சினிமா
Published:Updated:

கம்யூனிஸ்ட் ஸ்டாலின் மண்ணில் கழக ஸ்டாலின்!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்டாலின்

ஏற்கெனவே அவருடைய துடிப்பான அரசியல் செயல்பாடுகளைப் பார்த்து அவர்மீது எனக்கு நன்மதிப்பு உருவாகியிருந்தது

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றதும் நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளார். ‘`இப்படியான சமூக மேம்பாட்டுத் திட்டங்கள், இன்று நேற்றல்ல, முப்பது ஆண்டுகளுக்கு முன்பே அவர் மனதில் உருப்பெற ஆரம்பித்துவிட்டன” என்கிறார் பொறியாளர் நரசிம்ம மூர்த்தி. சோவியத் யூனியன் உடைவதற்கு முன்பு, சோவியத் - இந்திய நட்புறவின் ஓர் அங்கமாக, அரசுமுறைப் பயணமாக 1989-ல் மு.க.ஸ்டாலின் சோவியத் ரஷ்யாவுக்குப் பயணப்பட்டபோது அவருடன் இருந்தவர் நரசிம்ம மூர்த்தி. அதுகுறித்து அவர் சொல்லும் தகவல்கள் அத்தனையும் ஆச்சர்யங்கள்!

‘சோவியத் ஒன்றியத்தில் கடும் அடக்குமுறை நிலவுகிறது, மக்களின் வாழ்வுமுறை மிக மோசமாக இருக்கிறது’ என்பன போன்ற மேற்குல நாடுகளின் அவதூறுகளைக் களையும் நோக்கில், சோவியத் அரசாங்கம் உலக நாடுகளின் தலைவர்களைச் சோவியத் ஒன்றியத்துக்கு வந்து பார்வையிடும் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி வந்தது. அதன்படி, சென்னையில் இருக்கும் சோவியத் கலாசார மையத்தின் (இன்று ரஷ்யக் கலாசார மையம்) அன்றைய இயக்குநர் ரொவோவ்ஸ்கி, அரசியல் கட்சி ஒன்றின் இளைஞர் அமைப்பில் பொறுப்பில் இருக்கும் ஒருவரை அந்த ஆண்டு சோவியத்துக்கு அனுப்ப முடிவு செய்தார். மையத்தின் இளைஞர் மன்றத் தலைவராக இருந்த நரசிம்ம மூர்த்தியிடம், ‘யாரை அனுப்பலாம்’ என்று கருத்து கேட்கிறார்.

“அப்போது மு.க.ஸ்டாலின் முதன்முறையாகச் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஏற்கெனவே அவருடைய துடிப்பான அரசியல் செயல்பாடுகளைப் பார்த்து அவர்மீது எனக்கு நன்மதிப்பு உருவாகியிருந்தது. ஸ்டாலினிடம் எனக்கு அறிமுகம் இல்லை என்றாலும், சோவியத் பயணத்துக்கு இவரே பொருத்தமானவர் என்று தோன்றியதால் ஸ்டாலினை முன்மொழிந்தேன்” என்று பேசத் தொடங்குகிறார் நரசிம்ம மூர்த்தி.

“ஸ்டாலின் பயணம் உறுதியான சமயத்தில், ரஷ்யாவில் ஓராண்டு ரஷ்ய மொழி படிக்க நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த செய்தி இன்ப அதிர்ச்சியாக எனக்கு வந்து சேர்ந்தது. சோவியத் யூனியன் உடைவு நெருங்கிக்கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில், சோவியத் அரசாங்கப் பயணத் திட்டத்தின் கடைசிப் பிரதிநிதியாக ஸ்டாலினும், அரசாங்க உதவியில் பயிலும் கடைசி மாணவனாக நானும் ஒரே விமானத்தில் மாஸ்கோ சென்று இறங்கினோம். மூன்று நாள்களுக்குப் பிறகு ஸ்டாலின் என்னிடம், ‘என்ன நரசிம்ம மூர்த்தி... நானொரு அரசியல்வாதி. ஆனா, என்னை ஒரு சுற்றுலாப் பயணி மாதிரி நடத்திட்டிருக்காங்க’ என்று செல்லமாகக் கோபித்துக்கொண்டார். உடனடியாக அவரது பயணத் திட்டத்தை ‘அரசியல்படுத்தினோம்.’ அதன் விளைவாக, சோவியத் நாடாளுமன்றம் தொடங்கி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்க்கத் தொடங்கினோம்.

தமிழ் பேசும், தமிழ் நூல்களை ரஷ்ய மற்றும் உக்ரேனிய மொழிகளில் மொழிபெயர்த்துவந்த ரஷ்யக் கவிஞர் விதாலி பூர்ணிகா அப்போது மாஸ்கோவில் வசித்துவந்தார். ஜெயகாந்தனின் நெருங்கிய நண்பர்; கலைஞர் மீது ஆழ்ந்த பற்று உண்டு.

கம்யூனிஸ்ட் ஸ்டாலின் மண்ணில் கழக ஸ்டாலின்!

ஸ்டாலின் ரஷ்யாவுக்கு வந்திருப்பதைப் பூர்ணிகாவிடம் சொன்னேன். ‘முடிந்தால் நாளையே வீட்டுக்கு அழைத்துவாருங்கள்’ என்று உற்சாகமானார். ஆனால், அரசாங்க நடைமுறைகளால் இரண்டுநாள் கழித்துத்தான் ஸ்டாலினை அவர் வீட்டுக்கு அழைத்துச்செல்ல முடிந்தது. தன் வீட்டின் முன்னறையில் ஒரு தமிழ் நூலகத்தையே வைத்திருந்தார் விதாலி. அதைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த ஸ்டாலினின் கையில் அகப்பட்ட முதல் புத்தகமே கலைஞரின் ‘ரோமாபுரிப் பாண்டியன்.’ ஸ்டாலினின் ரஷ்யப் பயணம் குறித்து, ‘ரூஷ்யா’ என்ற பிரபல ரஷ்யப் பத்திரிகையில் ‘ஸ்டாலின் அவர்கள் திரும்பிவந்துவிட்டார்கள்’ என்றொரு கட்டுரையை விதாலி எழுதினார். அதை நான் தமிழில் மொழிபெயர்த்து ஸ்டாலினிடம் கொடுத்தேன்” என்று ஆச்சர்யங்களைத் தெளிக்கிறார் நரசிம்ம மூர்த்தி.

“மாஸ்கோவின் வீதிகளில் நானும் அவரும் நிறைய நடந்தோம். அப்படி ஒரு நடையின்போது மகளிர் தினம் பற்றிப் பேச்சு வந்தது. அப்போதெல்லாம் இந்தியாவில் மகளிர் தினம் பிரபலமடைந்திருக்கவில்லை என்பதால் சோவியத் ஒன்றியத்தில் பெண்களின் நிலை, அவர்களுடைய பொருளாதாரச் சுதந்திரம், சமுதாயத்தில் அவர்களின் பங்களிப்பு ஆகியவை குறித்து விரிவாகப் பேசினோம்.

அப்போது சோவியத் அரசின் பல்வேறு துறைகளில் தலைமைப்பொறுப்பில் ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் பலர் இருப்பதைச் சுட்டிக்காட்டினேன். பஸ், டிராம் ஓட்டுதல், கட்டுமானம் போன்ற ஆண்கள் மட்டுமே செய்யும் கடினமான வேலைகளில் பெண்கள் ஈடுபட்டிருப்பதை ஸ்டாலினே நேரடியாகப் பார்த்தார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, பொருளாதார ரீதியிலும் அவர்கள் தனித்து இயங்க வழிசெய்வது, சம உரிமை வழங்கியது எனச் சமூகத்தில் பெண்களின் முன்னேற்றத்தில் அரசு எந்த அளவுக்குக் கவனம் செலுத்தியது என்பதை அவரிடம் விளக்கினேன்.

மேலும், ரயில், பேருந்து, மெட்ரோ போன்ற பொதுப் போக்குவரத்து அமைப்பு ரஷ்யாவில் லாப நோக்கமின்றி, குறைந்த கட்டணத்தில் அல்லது கிட்டத்தட்ட இலவசமாக இயங்குகிறது என்பதை ஸ்டாலின் அறிந்தார். அன்று முழுவதும் சிந்தனை வயப்பட்டவராகவே இருந்த அவரிடம் இவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று நம்பினேன்.

ரஷ்யாவில் ஸ்டாலின் சென்ற இடங்களில் எல்லாம், ‘ஏன் உங்களுக்கு இந்தப் பெயர்’ என்று பலர் கேட்டனர். அனைவருக்கும் பொறுமையாகப் பதிலளித்தார். அவரோடு பயணித்த 12 நாள்கள் மறக்கமுடியாதவை” என்கிறார் நரசிம்ம மூர்த்தி.