சினிமா
Published:Updated:

ஆட்சி ஸ்டாலினுக்கு... அ.தி.மு.க யாருக்கு?

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

ஆட்சியிலும் அவருக்கான சவால்கள் ஏராளம். முதல் சவாலாக கொரோனா தமிழகம் முழுக்க வெறியாட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது

கருணாநிதியும் ஜெயலலிதாவும் நேரடியாகக் களத்தில் மோதிக்கொண்ட ஏழு தேர்தல்களுக்குப் பிறகு, இருவரும் இல்லாமல் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் எதிர்கொள்ளும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. கருணாநிதியின் வாரிசாகத் தன்னை நிரூபித்து ஆட்சியைப் பிடித்திருக்கிறார் ஸ்டாலின். இன்னொரு பக்கம் ஆட்சியை இழந்தாலும், கட்சியைக் காப்பாற்றும் அளவுக்கான வெற்றியைப் பெற்று ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாகத் தன்னை நிரூபித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

‘`தி.மு.க கூட்டணி 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றிபெறும்’’ என்று திரும்பத் திரும்ப மேடைகளில் சொன்னார் ஸ்டாலின். ‘180 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கும்’ எனச் சில கருத்துக்கணிப்புகள்கூடச் சொல்லின. தி.மு.க-வுக்கு ஆதரவான ஓர் அலை உருவாகியிருப்பதாக அந்தக் கட்சியினர் நம்பினார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளை தி.மு.க கூட்டணி வென்றது. பெரும்பாலான தொகுதிகளில் லட்சங்களைத் தாண்டிய வாக்கு வித்தியாசம். அப்போது முதல் இப்போதுவரை மத்திய மோடி அரசுக்கு எதிரான மனநிலையைத் தமிழகத்தில் அணையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது தி.மு.க. போதாக்குறைக்கு பிரசாந்த் கிஷோரையும் சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கான வியூக அமைப்பாளராக நியமித்திருந்தது தி.மு.க. இவையெல்லாம்தான் இந்த நம்பிக்கைகளுக்குக் காரணம்.

159 இடங்களில் தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றிருப்பது, அவர்களுக்கு ஏமாற்றம் தந்திருக்கலாம். ஆனால், ஒரு வெற்றி என்பது வெற்றிதான். கடந்த 1996 தேர்தலுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் இப்போது ஆட்சி அமைக்கிறது தி.மு.க.

இந்தத் தேர்தலில் தி.மு.க பிரசாரம் முழுக்கவே ஸ்டாலினை மையப்படுத்தியதாக அமைந்திருந்தது. கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் என மற்றவர்கள் தமிழகம் முழுக்க பிரசாரம் செய்தாலும், அவர்களும் ஸ்டாலினைப் பற்றியே பேசினார்கள். தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பாக ராகுல் காந்தி தமிழகத்தில் மூன்று முறை சுற்றுப்பயணம் செய்தார். பிரசார நேரத்தில் ஒருமுறை வந்தார். மற்றபடி கூட்டணித் தலைவர்களைப் பெரிதாக எதிர்பார்க்காமல் தி.மு.க இந்தத் தேர்தலை எதிர்கொண்டது. அதனால்தான் இந்த வெற்றியை முழுக்க முழுக்க ஸ்டாலினின் வெற்றியாகக் கருதுகிறார்கள் தி.மு.க-வினர்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலரையும் சமாதானப்படுத்துவது, அமைச்சர் பதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சீனியர்களை சமாதானப்படுத்தி அனுபவசாலிகளும் இளைஞர்களும் கலந்த அமைச்சரவையை உருவாக்குவது, தி.மு.க மீது தேர்தல் நேரத்தில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் எதற்கும் இடம் தராதபடி கட்சியினரைக் கட்டுக்குள் வைத்திருப்பது, வழக்கம்போலவே தி.மு.க-வுக்கு வெற்றிகளைத் தராத மேற்கு மண்டலத்தில் கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சுவது என தி.மு.க தலைவராக அவருக்கு நிறைய சவால்கள் காத்திருக்கின்றன.

ஆட்சி ஸ்டாலினுக்கு... அ.தி.மு.க யாருக்கு?

ஆட்சியிலும் அவருக்கான சவால்கள் ஏராளம். முதல் சவாலாக கொரோனா தமிழகம் முழுக்க வெறியாட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது. தி.மு.க அமைச்சரவையில் சுகாதாரத் துறைக்குப் பொறுப்பேற்கும் எவரும் விரைவிலேயே மக்களுக்குப் பிடிக்காதவராகப் போய்விடும் வாய்ப்பு அதிகம். தேர்தல் முடிவுகள் வந்த முதல் நாளே சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் இரண்டு முறை பேசி, கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணிகள் குறித்து ஆலோசனை செய்திருக்கிறார். இதைத் தலைமைச் செயலக அதிகாரிகள் ஆச்சர்யமாகப் பார்க்கிறார்கள்.

கொரோனாவுக்கு அடுத்த சவால், நிதிச்சுமை. பெருமளவு கடனில் தமிழகம் தவிக்கிறது. ஜி.எஸ்.டி அமலானபிறகு மாநிலத்தின் வரி வருமானம் குறைந்துவிட்டது. கொரோனாப் பரவலால் முடங்கியிருக்கும் பொருளாதாரச் சூழல் அதை மேலும் குறைக்கும். இந்தச் சூழலில், தி.மு.க தேர்தல் அறிக்கையில் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்க வேண்டும். சிலிண்டருக்கு மானியம் தர வேண்டும். இது மாநில அரசின் வருமானத்தை இன்னமும் குறைக்கும். இதைத் தாண்டி குடும்பத் தலைவிகளுக்கு மாதா மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் கொரோனா உதவித் தொகை 4,000 எனச் செலவுகள் அதிகரிக்கும். வருமானம் குறைந்து செலவுகள் அதிகரிக்கும் இந்தச் சூழலில் தொழில் வளர்ச்சி மட்டுமே வருமானத்தையும் வேலைவாய்ப்புகளையும் பெருக்க உதவும். 20 மாடிக் கட்டடத்தின் உச்சியிலிருந்து கயிற்றின் மேல் நடப்பது போன்ற சூழல் இது.

கருணாநிதியின் நிர்வாக அணுகுமுறை வேறுமாதிரியானது. அதிகாரிகள் எதைச் சொன்னாலும், அதில் நிறைய கேள்விகள் கேட்பார். மாற்றங்கள் செய்யச் சொல்வார். ஆனால், ஸ்டாலினின் நிர்வாக அணுகுமுறை சிம்பிளானது. மேயராக இருந்தபோதும், அமைச்சராக இருந்தபோதும், துணை முதல்வராக இருந்தபோதும், தனக்கு நம்பிக்கையான அதிகாரிகளைத் தேடிப் பிடித்து பக்கத்தில் வைத்துக்கொள்வார். ஓர் அதிகாரியை நம்பிவிட்டால் போதும்... அவரது முடிவுகளை அப்படியே ஏற்றுக்கொள்வார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு இப்படித்தான் செயல்பட்டார். தொழில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக ஆந்திரா மாறியதற்கு இந்த அணுகுமுறை முக்கியமான காரணம். ‘`அதேபோன்ற அணுகுமுறையே ஸ்டாலினிடம் இப்போதும் இருக்கும்’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அது தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பும்.

தேர்தல் முடிவுகள் வெளியான ஞாயிற்றுக்கிழமைக்கு முந்தின நாள் இரவுவரை, ‘125 தொகுதிகளில் நாம ஜெயிக்கிறோம்’ என நம்பிக்கையாகச் சொல்லிக்கொண்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அவரது இந்த நம்பிக்கை காற்றுவாக்கில் தி.மு.க வட்டாரத்தில் பரவி, பலரையும் கவலைக்குள்ளாக்கியது நிஜம். அதன்பிறகுதான் தி.மு.க-வினர் பல ஏரியாக்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களை 24 மணி நேரமும் கண்கொத்திப் பாம்பாக கவனிக்க ஆரம்பித்தார்கள். பல கருத்துக்கணிப்புகளும் கைவிட்ட ஒரு கூட்டணியை 75 தொகுதிகளில் ஜெயிக்க வைத்திருக்கிறார் எடப்பாடி. ராஜ்யசபா தேர்தலில் இரண்டு எம்.பி-க்களைத் தேர்வு செய்ய முடிகிற அளவு பலத்துடன் எதிர்க்கட்சிக் கூட்டணி சட்டமன்றத்துக்குள் நுழைகிறது.

மத்திய பா.ஜ.க அரசுமீதான எதிர்ப்பைத் தாங்களும் சேர்ந்து தாங்க வேண்டிய நிலை அ.தி.மு.க-வுக்கு இருந்தது. இன்னொரு பக்கம் அ.ம.மு.க தனியாக நின்று அ.தி.மு.க வாக்குகளைக் கணிசமாகப் பிரித்தது. 18 தொகுதிகளில் அ.ம.மு.க பிரித்த வாக்குகளே அ.தி.மு.க-வின் தோல்விக்குக் காரணம். ‘`இந்த இரண்டு சூழலும் இல்லாமல் போயிருந்தால், எடப்பாடியின் நம்பிக்கை ஓரளவு பலித்திருக்கக்கூடும்’’ என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

ஆட்சி ஸ்டாலினுக்கு... அ.தி.மு.க யாருக்கு?

ஜெயலலிதா அதிரடியாக முடிவுகள் எடுப்பார். பல நேரங்களில் அந்த முடிவுகள் மக்களின் அதிருப்தியை சம்பாதிக்கும். ஒருவேளை அவரே தொடர்ந்து 10 ஆண்டுகள் முதல்வராக இருந்திருந்தால், இந்தத் தேர்தலில் ஸ்டாலினின் வெற்றியை இன்னும் சுலபமாக்கியிருக்கக்கூடும். 10 ஆண்டு ஆளுங்கட்சியின் மீது பெரிதாக அதிருப்தி இல்லாமல் பார்த்துக்கொண்டது எடப்பாடியின் பெரிய பலம்.

இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வின் ஒற்றைப் பிரசார வாகனமாக அவரே இருந்தார். போடிநாயக்கனூர் தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வனை தி.மு.க நிறுத்தியதால், ஓ.பன்னீர்செல்வம் சில நாள்கள் மட்டுமே மற்ற தொகுதிகளுக்குப் பிரசாரத்துக்கு வந்தார். ஆனால், எடப்பாடி தமிழகம் முழுக்கச் சுற்றிச் சுழன்றார். வசீகரிக்கும் பேச்சுத்திறமை இல்லாவிட்டாலும், எளிமையாகப் பேசி ஸ்டாலினை வம்புக்கு இழுத்தார். இந்தத் தேர்தலை ஸ்டாலினுக்கும் தனக்குமான மோதலாக மாற்றியது அவரின் சாமர்த்தியம்.

‘`இந்தத் தேர்தலில் எந்த திராவிடக் கட்சி தோற்றாலும், அதன்பிறகு அந்தக் கட்சி இல்லாமல்போய்விடும்’’ என அரசியல் விமர்சகர்கள் பலர் ஆரூடம் சொன்னார்கள். அந்த வெற்றிடத்தில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள பலர் காத்திருந்தார்கள்.

மிகமோசமான ஒரு தோல்வியைச் சந்தித்தால், ஆட்சியுடன் சேர்த்துக் கட்சியையும் பறிகொடுக்கும் அபாயத்தில் எடப்பாடி இருந்தார். ‘`தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எல்லோரும் எங்களிடம் வந்துவிடுவார்கள்’’ என்று டி.டி.வி.தினகரன் வெளிப்படையாகவே சொல்லிக்கொண்டிருந்தார். அ.தி.மு.க-வில் ஒரு பிளவு ஏற்பட்டு, நிறைய பேர் சசிகலா பக்கம் போகக்கூடும் என்ற அச்சம் எடப்பாடிக்கு நெருக்கமானவர்களுக்கு இருந்தது. அதனால்தான் தேர்தலின்போதே வேட்பாளர்களைப் பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்தார் எடப்பாடி. கலகக்காரர்கள் என நம்பிய பல சிட்டிங் எம்.எல்.ஏ-க்களுக்கு சீட் கொடுக்க மறுத்தார். அதனால் அந்தத் தொகுதியை இழக்க நேரிட்டாலும் பரவாயில்லை என உறுதியாக இருந்தார்.

தேர்தல் முடிந்தபிறகு பல அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியுடன் பேசவே இல்லை. ‘முடிவு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ரிசல்ட் வந்தபிறகு தங்கள் விசுவாசத்தை யாரிடம் காட்ட வேண்டும் என்பது புரியவில்லை’ என்பதால் அர்த்தமுள்ள மௌனம் காத்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியான தேதியில் எடப்பாடியின் போன் தொடர்ந்து பிஸியாக இருந்தது. அவர்களே எதிர்பார்த்ததைவிட அ.தி.மு.க அதிக இடங்களில் ஜெயித்ததும், அ.ம.மு.க பெரிய விளைவுகளை ஏற்படுத்தாததும் அவர்கள் மனதை மாற்றிவிட்டன.

தன் சொந்த மாவட்டமான சேலத்திலும், தன்னை ஆதரிக்கும் கொங்கு மண்டலத்திலும் அசைக்க முடியாத வெற்றியை அ.தி.மு.க-வுக்குப் பெற்றுத் தந்திருக்கிறார் எடப்பாடி. அதேசமயத்தில், ஓ.பன்னீர்செல்வத்தின் விசுவாசிகளான ஜே.சி.டி.பிரபாகரன், மாஃபா பாண்டியராஜன், மதுரை எஸ்.எஸ்.சரவணன், கம்பம் சையது கான், மதுரை கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் மாணிக்கம் என்று பலரும் தோற்றிருக்கிறார்கள். தென் மாவட்டங்களில் ஜெயித்திருக்கும் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா போன்றவர்கள் பன்னீருக்கு நிச்சயம் தோள் கொடுக்க மாட்டார்கள். டெல்டா பகுதியில் ஜெயித்த ஓ.எஸ்.மணியன், வைத்திலிங்கம், ஆர்.காமராஜ் போன்றவர்களும் எடப்பாடியை எதிர்க்கும் சூழலில் இப்போது இல்லை.

மிகப்பெரிய வித்தியாசத்தில் எடப்பாடி தொகுதியில் பழனிசாமி பெற்ற வெற்றியும், அவருக்கு இணக்கமாக இருந்துவரும் தங்கமணியும் எஸ்.பி.வேலுமணியும் அதேபோல ஜெயித்ததும் கட்சியில் அவரின் இடத்தை அசைக்க முடியாமல் செய்திருக்கிறது. அ.தி.மு.க சார்பில் சட்டமன்றத்துக்குச் செல்லும் நிறைய பேர் எடப்பாடியின் ஆதரவாளர்கள். எனவே, இப்போதைக்கு அ.தி.மு.க எடப்பாடியின் இறுக்கமான பிடியில் இருக்கப்போகிறது. அடுத்தகட்டமாக கட்சியை முழுமையாகத் தன் கையில் எடுப்பதற்காகப் பொதுச்செயலாளர் தேர்தலையும் அவர் நடத்தக்கூடும். பணிந்து போவதா, அல்லது பதுங்கிப் பாய்வதா என்பது பன்னீரின் சாய்ஸ்.