Published:Updated:

`தாமதமாகத்தான் வருவாரு, ஆனா லேட்டஸ்ட்டா பேசுவாரு!'- துரைமுருகனை கலாய்த்த ஸ்டாலின்

`ஜீரோ ஹவர்' நெருங்கிற நேரத்தில் சட்டமன்றத்துக்கு வருவார். லேட்டாக வந்தாலும் உடனடியாக எதாவது ஒரு பிரச்னையை கிளப்பி அதைப் பதிவு செய்துவிடுவார்....

துரைமுருகன் - ஸ்டாலின்
துரைமுருகன் - ஸ்டாலின்

கட்சியின் பொருளாளர் துரைமுருகனை கலாய்த்துப் பேசியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். சென்னை நெற்குன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் இல்லத் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி மற்றும் பொருளாளர் துரைமுருகன், கே.என்.நேரு உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதில் மணமக்களை வாழ்த்திப் பேசிய ஸ்டாலின் மணமேடையிலேயே துரைமுருகனை கலாய்த்துப் பேசினார். அதில், ``எனக்கு முன் அண்ணன் துரைமுருகன் பேசினார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

துரைமுருகன் பேசும்போது `பாய்ன்ட் ஆப் ஆர்டர்' என்பதைக் குறிப்பிட்டு சட்டப்பேரவையை நியாபகப்படுத்திவிட்டார். பாய்ன்ட் ஆப் ஆர்டரை எப்போதும் சட்டமன்றத்தில்தான் எழுப்புவார்கள். ஆனால், அவர் இங்கே அதை எழுப்பியிருக்கிறார். அவர் காலதாமதமாக வந்த காரணத்தினால்தான் இங்கே வரவேற்புரை ஆற்றமுடியாமல் வாழ்த்துரை ஆற்றினார். இப்படித்தான் சட்டப்பேரவைக்கும் அடிக்கடி தாமதமாக வருவார்.

`ஜீரோ ஹவர்' நெருங்கிற நேரத்தில் சட்டமன்றத்துக்கு வருவார். லேட்டாக வந்தாலும் உடனடியாக எதாவது ஒரு பிரச்னையை கிளப்பி அதைப் பதிவு செய்துவிடுவார். லேட்டா வந்தாலும் சில லேட்டஸ்ட் சப்ஜெக்ட்ட பேசிவிடுவார். அதற்கான ஆற்றல் அவரிடம் உண்டு. இது அவரின் இயல்பு" என்று கலாய்த்தவர், ஆற்காடு வீராசாமி குறித்தும் பேசினார்.

ஆற்காடு வீராசாமியின் இல்லத் திருமண விழா
ஆற்காடு வீராசாமியின் இல்லத் திருமண விழா

அதில், ``இங்கு நான் நீண்ட நேரம் பேச வாய்ப்பில்லை. எப்போதுமே நீண்ட நேரம் பேசினால் அண்ணன் ஆற்காடு வீராசாமிக்கே பிடிக்காது. சட்டமன்றத்திலேயே யாரையும் பேசவிடமாட்டார். நான் இங்கு வந்த உடனேயே, ``இப்போது எல்லாம் சட்டமன்றத்தை மாலை நான்கு, ஐந்து மணி வரை நடத்துகிறார்கள்" என அவரிடம் சொன்னேன்.

தி.மு.க ஆட்சியில் இருந்தபோது சரியாக மதியம் ஒரு மணிக்கெல்லாம் அவையை முடித்துவிடுவார் ஆற்காடு வீராசாமி. எல்லோரிடமும் போய் வலியுறுத்தி அவையை விரைவாக முடித்துவிடுவார். அந்த அளவுக்குக் கட்டுப்பாட்டுடன் இருந்தவர்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

என்னைவிட, எங்கள் குடும்பத்தைவிடக் கருணாநிதியுடன் அதிகமாகப் பேசியவர், பழகியவர் என்றால் அது ஆற்காடு வீராசாமிதான். அந்த அளவுக்குக் கருணாநிதிக்கு நிழலாக இருந்தவர். மிசா சட்டத்தில் ஓராண்டு சிறையில் இருந்த நான் உயிரோடு வந்ததற்குக் காரணம் அவர்தான். அவரால்தான் நான் இந்த மேடையில் இருக்கிறேன்" எனக் கூறினார்.