Election bannerElection banner
Published:Updated:

சென்டிமென்ட் சிக்கல்.. கைவிடப்பட்ட திட்டம்! - `கொளத்தூரில் ஸ்டாலின்’ ஹாட்ரிக்! #TNelections2021

ஸ்டாலின்
ஸ்டாலின்

இருமுறை ஸ்டாலின் கொளத்தூரில் வென்றாலும், திமுகவால் ஆட்சிப் பொறுப்புக்கு வரமுடியவில்லை. எனவே சென்டிமென்டாக ஸ்டாலினைத் தொகுதி மாறி போட்டியிடச் சொல்லி கட்சியில் உள்ள சிலர் வற்புறுத்தியதாகவும், இம்முறை, ஸ்டாலின் தொகுதி மாறக்கூடும் என்றும் கூறப்பட்டது.

திமுக தலைவரும் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான மு.க. ஸ்டாலின், தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிட்டதால், தமிழகம் தாண்டிய கவன ஈர்ப்பைப் பெற்றது கொளத்தூர் தொகுதி.1984 ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின், தனது முதல் தேர்தலிலேயே தோல்வியடைந்தார். ஆனால், அதன் பிறகு 1989-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து 1991-ல் நடைபெற்ற தேர்தலின்போதும், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். பின்னர் 1996, 2001 மற்றும் 2006-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் அதே ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றிபெற்றார்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

2006 - 2011 வரையிலான தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவி வகித்தார். இந்த நிலையில், கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் தொகுதி மாறி கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் இரண்டுமுறையும் அங்கே வெற்றி பெற்றார். 2016 தேர்தலில், அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜே.சி. டி. பிரபாகரனை விட 37,730 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். அதே சமயம், இரண்டு முறை ஸ்டாலின் கொளத்தூரில் வென்றாலும் திமுகவால் ஆட்சிப் பொறுப்புக்கு வரமுடியவில்லை. எனவே சென்டிமென்டாக ஸ்டாலினைத் தொகுதி மாறி போட்டியிடச் சொல்லி கட்சியில் உள்ள சிலர் வற்புறுத்தியதாகவும், இந்த முறை, ஸ்டாலின் தொகுதி மாறி போட்டியிடக்கூடும் என்றும் கூறப்பட்டது. ஆனால், திடீரென தொகுதி மாறினால் பல ஆண்டுகளாக கொளத்தூர் தொகுதி திமுகவினர் செய்து வைத்த தேர்தல் பணிகளையும், கட்டமைப்பையும் இன்னொரு தொகுதியில் உடனடியாக உருவாக்க முடியாது என நினைத்து, அந்த திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த முறை கொளத்தூரில் மு.க. ஸ்டாலினை எதிர்த்து அதிமுக தரப்பில் அக்கட்சியின் சீனியரான ஆதிராஜாராம், அமமுக சார்பில் ஆறுமுகம், நாம் தமிழர் கட்சி சார்பில் கெமிலஸ் செல்வா, மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெகதீஷ் உள்ளிட்ட 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

களம் திமுகவுக்கு சாதகமாக இருந்ததால் ஆரம்பம் முதலே உற்சாகமாக காணப்பட்ட மு.க ஸ்டாலின், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பிருந்தே வெற்றி பெற்ற மனநிலையில் காணப்பட்டது அறிவாலயம். ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியின் வாக்கு எண்ணிக்கையும் ஆரம்பம் முதலே ஸ்டாலினுக்கு ஆதரவாக இருந்தது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

தொடர்ந்து முன்னிலை வகித்த ஸ்டாலின் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவின் ஆதிராஜாராமைவிட 43,094 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அரசியல் களத்தில் பல காலம் பயணித்துள்ள, பல வெற்றி தோல்விகளை சந்தித்துள்ள ஸ்டாலினுக்கு இந்த தேர்தலும் இந்த வெற்றியும் மிக முக்கியமானது. முதல் முறையாக முதல்வர் வேட்பாளராக களமிறங்கி வென்றுள்ள இந்த வெற்றி குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு