Published:Updated:

எம்.எல்.ஏ விடுதி: வேலுமணியிடம் விசாரணை; பல மணி நேரம் காக்க வைக்கப்பட்ட காங்கிரஸ் பிரமுகர்!

திருச்சி வேலுச்சாமி
திருச்சி வேலுச்சாமி

சென்னையில் எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல மணி நேரமாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் காலையில் இருந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் 35 இடங்களிலும், சென்னையில் 15 இடங்களிலும், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கலில் தலா ஒரு இடத்திலும் ஓழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் எம்.எல்.ஏ. விடுதியில் தங்கியுள்ள வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பல மணி நேரங்களாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு எட்டு மணி வரையிலும் விசாரணை நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது.

திருச்சி வேலுச்சாமி எம்.எல்.ஏ விடுதியில்
திருச்சி வேலுச்சாமி எம்.எல்.ஏ விடுதியில்

இதனால், காலையிலிருந்தே அந்தப் பகுதி மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. செய்தி அறிந்ததும் அங்கு கூடிய அ.தி.மு.கவினர் ஆளும் கட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். ஆளும்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வரும்போது, நிர்வாகிகளும் தொண்டர்களும் கூட்டமாக வருகின்றனர். அவர்கள் கிளம்பிச் சென்றதும் சிறிது நேரத்திலேயே நிர்வாகிகளும் கிளம்பிச் சென்றுவிடுகின்றனர். பலர் உள்ளே செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனால், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஒருசிலருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.

டீ முதல் டிபன் வரை..! - ரெய்டுக்கு வேலுமணி தயாரானது எப்படி?

இந்த நெருக்கடியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமி, காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களை சந்திப்பதற்காக அங்கு வந்தார். ஆனால், காவல்துறையினர் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வெளியிலேயே காத்துக் கிடந்தார். அ.தி.மு.கவைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலருக்கே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேலுச்சாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு அவருடன் இருந்த காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

திருச்சி வேலுச்சாமி
திருச்சி வேலுச்சாமி

'' வெளியில நிற்கிற போலீஸுக்கு எங்க தலைவர் யாருன்னு தெரியல. மூத்த அதிகாரிகள் சொன்னாதான் விடுவோம்னு சொல்லிட்டாங்க. இதுக்காக எந்த மூத்த அதிகாரிகளைப் போய் பார்க்குறது, அதனாலதான் எங்க சட்டமன்றத் தலைவருக்குப் போன் பண்ணியிருக்கோம். அவர் மீட்டிங் நடக்குறதால முடிச்சுட்டு வரேன் சொல்லியிருக்கார். ரெய்டு பண்ணட்டும், விசாரணை நடத்தட்டும். ஆனா, அ.தி.மு.க ஆள்களை உள்ள விட்டுட்டு, சம்மந்தமில்லாத ஆள்களை ஏன் நிறுத்தி வச்சிருக்காங்கன்னு தெரியல. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எல்லாம் முறையா செஞ்சிருக்க வேண்டாமா'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு