Published:Updated:

`அவர்களை என்கவுன்டர் செய்ய வேண்டும்!'- எஸ்எஸ்ஐ வில்சன் கொலையில் கொதிக்கும் காங்கிரஸ்

பிரின்ஸ் எம்.எல்.ஏ.
பிரின்ஸ் எம்.எல்.ஏ.

எஸ்.எஸ்.ஐ கொலைக் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தப்பு செய்தவர்களைத் தப்ப விடக்கூடாது. எஸ்எஸ்ஐ வில்சனை கொலை செய்தவர்களை என்கவுன்டரில் சுட்டுக்கொல்ல வேண்டும்.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில், கேரள எல்லையில் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த 8-ம் தேதி இரவு துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தமிழகம் மற்றும் கேரள போலீஸார் இணைந்து விசாரணை நடத்திவருகின்றனர். கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் தென்மலை உள்ளிட்ட பகுதிகளில் சிலரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் எஸ்எஸ்ஐ வில்சன்
போலீஸ் எஸ்எஸ்ஐ வில்சன்

மேலும், குற்றவாளிகளை ஆட்டோவில் இறக்கிவிட்ட ஆட்டோ டிரைவர் ஒருவரையும் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை பகுதியில் குற்றவளிகள் தங்குவதற்கு ஏற்பாடுசெய்த விதுரா பகுதியைச் சேர்ந்த சைய்யது அலி என்பவர் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும், நெய்யாற்றின்கரைப் பகுதியில் நடமாடிய தீவிரவாதிகள் கையில் ஒரு பேக் வைத்திருந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தப் பையை தீவிரவாதிகள் அடிக்கடி பயன்படுத்தவும் செய்திருக்கிறார்கள். அந்தப் பையை எங்கிருந்து வாங்கினார்கள், இப்போது அது எங்குள்ளது என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

இதற்கிடையில், எஸ்எஸ்ஐ வில்சனுக்கு இந்து முன்னணி, பி.ஜே.பி உள்ளிட்ட இந்து இயக்கத்தினர் மௌன ஊர்வலமாகச் சென்று அஞ்சலிசெலுத்தினர். மேலும், வில்சன் கொலையாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்து முன்னணியினர் கோரிக்கை வைத்தனர். `போலீஸுக்கு பாதுகாப்பு இல்லை’ என்று தி.மு.க தலைவரும், `எஸ்எஸ்ஐ குடும்பத்திற்கு நிதி வழங்க வேண்டும்’ என்று காங்கிரஸும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். அதேசமயம், எஸ்எஸ்ஐ வில்சன் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தும் அவரைக் கொலை செய்தவர்களை தி.மு.க-காங்கிரஸ் கண்டிக்கவில்லை என்றும் இந்து இயக்கங்கள் குற்றம் சாட்டின.

தௌஃபீக், சமீம்
தௌஃபீக், சமீம்

இந்த நிலையில், எஸ்எஸ்ஐ வில்சனைக் கொலை செய்த குற்றவாளிகளை என்கவுன்டரின் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ பிரின்ஸ் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரின்ஸ் எம்.எல்.ஏ கூறுகையில், ``நாங்கள் போராட்டம் நடத்தியதால், தமிழக அரசு வில்சனின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிதி அளித்துள்ளது. எஸ்எஸ்ஐ கொலைக் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தப்பு செய்தவர்களைத் தப்ப விடக்கூடாது. எஸ்எஸ்ஐ வில்சனைக் கொலை செய்தவர்களை என்கவுன்டரில் சுட்டுக் கொல்ல வேண்டும். நாட்டில் இன்று சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது. எனவே, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கினால்தான் குற்றங்கள் குறையும். நீதிமன்றங்களும் காலதாமதம் இல்லாமல் உடனடியாகத் தீர்ப்பு வழங்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு