`புகழுரை வேண்டாம்; உண்மைய நேருக்கு நேர் சந்திப்போம்' - ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவியேற்கிறார். அது தொடர்பான செய்திகளின் தொகுப்பு..!
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் சத்தியமூர்த்தி பவனில், தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

கொடுந்தொற்றைக் குறைப்போம்!
மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னுரையாற்றினார். அதில் `` கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் தற்போது நாள் ஒன்றுக்கு 25,000 என்ற நிலையில் உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் தொற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஓராண்டாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்களும் , செவிலியர்களும் மற்ற பணியாளர்களும் கொரோனா உச்சம் தொடும் இந்நேரத்தில் தொடர்ந்து அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் ரெம்டெசிவர், ஆக்ஸிஜன் ஆகியன போதிய அளவில் கிடைக்கச் செய்ய வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போடும் அளவை அதிகரிக்கச் செய்ய வேண்டும். நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில் அதிகாரிகளும், மருத்துவ ஊழியர்களும் கவனமாக இருக்க வேண்டும்.
உள்ளது உள்ளபடி, களநிலவரத்தை மறைக்காமல், உண்மையை வெளிப்படையாக, முழுமையாக அதிகாரிகள் சொல்ல வேண்டும். புகழுரையோ, பொய்யுரையோ தேவையில்லை. உண்மையை நேருக்கு நேர் சந்திப்போம். தீர்வை சிந்திப்போம். கொடுந்தொற்ற குறைப்போம். மக்களை மகிழச் செய்வோம்" என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSFollow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர்
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று காலை பதவியேற்றார். சற்று முன்னதாக தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்றிருக்கிறார். உடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றிருக்கின்றனர்.
புதிய தலைமைச் செயலாளர் நியமனம்
தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டு அரசாணை வெளியாகியிருக்கிறது. இதையடுத்து முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து இறையன்பு வாழ்த்து பெற்றார். பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியராக பணியாற்றியுள்ள இறையன்பு ஐ.ஏ.எஸ் 2019-ம் ஆண்டு முதல் அண்ணா மேலாண்மை கல்வி இயக்குநராக இருந்து வந்தார்.
முந்தைய தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன், தமிழ்நாடு காகித நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டுள்ளார்.
`தமிழக மக்களுக்கு நன்றி!’ - ஸ்டாலின்
``'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...' என்று கூறி இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டேன்! காவிரிக் கரையாம் தஞ்சை மண்ணின், திருவாரூரைச் சார்ந்த எனக்கு தாய்த் தமிழ்நாட்டுக்குச் சேவை செய்திட மாபெரும் வாய்ப்பை வழங்கிய தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி!" என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்,
முதலமைச்சரின் நான்கு செயலாளர்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நான்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முதன்மைச் செயலாளராக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
உமாநாத் ஐ.ஏ.எஸ்., எஸ்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ்., அனு ஜார்ஜ் ஐ.ஏ.எஸ் ஆகியோரும் முதலமைச்சரின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
`முதல்வராக முதல் கையெழுத்து..!’
இன்று காலை முதல்வராகப் பதவியேற்ற ஸ்டாலின், கோபாலபுரம் இல்லம், அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள், பெரியார் திடல் ஆகிய இடங்களுக்குச் சென்று மரியாதை செய்தார். தொடர்ந்து ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து முதல்வர் அறையில், தனது இருக்கையில் அமர்ந்த ஸ்டாலின், தனது முதல்வர் பணிகளைத் தொடங்கினார்.
1) முதல் கையெழுத்தாக, ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்குவது தொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார். முதற்கட்டமாக இந்த மாதமே ரூ.2,000 வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2) தொடர்ந்து ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு செய்த உத்தரவில் கையெழுத்திட்டார். இது மே மாதம் 16-ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.
3) தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பைச் செயலாற்றும் வகையில் தொடர்ந்து தமிழகம் முழுவதுமுள்ள அரசுப் பேருந்துகள், அரசுக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டை இல்லாமல் நாளை முதல் பயணம் செய்ய முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.
4) மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பான மனுக்களை முதல்வர் பெற்று அந்த மனுக்க்ள் மீது ஆட்சிக்கு வந்து நூறு நாள்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வுகாணப்படும் என்ற வாக்குறுதியை அளித்துள்ளார். அந்த வாக்கை நிறைவேற்றும் வகையில் `உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தை செயல்படுத்த புதிய துறையை உருவாக்கி, இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.
5) கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமன்றி, தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், பொதுமக்கள் நலன் கருதி அவர்களின் நிதிச் சிக்கலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதன்படி முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சைச் செலவுகளையும் தனியார் மருத்துவமனைக்கு அரசு வழங்கும்.
கருணாநிதி, அண்ணா நினைவிடங்களில் ஸ்டாலின்..!

தமிழக முதல்வராகப் பதவியேற்ற ஸ்டாலின் கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் சென்னை மெரினா சென்ற ஸ்டாலின் அங்கு, அண்ணா நினைவிடம், கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து பெரியார் திடல் சென்ற ஸ்டாலின், அங்கு பெரியார் நினைவிடத்தில் மரியாதை செய்தார்.
ஸ்டாலினின் ட்விட்டர் பக்கம்!
கோபாலபுரம் இல்லத்தில் கண்கலங்கிய ஸ்டாலின்!
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பதவி ஏற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து 34 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நிறைவடைந்தது. பிறகு முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் மாளிகையிலிருந்து நேராக கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்றார். அங்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். அப்போது மு.க.ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். தொடர்ந்து தாயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார். இனி அவர் அங்கிருந்து கலைஞர் நினைவிடம் செல்வார் எனக் கூறப்படுகிறது.
அமைச்சர்கள் பதவியேற்பு..!
முதல்வர் ஸ்டாலின் பதவியேற்ற பின்னர், அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராகப் பதவியேற்றுவருகிறார்கள்.
`மு.க ஸ்டாலின் எனும் நான்..!’

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஸ்டாலினுக்கு முதல்வராக பதவிபிரமாணம் செய்து வைத்தார். `முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...!’ எனக் கூறி முதல்வராக பதவியேற்றார். அப்போது ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர் விட்டார். அரங்கில் கூடி இருந்தவர்கள் கைகளை தட்டி வாழ்த்து தெரிவித்தனர்,
தொடங்கியது பதவியேற்பு விழா...!
மு.க ஸ்டாலின் பதவியேற்பு விழாவின் தொடக்கமாக தேசிய கீதமும், பின்னர் தமிழ் தாய் வாழ்த்தும் ஒலிக்கப்பட்டது.
அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்த ஸ்டாலின்!
ஸ்டாலினை தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் விழா விழா நிகழ்விடத்துக்கு வந்தார். ஸ்டாலின், ஆளுநருக்கு அமைச்சர்களை அறிமுகம் செய்துவைத்தார். மேலும் தனது குடும்பத்தினரையும் ஸ்டாலின் ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
ஆளுநர் மாளிகையில் ஸ்டாலின்...!
ஆளுநர் மாளிகையில் இன்னும் சற்று நேரத்தில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும் நிகழ்வு தொடங்க இருக்கிறது. ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்து கிளம்பி ஆளுநர் மாளிகை வந்தடைந்தார்.
பதவியேற்பு விழாவுக்கு புறப்பட்ட ஸ்டாலின்...!
பதவியேற்பு விழாவில் ஓ.பி.எஸ்!

ஆளுநர் மாளிகையில் இன்னும் சற்று நேரத்தில் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்கும் நிகழ்வு தொடங்க இருக்கிறது. நிகழ்சியில் பல்வேறு கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அ.தி.மு.க சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டுள்ளார். மேலும் தனபால், நவநீதிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் சார்பில், கே.எஸ் அழகிரி, திருநாவுக்கரசர், மதிமுக சார்பில் வைகோ, விசிக வின் திருமாவளவன், ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் என பல தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம்!
இன்று காலை ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்க இருக்கும் நிலையில், இன்று மாலையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோனை நடத்தி, சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
தலைவர்கள் வருகை...!
ஸ்டாலின் தமிழக முதல்வராக இன்று பதவியேற்கிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் நிகழ்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் ஆளுநர் மாளிகைக்கு வந்திருக்கிரார்கள். கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். ஸ்டாலினுடன் 34 பேர் கொண்ட அமைச்சர்களும் பதவியேற்கிறார்கள்.
தமிழக முதல்வராக இன்று பதவியேற்கிறார் ஸ்டாலின்!
சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த மாதம் 6 -ம் தேதி நடைபெற்றது. தொடர்ச்சியாக மே மாதம் 2 -ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், திமுக கூட்டணி 159 இடங்களை கைபற்றியது. திமுக 125 இடங்களைப் பெற்று அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சின்னத்தில் நின்றவர்கள் 8 பேர் வெற்றி பெற்றதன் மூலம் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 133 ஆக உயர்ந்தது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதியானது.
இதனை தொடர்ந்து திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் மே 4-ம் தேதி நடைபெற்றது. திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்தார். தொடர்ந்து ஸ்டாலின் சட்டமன்ற குழுத் தலைவரக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், மே 5 -ம் தேதிகாலை 10.30 மணியளவில் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, திமுக எம்எல்ஏ-க்கள் 125 பேர் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெற்ற 8 பேர் என சேர்த்து 133 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதத்தை ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கினார். மேலும், அமைச்சரவைப் பட்டியலையும் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கினார்.

அதனை தொடர்ந்து ஆளுநரின் தனிச் செயலாளர் ஆனந்தராவ் படேல், மு.க.ஸ்டாலினின் இல்லத்துக்கு நேரில் சென்றார். அப்போது, ஸ்டாலினை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாக, அழைப்புக் கடிதத்தை ஸ்டாலினிடம் அவர் வழங்கினார். இதனை தொடர்ந்து மே மாதம் 7-ம் தேதி காலை, அதாவது இன்று காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார் ஸ்டாலின். அவருடன் அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது.