மற்ற எபிசோடுகள்
Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
அமைச்சர் ஜெயக்குமார்

மீடியாக்களுக்கு முன் ‘ஆல் இன் ஆலாக’ அனைத்துக் கேள்விகளையும் கூலாக டீல் செய்யும் ஜெயக்குமார், தன் தொகுதியை எப்படி வைத்திருக்கிறார்?

என்ன செய்தார் அமைச்சர்? - மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரம்

முதன்முறை போட்டியிட்டபோதே எம்.எல்.ஏ-வானது மட்டுமல்லாமல், 31 வயதிலேயே அமைச்சராகும் அதிர்ஷ்டமும் ஜெயக்குமாருக்கு வாய்த்தது. ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகும் வாய்ப்பையும் வழங்கினார் ஜெயலலிதா. இடையில், 2011 தேர்தலுக்குப் பிறகு, சபாநாயகராக்கி அழகுபார்த்தார். ஆனால், ஜெயக்குமாருக்குப் போதாத காலம் ஒரு போஸ்டர் வடிவில் வந்தது. பதவி பறிக்கப்பட்டு சில காலம் ஓரங்கட்டப்பட்டார். பிறகு, 2014 தேர்தலிலேயே அவர் மகனுக்கு எம்.பி சீட், 2016 தேர்தலில் அவருக்கு எம்.எல்.ஏ சீட்டையும் மீன்வளத்துறை அமைச்சர் பதவியையும் வழங்கினார் ஜெயலலிதா. மீடியாக்களுக்கு முன் ‘ஆல் இன் ஆலாக’ அனைத்துக் கேள்விகளையும் கூலாக டீல் செய்யும் ஜெயக்குமார், தன் தொகுதியை எப்படி வைத்திருக்கிறார்?

சொன்னாரே?- சையத் ரபி பாஷா, எஸ்.டி.பி.ஐ

கண்ணன் தெரு பென்சில் ஃபேக்டரி அருகிலிருக்கும் ரயில்வே லெவல் கிராஸிங்கால் போக்குவரத்து நெரிசலில் அவதிப்படும் மின்ட் மார்டன் சிட்டி, சீனிவாசபுரம், போஜராஜன் நகர், பிஸ்மில்லா நகர், பென்சில் ஃபேக்டரி, கீரைத்தோட்டம் ஏரியா மக்களுக்காக, `சுரங்கப்பாதை அமைத்துத் தருகிறேன்’ என வாக்குறுதி கொடுத்த ஜெயக்குமார், இன்றுவரை நிறைவேற்றவில்லை. 53-வது வார்டு, 48-வது வார்டு உள்ளிட்ட பல வார்டுகளுக்கு சாலைப் பிரச்னைக்காக மனு கொடுத்தும் எதுவும் நடக்கவில்லை. ராயபுரம் தொகுதியில் பிரிட்டிஷ் காலத்தில் போடப்பட்ட டிரைனேஜ்கள்தான் இன்னமும் இருக்கின்றன; அவையும் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை.

செய்தேனே!- ஜெயக்குமார், அமைச்சர்

சென்னை மீன்பிடித் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கிறது. மாநகராட்சியின் மூலம் சாலைகள், பூங்காக்களைப் பராமரிப்பு செய்திருக்கிறேன். போக்குவரத்துப் பிரச்னைகளைச் சரிசெய்ய மெட்ரோ ரயில் சேவையை வடசென்னைக்குக் கொண்டுவந்திருக்கிறேன். தமிழகத்திலேயே எவ்வளவு பெரிய மழை, வெள்ளம் வந்தாலும் என் தொகுதியில் மின்தடை என்பதே இருக்காது. ஸ்டான்லி மருத்துவமனையில் பெருவாரியான கட்டடங்கள் என் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டவை. கொரோனா காலத்தில், என் சொந்தச் செலவில் 52,000 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, மருந்துகள் கொடுத்திருக்கிறேன். பென்சில் ஃபேக்டரி ரயில்வே சுரங்கப்பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன.

ஜெயக்குமார், சையத் ரபி பாஷா
ஜெயக்குமார், சையத் ரபி பாஷா

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரம் ஆர்.மனோ ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். தி.மு.க-வில் இளைய அருணா, ந.மனோகரன் ஆகியோர் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள். தொகுதியின் அடிப்படைப் பிரச்னைகள் சரிசெய்யப்படவில்லை என்கிற விமர்சனத்தால், அமைச்சர் ஜெயக்குமார் மீது அதிருப்தி நிலவுகிறது. சீன இன்ஜின் படகுகளால் ஏற்படும் மோதல், காசிமேடு மீன்பிடி துறைமுக இடமாற்ற விவகாரம் உள்ளிட்டவை ஜெயக்குமார் மீது தொகுதிக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ராயபுரத்தில் தி.மு.க-வின் கட்டமைப்பு வலுவாக இருப்பதாலும், ஜெயக்குமாருக்குக் கட்சிக்குள்ளேயே எதிரிகள் அதிகம் முளைத்திருப்பதாலும், தொகுதியில் உதயசூரியன் உதிப்பதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன!

ராணிப்பேட்டை

சொன்னாரே? - சுமைதாங்கி ஏழுமலை, அ.தி.மு.க

`ரசாயனம் மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பைச் சரிசெய்வேன்’ என்றவர், அதற்காக முயலவில்லை. குரோமியத் தொழிற்சாலையில் தேங்கிக்கிடக்கும் 2.27 லட்சம் மெட்ரிக் டன் குரோமியக் கழிவுகளை அகற்றுவதற்கும் அழுத்தம் கொடுக்கவில்லை. பாலாறு அணைக்கட்டுப் பகுதியில் பெரிய அணை கட்டியிருந்தால், சுற்றுவட்டாரத்திலுள்ள ஆயிரம் ஏரிகள் நிரம்பியிருக்கும்; நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்திருக்கும். தொகுதி வளர்ச்சிக்காக எதையும் செய்யாத எம்.எல்.ஏ காந்தி, ஏற்கெனவே கட்டித் திறக்கப்பட்ட கட்டடங்களுக்குப் பெயின்ட் அடித்து மீண்டும் திறப்புவிழா கொண்டாடிவருகிறார்.

செய்தேனே! - ஆர்.காந்தி, எம்.எல்.ஏ., தி.மு.க

தொகுதிக்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தியிருக்கிறேன். என்னுடைய முயற்சியால்தான் நவல்பூர் பகுதியில் நூற்றாண்டுப் பழைமையான குறுகிய ரயில்வே மேம்பாலத்தை இடித்துவிட்டு, புதிய மேம்பாலம் கட்டும் பணி நடந்துவருகிறது. அடிப்படைப் பிரச்னைகள் அனைத்தையும் சரிசெய்திருக்கிறேன்.

சுமைதாங்கி ஏழுமலை - ஆர்.காந்தி
சுமைதாங்கி ஏழுமலை - ஆர்.காந்தி

கள நிலவரம்: தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ காந்தி, வாலாஜாபேட்டை நகரச் செயலாளர் புகழேந்தி ஆகியோர் சீட் கேட்கிறார்கள். அ.தி.மு.க-வில் மாவட்ட அம்மா பேரவைப் பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சுமைதாங்கி ஏழுமலை ஆகியோர் சீட் கேட்கிறார்கள். கூட்டணிக் கட்சிகளும் இந்தத் தொகுதியைக் கண்வைத்திருக்கினறன. சிட்டிங் எம்.எல்.ஏ காந்தியின்மீது அதிருப்தி நிலவுவது அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக மாறியிருந்தாலும், தி.மு.க-வின் கட்டமைப்பு வலுவாக இருப்பதால் களத்தில் கடும் போட்டி நிலவுகிறது!

திருப்பத்தூர்

சொன்னாரே? - டி.டி.குமார், அ.தி.மு.க

`புதிய திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவேன்; போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்வேன்’ என்றவர், எதையும் கண்டுகொள்ளவில்லை. இந்த ஐந்து வருடங்களில் அதிகாரமிக்க கான்ட்ராக்டராக வலம்வந்தாரே தவிர, மக்கள் பிரதிநிதியாக அவரின் செயல்பாடுகள் மிக மோசம். தொகுதியின் ஜீவாதார, அடிப்படைப் பிரச்னைகளைக்கூட எம்.எல்.ஏ என்ற வகையில் அவர் கவனிக்கவில்லை.

செய்தேனே! - நல்லதம்பி, எம்.எல்.ஏ., தி.மு.க

கிராமப்புறங்களில் 400-க்கும் மேற்பட்ட பணிகளைச் செய்து கொடுத்திருக்கிறேன். கொரோனா பாதித்து உயிரிழந்தோரின் சடலங்களை எரியூட்டுவதற்காக எரிமேடை அமைத்தேன். புதூர்நாடு பகுதியில் பேருந்து நிலையம், கிராமப்புறங்களுக்குக் குடிநீர் வசதி, அனைத்துப் பள்ளிகளுக்கும் புதிய தளவாடப் பொருள்கள், அரசு மருத்துவமனைக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் உயர் சிகிச்சைக் கருவிகள் எனப் பல பணிகளை நிறைவேற்றியிருக்கிறேன். தொகுதிக்குத் தேவையான அனைத்தையும் செய்துவிட்டேன் என்ற மன திருப்தி எனக்கு இருக்கிறது.

டி.டி.குமார் - நல்லதம்பி,
டி.டி.குமார் - நல்லதம்பி,

கள நிலவரம்: தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ நல்லதம்பி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே.மோகன், நகரச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள். அ.தி.மு.க-வில் நகரச் செயலாளர் டி.டி.குமார், முன்னாள் எம்.எல்.ஏ கே.ஜி.ரமேஷ், ஒன்றியச் செயலாளர் டாக்டர் திருப்பதி ஆகியோர் சீட் கேட்கிறார்கள். கூட்டணியிலிருக்கும் பா.ம.க சார்பில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ டி.கே.ராஜா ஆயத்தமாகிறார். தேர்தல் பணிகளில் அ.தி.மு.க சுணக்கம் காட்டுவதாலும், அந்தக் கட்சியின் கட்டமைப்பு வலுவில்லாமல் இருப்பதாலும், தொகுதியில் உதயசூரியன் உதிக்க வாய்ப்பிருக்கிறது!

சேலம் மேற்கு

சொன்னாரே? - பன்னீர்செல்வம், தி.மு.க

`தேங்காய் நார் பின்னும் தொழிற்சாலைகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் வரிவிலக்கு வாங்கித் தருவேன்; வெள்ளிக் கொலுசு தொழிற்சாலைக்கு தி.மு.க ஆட்சியில் கொடுத்த வரிவிலக்கை மீண்டும் பெற்றுத் தருவேன்; மேட்டூரிலிருந்து தனிக் குடிநீர்த் திட்டம் கொண்டுவந்து தினமும் குடிநீர் வழங்குவேன்; பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்றுவேன்; பள்ளப்பட்டி ஏரியில் பூங்கா, இரும்பாலையில் சிப்காட், டைடல் பார்க், இரும்பாலைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம்...’ என்று கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

செய்தேனே! - வெங்கடாசலம், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

சேலம் நகரத்தில் ஐந்து ரோடு முதல் சாரதா கல்லூரி வரை உயர்மட்ட மேம்பாலம், குரங்குசாவடி முதல் நான்கு ரோடு வரை ஈரடுக்கு மேம்பாலம், திருவாகவுண்டனூர், ஏ.வி.ஆர்., குரங்குசாவடி, கந்தம்பட்டி, லீ பஜார் ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள், சூரமங்கலம், மாங்குப்பை, செல்லப்பிள்ளைக்குட்டை, சேலம் ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் ரயில்வே கீழ்ப்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முத்தநாயக்கன்பட்டி பூலா ஏரி வரத்து கால்வாய்த் திட்டம் நிறைவேற்றியதால், 11 ஏரிகள் நிரம்பி 2,000 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன. திருநங்கைகளுக்கு ரூ.1.58 கோடியில் 69 அம்மா பசுமை வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறோம். அரபுக் கல்லூரி அருகே ரூ.500 கோடியில் பஸ்போர்ட் கொண்டுவந்துள்ளோம்.

பன்னீர்செல்வம், வெங்கடாசலம்
பன்னீர்செல்வம், வெங்கடாசலம்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ வெங்கடாசலம், மாநகர் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் அசோக்குமார், ஒன்றியச் செயலாளர்கள் வையாபுரி, ஏ.வி.ராஜூ ஆகியோர் சீட் கேட்கிறார்கள். கூட்டணியிலிருக்கும் பா.ம.க-வில் மாநிலப் பொதுச்செயலாளர் அருள் சீட் எதிர்பார்க்கிறார். தி.மு.க-வில் மாநில மாணவரணிச் செயலாளர் தமிழரசன், மண்டலக்குழு முன்னாள் தலைவர் சக்கரை சரவணன், தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைகண்ணன், உமாராணி எனப் பலரும் சீட் கேட்கிறார்கள். வெங்கடாசலம் மீது அதிருப்தி நிலவுவதாலும், தி.மு.க கட்டமைப்பு வலுவாக இருப்பதாலும், தொகுதியில் சூரியன் உதிக்கவே வாய்ப்பிருக்கிறது!

சேலம் வடக்கு

சொன்னாரே? - சரவணன், அ.தி.மு.க

‘நான் வெற்றிபெற்றால் அமைச்சர் ஆகிவிடுவேன். வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவேன்; தொகுதி முழுக்கக் குடிநீர் வசதி, தார் சாலை, சாக்கடை வசதி என அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தருவேன். முதியோருக்கு உதவித்தொகை பெற்றுத் தருவேன்’ என வாய்க்கு வந்ததையெல்லாம் அளந்துவிட்டு வெற்றிபெற்றார். ஆனால், அவருடைய சொந்தக் கட்சியினருக்குக்கூட எதையும் செய்யவில்லை என்பதே மோசமான நிதர்சனம்.

செய்தேனே! - பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், எம்.எல்.ஏ., தி.மு.க

தெருவிளக்கு, சாக்கடை, சாலை வசதிகள் என அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறேன். அங்கன்வாடி மையங்களுக்கும் நியாயவிலைக் கடைகளுக்கும் கட்டடங்களைக் கட்டிக் கொடுத்திருக்கிறேன். சேலம் நாலு ரோடு பகுதியில் மூவேந்தர் அரங்கம் அருகே மேம்பாலம், பத்துக்கும் மேற்பட்ட சிறு பாலங்கள் கட்டிக் கொடுத்திருக்கிறேன். கன்னங்குறிச்சியில் நிழற்கூடம், அரசுப் பள்ளிகளுக்குப் புதிய கட்டடங்கள், மதில் சுவர் அமைத்திருக்கிறேன். சட்டமன்ற நிதியைத் தாண்டி, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களின் நிதி சுமார் ரூ.15 கோடி பெற்று தொகுதியில் பல நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளன. வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்றெல்லாம் நான் எந்த வாக்குறுதியும் கொடுத்ததில்லை.

சரவணன் - பனமரத்துப்பட்டி ராஜேந்திரன்
சரவணன் - பனமரத்துப்பட்டி ராஜேந்திரன்

கள நிலவரம்: தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், முன்னாள் மாநகராட்சி தி.மு.க கொறடா தெய்வலிங்கம் ஆகியோர் சீட் கேட்கின்றனர். அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.பி பன்னீர்செல்வம், அஸ்தம்பட்டி பகுதிச் செயலாளர் சரவணன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். தி.மு.க-வின் கட்டமைப்பு வலுவாக இருப்பதால், தொகுதியில் உதயசூரியன் உதிக்கும் வாய்ப்புகளே அதிகம் தென்படுகின்றன!

வாசுதேவநல்லூர்

சொன்னாரே? - டாக்டர். அன்பழகன், புதிய தமிழகம்

புளியங்குடி பகுதியில் விளையும் எலுமிச்சையைப் பாதுகாப்பாக வைக்க, குளிர்பதனக் கிடங்கு வசதி வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கை. அதை வாக்குறுதியாகக் கொடுத்தவர், நிறைவேற்றவில்லை. எலுமிச்சை ஆராய்ச்சி மையத்தைச் சம்பந்தமே இல்லாத வன்னிக்கோனேந்தலுக்கு அமைச்சர் ராஜலட்சுமி கொண்டு சென்றபோது, அதைத் தட்டிக் கேட்கவில்லை. அரசு கலைக் கல்லூரி வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையும் நிறைவேறவில்லை. தொகுதியில் அரசு ஐ.டி.ஐ கூட இல்லை.

செய்தேனே! - மனோகரன், எம்.எல்.ஏ., அ.தி.மு.க

தொகுதியின் அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி, குடிநீர் வசதி செய்து தந்திருக்கிறேன். போக்குவரத்து வசதியில்லாத பல கிராமங்களுக்குப் பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளேன். அரசுப் பள்ளிகளுக்குக் கூடுதல் கட்டடங்கள், கிராமங்களுக்குச் சமூக நலக்கூடம், வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்குப் புதிய கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளேன். எலுமிச்சை குளிர்பதனக் கிடங்கு மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்க போதிய இடவசதி இல்லாததால், தொகுதிக்குள் அவற்றை அமைக்க முடியவில்லை.

டாக்டர். அன்பழகன், மனோகரன்
டாக்டர். அன்பழகன், மனோகரன்

கள நிலவரம்: தி.மு.க-வில் வடக்கு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் துரை, பொதுக்குழு உறுப்பினர் ஜெயகுமார், மாவட்ட மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் சுமதி, ஒன்றியச் செயலாளர் ரவிசங்கர், வழக்கறிஞர் பொன்ராஜ் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். கூட்டணியில் ம.தி.மு.க சார்பில் களமிறங்க டாக்டர் சதன் திருமலைக்குமார் ஆயத்தமாகிறார். அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ மனோகரன், வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஸ்வர்ணா, இலஞ்சி சண்முகசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ துரையப்பா, அவரின் மகள் டாக்டர் சங்கரி, ஜெ.பேரவை துணைச் செயலாளர் சாமிவேலு எனப் பலரும் சீட் கேட்கிறார்கள். தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ மனோகரனுக்கு எந்தக் கெட்ட பெயரும் இல்லாததும் எல்லோரையும் அனுசரித்துச் செல்வதும் அ.தி.மு.க-வுக்கு ப்ளஸ். தொகுதியில் இரட்டை இலை துளிர்ப்பதற்கான வாய்ப்பிருக்கிறது!

பாளையங்கோட்டை

சொன்னாரே? - கே.ஜே.சி.ஜெரால்ட், அ.தி.மு.க

வாக்குறுதிகள் என்று எதையும் அவர் கொடுத்ததில்லை. தொகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றுகூட இல்லை. இதிலிருந்தே எம்.எல்.ஏ செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகளின் நிலையைப் புரிந்துகொள்ளலாம். அரசின் முக்கிய அலுவலகங்கள் அனைத்தும் பாளையங்கோட்டையிலிருக்க, பழைய கட்டடங்களைப் புதுப்பிக்கவில்லை. புதிதாக ஆரம்ப சுகாதார நிலையத்தைக்கூடக் கொண்டுவரவில்லை. தொகுதியில் பொழுதுபோக்கு அம்சங்கள் என எதுவும் கிடையாது. 20 வருடங்களாக எம்.எல்.ஏ-வாக இருக்கும் டி.பி.எம்.மைதீன்கானால் எந்த நன்மையும் தொகுதிக்குக் கிடைக்கவில்லை.

செய்தேனே! - டி.பி.எம்.மைதீன்கான், எம்.எல்.ஏ., தி.மு.க

பாளையங் கால்வாயைத் தூர்வாரி அதன் கரைகளில் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் சாலை அமைத்துக் கொடுத்திருக்கிறேன். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குக் கூடுதல் கட்டடங்கள், அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்குக் கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளேன். உயிர் காக்கும் பல்வேறு உபகரணங்களை வாங்கிக் கொடுத்துள்ளேன். சாலை மேம்பாட்டுக்கும் தடையின்றி குடிநீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளேன்.

கே.ஜே.சி.ஜெரால்ட் - டி.பி.எம்.மைதீன்கான்
கே.ஜே.சி.ஜெரால்ட் - டி.பி.எம்.மைதீன்கான்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சுதா.பரமசிவன், விஜிலா சத்யானந்த், பாப்புலர் முத்தையா, மகபூப்ஜான், கே.ஜே.சி.ஜெரால்ட், தேவா கபீரியேல் ஜெபராஜன், ஹயாத், எம்.சி.ராஜன், அசன் ஜாஃபர் அலி எனப் பலரும் சீட் கேட்கிறார்கள். தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ மைதீன்கான், அப்துல் வஹாப், சித்திக், ஜான் நிக்கல்சன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவையும் தொகுதியைக் கேட்கின்றன. தி.மு.க கூட்டணி பலமாக இருப்பதால், மீண்டும் உதயசூரியன் உதிக்க வாய்ப்புகள் அதிகம்!