Published:Updated:

``கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் கவர்னர் உரை’’ - ஸ்டாலின் போடும் கணக்கு!

- கவர்னர் -ஸ்டாலின்
- கவர்னர் -ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், நிதி ஆதாரங்களைத் திரட்டவும் தொடர்ந்து முதல்வர் தலைமையில் ஆலோசனைகள் நடந்து வருகிறது. 

புதியதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசு வரும் ஜூன் மாதம் இறுதியில் சட்டமன்ற கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக தலைமைச் செயலகம்
தமிழக தலைமைச் செயலகம்

தமிழக சட்டமனறத்திற்கான தேர்தல் முடிந்து தி.மு.க தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடையப்போகிறது. பொதுவாக புதிய அரசு பொறுப்பேற்றதும், கவர்னர் உரையுடன் சட்டமன்ற கூட்டத்தொடரை ஒரு மாதத்திற்குள் நடத்திவிடுவது வழக்கம். ஆனால், தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக இருப்பதால் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும், நிதி சுமையை தீர்க்கவும் தொடர்ந்து முதல்வர் தலைமையில் ஆலோசனைகள் நடந்துவருகிறது.

குறிப்பாக தமிழகத்தின் நிதி நிலை மிகவும் மோசமாக உள்ளது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதற்கே பெரும் நிதி சுமையாக இருக்கிறது. ஏற்கனவே கடந்த அ.தி.மு.க ஆட்சியில் பிப்ரவரி மாதம் போடப்பட்ட பட்ஜெட்டும் இடைக்கால பட்ஜெட் என்பதால், அடுத்த ஆறுமாதத்திற்கான நிதி ஆதாரங்களை புதிய அரசு ஒதிக்கீடு செய்யவேண்டியுள்ளது.

கவர்னர் பன்வாரிலால் புரோஹித்
கவர்னர் பன்வாரிலால் புரோஹித்

அதே போல், தி.மு.க அரசு தேர்தல் அறிக்கையில் அறிவித்த பல திட்டங்களுக்கு கவர்னர் உரை மூலம் உயிர்கொடுக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. திட்டங்களை, அறிவித்து அதற்கான நிதி ஒதிக்கீட்டையும் முடித்துவிட்டால், பணிகள் வேகமாக நடக்கும் என்று முதல்வர் நினைக்கிறாராம். தற்போது தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து இரண்டு தினங்களுக்கு முன்பாக முதல்வர் தலைமையில் ஆலோசனைக்கூட்டமும் நடைபெற்றது.

அதன்தொடர்ச்சியாக தமி்ழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதித்துறை அதிகாரிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு பட்ஜெட் தயாரிப்புகளை மேற்கொண்டுவருகிறார்.

மற்றொருபுறம், துறை ரீதியாக ஒவ்வொரு துறையிலும் இடம்பெறவேண்டிய சிறப்பு அம்சங்களை துறையின் செயலாளர்களை தயார் செய்ய சொல்லியுள்ளார். கவர்னர் உரையும், இடைக்கால பட்ஜெட்டும் தங்கள் அரசுக்கு புதிய மைல்கல்லாக இருக்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். சட்டமன்ற கூட்டத்தொடர் துவங்கும் முன்பாகவே ஊரடங்கையும் படிப்படியாக குறைத்திடும் திட்டமும் அரசிடம் இருக்கிறதாம்.

நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

இந்த மாத இறுதிக்குள் கொரோனா நோய் தொற்றின் வேகத்தை குறைத்து கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டால், இந்த மாத இறுதியில் சட்டமன்ற கூட்டத்தொடரை கவர்னர் உரையுடன் நடத்தும் திட்டத்தில் முதல்வர் அலுவலகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் வரும் 7-ம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கில் சில தளர்வுகளையும் மேற்கொள்ள அரசு தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு