Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

சி.விஜயபாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
சி.விஜயபாஸ்கர்

அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் காவிரி நீர் கிடைக்கச் செய்திருக்கிறேன். அரசுக் கல்லூரிகளைக் கொண்டு வரவில்லை என்கிற குற்றச்சாட்டு பொய்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் காவிரி நீர் கிடைக்கச் செய்திருக்கிறேன். அரசுக் கல்லூரிகளைக் கொண்டு வரவில்லை என்கிற குற்றச்சாட்டு பொய்.

Published:Updated:
சி.விஜயபாஸ்கர்
பிரீமியம் ஸ்டோரி
சி.விஜயபாஸ்கர்

என்ன செய்தார் அமைச்சர்? - சி.விஜயபாஸ்கர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், விராலிமலை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் தொடர்ந்து இரு முறை வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கும் சி.விஜயபாஸ்கர், கடந்த பத்து ஆண்டுகளாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். தொகுதிக்குள் எப்படி இருக்கின்றன அவரது செயல்பாடுகள்?

சொன்னாரே? - மு.பழனியப்பன், தி.மு.க

`தொகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவேன்’ என்றார். ஆனால், எந்தத் தொழிற்சாலையையும் கொண்டுவரவில்லை. கிராமப்புறங்களில் சாலைகள் போடப்படவில்லை. விராலிமலை, இலுப்பூரில் பெண்களுக்கான அரசு கலைக் கல்லூரியைக் கொண்டுவரவில்லை. இலுப்பூரில் அவர் குடும்பத்தினர் நடத்தும் மதர் தெரசா கல்வி நிறுவனங்களை வளர்ப்பதற்காகவே, அரசுக் கல்லூரிகளைக் கொண்டுவரவில்லை. அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவில்லை. பேக்கேஜ் டெண்டர் முறையை அறிமுகப்படுத்தி, சிறு ஒப்பந்ததாரர்களை ஒழித்துவிட்டார்.

செய்தேனே! - அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

அனைத்துப் பஞ்சாயத்துகளிலும் காவிரி நீர் கிடைக்கச் செய்திருக்கிறேன். அரசுக் கல்லூரிகளைக் கொண்டு வரவில்லை என்கிற குற்றச்சாட்டு பொய். குடுமியான்மலையில் அரசு வேளாண் கல்லூரி, விராலிமலையில் அரசு ஐ.டி.ஐ கொண்டுவந்திருக்கிறேன். பெரும்பாலான கிராமங்களில் மருத்துவ வசதி கொண்டுவந்திருக்கிறேன். விராலிமலைக்கு தனி தாலுகா அந்தஸ்து பெறப்பட்டிருக்கிறது. இலுப்பூரில் ஆர்.டி.ஓ ஆபீஸ், கோர்ட், கருவூலம் கொண்டுவந்திருக்கிறேன். இலுப்பூரை தனி வருவாய்க் கோட்டமாகவும், தனிக் கல்வி மாவட்டமாகவும் மாற்றியிருக்கிறேன். விராலிமலை முருகனை தரிசிக்க, மலைப்பாதைத் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறேன். சித்தன்னவாசலைப் பொலிவுபடுத்தியிருக்கிறேன். தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக புதுக்கோட்டை மற்றும் விராலிமலையில் ஜல்லிக்கட்டுச் சிலையை நிறுவியிருக்கிறேன். விராலிமலையில் ஐ.டி.சி தொழிற்சாலையைக் கொண்டுவந்திருக்கிறேன். 2,800 பெண்கள் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? -  அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

கள நிலவரம்: தொகுதிக்குள் அரசு கலைக் கல்லூரி கொண்டுவராதது மக்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொகுதி மக்களைப் பெரிதாகச் சந்திக்காததும் மைனஸ். இவர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் பரவலாகப் பேசப்படுவதும், உள்ளாட்சித் தேர்தலில் நடைபெற்ற உட்கட்சிப் பூசல்களும் அ.தி.மு.க-வுக்கு பின்னடைவு. அதேநேரத்தில் குடிநீர், பாதாளச் சாக்கடை இணைப்பு, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் சரிசெய்திருப்பது, சொந்தப் பணத்தில் கொரோனா நிவாரணப் பொருள்களை வழங்கியதெல்லாம் விஜயபாஸ்கருக்கு ப்ளஸ். அ.தி.மு.க சார்பில் போட்டியிட மீண்டும் சீட் கேட்கிறார் விஜயபாஸ்கர். தி.மு.க சார்பில் பழனியப்பன், வடக்கு மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டியன், பி.டி.அரசகுமார் ஆகியோர் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள். இன்றைய சூழலில் போட்டி கடுமையாகவே இருக்கிறது.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அந்தியூர்

சொன்னாரே? - ஏ.ஜி.வெங்கடாசலம், தி.மு.க

`அந்தியூர் குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பேன்’ என்றவர், அதைச் செய்யவில்லை. ‘மேட்டூர் உபரிநீர்த் திட்டம்’ மற்றும் ‘தோனிமடுவு வாய்க்கால் திட்டம்’ என்று எதையுமே நிறைவேற்றவில்லை. நலிந்துவரும் நெசவுத் தொழில் முன்னேற்றத்துக்கு எதையும் செய்யவில்லை. பர்கூர் மலையிலுள்ள 32 மலைக்கிராமங்களில் தண்ணீர் பிரச்னை, மருத்துவ வசதியின்மை பிரச்னைகளைத் தீர்க்கவில்லை. குடிமராமத்து என்ற பெயரில் எம்.எல்.ஏ பணத்தை அடித்ததுதான் மிச்சம்!

செய்தேனே! - இ.எம்.ஆர்.ராஜா (எ) ராஜகிருஷ்ணன், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

மணியாச்சிப்பள்ளம் திட்டம், மேட்டூர் உபரிநீர்த் திட்டத்துக்கான ஆய்வுப்பணிகள் தொடங்கியிருக்கின்றன. அந்தியூர் - பர்கூர் சாலை, அந்தியூர்- கொளத்தூர் சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. வறட்சியான காலத்திலும்கூட குடிநீர் கொடுத்திருக்கிறோம். மூன்று பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. அந்தியூர் அரசு மருத்துவமனையை, தாலுகா மருத்துவமனையாகத் தரம் உயர்த்தியிருக்கிறோம். டி.என்.பாளையம் ஒன்றியம் மற்றும் வாணிப்புத்தூர் பேரூராட்சியில் குடிநீர்த் திட்ட விரிவாக்கப் பணி செயல்படுத்தப்பட்டுவருகிறது. அத்தாணியிலும், துறையம்பாளையத்திலும் துணை மின் நிலையங்களை அமைத்திருக்கிறோம். போக்குவரத்து காவல் நிலையம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் அந்தியூரில் அமைக்கப்பட்டுள்ளன.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? -  அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் இ.எம்.ஆர்.ராஜா (எ) ராதாகிருஷ்ணன், மாநில வர்த்தக அணிச் செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், முதலமைச்சரின் தாய்மாமன் மகன் ராஜா சீட் எதிர்பார்க்கின்றனர். தி.மு.க-வில் ஏ.ஜி.வெங்கடாசலம், வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம் ரேஸில் இருக்கின்றனர். எம்.எல்.ஏ மீதான சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு, தொகுதிக்கென பெரிய திட்டங்கள் கொண்டுவராதது அ.தி.மு.க-வுக்கு மைனஸ். கட்டமைப்புரீதியாக வீக்காக இருப்பது தி.மு.க-வுக்கு மைனஸ். இன்றைய சூழலில், போட்டி கடுமையாக இருக்கிறது.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - மொடக்குறிச்சி

சொன்னாரே? - சச்சிதானந்தம், தி.மு.க

`மஞ்சள் மதிப்புக் கூட்டு தொழிற்சாலை கொண்டுவருவேன்’ என்றவர், செய்யவில்லை. `விவசாயப் பொருள்களைச் சந்தைப்படுத்த சந்தை இல்லை. சர்க்கரை ஆலைகளிலிருந்து கரும்பு விவசாயிகளுக்கு வர வேண்டிய நிலுவைத்தொகையை வாங்கிக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கரூர் - ஈரோடு நான்குவழிச் சாலை அமைக்கப்படவில்லை. `லக்காபுரத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும்‘ எனச் சொன்னார்கள். அதுவும் நடக்கவில்லை. `பூந்துறை குளத்தைத் தூர்வாரி சுற்றுலாத்தலமாக்குவோம்’ என்றனர். அதில் மண்ணை அள்ளி எம்.எல்.ஏ தரப்பு காசு பார்த்ததோடு சரி!

செய்தேனே! - வி.பி.சிவசுப்பிரமணி, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

காளிங்கராயன் வாய்க்கால் மதகுகளைச் சீரமைத்து, அதன்மேல் 23 பாலங்களைக் கட்டியிருக்கிறோம். ஜல்சக்தி திட்டத்தில் 600 கிராமங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் பணிகள் நடக்கின்றன. மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கான வேலைகளும் நடக்கின்றன. குடிசை மாற்று வாரியத்தின் மூலம் இச்சிபாளையம், சின்னியம்பாளையம், லக்காபுரம் பகுதிகளில் 800 வீடுகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறோம். 220 மெட்ரிக் டன் கொள்ளளவுகொண்ட ஐந்து தானிய சேமிப்புக் கிடங்குகளைக் கட்டியிருக்கிறோம். ஈரோடு - கரூர் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? -  அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிவசுப்பிரமணி, முன்னாள் எம்.பி செல்வக்குமார சின்னையன், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் பாலகிருஷ்ணன், கிட்டுசாமி, முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி என்று பலரும் சீட்டுக்காக முட்டி மோதுகின்றனர். தி.மு.க-வில் சச்சிதானந்தம், ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ், மொடக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் குணசேகரன் சீட் கேட்கிறார்கள். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவர் மக்கள் ராஜனும் சீட் எதிர்பார்க்கிறார். தொகுதிக்குள் எம்.எல்.ஏ-வுக்கு நல்ல பெயரில்லை. இதுவே உதயசூரியனுக்குச் சாதகமாக இருக்கிறது.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - மதுரை வடக்கு

சொன்னாரே? - கார்த்திகேயன், காங்கிரஸ்

`தொகுதியின் முக்கிய நீராதாரமான வண்டியூர் கண்மாயைக் குடிமராமத்து செய்து தண்ணீர் தேக்க வழி செய்வேன்’ என்றவர், அதைச் செய்யவில்லை. செல்லூர் கண்மாயில் சாயக்கழிவுகள் கலந்து, சமீபத்தில் நுரை பொங்கி வந்தது. அந்தப் பிரச்னையையும் தீர்க்கவில்லை. மழைக்காலங்களில் அனைத்துத் தெருக்களும் கழிவுநீரில் மிதக்கின்றன. தொகுதி மாறும் முடிவில் ராஜன் செல்லப்பா இருப்பதால், தான் எம்.எல்.ஏ-வாக இருக்கும் மதுரை வடக்குத் தொகுதியை மறந்துவிட்டார்.

செய்தேனே! - வி.வி.ராஜன் செல்லப்பா, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. என் அலுவலகத்தில் எப்போதும் மக்களின் குறைகள் கேட்கப்படுகின்றன. வண்டியூர் கண்மாய் மராமத்து செய்யப்பட்டுள்ளது. செல்லூர் கண்மாயில் ஆகாயத்தாமரை வளர்வதைத் தடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு புத்தகம் போடும் அளவுக்கு நான் நிறைவேற்றிய திட்டங்கள் இந்தத் தொகுதியில் உள்ளன. குறை சொல்பவர்கள் சொல்லட்டும்... நான் என்ன செய்திருக்கிறேன் என்று மக்களுக்குத் தெரியும்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? -  அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

கள நிலவரம்: ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் தொகுதியைக் குறிவைத்துள்ளதால், மதுரை வடக்கு தொகுதியை அவரின் மகனும், அ.தி.மு.க ஐடி விங் தென்மண்டலச் செயலாளருமான ராஜ் சத்யன் குறிவைத்திருக்கிறார். அதேநேரத்தில், அ.தி.மு.க-வில் எம்.எஸ்.பாண்டியன், சோலைராஜா ஆகியோரும் ரேஸில் இருக்கிறார்கள். கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க-வில் முஜீபுர் ரகுமான் சீட் எதிர்பார்க்கிறார். தி.மு.க-வில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ-வான டாக்டர் சரவணன், பொன் சேது, வழக்கறிஞர் அன்புநிதி காய்நகர்த்துகிறார்கள். கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் களமிறங்க மாநகர காங்கிரஸ் தலைவர் கார்த்திகேயன் காய்நகர்த்துகிறார். இன்றைய சூழலில் தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - மதுரை தெற்கு

சொன்னாரே? - பூமிநாதன், ம.தி.மு.க

`கழிவுநீர் பிரச்னையைச் சரிசெய்வேன்’ என்றவர், அதைக் கண்டுகொள்ளவில்லை. பல தெருக்களில் கழிவுநீர் வழிந்து ஓடுவது தினசரி அவலமாகிவிட்டது. குடிநீர்ப் பிரச்னையும் தீர்க்கப்படவில்லை. இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், தன் வசதியைப் பெருக்கிக்கொள்வதில்தான் எம்.எல்.ஏ தீவிரமாக இருக்கிறார்.

செய்தேனே! - எஸ்.எஸ்.சரவணன், அ.தி.மு.க

தொகுதிக்குள் 66 இடங்களில் 7.10 கோடி செலவில் தார்ச்சாலைகளும், ஐந்து இடங்களில் பேவர் பிளாக் சாலையும், 54 போர்வெல்களும் அமைத்திருக்கிறேன். கொரோனா பேரிடர் காலத்தில் 49 லட்சம் செலவில் மருத்துவ உபகரணங்கள் வழங்கியுள்ளேன். மதுரையிலுள்ள பெரிய நிறுவனங்களுடன் இணைந்து, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க சட்டசபையில் வலியுறுத்தினேன்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? -  அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

கள நிலவரம்: சௌராஷ்டிரா சமூகத்தினர், முக்குலத்தோர், இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தொகுதி இது. எஸ்.எஸ்.சரவணன் மீண்டும் போட்டியிட விரும்பினாலும், முன்னாள் எம்.எல்.ஏ அண்ணாதுரை, சண்முகவள்ளி, வில்லாபுரம் ராஜா, சினிமா ஃபைனான்ஸியர் அன்புச்செழியன் ஆகியோரும் சீட்டுக்காகக் காய் நகர்த்துகிறார்கள். ஆனால், மாநகரச் செயலாளரான செல்லூர் ராஜூ, இந்தத் தொகுதியை பா.ஜ.க-வுக்கு ஒதுக்கிவிட விரும்புகிறார். பா.ஜ.க சார்பில் களமிறங்க மாநிலத் துணைத் தலைவர் மகாலட்சுமி முயல்கிறார். தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ வேலுச்சாமி, எஸ்.ஆர்.கோபி, முகேஷ் சர்மா ஆகியோர் முயல்கிறார்கள். தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க மாநகரச் செயலாளர் பூமிநாதன் சீட் எதிர்பார்க்கிறார். சி.பி.எம் கட்சியும் இந்தத் தொகுதியைக் கேட்கிறது. தற்போதைய சூழலில் தி.மு.க-வுக்கே வெற்றி வாய்ப்பு.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - விருகம்பாக்கம்

சொன்னாரே? - தனசேகரன், தி.மு.க

கூவம் கரையோர வீடுகளுக்காகச் சுற்றுச்சுவர் கட்டித்தருவதாக வாக்குறுதி கொடுத்தவர், அதை நிறைவேற்றவில்லை. தி.மு.க ஆட்சியில் கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் அமைக்க வீடுகளை காலிசெய்து அவர்களுக்கு மாற்று இடம் கொடுத்தோம். பம்பிங் ஸ்டேஷன் பணியை நிறைவேற்றவில்லை. எம்.எல்.ஏ குடியிருக்கும் நாராயண தெரு, எம்.ஜி.ஆர் நகர், சூளைப்பள்ளம் உள்ளிட்ட இடங்களில் பட்டா கிடைக்காமல் மக்கள் தவிக்கிறார்கள். அவர்களுக்குப் பட்டா கிடைக்க எதுவும் செய்யவில்லை.

செய்தேனே! - வி.என்.ரவி, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

ஆற்காடு ரோடு, ஜவஹர்லால் நேரு ரோடு ஆகியவற்றை விரிவாக்கம் செய்யும் பணி முடியும் தறுவாயில் உள்ளது. அதனால், போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்குத் தீரும். 2015 வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செம்மஞ்சேரியில் மாற்று இடம் ரெடியாக இருக்கிறது. ஆனால், சிலர் தூண்டுதலால், இந்தத் திட்டம் நிலுவையில் இருக்கிறது. குடிசை மாற்று வாரிய ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு அரசு நிலம் ஆக்கிரமிப்பு, நீதிமன்ற வழக்குகள் என்று பல சிக்கல்கள் உள்ளன. மக்களுக்கு பாதிப்பில்லாமல் பட்டா வழங்க அரசு பரிந்துரைத்திருக்கிறது.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? -  அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் தற்போதைய எம்.எல்.ஏ-வான வி.என்.ரவி, அண்ணா தொழிற்சங்க மாநிலத் தலைவர் கமலக்கண்ணன், முன்னாள் கவுன்சிலர் ஸ்டார் எம்.குணசேகரன் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள். தி.மு.க-வில் தனசேகரன், மாவட்ட இளைஞரணித் துணை அமைப்பாளர் பிரபாகர் ராஜா சீட் கேட்கிறார்கள். இந்தத் தொகுதியில்தான் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் வீடு உள்ளது. எனவே, விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் அல்லது மைத்துனர் சுதீஷ் விருகம்பாக்கத்தில் போட்டியிட விரும்புகின்றனர். தொகுதியின் பல பிரச்னைகளை அ.தி.மு.க அரசு தீர்க்கவில்லை என்கிற அதிருப்தி நிலவுகிறது. இன்றைய சூழலில், தி.மு.க-வுக்குச் சாதகமான சூழல் நிலவுகிறது.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - சைதாப்பேட்டை

சொன்னாரே? - பொன்னையன், அ.தி.மு.க

கொடுத்த வாக்குறுதிகள் எதையுமே சுப்பிரமணியன் நிறைவேற்றவில்லை. எப்போது பார்த்தாலும் பதில் அறிக்கை கொடுப்பதைத்தான் வேலையாக வைத்திருக்கிறார். அதிலும் பொய்யைத்தான் சொல்கிறார். மக்கள் பிரச்னைகளை நாங்கள்தான் சரிசெய்துவருகிறோம். எம்.எல்.ஏ குடியிருக்கும் இடமே அரசுக்குச் சொந்தமானது என்று குற்றம்சாட்டப்பட்டு, அவர்மீது நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது.

செய்தேனே! - மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ., தி.மு.க

`பசுமை சைதை’ திட்டத்தின்கீழ் 90,000 மரக்கன்றுகளை நட்டேன். ‘உங்களைத் தேடி உங்கள் எம்.எல்.ஏ’ என்கிற திட்டத்தை ஆரம்பித்து 14 நாள்கள், 56 மணி நேரம் நடந்தே சென்று மக்கள் குறைகளைக் கேட்டேன். தனிப்பட்ட முயற்சியில் மழைநீர் சேமிப்பு திட்டத்தைச் செயல்படுத்திவருகிறேன். கோயில் நிலங்களைத் தூர்வாரி, நீர்நிலைகளை மேம்படுத்தினேன். இலவசக் குடிநீர் வழங்கினேன். பூ வியாபாரம் செய்யும் ஏழைகளுக்கு நிழற்குடை அமைத்துக் கொடுத்தேன். கலைஞர் கணினி மையம் உருவாக்கி மாணவர்களுக்கு இலவச கணினிப் பயிற்சி, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தினேன். சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தியிருக்கிறேன்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? -  அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

கள நிலவரம்: மா.சுப்பிரமணியனுக்கு தொகுதியில் நல்ல அறிமுகம் இருக்கிறது. எம்.எல்.ஏ செயல்பாடுகளிலும் அவர் ஓகே-தான். ஆனால், தி.மு.க-வில் கோஷ்டிப் பூசல் மைனஸ். தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ மா.சு., தலைமைச் செயற்குழு உறுப்பினர் மகேஷ்குமார் சீட் எதிர்பார்க்கிறார்கள். அ.தி.மு.க-வில் முன்னாள் மாவட்டச் செயலாளர் எம்.எம்.பாபு, என்.எஸ்.மோகன் சீட் கேட்கிறார்கள். அ.ம.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழனும் காய்நகர்த்துகிறார். அ.தி.மு.க கூட்டணியிலுள்ள பா.ம.க சார்பில் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்ட சிலர் சீட் கேட்கிறார்கள். இன்றைய சைதாப்பேட்டையில் சூரியன் பிரகாசிக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
என்ன செய்தார் எம்.எல்.ஏ? -  அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism