸ் கட்சி மனதில் வைத்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை பா.ஜ.க-வுடன் இணையவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது” என்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ``தமிழகத்தில் பா.ஜ.க-வை தனிமைப்படுத்த வேண்டும் என்பது காங்கிரஸ் கணக்கு. ரஜினியுடன் நாளைக்கு கூட்டணிக்குப் போகப்போகும் காங்கிரஸை நாம் ஏன் இன்று வளர்த்துவிட வேண்டும் என தி.மு.க நினைக்கிறது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் பா.ஜ.க-வும் மோடியும்தான் அவர்களுக்கு எதிரி. ஸ்டாலின், ரஜினி இருவரை எடுத்துக்கொண்டால் ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டில்தான் வாய்ஸ் இருக்கும். ரஜினியை எடுத்துக்கொண்டால் தென்மாநிலங்களிலும் அவருக்குச் செல்வாக்கு இருக்கிறது. ரஜினி மராட்டியர் என்பதால் மகாராஷ்டிராவிலும் அவருக்கு வாய்ஸ் இருக்கிறது என காங்கிரஸ் கட்சிக்கு ரிப்போர்ட் கிடைத்துள்ளது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

ரஜினி பா.ஜ.க கைகளில் சிக்கிவிடக் கூடாது என பல மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும் விரும்புகின்றனர். தென்மாநிலங்களில் எந்த நடிகருக்கும் இல்லாத வாய்ஸ் ரஜினிக்கு இருக்கிறது. கேரளா, கர்நாடகத்தில் ரஜினியால் வாக்குவங்கி கூடும் என அந்தந்த மாநிலங்களில் இருந்து ரிப்போர்ட் வந்துள்ளது. ரஜினியை தக்கவைப்பது தமிழகத்தைத் தாண்டியும் காங்கிரஸுக்கு பல மாநிலங்களில் உதவியாக இருக்கும் என கருதுகின்றனர். மும்பையில் தமிழர்கள் மற்றும் மராட்டியர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு இருக்கிறது எனக் கூறுகின்றனர். ரஜினி பா.ஜ.க-வுக்குச் சென்றால் அது நமக்குத்தான் பாதிப்பு. பா.ஜ.க கூட்டணிக்கு ஒருபோதும் தி.மு.க செல்லாது. எனவே, ரஜினியுடன் பயணிக்கலாம் என்பதே காங்கிரஸ் பிளானாக உள்ளது. இதுதான் தி.மு.க-வின் கோபத்துக்குக் காரணம். ரஜினியை மனதில் வைத்துள்ள காங்கிரஸை நாம் ஏன் வளர்த்துவிட வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்றே அவர்களின் பலத்தைக் காட்டட்டும் என்ற குரல் அறிவாலயத்துக்குள் எழுந்துள்ளது” என்றார்.