Published:Updated:

`அரசியலை நினைத்தாலே அசிங்கமாக இருக்கிறது!' - ஆதரவாளர்களிடம் ஆதங்கப்பட்ட மு.க.அழகிரி

மு.க.அழகிரி
மு.க.அழகிரி

சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்க இருக்கிறார் ரஜினி. அதேநேரம், அழகிரியும் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார்.

உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. `அரசியலை நினைத்தாலே அசிங்கமாக இருக்கிறது' என ஆதரவாளர்களிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார் மு.க.அழகிரி.

மு.க.அழகிரி
மு.க.அழகிரி

தி.மு.க இளைஞரணிச் செயலாளராகக் கடந்த 4-ம் தேதி பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின். அவரது வருகைக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கட்சியின் சீனியர்களும் வாழ்த்து தெரிவித்தனர். `அன்பகத்தில் இருந்தபடியே கட்சிப் பணிகளைக் கவனிக்குமாறு தலைவர் கூறியிருக்கிறார்' என இளைஞர் அணி நிர்வாகிகளிடம் பேசிய உதயநிதி, அதன்படியே கட்சிப் பணிகளைக் கவனித்துவருகிறார். இதன் அடுத்தகட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்பவர்களின் எண்ணிக்கை பெருகிவருகிறது.

"உதயநிதியை முன்னிலைப்படுத்தும் வேலைகள் தீவிரமாக நடந்துவருகின்றன. `சின்னவருக்கு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள்' எனத் தலைவர் குடும்பத்தில் இருந்து சென்ற உத்தரவின் காரணமாகவே, உதயநிதியைச் சந்திக்க வருகின்றனர். இதற்கு முன் நியமிக்கப்பட்ட எந்த நிர்வாகிக்கும் இப்படிப்பட்ட வரவேற்பு கொடுக்கப்பட்டதில்லை. உதயநிதிக்கு முன்பாக இளைஞரணியின் மாநிலச் செயலாளராக இருந்த வெள்ளக்கோவில் சாமிநாதன் பெயரளவுக்கு மட்டுமே பொறுப்பை வகித்துவந்தார். அவரை செயல்படாமல்தான் வைத்திருந்தனர். ஒருநாள்கூட அவர் இளைஞர் அணிக்கான பணிகளைத் துரிதப்படுத்தியதில்லை. இத்தனைக்கும் அவர் முன்னாள் அமைச்சராகவும் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர். உதயநிதி வருகையை மட்டும் இந்த அளவுக்குக் கொண்டாடவேண்டிய அவசியம் ஏன்?" எனக் கேள்வி எழுப்புகின்றனர் கட்சி நிர்வாகிகள் சிலர்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இளைஞரணியில் முன்னிலைப்படுத்தப்படுவதற்காகக் கிளம்பும் விமர்சனங்களை உதயநிதி தரப்பினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுதொடர்பாக நம்மிடம் பேசிய இளைஞர் அணி நிர்வாகி ஒருவர், "வரும் சனிக்கிழமை காலை திருவாரூருக்கு பயணப்பட இருக்கிறார் உதயநிதி. பாட்டி அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்துக்குச் சென்று ஆசி பெற இருக்கிறார். இதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர். மக்களவை மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளில் தீவிரப் பிரசாரம் செய்தார் உதயநிதி. அதன் காரணமாக, தி.மு.க அதிக இடங்களில் வெற்றிபெற்றது. சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும்தான் ஏற்ற இறக்கமான சூழல் ஏற்பட்டது. இளைஞர் அணியை வலுப்படுத்த மக்களுக்கு அறிமுகமான முகம் ஒன்று தேவைப்படுகிறது. தன்னுடைய மென்மையான போக்குகளால் இளைஞர் அணியை முன்னோக்கிக்கொண்டு செல்வார் உதயநிதி" என்கிறார் இயல்பாக.

அதேநேரம், அறிவாலயத்துக்குள் நடக்கும் பதவியேற்பு வைபவங்களை உன்னிப்பாகக் கவனித்துவருகிறார் மு.க.அழகிரி. தன்னை சந்திக்க வந்தவர்களிடம், `அசிங்கமாக இருக்கிறது. இந்த அரசியலே வேண்டாம் என நினைக்கிறேன்' என ஆதங்கப்பட்டிருக்கிறார். அவரது மனநிலை குறித்து நம்மிடம் பேசிய அவரது ஆதரவாளர்கள், "அரசியல் ரீதியாக ஏதாவது ஒன்றைத் தேர்வுசெய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தி.மு.க-வில் இருந்து எங்களை திட்டமிட்டு ஒதுக்கிவிட்டனர். இந்நேரம் கட்சியில் நாங்கள் தீவிரமாக இருந்திருந்தால், உதயநிதி வருகைக்கு துரை தயாநிதி இடையூறாக இருந்திருப்பார். எங்களை முற்றுமாக ஒதுக்கிவைத்துவிட்ட பிறகு, இதைப் பற்றி பேசுவதில் எந்த நியாயமும் இல்லை" என விவரித்தவர்கள்,

மு.க.அழகிரி
மு.க.அழகிரி

"கருணாநிதி மறைவுக்குப் பிறகு தி.மு.க-வில் இடம்பெறுவோம் என எதிர்பார்த்தோம். குடும்பத்தில் உள்ளவர்கள் எவ்வளவோ சமாதானம் செய்தும் ஸ்டாலின் பிடிகொடுக்கவில்லை. இருப்பினும், குடும்பத்தில் உள்ள மற்றவர்களோடு பேசிக் கொண்டுதான் இருக்கிறார். கோபாலபுரத்தில் உள்ள தன்னுடைய தாயார் தயாளுவையும் அடிக்கடி சந்தித்துப் பேசுகிறார் அழகிரி. கடந்த வாரம்கூட அவரது உடல்நலனை விசாரித்து வந்தார். எங்களுடைய எதிர்கால நலனுக்காக ஏதாவது ஒரு முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம். பல ஆண்டுகளாக நடிகர் ரஜினியோடு நல்ல நட்பில் இருக்கிறார் அழகிரி. சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்க இருக்கிறார் ரஜினி. அதேநேரம், அழகிரியும் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார்" என்கின்றனர் அமைதியாக.

அடுத்த கட்டுரைக்கு