Published:Updated:

``அரசியலில் எனக்கு முதலில் கிடைத்தது, மலர் மாலைகள் அல்ல; சிறைச்சாலைகள்தான்" - முதல்வர் ஸ்டாலின்

மாநாட்டில் பேசும் முதல்வர் ஸ்டாலின் ( நா.ராஜமுருகன் )

"மாநகராட்சி மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணியாற்ற வேண்டும். அதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்" என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்திருக்கிறார்.

``அரசியலில் எனக்கு முதலில் கிடைத்தது, மலர் மாலைகள் அல்ல; சிறைச்சாலைகள்தான்" - முதல்வர் ஸ்டாலின்

"மாநகராட்சி மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணியாற்ற வேண்டும். அதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்" என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்திருக்கிறார்.

Published:Updated:
மாநாட்டில் பேசும் முதல்வர் ஸ்டாலின் ( நா.ராஜமுருகன் )

நாமக்கல் - சேலம் சாலையிலுள்ள பொம்மைக்குட்டைமேடு பகுதியில் தி.மு.க உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டில் தமிழ்நாடு முதல்வரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். மாநாட்டில் பேசிய முதல்வர், ``நீங்கள் (உள்ளாட்சி பிரதிநிதிகள்) இந்த இடத்துக்கு வந்திருக்கிறீர்கள் என்றால் அது சாதாரணமானது அல்ல. உங்கள் உழைப்பு, உங்கள் திறமை, உங்கள் தியாகம் போன்றவையே அதற்குக் காரணம். இங்கு ஆண்களைவிடப் பெண்களே உள்ளாட்சிப் பொறுப்புகளில் அதிகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். உள்ளாட்சி அமைப்புகள் மக்களாட்சியின் உயிர்நாடி. மக்கள் பணியில் முதல் பணி என்பது உள்ளாட்சிகள். இங்குதான் மக்கள் பணியாற்ற பயிற்சியும், வாய்ப்பும் கிடைக்கும்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர்
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர்
நா.ராஜமுருகன்

தி.மு.க-வைப் பொறுத்தவரை நின்றால் மாநாடு, நடந்தால் ஊர்வலம். அனைத்து வளங்களையும் கொண்ட மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் விளங்கிவருகிறது. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வளர்ச்சி பெற வேண்டுமானால், அது உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் கையில்தான் இருக்கிறது. ஒரு பொறுப்பு உங்களைத் தேடி வந்திருக்கிறதென்றால், அதைத் தக்கவைத்துக்கொள்வதும், தொடர்ந்து நீடிப்பதும் உங்கள் கையில்தான் இருக்கிறது. இன்று நமது செய்கைகள் வழியாகத்தான் கோடிக்கணக்கான மக்கள் பல்வேறு திட்டங்களால் பயன்பெற்றிருக்கிறார்கள். அதற்குக் காரணம் நான் இட்ட ஒரே கையெழுத்துதான். அத்தகைய சக்தி படைத்த கையெழுத்தை மக்களின் அடிப்படைப் பிரச்னைகளுக்கு பயன்படுத்துங்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மாநகராட்சி மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை எந்தவிதக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணியாற்ற வேண்டும். அதுதான் இந்த மாநாட்டின் நோக்கம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது கட்சிரீதியாக மட்டுமல்லாமல், சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கீனமாகவோ, முறைகேடாகவோ நடந்துகொண்டால், நான் சர்வாதிகாரிபோல் நடவடிக்கை எடுப்பேன். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளையும், விருப்பு வெறுப்புகளையும் மறந்துவிட்டு ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். பள்ளிப்படிப்பைவிட அரசியல் படிப்புதான் எனக்கு அதிகமான ஆர்வத்தை ஏற்படுத்தியது. அரசியல் ஆர்வம் என்பது பதவிக்கு வர வேண்டும், மாலை மரியாதை வர வேண்டும் என்பதற்காக அல்ல. மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும், இந்த நாட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதற்காகத்தான், அந்த முடிவுக்கு வந்தேன்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர்
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் முதல்வர்
நா.ராஜமுருகன்

ஒரு கொள்கைக்காக, லட்சியத்துக்காக உழைக்க வேண்டும் என்று நினைத்தேன். அப்படி, அரசியலில் நுழைந்த எனக்கு முதலில் கிடைத்தது, பதவிகள் அல்ல, பாராட்டுகள் அல்ல, மலர் மாலைகள் அல்ல... சிறைச்சாலைகள்தான் எனக்குக் கிடைத்தன. சித்ரவதைகளைத்தான் நான் அனுபவித்தேன். துன்ப துயரங்கள் என்னை வரவேற்றன. திருமணமான ஐந்தே மாதங்களில் மனைவியைப் பிரிந்து மிசா கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டேன். கட்சியே வேண்டாம், அரசியலே வேண்டாம் என்று எழுதிக்கொடுத்துவிட்டு சென்றவர்கள் பலர் உண்டு. தி.மு.க-விலிருந்து விலகிக்கொள்கிறேன் என்று எழுதிக்கொடுத்தால், சிறையிலிருந்து விடுதலை செய்துவிடுவதாக அப்போது கூறப்பட்டது. அப்படி எழுதிக் கொடுக்க மறுத்தவன் நான். மற்றவர்கள் அவ்வாறு எழுதிக்கொடுக்கக் கூடாது என்றும் சொன்னவன் நான்.

சிறையிலிருந்து 1977-ல் வெளியே வந்தேன். சட்டமன்றத்துக்குள் முதன்முதலாகச் சென்றது 1989-ம் ஆண்டு. மக்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்துக்குள் செல்ல 12 ஆண்டுக்காலம் பிடித்தது. இதை எதற்காகக் கூறுகிறேன் என்றால், பொறுப்புகள் உடனடியாகக் கிடைத்துவிடாது. அதற்குக் கடுமையாக உழைக்க வேண்டும். பொறுப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டும். கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் மாபெரும் பேரியக்கம் திமுக. இங்கு பொறுப்புகள் என்பது சில ஆயிரம் பேருக்குத்தான் கிடைக்கும். கட்சிக்காக வாழ்நாலெல்லாம் உழைத்து, கடைசிவரை பொறுப்புகள் கிடைக்காமல் மறைந்துபோனவர்கள் உண்டு. இதற்கு மாறாக நீங்கள் ஒரு பொறுப்பை அடைந்திருக்கிறீர்கள். ஒரு பொறுப்பு உங்களைத் தேடி வந்திருக்கிறது என்றால் அதைப் போற்றி, பாதுகாக்கவேண்டிய கடமை உங்களுக்குத்தான் உண்டு. மக்களின் தேவைகளை அறிந்து, புரிந்து அவர்களுக்குச் சேவை செய்தால், நிச்சயம் உங்களை நோக்கி மக்கள் வரத்தான் செய்வார்கள். அதேநேரத்தில், நீங்கள் தவறு செய்துவிட்டால், உங்களைவிட்டு மக்கள் விலகுவார்கள். விலகுவதோடு மட்டுமல்ல, உங்களை புறக்கணிப்பார்கள் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு
நா.ராஜமுருகன்

மாநகராட்சி மேயர் முதல் பஞ்சாயத்து வார்டு கவுன்சிலர் வரை அனைவரும் எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் நடந்துகொள்ள வேண்டும். இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கமே இதுதான். புதிதாகப் பொறுப்புக்கு வந்திருக்கக்கூடிய பெண்களுக்கு பயமோ, தயக்கமோ, கூச்சமோ இருக்கக் கூடாது. தரப்பட்ட பொறுப்புகளை நேரடியாக நீங்களே கையாள வேண்டும். உங்களுக்குத் தரப்பட்ட பொறுப்பை உங்கள் கணவரிடம் நீங்கள் ஒப்படைத்துவிடாதீர்கள். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறி கொண்டவர்களாக நீங்கள் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டும். நாம் ஆட்சிக்கு சும்மா வந்துவிடவில்லை. தங்கத் தாம்பாலத்தில் வைத்து இந்த ஆட்சியை நமக்குத் தந்துவிடவில்லை. 50 ஆண்டுக்காலமாக உழைத்த உழைப்பின் பலன் இது. கோடிக்கணக்கான தி.மு.க தொண்டர்களின் தன்னமலற்ற உழைப்பால் கிடைத்த பலன் இது. என்னை நம்பிக் கோடிக்கணக்கான தொண்டர்கள் இந்தக் கட்சியை என்னிடம் ஒப்படைத்துள்ளனர். கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் என்னை நம்பி இந்த ஆட்சியை ஒப்படைத்துள்ளனர். தமிழ்நாட்டின் எதிர்காலம் தி.மு.க-வின் கையில்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது" என்றார்.