Published:Updated:

நாகையில் மழை வெள்ள பாதிப்பு! - பார்வையிட வந்த எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்த பொதுமக்கள், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷாநவாஸ் வருகை தந்ததற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழையால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை பெய்துவருகிறது. மழை வெள்ளத்தால் பல இடங்களில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளையும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களையும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அடிப்படை வசதிகளையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர், முதன்மைச் செயல் அலுவலர் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முகாமில் ஆய்வு
முகாமில் ஆய்வு

கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், பனங்குடி, பாப்பாகோவில் அரசு உயர்நிலைப் பள்ளி, கருவேலங்கடை சமுதாயக்கூடம் ஆகிய முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களையும், அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளையும் பார்வையிட்டனர். மேலும், நாகப்பட்டினம் பழைய பேருந்து நிலையத்திலுள்ள அம்மா உணவகத்தில் உணவு தயாரிப்பதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் மாவட்ட  ஆட்சியர் அருண்தம்புராஜ், மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கௌதமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷாநவாஸ் ஆகியோர் உடன் சென்றனர்.

ஆய்வின்போது நாகை புதிய நம்பியார் நகர்ப் பகுதியிலுள்ள சுனாமி குடியிருப்புகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்வதற்காகச் சென்றனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷாநவாஸ்  வருகை தந்ததற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மழை வெள்ளம் - பார்வையிடவந்த எம்.எல்.ஏ.
மழை வெள்ளம் - பார்வையிடவந்த எம்.எல்.ஏ.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு இதுவரை நாகப்பட்டினம் நகரிலுள்ள சுனாமி குடியிருப்புப் பகுதியில் வந்து பார்வை இடாததற்குக் கண்டனம் தெரிவித்து அவரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செய்வதறியாமல் தவித்த நாகப்பட்டினம் எம்.எல்.ஏ முகம்மது ஷாநவாஸ் தனது காரில் ஏறி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். இந்தச் சம்பவம் நாகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு