Published:Updated:

நலத்திட்டங்கள்... சட்டம்-ஒழுங்கு... நீர்நிலை ஆக்கிரமிப்பு... வார்னிங்!

ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள், பல்வேறு துறைகளுடனும் தொடர்புடையவை. இதிலுள்ள சிக்கல்களை அந்தந்தத் துறையின் அதிகாரிகள் பட்டியலிட்டனர்.

நலத்திட்டங்கள்... சட்டம்-ஒழுங்கு... நீர்நிலை ஆக்கிரமிப்பு... வார்னிங்!

ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள், பல்வேறு துறைகளுடனும் தொடர்புடையவை. இதிலுள்ள சிக்கல்களை அந்தந்தத் துறையின் அதிகாரிகள் பட்டியலிட்டனர்.

Published:Updated:
ஸ்டாலின்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்டாலின்

சமீபத்தில் நடந்து முடிந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடுதான் அதிகாரிகள் வட்டத்தில் தற்போது பரபரப்பாக விவாதிக்கப்படும் விஷயமாகியிருக்கிறது. 2018-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில்தான் கடைசியாக மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறைக் கண்காணிப்பாளர்களுக்கான மாநாடு நடந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நடக்கும் முதல் மாநாடு இது என்பதால், அதிகாரிகள் மத்தியில் ஒருவித பரபரப்பும் எதிர்பார்ப்பும் இருந்தன. துறைவாரியாக ஆய்வுகள் நடந்தபோது, முதல்வரின் குறுக்குக் கேள்விகளால் அதிகாரிகள் பல நேரங்களில் தவித்திருக்கிறார்கள். மூன்று நாள்கள் நடந்த இந்த மாநாட்டில், சட்டம்-ஒழுங்கு, நலத் திட்டங்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு குறித்துத்தான் பிரதானமாகப் பேசப்பட்டிருக்கிறது. “வார்த்தைகளில் கடுமை காட்டாவிட்டாலும், தனது எதிர்பார்ப்புகளையும் ஆதங்கங்களையும் மிகத் தெளிவாக உணர்த்திவிட்டார் முதல்வர். இது ஒருவகையில் தவறிழைப்பவர்களுக்கான ‘வார்னிங்’ கூட்டம்தான்” என்கிறார்கள் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்!

“காலக்கெடுவுக்குள் முடியுங்கள்...” - `கறார்’ ஸ்டாலின்!

``பிப்ரவரி 10 முதல் 12-ம் தேதி வரை நடந்த இந்த மாநாட்டில், இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்துப் பேசப்பட்டிருக்கின்றன. வழக்கமாக, ‘உங்கள் மாவட்டத்தில் என்னென்ன பிரச்னைகள்... என்னென்ன விஷயங்களைச் சரிசெய்ய வேண்டும்?’ என்று கேட்பதோடு மாநாடு முடிந்துவிடும். இந்த முறை, முதல்வரே தரவுகளுடன் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதால், சில அதிகாரிகளுக்குச் சிக்கலும் எழுந்திருக்கிறது. `அரசு ஒரு ரூபாய் செலவழித்தாலும், அது சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடியில் இருப்பவர்களுக்குச் சென்றடைய வேண்டும். உங்களுக்கு எந்தப் பிரச்னையாக இருந்தாலும், தயக்கமில்லாமல் பேசுங்கள்’ என்று தொடக்கத்திலேயே, மாநாட்டைக் கலந்தாய்வு மனநிலைக்கு மாற்றியிருக்கிறார் முதல்வர்.

மாநாட்டில் கலந்துகொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் பல திட்டங்கள், பல்வேறு துறைகளுடனும் தொடர்புடையவை. இதிலுள்ள சிக்கல்களை அந்தந்தத் துறையின் அதிகாரிகள் பட்டியலிட்டனர். அப்போது குறுக்கிட்ட முதல்வர், ‘வீடு வழங்கும் திட்டத்தில் நீங்கள் சொல்லும் கணக்கு ஒன்றாக இருக்கிறது. எனக்குக் கிடைத்த ரிப்போர்ட் வேறாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் வழங்க வேண்டும். அது குறித்து எனக்கு விரிவான அறிக்கையைக் கொடுங்கள்’ என்று காட்டமாகவே சொல்லவும், அதிகாரிகளிடம் எந்த பதிலும் இல்லை.

நலத்திட்டங்கள்... சட்டம்-ஒழுங்கு... நீர்நிலை ஆக்கிரமிப்பு... வார்னிங்!

‘ஸ்கில் டெவலப்மென்ட்’ பற்றி அதிகாரி ஒருவர் நீண்ட விளக்கத்தைக் கொடுத்தார். ஒருகட்டத்தில் அந்த அதிகாரியின் பேச்சினிடையே குறுக்கிட்ட முதல்வர், ‘ஸ்கில் டெவலப்மென்ட் ட்ரெயினிங் கொடுத்ததெல்லாம் சரி. அதனால் எத்தனை பேருக்கு வேலை கிடைச்சிருக்கு?’ என்று புள்ளிவிவரத்தைக் கேட்க, அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறிவிட்டார் அந்த அதிகாரி. தொடர்ந்த முதல்வர், ‘வெறும் ஸ்கில்லை மட்டும் வெச்சுக்கிட்டு என்னங்க பண்ண முடியும்... அதற்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டங்களைச் சொல்லுங்க’ என்று கடுகடுக்கவும், அந்த அதிகாரி ‘கப்சிப்’ ஆனார். ஒருசில மாவட்ட ஆட்சியர்கள், நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால்தான் தாமதம் ஏற்படுவதாகக் கூறினர். அதற்கு முதல்வர், ‘இனி எந்தத் திட்டத்தையும் அதற்குரிய காலக்கெடுவுக்குள் முடித்துவிட வேண்டும். அதில் எந்தச் சிக்கல் இருந்தாலும் உடனடியாக முதல்வர் அலுவலகத்தையோ அல்லது துறையின் செயலாளர் அலுவலகத்தையோ தொடர்புகொள்ளுங்கள். காலவரையறைக்குள் திட்டத்தை முடிக்காமல் இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை பாயும்’ என்று கறார் காட்டவும், அதிகாரிகளின் முகத்தில் ஈயாடவில்லை.

நீர்நிலை ஆக்கிரமிப்புகள்... கெடு விதித்த முதல்வர்!

மாநாட்டின் முக்கியமான பிரச்னையாக நீர்வழித் தடங்கள், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. நீர்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுறுத்தினார். அப்போது குறுக்கிட்ட மூத்த அமைச்சர் ஒருவர், ‘பல இடங்களில் மூன்று, நான்கு தலைமுறைகளாக நீர்நிலைப் பகுதிகளில் சிலர் வீடுகள் கட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த இடங்களிலேயே பட்டா வழங்கலாமே...’ என்று ஆலோசனை சொல்லவும், இறையன்பு டென்ஷனாகிவிட்டார். ‘என்ன சார் சொல்றீங்க... நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை ஒருக்காலும் அனுமதிக்க முடியாது’ என்று இறையன்பு சொல்லவும், அந்த மூத்த அமைச்சர் அதன் பிறகு வாய் திறக்கவில்லை.

‘நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும்பட்சத்தில், தி.மு.க கட்சி நிர்வாகிகளிடமிருந்தே அழுத்தம் வரும். போராட்டங்கள் நடைபெறவும் வாய்ப்பிருக்கிறது’ என்று மாவட்ட ஆட்சியர்கள் சிலர் தயக்கம் காட்டவும், முதல்வர் மைக் பிடித்தார். ‘சில மாசத்துக்கு முன்னால, சென்னையில மழை பெய்ஞ்சப்போ எப்படி தண்ணி சூழ்ந்துச்சுனு எல்லாரும் பார்த்தீங்கல்ல... எவ்வளவு பிரச்னை வந்தாலும் சரி, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றித்தான் ஆகணும். தி.மு.க மட்டுமல்ல, எந்தக் கட்சிக்காரங்க அழுத்தம் கொடுத்தாலும் வளைஞ்சு போகாதீங்க. என் அலுவலகத்துல சொல்லுங்க, நான் கவனிச்சுக்குறேன். அடுத்த மழை சீஸன் ஆரம்பிக்கிறதுக்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியே ஆகணும்’ என்று கெடு விதித்தார் முதல்வர். பெயருக்காக நடக்கும் மாநாடுபோல் அல்லாமல், எல்லாத் தரப்பிலும் சுயபரிசோதனை செய்துகொள்ளும்விதமாகவே நடந்தது மாநாடு” என்றனர் அந்த அதிகாரிகள்.

நலத்திட்டங்கள்... சட்டம்-ஒழுங்கு... நீர்நிலை ஆக்கிரமிப்பு... வார்னிங்!

“நீங்க சொல்றதுபோலச் செய்ய முடியாது!” - இடைமறித்த இறையன்பு

இதற்கிடையே, முதன்முறையாக மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் வனத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டது பலரது புருவத்தையும் உயர்த்தியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கிடப்பில் கிடக்கும் அரசின் சில திட்டங்கள் குறித்து முதல்வர் அலுவலகத்திலிருந்து விசாரித்தபோது, ‘வனத்துறையின் அனுமதி கிடைக்காததால், திட்டங்களை முடிக்க முடியவில்லை’ என்று மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளிடமிருந்து பதில் கிடைத்திருக்கிறது. எனவேதான், வனத்துறைக்கும் பிற துறைகளுக்கும் இடையேயுள்ள சிக்கல்களைக் களைவதற்காக, வனத்துறை அதிகாரிகளையும் இந்த மாநாட்டுக்கு முதல்வர் அழைத்திருக்கிறார். சில திட்டங்களில் தாமதம் ஏற்படுவது தொடர்பாக வனத்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டபோது, வருவாய்த்துறை செயலாளருக்கும், வனத்துறைச் செயலாளருக்கும் இடையே முதல்வர் முன்பாக விவாதம் நடந்திருக்கிறது. ஒருகட்டத்தில் முதல்வர் தலையிட்டு, ‘தேவையான திட்டங்களுக்கு அனுமதியை உடனே வழங்குங்கள்’ என்று அழுத்தமாகச் சொல்லவும் அதிகாரிகள் அமைதியாகியிருக்கிறார்கள்.

மாநாட்டில் அவ்வப்போது அமைச்சர்களுக்கும், மூத்த அதிகாரிகளுக்கும் இடையே கருத்து மோதலும் வெடித்திருக்கிறது. வட மாவட்ட அமைச்சர் ஒருவர், ‘மணல் தட்டுப்பாட்டைத் தீர்க்க, குவாரிகளை அதிகரிக்க வேண்டும். புறம்போக்கு நிலத்தில் மணல் அள்ளலாம்’ என்று இஷ்டத்துக்குப் பேச, தென்மாவட்ட அமைச்சர்கள் சிலர் அதை ஆமோதித்திருக்கின்றனர். அவர்களை இடைமறித்த இறையன்பு, ‘மணல் விவகாரத்திலெல்லாம் நீங்கள் சொல்வதுபோல முடிவெடுக்க முடியாது’ என்று சட்டென்று கூறிவிட, கருத்து கூறிய அமைச்சர்கள் ‘கப்சிப்’ ஆகியிருக்கிறார்கள்.

நலத்திட்டங்கள்... சட்டம்-ஒழுங்கு... நீர்நிலை ஆக்கிரமிப்பு... வார்னிங்!

“பேப்பரைத் திறந்தாலே கொலை, கொள்ளை...” - வறுத்தெடுத்த துரைமுருகன்!

மாவட்ட ஆட்சியர்களுடனான கலந்துரையாடலைவிட, காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில்தான் பட்டாசு வெடித்திருக்கிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் 200 நாள்களுக்குள் 557 கொலைகள் தமிழகத்தில் நிகழ்ந்திருப்பதாகவும், கடந்த ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அ.தி.மு.க சட்ட ஆலோசனைக்குழுவினர் புகாரளித்தனர். இது முதல்வர் ஸ்டாலினைக் கடுப்பாக்கியிருக்கிறது. காவல்துறை அதிகாரிகளிடம் கொஞ்சம் காரசாரமாகவே பேசியிருக்கிறார் ஸ்டாலின்.

சீனியர் ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். “மாவட்ட எஸ்.பி-க்களுடனான கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன்தான் முதல் வெடியைக் கிள்ளி எறிந்தார். ‘பேப்பரைத் திறந்தாலே கொலை, கொள்ளைனுதான் நியூஸ் வருது. எல்லாரும் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?’ என்று காவல்துறை அதிகாரிகளை வறுத்தெடுத்தார் துரைமுருகன். அதற்குச் சில தரவுகளை முன்வைத்து காரணங்களைக் காவல்துறை அதிகாரிகள் சொன்னபோது, முதல்வரிடம் சமாதானமான முகபாவனை இல்லை. தென் மாவட்டங்களில் சாதியரீதியில் நிலவும் பல்வேறுவிதமான பிரச்னைகள் குறித்துத் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. அப்போது, சாதிய அடையாளங்களை வெளிப்படுத்தும் நோக்கில், மாணவர்கள் சிலர் கையில் கயிறு கட்டிக்கொண்டு பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வருவதால் ஏற்படும் பிரச்னைகளை உளவுத்துறை ஏ.டி.ஜி.பி டேவிட்சன் சுட்டிக்காட்டினார். அதை முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகள் கவனமாகக் குறிப்பெடுத்துக்கொண்டனர். ‘இந்தப் பிரச்னைகளைக் கல்வித்துறை அதிகாரிகளிடம் சொல்லி சரிசெய்யச் சொல்கிறேன்’ என்று முதல்வர் உத்தரவாதம் அளித்தார்.

ரவி
ரவி

“புடிச்சு உள்ள போடுங்க...” முதல்வர் `கறார்!’

தாம்பரம் காவல் ஆணையர் ரவி, ‘சாதிரீீதியாகப் பிரச்னைகள் அதிகரிக்க சமூக வலைதளங்களில் பரப்பப்படும் சில பிற்போக்கான, மோசமான கருத்துகளும் காரணம்’ என்றார். அப்போது குறுக்கிட்ட முதல்வர், ‘மொத்தமாகச் சமூக வலைதளங்கள்னு குறிப்பிடாதீங்க. சிலர் அப்படித் திட்டமிட்டே இது போன்ற விஷமத்தனமான கருத்துகளைப் பரப்புறாங்க’ என்றார். முதல்வர் சொன்னதில் விவகாரம் இல்லாமல் இல்லை.

பா.ஜ.க இளைஞரணித் தலைவர் வினோஜ் பி.செல்வம் செய்திருந்த ஒரு ட்விட்டர் பதிவில், ‘தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து 130 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன’ என்றிருந்தார். இது சமூக ஊடகங்களில் பெரும் விவாதமாக மாறியது. காஞ்சிபுரத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த ஒரு கோயிலைத் தவிர, வேறேந்த இந்துக் கோயிலும் இடிக்கப்படவில்லை என்பதே உண்மை. உண்மைக்குப் புறம்பாகக் கருத்து பதிவிட்ட வினோஜ்மீது சென்னை சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் வாங்கியிருக்கிறார் வினோஜ். அதேபோல, தஞ்சாவூர் மாணவி, மேலூர் மாணவி தற்கொலை விவகாரங்களும் சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் சர்ச்சைக்குரிய விதத்தில் பிரசாரம் செய்யப்பட்டன. இதை அடிக்கோடிட்டு மூத்த காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய முதல்வர், ‘நீங்க உஷாரா நடவடிக்கை எடுத்திருந்தால், தஞ்சாவூர் விவகாரம் சி.பி.ஐ விசாரணை வரை போயிருக்குமா?’ என்று கடுகடுத்தார்.

மாநாட்டில் பேசிய கன்னியாகுமரி எஸ்.பி., ‘கோவையில் செயல்படுவதுபோல, மத மோதல்கள் தடுப்புச் சிறப்புப் பிரிவு, அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்க வேண்டும்’ என்று கூறிய ஆலோசனையை முதல்வர் வரவேற்றார். ‘ஒவ்வொரு மாவட்டத்திலும் சோஷியல் மீடியா சென்டருக்கென தனி அலுவலகம் அமைக்கப்பட வேண்டும்’ என திருவள்ளூர் எஸ்.பி வருண்குமார் கூறியதையும் முதல்வர் ஆமோதித்தார். ‘சமூக வலைதளங்கள் மூலமாகத் தவறான கருத்துகள் பரப்பப்படுவது, சாதி, மத மோதல்கள் உருவாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். யார் தவறு செய்தாலும், புடிச்சு உள்ள போடுங்க. சட்டம் - ஒழுங்கு, சமூக ஒழுங்கு விஷயத்துல எந்தச் சமரசமும் வேண்டாம்’ என்பதே முதல்வரின் கறார் கட்டளையாக இருந்தது” என்றனர் நம்மிடம் பேசிய அதிகாரிகள்.

உள்ளாட்சித் தேர்தல் பரபரப்புகள் முடிந்து, அடுத்த நான்காண்டுக்கால ஆட்சியின்மீது கவனம் குவிக்க ஆரம்பித்திருக்கிறார் ஸ்டாலின். அதற்கு ஆதாரமான அரசு இயந்திரங்களையும் அதன் அச்சாணிகளையும் கூர் பார்க்கும் நிகழ்வாகத்தான் நடந்திருக்கிறது இந்த மாநாடு. நலத்திட்டங்கள், சட்டம் - ஒழுங்கு, நீர்நிலை ஆக்கிரமிப்பு என அவர் கையிலெடுத்திருக்கும் பிரச்னைகளும் மிக முக்கியமானவை. அதேநேரம் அவருக்கு மிகச் சவாலாக இருக்கப்போகிறவர்கள், உள்ளாட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் எனப் பல்வேறு அதிகார அமைப்புகளில் இருக்கும் சுமார் 10,000 தி.மு.க-வினர்தான். அவர்களுக்குமாகச் சேர்த்தே மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருக்கும் வார்னிங், மாற்றத்தை ஏற்படுத்துமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism