Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு தொகுதிகளில், பரப்பளவில் மிகச் சிறிய தொகுதியான திண்டுக்கல் தொகுதியில், விவசாயம், பூட்டுத் தயாரிப்பு, தோல் பதனிடும் தொழில்கள் ஆகியவைதான் பிரதானம்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு தொகுதிகளில், பரப்பளவில் மிகச் சிறிய தொகுதியான திண்டுக்கல் தொகுதியில், விவசாயம், பூட்டுத் தயாரிப்பு, தோல் பதனிடும் தொழில்கள் ஆகியவைதான் பிரதானம்.

Published:Updated:
திண்டுக்கல் சீனிவாசன்
பிரீமியம் ஸ்டோரி
திண்டுக்கல் சீனிவாசன்

என்ன செய்தார் அமைச்சர்? -  திண்டுக்கல் சீனிவாசன், - திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏழு தொகுதிகளில், பரப்பளவில் மிகச் சிறிய தொகுதியான திண்டுக்கல் தொகுதியில், விவசாயம், பூட்டுத் தயாரிப்பு, தோல் பதனிடும் தொழில்கள் ஆகியவைதான் பிரதானம். வனத்துறை அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன்தான் இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. மேடையில் பேசும்போது, சீரியஸான விஷயத்தைக்கூட காமெடியாக்கி, சர்ச்சையில் சிக்குவது அவரின் வழக்கம். இதுவரை நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். அ.தி.மு.க பொருளாளராகவும் பதவி வகித்திருக்கிறார். தொகுதிக்குள் எப்படி இருக்கின்றன அமைச்சரின் செயல்பாடுகள்?

பஷீர் அகமது
பஷீர் அகமது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சொன்னாரே? - பஷீர் அகமது, தி.மு.க

`திண்டுக்கல் மாநகராட்சியின் குடிநீர்ப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பேன்’ என்றார். பல ஆண்டுகளாக நடந்துவரும், `பாதாள சாக்கடைத் திட்டத்தை முடிப்பேன்’ என்றார். `பழநி சாலையிலுள்ள குப்பைக்கிடங்கை ஊருக்கு வெளியே கொண்டு செல்வேன்’ என்றார். இவற்றில் எதையுமே செய்யவில்லை. அமைச்சராக, சொந்தத் தொகுதிக்குச் சிறப்புத் திட்டம் எதையும் கொண்டு வரவில்லை.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

செய்தேனே! - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அ.தி.மு.க

பாதாள சாக்கடைப் பணிகள் நடந்துவருகின்றன. இந்த ஆண்டு மழைப்பொழிவு அதிகம் என்பதால், மாநகராட்சிப் பகுதியில் தண்ணீர்ப் பற்றாக்குறை இல்லை. குப்பைக்கிடங்கு பிரச்னை என்பது பல ஆண்டுக்காலப் பிரச்னை. மாற்று இடம் பார்க்கப்பட்டுவருவதோடு, அதற்கான வேலைகளும் நடந்துவருகின்றன. பணிகளெல்லாம் வெளிப்படையாகத்தான் நடக்கின்றன. நான் எதையும் மறைத்துக் கூற மாட்டேன்.

கள நிலவரம்: திண்டுக்கல் நகரைச் சுற்றியுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அதை முறைப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை. நகருக்குள் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் திண்டுக்கல் மாநகராட்சிக்குத் தண்ணீர் கொடுத்தாலும், மாநகராட்சியின் பல பகுதிகளில் குடிநீர்ப் பிரச்னை இருக்கிறது. பல வார்டுகளில் அடிப்படை வசதிகள்கூட இல்லை.

அ.தி.மு.க-வில் திண்டுக்கல் சீனிவாசனே மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். அதேநேரத்தில், இவரின் தம்பி மகனும், திண்டுக்கல் மேற்கு ஒன்றியச் செயலாளருமான ராஜசேகரும் தொகுதியைக் குறிவைத்து காய்நகர்த்துகிறார். தி.மு.க-வில் திண்டுக்கல் நகர்மன்ற முன்னாள் தலைவர் நடராஜன், திண்டுக்கல் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பெருமாள்சாமி, கடந்த முறை போட்டியிட்ட பஷீர் அகமது ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள். தி.மு.க கூட்டணியிலுள்ள சி.பி.எம் கட்சியில், மாநிலக்குழு உறுப்பினர் பாண்டி, காங்கிரஸில் திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மணிகண்டன் ஆகியோரும் சீட்டுக்காக முயல்கிறார்கள். ‘சீனிவாசனைத் தோற்கடித்தே ஆக வேண்டும்’ என்ற முனைப்பில் தி.மு.க இருப்பதால், திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமாரைக் களம் இறக்கினாலும் ஆச்சர்யமில்லை என்கிறது தி.மு.க வட்டாரம். தொகுதிக்குள் திண்டுக்கல் சீனிவாசனுக்கு எதிர்ப்பலை இருப்பதால், இன்றைய சூழலில் தொகுதி தி.மு.க-வுக்குச் சாதகமாகவே இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - ஆயிரம் விளக்கு

2016 சட்டமன்றத் தேர்தலில், ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கு.க.செல்வம். கட்சியில் நீண்டகாலமாகவே ஓரங்கட்டப்பட்டிருந்த செல்வம், திடீரென பா.ஜ.க கட்சிக்கு அந்தர் பல்டி அடித்தார். டெல்லி வரை சென்று பா.ஜ.க தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவையும் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, அவரைக் கட்சியிலிருந்து நீக்கியது தி.மு.க தலைமை. எம்.எல்.ஏ பதவி போய்விடும் என்பதால், பா.ஜ.க-வில் இணைந்ததை அதிகாரபூர்வமாக செல்வம் அறிவிக்கவில்லை. இந்தநிலையில், தொகுதி எம்.எல்.ஏ-வின் செயல்பாடு குறித்து அறிய, செல்வத்தை எதிர்த்து 2016 தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் வளர்மதியிடம் பேசினோம். ``அதையெல்லாம் தொகுதி மக்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். நான் கருத்து சொல்ல விரும்பவில்லை” என்று முடித்துக்கொண்டார் வளர்மதி. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க இருப்பதால், செல்வத்துக்கு எதிராகக் கருத்து சொல்ல வளர்மதி விரும்பவில்லை என்று அவர் தரப்பிலிருந்து நமக்குத் தகவல் கிடைத்தது. மூன்றாமிடம் பிடித்த பா.ஜ.க வேட்பாளர் சிவலிங்கமும், நான்காவது இடத்தைப் பிடித்த அப்போதைய ம.தி.மு.க வேட்பாளரும், தற்போது அ.தி.மு.க-வில் இருப்பவருமான அம்பிகாபதியும் செல்வத்துக்கு எதிராகப் பேச மறுத்துவிட்டனர். அரசியல் ஆதரவு நிலைகளால், மக்களின் மீது அக்கறையற்று, தொகுதிப் பிரச்னைகள் குறித்துக்கூடப் பேச மறுத்துவிட்ட இவர்கள்தான், மீண்டும் தேர்தலில் நின்று மக்களிடம் ஓட்டுக் கேட்கச் செல்லவிருக்கிறார்கள்!

கு.க.செல்வம் - சிற்றரசு
கு.க.செல்வம் - சிற்றரசு

தொகுதியில், செல்வத்தின் செயல்பாடுகள் குறித்து யாருமே பேசவில்லை என்ற நிலையில், தி.மு.க தரப்பிடமே பேசினோம். சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் சிற்றரசு கூறுகையில், “சட்டசபையைப் பொறுத்தவரை இன்றும் கு.க.செல்வம் எங்கள் கட்சி எம்.எல்.ஏ-தான். அவர் செய்த சில பணிகளை நாங்கள் மறுக்கவில்லை. அதேநேரம், தொகுதி மக்களுக்கான முக்கிய திட்டங்களில் அவர் முனைப்பு காட்டவில்லை. தயாளு நகர் பகுதியின் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கவில்லை. வீட்டுவசதி, குடிசைமாற்று வாரிய வீடுகளில் வாழ்பவர்களின் அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்கவில்லை. மாம்பலம் கால்வாய் திட்டம் முழுமையாக முடியவில்லை. தொகுதியின் பல இடங்களில் கழிவுநீர் பொங்கிவழிகிறது. இதுபோல பல அடிப்படைப் பிரச்னைகளைக்கூட அவர் சரிசெய்யவில்லை” என்றார்.

தி.மு.க எம்.எல்.ஏ-வும் (கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்), பா.ஜ.க ஆதரவாளருமான கு.க.செல்வத்திடம் பேசினோம். “பாரதப் பிரதமர் மோடியின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ், சுமார் 3,500 பேருக்கு அடையாள அட்டை வாங்கித் தந்திருக்கிறேன். வீட்டுப் பெண்களுக்குச் சிறுதொழில் லோன், படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட உதவிகளைச் செய்துவருகிறேன். நெல்சன் மாணிக்கம் ரோட்டில் கூவத்தை இணைக்கும் சாலையின் மேம்பாலத்தைப் பழுது பார்த்திருக்கிறேன். வள்ளுவர் கோட்டம், மாம்பலம் கால்வாய்களை மறுசீரமைக்க நிதி வாங்கிக் கொடுத்துள்ளேன். தொகுதிக்குள் வரும் கூவம் ஆற்றைச் சீரமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. தி.மு.கழக எம்.எல்.ஏ-வாக தேர்தலில் ஜெயித்தேன். ஐந்து மாதங்களுக்கு முன்பு, உரிய விளக்கம் கேட்காமல் என்னை நீக்கிவிட்டனர். ஆனாலும், தொடர்ந்து தி.மு.க எம்.எல்.ஏ-வாகத்தான் இருந்துவருகிறேன்” என்றார்.

தமிழக அரசியலைப் பொறுத்தவரை, ஆயிரம் விளக்கு ஒரு ஸ்டார் தொகுதி. தி.மு.க-வின் அறிவாலயம், கோபாலபுரம், போயஸ் கார்டன் என்று பல்வேறு வி.வி.ஐ.பி-களின் வீடுகள் இந்தத் தொகுதியில்தான் அமைந்திருக்கின்றன. தி.மு.க-வில் சிற்றரசு சீட் எதிர்பார்க்கிறார். உதயநிதி இங்கு போட்டியிட வேண்டுமென்றும் தி.மு.க-வில் கோஷங்கள் எழும்புகின்றன. அ.தி.மு.க-வில் தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளர் ஆதிராஜாராம் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார். பா.ஜ.க-வில் கு.க.செல்வம், காயத்ரி ரகுராம் ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். தொகுதியில் தி.மு.க வலுவான கட்டமைப்பில் இருப்பதால், தி.மு.க-வின் கையே ஓங்கியிருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - ஈரோடு கிழக்கு

சொன்னாரே? - வி.சி.சந்திரகுமார், தி.மு.க

`தொழிற்சாலைகளுக்கான பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்’, `புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்கப்படும்’ போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அரசு மருத்துவமனை அருகே போடப்பட்டுள்ள மேம்பாலம் யாருக்கும் பயன்படாமல் கிடக்கிறது. ஈரோடு-பெருந்துறை சாலை, மேட்டூர் சாலை மேம்பாலக் கோரிக்கைகளும் நிறைவேறவில்லை. பாதாளச் சாக்கடைத் திட்டங்கள் தேங்கி நிற்கின்றன. அரசு கான்ட்ராக்ட்டுகளையெல்லாம் தன் மகனுக்கே எம்.எல்.ஏ கொடுப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

சந்திரகுமார் - தென்னரசு
சந்திரகுமார் - தென்னரசு

செய்தேனே! - கே.எஸ்.தென்னரசு, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

ஈரோடு மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்காக, 485 கோடியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு முடிவடையும் தறுவாயில் இருக்கின்றன. தொழிற்சாலைகளுக்கான பொதுச் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக 26 ஏக்கர் நிலம் வாங்கியிருக்கிறோம். ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனையை 10 மாடிகள்கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற வேலைகள் நடந்துவருகின்றன. ஈரோடு பேருந்து நிலைய விரிவாக்க வேலைகளை விரைவில் ஆரம்பிக்கவிருக்கிறோம்.

கள நிலவரம்: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒதுக்கப்பட்ட திட்டங்களைத் தவிர, பெரிதாக எந்தத் திட்டமும் தொகுதிக்கு வரவில்லை. மக்கள் ஏதாவது பிரச்னை எனக் குரலெழுப்பினால், ஸ்பாட்டுக்குச் செல்லும் எம்.எல்.ஏ தென்னரசு, ‘போன எலெக்‌ஷன்ல நீங்கல்லாம் எனக்கு ஓட்டே போடலையே!’ என்று பேசி, அதிருப்தியை வளர்த்துவைத்திருக்கிறார். அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ தென்னரசு மீண்டும் சீட் கேட்கிறார். ஈரோடு மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ கே.வி.ராமலிங்கம், பெரியார் நகர் பகுதிச் செயலாளர் மனோகரன் ஆகியோரும் ரேஸில் இருக்கிறார்கள். தி.மு.க-வில் வி.சி.சந்திரகுமார், மாவட்டத் துணைச் செயலாளர் செந்தில்குமார், கடந்த முறை மேற்குத் தொகுதியில் களமிறங்கிய முத்துசாமி ஆகியோர் சீட் எதிர்பார்க்கின்றனர். எம்.எல்.ஏ மீதான அதிருப்தி, உட்கட்சிப் பூசல் போன்றவற்றால், இரட்டை இலையை வீழ்த்தி உதயசூரியன் உதிக்க வாய்ப்பிருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - ஈரோடு மேற்கு

சொன்னாரே? - முத்துசாமி, தி.மு.க

`சாயக் கழிவுநீர்ப் பிரச்னையைத் தீர்ப்பேன்’ என்றார். அதற்கான எந்தத் தீர்வும் கொண்டுவரவில்லை. ஓடைப் புறம்போக்கில் குடியிருந்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு மாற்றிடம் கொடுக்காமல், நோட்டீஸ் கொடுத்து, வீட்டை காலிசெய்யச் சொல்லியிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. `சோலார் பகுதியில் புறநகர்ப் பேருந்து நிலையம் அமைக்கப்படும்’ என்ற கோரிக்கை நிறைவேறாமல் இருக்கிறது.

முத்துசாமி - ராமலிங்கம்
முத்துசாமி - ராமலிங்கம்

செய்தேனே! - கே.வி.ராமலிங்கம், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

காளிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவுகள் கலக்காமலிருக்க, 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாய்க்கால் சீரமைக்கப்பட்டு கான்கிரீட் தளம் போடப்பட்டிருக்கிறது. குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடில்லாதவர்களுக்கு 4,000 வீடுகள் கட்டிக்கொடுத்திருக்கிறோம். ஊராட்சிக்கோட்டை குடிநீர்த் திட்டப்பணிகள் 95 சதவிகிதம் முடிந்துவிட்டன. சத்தியமங்கலம் சாலையை நான்குவழிச் சாலையாக மாற்றியிருக்கிறோம். சென்னிமலை, அவல்பூந்துறை சாலைகளையும் விரிவுபடுத்தியிருக்கிறோம்.

கள நிலவரம்: குடிநீர்த் திட்டத்தைத் தவிர, சொல்லிக்கொள்ளும்படி பெரிய திட்டம் எதுவும் தொகுதிக்குக் கொண்டுவரப்படவில்லை. தொகுதியின் பிரதான கோரிக்கையான சாயக்கழிவுப் பிரச்னைக்கு எந்தத் தீர்வும் எட்டப்படவில்லை. அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ-வான ராமலிங்கம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். கூட்டணிக் கட்சியான த.மா.கா-வில் யுவராஜாவும் சீட்டுக்கான போட்டியிலிருக்கிறார். தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் முத்துசாமி, மாநகரச் செயலாளர் சுப்பிரமணி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மணிராசு, குமாரசாமி, எல்லப்பாளையம் சிவக்குமார் எனப் பலரும் முட்டி மோதுகிறார்கள். பெரிதாக வளர்ச்சிப் பணிகள் நடக்காதது, கோஷ்டிப் பூசல் ஆகியவை அ.தி.மு.க-வுக்குத் தடையாக இருக்கின்றன. தொகுதி தி.மு.க-வுக்குச் சாதகமாக இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - கும்பகோணம்

சொன்னாரே? - ரத்னா சேகர், அ.தி.மு.க

`கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க முயல்வேன்’ என்றவர், அதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லை. மோசமான சாலைகள், குடிநீர்த் தட்டுப்பாடு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகளைத் தீர்க்க கவனம் செலுத்தவில்லை. கும்பகோணத்துக்குத் தேவையான திட்டங்களை ஆளும் அ.தி.மு.க அரசு மூலமாக நாங்கள்தான் செய்துவருகிறோம்.

ரத்னா சேகர் - சாக்கோட்டை அன்பழகன்
ரத்னா சேகர் - சாக்கோட்டை அன்பழகன்

செய்தேனே! - சாக்கோட்டை அன்பழகன், எம்.எல்.ஏ., தி.மு.க

அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில், 50 படுக்கை வசதிகள்கொண்ட புதிய கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளேன். அரசு மகளிர் கல்லூரி, அரசினர் கலைக் கல்லூரியில் 24 வகுப்பறைகள் கட்டித் தந்துள்ளேன். 90 இடங்களில் ஆழ்குழாய் அமைத்து, சின்டெக்ஸ் டேங்க் மூலம் குடிநீர் வசதி, தார்ச்சாலைகள், பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல பணிகளைச் செய்து கொடுத்திருக்கிறேன். எம்.எல்.ஏ நிதியைத் தவிர, என் சொந்த நிதியிலும் பல பணிகளைச் செய்துள்ளேன். கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்கும் விஷயத்தில், ஆளும் அ.தி.மு.க அரசுதான் துரோகம் செய்துவிட்டது.

கள நிலவரம்: தி.மு.க சார்பில் போட்டியிட சிட்டிங் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுப.தமிழழகன் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வில் ரத்னா சேகர், இராமநாதன், மேற்கு ஒன்றியச் செயலாளர் என்.ஆர்.வி.செந்தில், கிழக்கு ஒன்றியச் செயலாளர் அறிவழகன் ஆகியோர் சீட்டுக்காக முட்டி மோதுகின்றனர். பா.ஜ.க சார்பில் போட்டியிட நாராயணி சிட்பண்ட்ஸ் உரிமையாளர் கார்த்திகேயன் காய்நகர்த்துகிறார். அ.தி.மு.க நிர்வாகிகள் மக்களுடன் தொடர்பற்று இருப்பதும், தி.மு.க எம்.எல்.ஏ மக்களுடன் நெருக்கமாக இருப்பதும் தேர்தலில் பிரதிபலிக்கும். கும்பகோணத்தை மீண்டும் தி.மு.க-வே வசமாக்கிக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் தென்படுகின்றன!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - திருவையாறு

சொன்னாரே? - எம்.ஜி.எம்.சுப்ரமணியன், அ.தி.மு.க

`தொகுதியில் தொழிற்சாலைகள் அமைத்து வேலைவாய்ப்பை உருவாக்குவேன்’ என்றவர், செய்யவில்லை. வெற்றிலைகளைப் பாதுகாப்பதற்கான குளிர்ப்பதனக் கிடங்கு, அரசு வெற்றிலை ஏல மையம் உள்ளிட்ட வாக்குறுதிகளும் கண்டுகொள்ளப்படவில்லை. செங்கிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில், குடிநீர்த் தட்டுப்பாடு நிலவிவருகிறது. திருவையாறு தொகுதியைவிட்டு தஞ்சை நகரப் பகுதிக்குள் குடியேறிவிட்டதால், தொகுதிக்குள் எம்.எல்.ஏ வருவதேயில்லை.

சுப்ரமணியன் - சந்திரசேகரன்
சுப்ரமணியன் - சந்திரசேகரன்

செய்தேனே! - துரை.சந்திரசேகரன், எம்.எல்.ஏ., தி.மு.க

இராஜேந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆற்காட்டில் ரேஷன் கடைக் கட்டடம்... கண்டியூர், மாத்தூர் மேற்கில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்துக் கொடுத்துள்ளேன். நாகத்தியில் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் புதிய கட்டடம், அரசுப் பள்ளிகளுக்குச் சுற்றுச்சுவர், உபகரணங்கள், ஆர்.ஓ வாட்டர் உள்ளிட்ட வசதிகளைச் செய்து தந்திருக்கிறேன். வெற்றிலை குளிர்ப்பதனக் கிடங்கு அமைக்க, சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன். திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி புறவழிச்சாலை, தென்பெரம்பூரில் உயர்மட்ட பாலம், பூதலூரில் அரசு கலைக் கல்லூரி என எதையும் இந்த அரசு செய்து கொடுக்கவில்லை.

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ-க்களான எம்.ஜி.எம்.சுப்பிரமணியன், ரெத்தினசாமி, ஒன்றியச் செயலாளர்கள் இளங்கோ, நீலமேகம் ஆகியோர் சீட் கேட்கின்றனர். கூட்டணிக் கட்சியான பா.ஜ.க சார்பில் போட்டியிட, தஞ்சை வடக்கு மாவட்டப் பொதுச்செயலாளரான பூண்டி வெங்கடேசன் காய்நகர்த்துகிறார். தி.மு.க-வில் துரை.சந்திரசேகரன், பூதலூர் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் கல்லணை செல்லக்கண்ணு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்தின் தம்பி ராஜ்குமார் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வின் வாக்குகளை அ.ம.மு.க பிரிக்கும் சூழல் உள்ளது. கூட்டணி பலம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது தி.மு.க-வுக்கு சாதகமான சூழலே தொகுதியில் நிலவுகிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism