Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்

அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்

`நகராட்சிக்குக் குப்பைக் கிடங்கு அமைப்பேன்; குடிநீர்ப் பிரச்னையைச் சரிசெய்வேன்; பரப்பலாறு அணையைத் தூர் வாருவேன்’ என்றவர், எதையும் கண்டுகொள்ளவில்லை.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்

`நகராட்சிக்குக் குப்பைக் கிடங்கு அமைப்பேன்; குடிநீர்ப் பிரச்னையைச் சரிசெய்வேன்; பரப்பலாறு அணையைத் தூர் வாருவேன்’ என்றவர், எதையும் கண்டுகொள்ளவில்லை.

Published:Updated:
அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர்

கே.ராதாகிருஷ்ணன்,கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் - உடுமலைப்பேட்டை தொகுதி

தென்னை, மக்காச்சோளம், காய்கறிகள் என விவசாயத்தைப் பிரதானமாகக்கொண்ட உடுமலைப்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏ-வான கே.ராதாகிருஷ்ணன் கேபிள் வாரியத் தலைவர், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் என்று பல பொறுப்புகளுடன் வலம்வருகிறார். தொகுதிக்குப் பொறுப்பாக ஏதேனும் செய்திருக்கிறாரா?

சொன்னாரே? - முத்து, தி.மு.க

‘தொகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் கிடைக்கும்’ என்றார். ஆனால், கொண்டுவரவில்லை. `உடுமலை, மடத்துக்குளம், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளை இணைத்து, தனி மாவட்டம் ஆக்குவோம்’ எனத் தேர்தல் வாக்குறுதியில் சொல்லியிருந்தார், அதையும் செய்யவில்லை. உடுமலை பேருந்து நிலைய விரிவாக்கம், குளிர்பதனக் கிடங்குகள், தென்னை சார்ந்த தொழிற்சாலைகள் என்று எதையுமே செய்யவில்லை. உடுமலை அரசு மருத்துவமனையைப் பெயரளவுக்கு மட்டுமே தரம் உயர்த்தியிருக்கிறார்கள். ஆடு, மாடு, கோழிக்குஞ்சுகள் கொடுத்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. தொகுதிக்குள் பெரிதாகத் தலைகாட்டாதவர், தேர்தல் நெருங்குவதால் இப்போது சின்னச் சின்ன நிகழ்ச்சிகளைக்கூட விட்டுவைக்காமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

செய்தேனே! - அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்

உடுமலையில் 283 கோடி ரூபாயில், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைக் கொண்டுவந்திருக்கிறேன். தொகுதியிலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 24,000 குடும்பங்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள், கறவைப் பசுக்கள், நாட்டுக்கோழிகள் கொடுத்திருக்கிறேன். கால்நடைக் கிளை நிலையங்கள், கால்நடை மருத்துவமனை அமைத்திருக்கிறேன். உடுமலை நகராட்சியில் 24 மணி நேரம் செயல்படக்கூடிய பாலி கிளினிக்குகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம் கொண்டுவந்திருக்கிறேன். உடுமலை அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன்கூடிய புதிய கட்டடம், சிடி ஸ்கேன், டயாலிசிஸ் வசதி கொண்டுவந்திருக்கிறேன். பேருந்து நிலைய விரிவாக்கம், சந்தை விரிவாக்கம், அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்திருக்கிறேன்.

அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் - முத்து
அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் - முத்து

கள நிலவரம்: உடுமலை தொகுதியிலுள்ள ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் பாசன வசதிக்காக, 1967-ம் ஆண்டிலிருந்து முன்வைக்கப்பட்டுவரும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டக் கோரிக்கையை நிறைவேற்றாததும், தொகுதியின் பிரதான பயிர்களான தென்னை, மக்காச்சோளம் சார்ந்த தொழிற்சாலைகள் எதையும் கொண்டுவராததும் மக்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது. அ.தி.மு.க-வில் ராதாகிருஷ்ணனே மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதி மக்களைப் பெரிதாகச் சந்திக்காதது, கட்சி சீனியர்களுக்கு மரியாதை கொடுக்காதது, அ.ம.மு.க-வுக்குச் சென்ற முன்னாள் அமைச்சர் சண்முகவேலு பிரிக்கும் ஓட்டு, ஊழல் குற்றச்சாட்டுகள், உட்கட்சிப் பூசல்கள் ஆகியவை ராதாகிருஷ்ணனுக்குப் பெரும் சிக்கல்களாக இருக்கின்றன. தி.மு.க-வில் கடந்த முறை போட்டியிட்ட முத்து, முன்னாள் சேர்மன் வேலுச்சாமி ஆகியோர் சீட் கேட்கிறார்கள். இன்றைய சூழலில், தி.மு.க-வுக்கு சாதகமான சூழலே உடுமலைப்பேட்டையில் நிலவுகிறது!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - வில்லிவாக்கம்

சொன்னாரே? - தாடி ம.ராசு அ.தி.மு.க

‘குடிநீர்ப் பிரச்னையைத் தீர்ப்பேன், வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவேன், சுயஉதவிக் குழுக்களுக்குக் கடன் வசதி ஏற்படுத்தித் தருவேன்’ என்றவர், எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. மக்கள்நலன் கருதி அ.தி.மு.க அரசுதான் அனைத்து நலத் திட்டங்களையும் இந்தத் தொகுதியில் செய்திருக்கிறது.

செய்தேனே! - ப.ரங்கநாதன், எம்.எல்.ஏ., தி.மு.க

பாபாநகர், ராஜமங்கலம் அருகில் பாதாள குடிநீர்க் குழாயின் மேலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டிருக்கின்றன. சி.கே தெருவில் புதிய சலவைக்கூடம் கட்டியிருக்கிறேன். சிட்கோ நகரில் சத்துணவுக்கூடத்துக்குப் புதிய கட்டடம் கட்டிக் கொடுத்திருக்கிறேன். சிவசக்தி காலனியின் டி.வி.எஸ் கால்வாய் தூர்வாரப்பட்டிருக்கிறது. 94-வது வட்டத்திலுள்ள சுடுகாட்டில், காரியமேடை மற்றும் நவீன எரியூட்டும் இயந்திரம் வசதி, அமைதிப் பூங்கா ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன். மன்னடி ஒத்தவாடை தெருவிலுள்ள வளையான்குளத்தில் பழுதடைந்த கரைகளைச் சீர்செய்து படிக்கட்டுகள், மின்விளக்குகள் அமைத்திருக்கிறேன். கொடுத்த வாக்குறுதியில் 90 சதவிகிதத்துக்கு மேல் நிறைவேற்றியிருக்கிறேன்.

தாடி ம.ராசு - ப.ரங்கநாதன்
தாடி ம.ராசு - ப.ரங்கநாதன்

கள நிலவரம்: தொகுதி மக்கள் மத்தியில் எம்.எல்.ஏ ரங்கநாதன் பரிச்சயமானவராக இருந்தாலும், அதிகாரிகளை அவர் ஒருமையில் பேசுவது மைனஸாக இருக்கிறது. தி.மு.க-வில் இவரும், வழக்கறிஞர் அணியிலிருக்கும் கிரிராஜனும் சீட் எதிர்பார்க்கிறார்கள். அ.தி.மு.க-வில் தாடி ம.ராசு, ஜே.சி.டி.பிரபாகர், மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ்பாபு, பகுதிச் செயலாளர்கள் கோகுல், மோகன் ஆகியோர் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள். தொகுதியில் தற்போதைய நிலவரம் தி.மு.க.வுக்குச் சாதகமாகவே இருக்கிறது!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - திரு.வி.க நகர்

சொன்னாரே? - வ.நீலகண்டன், அ.தி.மு.க

கழிவுநீர்க் கால்வாய்ப் பிரச்னையைச் சரிசெய்வதாக வாக்குறுதி கொடுத்தார். பெரம்பூர் பேரக்ஸ் ரோட்டில் கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் இருக்கிறது. அதற்கு புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, டிரான்ஸ் ரோடு, அம்பேத்கர் சாலை ஆகிய நான்கு பகுதிகளிலிருந்து குழாய்களில் கழிவுநீர் வருகிறது. கடந்த நான்கு வருடங்களாக அந்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு 16 அடி உயரத்துக்குக் கழிவுகள் சேர்ந்துகிடக்கின்றன. இந்தப் பிரச்னையைச் சரிசெய்யவே இல்லை. தொகுதியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருக்கும் கட்டடங்களையும், அரசு நில ஆக்கிரமிப்பையும் எம்.எல்.ஏ கண்டுகொள்ளவில்லை.

செய்தேனே: - ப.சிவகுமார் என்ற தாயகம் கவி, எம்.எல்.ஏ., தி.மு.க

பெரம்பூர் பேருந்து நிலையத்தைச் சீர்ப்படுத்த, எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கியிருக்கிறேன். பழைய வாழை மாநகர் பகுதியில் குடிநீர்ப் பிரச்னைகளைச் சரிசெய்து, தடையின்றி குடிநீர் வரும்படி செய்திருக்கிறேன். 71-வது வட்டத்தில் பல்நோக்கு மையக் கட்டடம், கன்னிகாபுரம் பகுதியில் உடற்பயிற்சிக்கூடம் அமைத்திருக்கிறேன். சிவசண்முகபுரம் பகுதியை ஒட்டியுள்ள ஒட்டேரி நல்லான் கால்வாயைத் தூர்வாரியிருக்கிறேன்.

வ.நீலகண்டன் - தாயகம் கவி
வ.நீலகண்டன் - தாயகம் கவி

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் திருவள்ளூர் முன்னாள் எம்.பி-யான வேணுகோபால், முன்னாள் எம்.எல்.ஏ-வான வ.நீலகண்டன் ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். தி.மு.க-வில் வழக்கறிஞர் தமிழன் பிரசன்னாவின் பெயர் அடிபடுகிறது. சிட்டிங் எம்.எல்.ஏ தாயகம் கவியும் சீட் எதிர்பார்க்கிறார். அ.தி.மு.க-வுக்குள் நிலவும் கோஷ்டிப்பூசல்கள், குறிப்பிட்ட சிலரின் வசூல் வேட்டை அ.தி.மு.க-வுக்கு மைனஸ். தொகுதியில் தி.மு.க-வுக்கு வலுவான கட்டமைப்பு இருப்பதால், திரு.வி.க நகரில் தி.மு.க-வுக்கு ஆதரவான அலை வீசுகிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - மண்ணச்சநல்லூர்

சொன்னாரே? - கணேசன், தி.மு.க

திருத்தலையூர் பெரிய மற்றும் சின்ன ஏரிகளின் மூலம் 650 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. காவிரி நீரை ஏரிக்குக் கொண்டு வந்தால் இப்பகுதியில் 2,500 ஏக்கருக்கும் மேல் பாசன வசதி பெறும். இத்திட்டத்தை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி கொடுத்த எம்.எல்.ஏ., அதை நிறைவேற்றவில்லை. அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கான முயற்சியும் எடுக்கவில்லை. வாசனை திரவியத் தொழிற்சாலை, திருப்பட்டூர் ஊராட்சியில் மருத்துவமனை போன்ற கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவே இல்லை.

செய்தேனே! - எம்.பரமேஸ்வரி, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

தொகுதியில் முழுமையாக பை-பாஸ் சாலை போடப்பட்டிருக்கிறது. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒன்றரைக் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பஸ் டெப்போ கட்டியிருக்கிறோம். பாதாளச் சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ரெஜிஸ்ட்ரார் ஆபீஸ், யூனியன் ஆபீஸ் ஆகியவற்றுக்குப் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அரசு கலைக் கல்லூரி கொண்டுவருவதற்காக முதல்வரிடம் பேசியிருக்கிறேன். அதற்கான அறிவிப்பு கூடிய விரைவில் வரும்.

கணேசன் - எம்.பரமேஸ்வரி
கணேசன் - எம்.பரமேஸ்வரி

கள நிலவரம்: தி.மு.க-வில் மீண்டும் கணேசன் சீட் கேட்கிறார். தனலெட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தைச் சேர்ந்த கதிரவன், மண்ணச்சநல்லூர் ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.இளங்கோவனின் மகன் அசோக்ராஜா, கருணைராஜா, பானுமதி எனப் பலரும் தி.மு.க-வில் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார்கள்.

அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகன் சீட் எதிர்பார்க்கிறார். இவருக்குப் போட்டியாக முன்னாள் அமைச்சர் பூனாட்சி, முசிறி ஒன்றியச் செயலாளர் ஜெயராமன், பிரின்ஸ் தங்கவேல் ஆகியோரும் சீட்டுக்காக முட்டி மோதுகிறார்கள். கொரோனா காலத்தில் தொகுதிப் பக்கம் எம்.எல்.ஏ எட்டிப் பார்க்காதது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றைய சூழலில், தொகுதி தி.மு.க-வுக்கே சாதகமாக இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - முசிறி

சொன்னாரே? - விஜயா பாபு, காங்கிரஸ்

முசிறியை நகராட்சியாகத் தரம் உயர்த்துவதாகச் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. குருவம்பட்டிப் பகுதியில் ஏராளமான தொல்பொருள்கள் கிடைத்திருக்கின்றன. `இங்கு தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்’ என்ற கோரிக்கையை அவர் செவிமெடுக்கவில்லை. தொட்டியம் தாலுகாவில் வாழைப்பழ ஜாம் தொழிற்சாலை, தாத்தையங்கார்பேட்டையில் கைத்தறித் தொழில் மேம்பாட்டு தொழற்சாலை, பாய் தொழிற்சாலை அமைத்துத் தருவதாகச் சொன்னவர், எதையும் நிறைவேற்றவில்லை.

செய்தேனே! - செல்வராசு, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

தொகுதியில் தண்ணீர்ப் பிரச்னை முழுமையாகத் தீர்க்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒன்று இருக்கும் நிலையில், இரண்டாவது வாழைப்பழ ஜாம் தொழிற்சாலையையும் கொண்டுவர முயன்றுவருகிறேன். தொகுதி முன்னேற்றத்துக்காக நிதியை முழுமையாகச் செலவு செய்திருக்கிறேன். அரசுக் கல்லூரி, முசிறியை நகராட்சியாகத் தரம் உயர்த்துவது குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றுள்ளேன்.

விஜயா பாபு - செல்வராசு
விஜயா பாபு - செல்வராசு

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ செல்வராசு மீண்டும் சீட் கேட்கிறார். மாநில இளைஞரணிச் செயலாளர் என்.ஆர்.சிவபதி, மாவட்ட அவைத்தலைவர் பிரின்ஸ் தங்கவேல், ரத்தினவேல், ஒன்றியச் செயலாளர் ராஜமாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன் என்று பலரும் சீட்டுக்காக மோதுகிறார்கள். தி.மு.க-வில் வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், ஒன்றியச் செயலாளர் ராமசந்திரன், தா.பேட்டை ஒன்றியச் செயலாளர் கே.கே.சேகரன், செல்வகுமார் ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். காங்கிரஸில் விஜயா பாபு சீட் கேட்கிறார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, தொகுதிக்குள் பெரிதாக தலைகாட்டாதது செல்வராசுவுக்கு மைனஸ். தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு எதிரான மனநிலை அதிகமாக இருப்பதால், உதயசூரியன் உதிக்கவே வாய்ப்புகள் அதிகம்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - பழநி

சொன்னாரே? - கனகராஜ், பா.ஜ.க

ஆயக்குடியில் பழக்கூழ் தொழிற்சாலை, பழநி வையாபுரி குளத்தைத் தூர்வாரி சுற்றுலாத்தலமாக மாற்றுதல், கொடைக்கானல் மலையிலிருந்து பழநி மலை வரை ரோப் கார், பழநியில் வேளாண்மைக் கல்லூரி, கொடைக்கானல் முதல் பழநி வரையிலான வில்பட்டி மாற்றுச் சாலைத் திட்டம், புது தாராபுரம் சாலையிலுள்ள ரயில்வே கேட்டில் மேம்பாலம் என்று வாக்குறுதிகளை அள்ளியள்ளி வீசியவர், எதையுமே நிறைவேற்றவில்லை. எம்.எல்.ஏ அலுவலகத்தைக் கட்சி அலுவலகமாக மாற்றியதைத் தவிர வேறெந்த சாதனையையும் செந்தில்குமார் செய்யவில்லை.

செய்தேனே! - செந்தில்குமார், எம்.எல்.ஏ., தி.மு.க

வையாபுரி குளத்தில் கலக்கும் கழிவுநீரைச் சுத்திகரிக்க, பணிகள் நடந்துவருகின்றன. பழநி - பாலசமுத்திரம் சாலை அகலப்படுத்தும் பணி முடிந்திருக்கிறது. காவல்பட்டி, பாப்பம்பட்டி கிராம மக்களின் குடிநீர்ப் பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கிறது. தெற்கு தாதநாயக்கன்பட்டி கிராமத்துக்கு நல்ல தண்ணீர் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறேன். திருமூர்த்தி அணையிலிருந்து பழநிக்குத் தண்ணீர் கொண்டுவருவதற்கு ஆய்வுப் பணிகள் நடக்கின்றன. பழநி மலை அடிவார சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறேன். கொடைக்கானல் - பழநி ரோப் கார் திட்டத்துக்கு, மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் வர வேண்டும்.

கனகராஜ் - செந்தில்குமார்
கனகராஜ் - செந்தில்குமார்

கள நிலவரம்: பழநி தொகுதியில், கொங்கு வேளாளக் கவுண்டர் சமுதாய வாக்குகளே பெரும்பான்மையாக இருப்பதால், அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த வேட்பாளர்களே பெரும்பாலும் களமிறக்கப்படுகிறார்கள். தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ செந்தில்குமார் மீண்டும் சீட் எதிர்பார்க்கிறார். அ.தி.மு.க-வில் நத்தம் விஸ்வநாதனின் மருமகன் கண்ணன் சீட்டுக்காகக் காய்நகர்த்துகிறார். பா.ஜ.க-வில் கனகராஜ் சீட் கேட்கிறார். பா.ஜ.க - தி.மு.க போட்டியிடும் நிலையில் தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். அதேநிலையில் தி.மு.க-வும் - அ.தி.மு.க-வும் களத்தில் நின்றால் போட்டி கடுமையாக இருக்கும்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - ஒட்டன்சத்திரம்

சொன்னாரே? - எஸ்.கே.பழனிசாமி, பா.ஜ.க

`நகராட்சிக்குக் குப்பைக் கிடங்கு அமைப்பேன்; குடிநீர்ப் பிரச்னையைச் சரிசெய்வேன்; பரப்பலாறு அணையைத் தூர் வாருவேன்’ என்றவர், எதையும் கண்டுகொள்ளவில்லை. ஒட்டன்சத்திரம் சந்தையே குப்பைக் கிடங்காக மாறி துர்நாற்றம் வீசுகிறது. மெகா உழவர் சந்தையில் விவசாயிகளை அனுமதிக்காமல், அங்கு அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. தொடர்ந்து ஐந்து முறை ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ-வாக சக்கரபாணி இருந்தும், தொகுதிக்கு எந்த நன்மையும் இல்லை.

செய்தேனே! - சக்கரபாணி, எம்.எல்.ஏ., தி.மு.க

10 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்ட கொத்தயம் நல்லதங்காள் அணை கட்டி முடிக்கப்பட்டு, தற்போது அணை நிரம்பியிருக்கிறது. ஒட்டன்சத்திரம் - அவிநாசி நான்குவழிச் சாலை, இரண்டு ரயில்வே மேம்பாலப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நத்தம் - காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டம் முடிக்கப்பட்டுவிட்டது. வடகாடுப் பகுதியிலுள்ள சிறுவாட்டுக்காடு, கோம்பை உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு மின்சாரம் கொண்டுவந்திருக்கிறேன். தொகுதியில் நிறைய வளர்ச்சிப் பணிகள் செய்திருக்கிறேன்.

எஸ்.கே.பழனிசாமி - சக்கரபாணி
எஸ்.கே.பழனிசாமி - சக்கரபாணி

கள நிலவரம்: தி.மு.க-வில் மீண்டும் சக்கரபாணியே சீட் எதிர்பார்க்கிறார். அ.தி.மு.க-வில் பாலசுப்பிரமணி, அவரின் உறவினர் நடராஜ் ஆகியோர் சீட்டுக்காகக் காய் நகர்த்துகிறார்கள். சக்கரபாணியைத் தோற்கடித்தே தீருவது என்று மாவட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தீர்மானமாக இருக்கிறார். தி.மு.க தலைமையும் சக்கரபாணி மீது அதிருப்தியில் இருக்கிறது. வேட்பாளைரைப் பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism