Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் ஜி.பாஸ்கரன்

அமைச்சர் ஜி.பாஸ்கரன்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் ஜி.பாஸ்கரன்

தொகுதி முழுவதுமுள்ள கண்மாய், குளங்களைத் தூர்வாரி மராமத்துப் பணிகளைச் செய்துள்ளேன். காவிரி, குண்டாறு திட்டம் தீட்டியிருக்கிறோம்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் ஜி.பாஸ்கரன்

தொகுதி முழுவதுமுள்ள கண்மாய், குளங்களைத் தூர்வாரி மராமத்துப் பணிகளைச் செய்துள்ளேன். காவிரி, குண்டாறு திட்டம் தீட்டியிருக்கிறோம்.

Published:Updated:
அமைச்சர் ஜி.பாஸ்கரன்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் ஜி.பாஸ்கரன்

என்ன செய்தார் அமைச்சர்? - ஜி.பாஸ்கரன், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர், சிவகங்கை

‘சிவகங்கைச் சீமை’ என்று சொல்லும் அளவுக்கு, வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியான சிவகங்கை தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சரான ஜி.பாஸ்கரன். தொகுதிக்குள் அவரின் செயல்பாடுகள் எப்படி?

சொன்னாரே? - குணசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட நறுமணப்பூங்காவை, இதுவரை திறக்க, அமைச்சர் பாஸ்கரன் ஏற்பாடு செய்யவில்லை. `அரசுப் பொறியியல் கல்லூரி, அரசுச் சட்டக் கல்லூரிகள் கொண்டுவருவேன்’ என்றார். ஆனால், ஏற்கெனவே இருந்த கல்வி நிலையங்களைக்கூட மேம்படுத்தவில்லை. பாதாளச் சாக்கடைத் திட்டம் இன்னும் முடிக்கப்படாமல் கிடக்கிறது. சிவகங்கையில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டுவரவும் முயலவில்லை. ஜெயலலிதா இருந்தபோது, அரசனூரில் ஆயிரம் ஏக்கர் பரப்பில் தொழிற்பேட்டை கொண்டுவர முயற்சி எடுத்தோம். அந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. ஏற்கெனவே வறட்சியாக இருக்கும் சிவகங்கையை மேலும் பின்னோக்கி அழைத்துச் சென்றிருக்கிறார் அமைச்சர் பாஸ்கரன்.

செய்தேனே! - அமைச்சர் ஜி.பாஸ்கரன்

தொகுதி முழுக்க கிராமங்களில் ரேஷன் கடைகள், பொது அரங்கங்கள் கட்டிக்கொடுத்திருக்கிறேன். குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க ரூ.1,800 கோடியில் டெண்டர் ஓகே ஆகிவிட்டது. தொகுதி முழுவதுமுள்ள கண்மாய், குளங்களைத் தூர்வாரி மராமத்துப் பணிகளைச் செய்துள்ளேன். காவிரி, குண்டாறு திட்டம் தீட்டியிருக்கிறோம். அதனால், சிவகங்கையில் தண்ணீர்ப் பிரச்னை முழுமையாக நீங்கும். அரசுக் கல்லூரிகள் அமைப்பது குறித்து அரசிடம் கேட்டிருக்கிறேன். தொழிற்பேட்டை அமைக்க அரசனூர் பகுதியில் இடம் தேர்வுசெய்யப்பட்டு, சர்வே பணி முடிந்துவிட்டது. கிராபைட் எடுக்கும் பணிகளும் செயல்படுத்தப்படும். நறுமணப்பூங்கா பணிகள் முடிந்துவிட்டன. அங்கு தொழில் தொடங்குவது குறித்து கலெக்டர் தலைமையில் கூட்டம் போடவிருக்கிறோம். ஆதிதிராவிடர்கள் உள்ளிட்ட ஏழை எளிய மக்களுக்கு பட்டா கொடுத்துவருகிறோம்.

ஜி.பாஸ்கரன், குணசேகரன்
ஜி.பாஸ்கரன், குணசேகரன்

கள நிலவரம்: வைகை, பெரியாறு பாசனப் பகுதியாக இருந்தாலும், மழையை நம்பித்தான் விவசாயம் நடைபெறுகிறது. தொகுதியில் முறையான பேருந்து வசதி இல்லாத கிராமங்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. அ.தி.மு.க சார்பில் மீண்டும் களமிறங்க அமைச்சர் பாஸ்கரன் ஆயத்தமாகிறார். அமைச்சரின் மகன் கருணாகரன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் ஆசை, என்.எம்.ராஜா, பொன்மணி பாஸ்கரன், முருகானந்தம் எனப் பலரும் சீட்டுக்காக முயல்கிறார்கள். கூட்டணிக் கட்சியான பா.ஜ.க சார்பில், சமீபத்தில் அக்கட்சியில் இணைந்த மேப்பல் சக்தி காய்நகர்த்துகிறார். தி.மு.க-வில் நகரச் செயலாளர் துரை ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளர் சேங்கை மாறன், ஒன்றிய நிர்வாகிகள் ஜெயராமன், முத்துராமலிங்கம் எனப் பலரும் சீட் கேட்கிறார்கள். அ.தி.மு.க-வில் கோஷ்டிப் பூசல் உச்சத்தில் இருப்பதால், அமைச்சரின் மகன் கருணாகரனுக்குக் கண்டிப்பாகச் சீட் கொடுக்கக் கூடாது என்று தலைமைக்கு ஓலை அனுப்பிவருகிறார்கள். சிவகங்கை அ.தி.மு.க-வில் பல பிரச்னைகள் இருந்தாலும், தி.மு.க-வில் வலுவான வேட்பாளர்கள் இல்லாததால், தொகுதியில் இழுபறியான சூழலே நிலவுகிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - வேளச்சேரி

சொன்னாரே? - முனுசாமி, அ.ம.மு.க (2016 தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்)

`வேளச்சேரி ஏரியைச் சுற்றுலாத் தலமாக்குவேன்; குடிநீர், கழிவுநீர்ப் பிரச்னையைச் சரிசெய்வேன்’ என்றார். எதையும் செய்யவில்லை. தொகுதிக்குள் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படாததால், மழைநீர் தேங்கி நிற்கிறது. தொகுதிக்குள்ளிருக்கும் மீனவ கிராமங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. வேளச்சேரி விஜயநகர் பகுதி மேம்பாலப் பணிகள் நகரவேயில்லை. தொகுதி மக்களை எம்.எல்.ஏ சந்திப்பதே இல்லை.

செய்தேனே! - வாகை சந்திரசேகர், எம்.எல்.ஏ., தி.மு.க

நான்கு ரேஷன் கடைகள், சில பள்ளிகளுக்கு வகுப்பறைக் கட்டடங்கள் கட்டித் தந்திருக்கிறேன். பள்ளிகளுக்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்திருக்கிறேன். வேளச்சேரி விஜயநகர், டான்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. `வேளச்சேரி ஏரியைச் சுற்றுலாத் தலமாக்க வேண்டும்’ எனத் தொடர்ந்து சட்டசபையில் பேசியிருக்கிறேன். வேளச்சேரி ஏரியில், கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன். மீனவ கிராம மக்களுக்காக மீன் மார்க்கெட் கொண்டுவருவது தொடர்பாக சட்டப்பேரவையில் பேசியிருக்கிறேன்.

முனுசாமி, வாகை சந்திரசேகர்
முனுசாமி, வாகை சந்திரசேகர்

கள நிலவரம்: சென்னையில் வளர்ந்துவரும் பகுதிகளில் ஒன்றான வேளச்சேரியில், இன்னும் பல அடிப்படை வசதிகள் செய்துதரப்படாமலிருக்கின்றன. அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் அசோக், பகுதிச் செயலாளர் மூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் சரவணன் ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். கூட்டணியிலுள்ள பா.ஜ.க சார்பில் களமிறங்க டால்பின் ஸ்ரீதர் ஆயத்தமாகிறார். தி.மு.க-வில் வர்த்தக அணியைச் சேர்ந்த பாலசுந்தரம், செந்தில் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். கூட்டணியிலிருக்கும் வி.சி.க-வின் எஸ்.எஸ்.பாலாஜியும் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார். இன்றைய சூழலில், தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் நேரடியாகக் களமிறங்கினால் கடும்போட்டி நிலவும்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - சோழிங்கநல்லூர்

சொன்னாரே? - கே.பி.கந்தன், அ.தி.மு.க

`இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவேன்’, `பாலம் கட்டுவேன்’ என்பவை போன்ற எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட பத்து கோடி ரூபாயைக்கூட சரியாகப் பயன்படுத்தவில்லை. குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் நிலவும் கழிவுநீர்ப் பிரச்னைகளைச் சரிசெய்யவில்லை. ஊராட்சிப் பகுதிகளில் மலைபோல் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்ற எம்.எல்.ஏ என்ற முறையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செய்தேனே! - அரவிந்த் ரமேஷ், எம்.எல்.ஏ., தி.மு.க

பெருங்குடி - கந்தன்சாவடி, சோழிங்கநல்லூர் - காரப்பாக்கம் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவுறும் தறுவாயிலுள்ளன. நீர்நிலைகளை பலப்படுத்தும்விதமாகக் கரைகளைக் கட்டியிருக்கிறேன். தொகுதியிலுள்ள ஒவ்வொரு வார்டுக்கும் 30 முறைக்குக் குறையாமல் விசிட் செய்து, குறைகளைக் களைந்திருக்கிறேன். ஊராட்சிப் பகுதிகளில் தேங்கும் குப்பைகளை அகற்றுவதற்கும், கண்ணகி நகர், பெரும்பாக்கம், எழில் நகர் உள்ளிட்ட குடிசை மாற்று வாரியக் குடியிருப்புப் பகுதிகளில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கிறேன். ஆளும் தரப்பின் போதிய ஒத்துழைப்பு இல்லாததால், நிலைமையை முழுவதுமாகச் சரிசெய்ய முடியவில்லை.

கே.பி.கந்தன் - அரவிந்த் ரமேஷ்
கே.பி.கந்தன் - அரவிந்த் ரமேஷ்

கள நிலவரம்: ஐ.டி நிறுவனங்களும், குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளும் நிறைந்திருக்கும் இத்தொகுதியில், கழிவுநீர்ப் பிரச்னையும், குடிநீர்ப் பிரச்னையும் இன்னும் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன. தி.மு.க சார்பில் மீண்டும் களமிறங்க சிட்டிங் எம்.எல்.ஏ அரவிந்த் ரமேஷ், பரங்கிமலை ஒன்றிய நிர்வாகி மேடவாக்கம் என்.ரவி ஆகியோர் காய்நகர்த்துகிறார்கள். அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் கே.பி.கந்தன், லியோ சுந்தரம் ஆகியோர் சீட்டுக்காக முயல்கிறார்கள். தொகுதியில் வலுவான கட்டமைப்பை வைத்திருப்பதால் தி.மு.க-வின் கையே இப்போது ஓங்கியிருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - திருத்துறைப்பூண்டி

சொன்னாரே? - உமா மகேஸ்வரி, அ.தி.மு.க

`கல்விக்கடன், விவசாயக் கடன்களை ரத்துசெய்ய முயல்வேன்’ என்றார். ஆனால், அதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கஜா புயல் பாதிப்பின்போதுகூட, தொகுதி மக்களை நேரில் சந்தித்து உதவிகள் எதுவும் செய்யவில்லை. மக்களின் அடிப்படைத் தேவைகள் எதையுமே ஆடலரசன் நிறைவேற்றவில்லை. கிராமப்புறச் சாலைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. அவற்றை மேம்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை.

செய்தேனே! - ஆடலரசன் எம்.எல்.ஏ., தி.மு.க

திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகே, பேருந்து நிறுத்தம் கட்டிக் கொடுத்திருக்கிறேன்.

20-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வசதி செய்து தந்திருக்கிறேன். கோட்டூர் ஒன்றியத்தில் 25-க்கும் மேற்பட்ட பகுதிகளில், குடிநீர் வசதிக்காக கைபம்ப்புகள் மற்றும் சின்டெக்ஸ் டேங்க் அமைத்திருக்கிறேன். திருத்துறைப்பூண்டி, தம்பிக்கோட்டை, எடையூர் ஆகிய பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், மூன்று அங்கன்வாடிக் கட்டடங்கள் கட்டியுள்ளேன். அரசு மருத்துவமனைக்கு 50 லட்சம் ரூபாய் செலவில் நவீன கருவிகள் வாங்கிக்கொடுத்திருக்கிறேன்.

உமா மகேஸ்வரி, ஆடலரசன்
உமா மகேஸ்வரி, ஆடலரசன்

கள நிலவரம்: தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பல பணிகளை ஆடலரசன் செய்திருந்தாலும், குடிநீர்த் தட்டுப்பாடு, கிராமப்புறச் சாலைகள் மேம்பாடு, நீர்நிலைகளை ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பல முக்கியப் பிரச்னைகளைத் தீர்க்காதது தொகுதி மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க-வில் மீண்டும் ஆடலரசன் சீட் கேட்கிறார். முன்னாள் எம்.பி-யான ஏ.கே.எஸ்.விஜயன், சிவக்குமார் ஆகியோரும் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தொகுதியை எதிர்பார்க்கிறது. அ.தி.மு.க-வில் உமா மகேஸ்வரி, பாலதண்டாயுதம், வழக்கறிஞர் செல்லபாண்டியன், எஸ்.ஜி.எம்.ரமேஷ், சுரேஷ் ஆகியோர் சீட்டுக்காக முட்டி மோதுகிறார்கள். கட்டமைப்புரீதியாக வலுவாக இருப்பதால், தி.மு.க கூட்டணியே இத்தொகுதியில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகளைக்கொண்டிருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - மன்னார்குடி சொன்னாரே?

சொன்னாரே? - எஸ்.காமராஜ், அ.ம.மு.க (2016 தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்)

மன்னார்குடியை ‘மின்னும் மன்னையாக மாற்றுவேன்’ என்ற எம்.எல்.ஏ-வின் வாக்குறுதியில் கொஞ்சம்கூட நிறைவேற்றவில்லை. சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. மன்னார்குடி பேருந்து நிலையம், புறநகர்ப் பகுதியில் புதிய பேருந்து நிலையம், மன்னார்குடி ரிங் ரோடு, பாதாளச் சாக்கடைத் திட்டம் என எல்லாம் முடங்கிக்கிடக்கின்றன. பாமணி உர ஆலை நலிவடைந்து கிடக்கிறது. நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்படவே இல்லை.

செய்தேனே! - டி.ஆர்.பி.ராஜா, எம்.எல்.ஏ., தி.மு.க

வடுவூரில், கிராமப்புறப் பல்நோக்கு மின்னொளி உள்விளையாட்டரங்கம் கொண்டுவந்துள்ளேன். உள்ளிக்கோட்டையில் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க, குளங்களை இணைத்துள்ளேன். மன்னார்குடி அரசு கலைக்கல்லூரியில் கலையரங்கம், புதிய வகுப்பறை உள்ளிட்ட வசதிகளைச் செய்துகொடுத்துள்ளேன். பல கிராமங்களில் வாய்க்கால்களை என் சொந்தச் செலவில் தூர்வாரியுள்ளேன். கஜா புயல் பாதிப்பின்போது, தொடர்ந்து களப்பணியாற்றி உதவியதோடு விவசாயிகளுக்குப் பயிர் இன்ஷூரன்ஸும் பெற்றுத் தந்துள்ளேன். நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம், மன்னார்குடி ரிங் ரோடு, பாதாளச் சாக்கடைத் திட்டங்களுக்காகச் சட்டமன்றத்தில் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறேன்.

எஸ்.காமராஜ், டி.ஆர்.பி.ராஜா
எஸ்.காமராஜ், டி.ஆர்.பி.ராஜா

கள நிலவரம்: தி.மு.க சார்பில் மீண்டும் போட்டியிட டி.ஆர்.பி.ராஜா ஆயத்தமாகிறார். தலையாமங்கலம் பாலு, மீனாட்சி சூரியபிரகாஷ், சோழராஜன், தேவதாஸ் உள்ளிட்டவர்களும் தி.மு.க-வில் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜின் அக்காள் மகன் ஆர்.ஜி.குமார், அமைச்சரின் மகன் இனியன் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள். அ.ம.மு.க சார்பில் எஸ்.காமராஜ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய சூழலில், தொகுதி தி.மு.க-வுக்குச் சாதகமாகவே உள்ளது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அவிநாசி

சொன்னாரே? - ஆனந்தன், தி.மு.க

`அன்னூர் புறவழிச்சாலை அமைப்பேன்; பள்ளிகளைத் தரம் உயர்த்துவேன்’ என்றார். எதையும் நிறைவேற்றவில்லை. அன்னூர் பகுதியில் 15 நாளைக்கு ஒரு முறைதான் குடிநீர் வருகிறது. இந்தப் பிரச்னையைச் சரிசெய்ய எந்த முயற்சியும் செய்யவில்லை. அவிநாசி - அத்திக்கடவு திட்டத்தில் பல குளம், குட்டைகள் விடுபட்டிருக்கின்றன. அன்னூர், அவிநாசி மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் பிரசவம், அறுவை சிகிச்சைக்கு கோவை செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.

செய்தேனே! - தனபால், எம்.எல்.ஏ., சட்டப்பேரவை சபாநாயகர், அ.தி.மு.க

அவிநாசியில் அரசுக் கலைக்கல்லூரி, தீயணைப்பு நிலையம், அன்னூரில் பத்திரப்பதிவு அலுவலகம், தாலுகா அலுவலகம், மின் மயானம் கொண்டுவந்திருக்கிறேன். குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 1,200 வீடுகள் கட்டிக்கொடுத்திருக்கிறோம். ஆறு அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அவிநாசி, அன்னூர் அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றன. ரூ.257 கோடியில் அன்னூர் - அவிநாசி பேரூராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டுவந்திருக்கிறோம். தொகுதி முழுக்க சுமார் ரூ.100 கோடியில் தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனந்தன் - தனபால்
ஆனந்தன் - தனபால்

கள நிலவரம்: எம்.எல்.ஏ-வும், சபாநாயகருமான தனபால் தொகுதி மக்களிடம் இறங்கிச் செல்லாதது, சொந்த சமுதாயத்தினரே அதிருப்தியில் இருப்பது போன்றவை அ.தி.மு.க-வுக்கு மைனஸாக இருக்கிறது. அ.தி.மு.க சார்பில் களமிறங்க சபாநாயகர் தனபால், கோவை மாவட்ட ஊராட்சித் துணைத் தலைவர் அமுல் கந்தசாமி ஆகியோர் காய்நகர்த்துகின்றனர். தி.மு.க-வில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றிவாய்ப்பைத் தவறவிட்ட அன்னூர் வடக்கு ஒன்றியக் கழகப் பொறுப்பாளர் ஆனந்தன் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். தி.மு.க கூட்டணியிலுள்ள ஆதித்தமிழர் பேரவையும் அவிநாசி தொகுதியைக் கேட்கிறது. தற்போதைய நிலவரப்படி தொகுதியில் இரு திராவிடக் கட்சிகளும் சம பலத்தில் இருப்பதால், கடுமையான போட்டி நிலவுகிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - தாராபுரம்

சொன்னாரே? - சத்தியபாமா, அ.தி.மு.க

முருங்கைச் சாகுபடி அதிகமுள்ள மூலனூர் பகுதியில், `முருங்கையை மதிப்புக்கூட்ட தொழிற்சாலை கொண்டு வருவேன்’ என்றார். `அரசுக் கலைக்கல்லூரி கொண்டுவருவேன்; அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்துவேன்’ என்றார். எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. அவருடைய சொந்த கிராமமான வீராச்சிமங்கலத்தில்கூட அடிப்படைப் பிரச்னைகள் சரிசெய்யப்படவில்லை.

செய்தேனே! - வி.எஸ்.காளிமுத்து, எம்.எல்.ஏ., காங்கிரஸ்

குடிநீருக்காகத் தொகுதி முழுக்க 120 இடங்களில் போர் போட்டுக் கொடுத்ததோடு, மேல்நிலைக் குடிநீர்த் தொட்டிகளும் கட்டிக்கொடுத்திருக்கிறேன். ஆத்துக்கால்புதூரில் ரூ.10.5 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டுவருகிறது. ரூ.6 கோடியில் அரசுப் பள்ளிகளை நவீனப்படுத்தியிருக்கிறேன். தொகுதி முழுக்க சுமார் 100 கோடி செலவில் சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. தாராபுரத்துக்கு கலைக்கல்லூரி, இன்ஜினீயரிங் கல்லூரி கேட்டு சட்டசபையில் மூன்று முறை பேசியிருக்கிறேன்.

சத்தியபாமா, வி.எஸ்.காளிமுத்து
சத்தியபாமா, வி.எஸ்.காளிமுத்து

கள நிலவரம்: கோடைக்காலங்களில் கடுமையான குடிநீர்ப் பிரச்னை, அமராவதி ஆற்றில் நடைபெறும் மணல் கொள்ளை ஆகியவை தொகுதியில் பிரதான பிரச்னைகளாக இருக்கின்றன. அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ பொன்னுசாமி, அவருடைய மனைவி சத்தியபாமா, மாவட்ட கவுன்சிலர் பானுமதி கருணாகரன் ஆகியோர் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள். தி.மு.க-வில் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், பொறியாளர் அணி மாவட்டத் துணை அமைப்பாளர் பாப்புக் கண்ணன் சீட்டுக்கான ரேஸில் இருக்கின்றனர். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ காளிமுத்து மீண்டும் சீட் கேட்கிறார். வலுவில்லாத கட்டமைப்பு, கோஷ்டிப் பூசல், மணல் கடத்தல் புகார் உள்ளிட்டவையால் அ.தி.மு.க பலவீனப்பட்டு நிற்கிறது. இன்றைய சூழலில், தி.மு.க கூட்டணிக்குச் சாதகமாகவே தொகுதி இருக்கிறது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் ஜி.பாஸ்கரன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism