Published:Updated:

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - அமைச்சர் கடம்பூர் ராஜூ

கடம்பூர் ராஜூ
பிரீமியம் ஸ்டோரி
News
கடம்பூர் ராஜூ

அடிப்படையில் ஆசிரியர் என்பதால், மேடையில் பேசும்போது கிழமை, தேதி, ஆண்டு போன்றவற்றைப் புள்ளிவிவரத்துடன் பேசி அசத்துபவர் கடம்பூர் ராஜூ.

என்ன செய்தார் அமைச்சர்? - கடம்பூர் ராஜூ - செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் - கோவில்பட்டி

அடிப்படையில் ஆசிரியர் என்பதால், மேடையில் பேசும்போது கிழமை, தேதி, ஆண்டு போன்றவற்றைப் புள்ளிவிவரத்துடன் பேசி அசத்துபவர் கடம்பூர் ராஜூ. செய்தித்துறை அமைச்சரான பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அசராமல் பதில் அளிப்பதிலும், சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு லாகவமாக பதில் சொல்லித் தப்பிப்பதிலும் வல்லவராகிவிட்டார். கோவில்பட்டி தொகுதியில் தொடர்ந்து பத்து ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாகவும், ஐந்து ஆண்டுகள் அமைச்சராகவும் இருக்கும் கடம்பூர் ராஜூ தொகுதிக்குச் செய்ததும், செய்யாததும் என்னென்ன?

சொன்னாரே? - கழுகுமலை சுப்பிரமணியன், தி.மு.க

`கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலை மறுசீரமைத்து, வெட்டுவான் கோயில் சமணர் படுகை அடங்கிய சுற்றுலாத் தலத்தை மேம்படுத்துவேன்; கழுகுமலையில் அரசுக் கலைக் கல்லூரி, அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைப்பேன்’ என்றேல்லாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தீப்பெட்டி உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்களை சிட்கோ மூலம் மானிய விலையில் வழங்க முயலவில்லை. சூரியகாந்தி, கம்பு, சோளம், மக்காச்சோளத்தைச் சேமித்துவைக்க குடோனும் கொள்முதல் நிலையமும் அமைக்க ஏற்பாடு செய்யவில்லை. அதிக புள்ளிமான்கள் உள்ள குருமலையைப் பாதுகாக்க, தனிச் சரணாலயமாக அறிவிக்க முயலவில்லை.

செய்தேனே! - கடம்பூர் ராஜூ, அமைச்சர்

மக்களின் 40 ஆண்டுக்காலக் கோரிக்கையான இரண்டாவது பைப்லைன் திட்டத்தை நிறைவேற்றி, கோவில்பட்டி நகராட்சியில் தினந்தோறும் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். கோவில்பட்டியில் அரசு கலைக் கல்லூரி, புதிய நகராட்சி அலுவலகம், தாலுகா அலுவலகம், புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் செயற்கைப் புல்வெளி ஹாக்கி மைதானம் உள்ளிட்டவற்றை அமைத்துள்ளேன். கயத்தாறு தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்டதுடன், புதிய தாலுகா அலுவலகமும் கட்டப்பட்டுள்ளது. கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மணிமண்டபம், புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளன. கோவில்பட்டியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப்பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமப் பகுதிகளிலும் சாலைகள் போடப்பட்டுள்ளன. 29 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 35 பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடம்பூர் ராஜூ - கழுகுமலை சுப்பிரமணியன்
கடம்பூர் ராஜூ - கழுகுமலை சுப்பிரமணியன்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரியின் கணவர் சுப்புராஜ், மாவட்ட ஆவின் துணை சேர்மன் நீலகண்டன் ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் உள்ளனர். தி.மு.க-வில் கழுகுமலை சுப்பிரமணியன், நகரச் செயலாளர் கருணாநிதி, முன்னாள் நகரச் செயலாளர் ராமர், மாநில செய்தித் தொடர்பாளர்

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ரேஸில் உள்ளனர். அ.ம.மு.க-வில் கயத்தாறு யூனியன் சேர்மன் மாணிக்கராஜா தயாராகிறார். இங்கு சசிகலாவோ டி.டி.வி.தினகரனோ போட்டியிடும் வாய்ப்பும் இருப்பதாகச் சொல்கிறார்கள். வாக்குறுதிகளை ஓரளவு நிறைவேற்றியிருப்பதும், நாயக்கர் சமுதாய மக்களின் வாக்குவங்கியும், உட்கட்சிப்பூசல் ஏதும் இல்லாததும் கடம்பூர் ராஜூவுக்கு ப்ளஸ். ஆனால், தொகுதியில் அ.ம.மு.க பெரும்பான்மையாக வாக்குகளைப் பிரிக்கும் சூழல் இருப்பதால், களநிலவரம் இழுபறிதான்!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - காஞ்சிபுரம்

சொன்னாரே? - சோமசுந்தரம், அ.தி.மு.க

ஒரு எம்.எல்.ஏ-வாக வாக்குறுதி எதையும் அவர் அளித்ததாக நினைவில்லை. காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் ட்ராஃபிக் அதிகம். எனவே, புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும், நெசவுத் தொழில் அதிகமும் நடைபெறுவதால் சாயப்பட்டறைகளுக்குத் தனியாக இடம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அவர் கண்டுகொள்ளவில்லை. அ.தி.மு.க அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தும் தன்னால்தான் கொண்டுவரப்பட்டன என மார்தட்டிக்கொள்வதைத் தவிர வேறெதுவும் செய்யவில்லை.

செய்தேனே! - எழிலரசன், எம்.எல்.ஏ., தி.மு.க

மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனைக்கு விபத்து சிகிச்சைப் பிரிவு, எம்.ஆர்.ஐ ஸ்கேன், மார்பகப் புற்றுநோய் அறியும் கருவிகள் கொண்டுவந்து தரமுயர்த்தியிருக்கிறேன். அரசு மருத்துவமனையிலுள்ள மகப்பேறு மருத்துவப் பிரிவைக் கல்வி நிலையமாக மாற்றியிருக்கிறேன். பரந்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள்கொண்ட மருத்துவமனையாக மாற்றியிருக்கிறேன். விளையாட்டு அரங்கத்தைச் சீரமைத்திருக்கிறேன். இந்து அறநிலையத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தை காஞ்சிபுரத்துக்குக் கொண்டுவந்திருக்கிறேன். இரண்டு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன.

சோமசுந்தரம் - எழிலரசன்
சோமசுந்தரம் - எழிலரசன்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு, கூட்டுறவு சொசைட்டி தலைவர் வள்ளிநாயகம் ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ எழிலரசன், வடக்கு ஒன்றியச் செயலாளர் குமார், நகரச் செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், தெற்கு மாவட்ட பிரதிநிதி சுகுமார் ஆகியோர் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். காஞ்சிபுரத்தில் தி.மு.க-வின் கட்டமைப்பு வலுவாக இருப்பதால், இங்கு உதயசூரியன் உதிப்பதற்கான வாய்ப்புகளே பிரகாசமாக உள்ளன!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - உத்திரமேரூர்

சொன்னாரே? - வாலாஜாபாத் கணேசன், அ.தி.மு.க

தேர்தல் வாக்குறுதி என்று எதையுமே அவர் கொடுத்ததில்லை. வாலாஜாபாத்தில் தீயணைப்பு நிலையம் கொண்டுவர வேண்டும்; உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தைப் பிரித்து, சாலவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தைக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட எந்தக் கோரிக்கையையும் கண்டுகொள்ளவில்லை. எல்லா அரசாங்க ஒப்பந்தங்களிலும் 50 சதவிகித எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்துகொள்வதில்தான் ஆர்வம் காட்டினாரே ஒழிய, ஐந்தாண்டுகளில் உருப்படியாக எதையும் தொகுதிக்குச் செய்யவில்லை.

செய்தேனே! - க.சுந்தர், எம்.எல்.ஏ., தி.மு.க

சாலவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ், குடிசைமாற்று வாரியம் மற்றும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்டோருக்கு வீடுகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், ஊராட்சி சாலைகள் உள்ளிட்ட பணிகளைச் செய்திருக்கிறேன். வாலாஜாபாத் அரசு மருத்துவமனையைத் தரமுயர்த்தியிருக்கிறேன். சாலவாக்கம், வாலாஜாபாத் காவல் நிலையங்களுக்குத் தேவைப்படும் சி.சி.டி.வி கேமராக்களை வழங்கியிருக்கிறேன். ஓர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக தொகுதிக்கு என்னால் முடிந்த பணிகளைச் செய்திருக்கிறேன்.

வாலாஜாபாத் கணேசன் - க.சுந்தர்,
வாலாஜாபாத் கணேசன் - க.சுந்தர்,

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் வாலாஜாபாத் கணேசன், ஒன்றியச் செயலாளர் அத்திவாக்கம் ரமேஷ், முத்தியால்பேட்டை ரஞ்சித்குமார் ஆகியோர் சீட் எதிர்பார்க்கிறார்கள். தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சுந்தர், ஒன்றியச் செயலாளர்கள் பி.சேகர், கெ.ஞானசேகரன், பேரூர் செயலாளர் பாரிவள்ளல் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள். தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் பொன்குமாரும் தொகுதியை எதிர்பார்க்கிறார். 2016 சட்டமன்றத் தேர்தலில், 24,000 வாக்குகள் எடுத்த பா.ம.க-வும், 9,000 வாக்குகள் பெற்ற தே.மு.தி.க-வும் உடனிருப்பது அ.தி.மு.க-வுக்கு ப்ளஸ். தொகுதியில் கட்டமைப்பு வலுவாக இருப்பது தி.மு.க-வுக்கு பலம். இன்றைய சூழலில், போட்டி கடுமையானதாகவே இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - கெங்கவல்லி

சொன்னாரே? - ரேகா பிரியதர்ஷினி, தி.மு.க

தலைவாசல் மார்க்கெட்டை விரிவாக்கம் செய்து குளிர்பதனக் கிடங்கு; வேப்பம்பூண்டி முதல் ஆறகளூர் வரை தார்ச்சாலை; புளியங்குறிச்சி இந்திரா நகருக்குத் தார்ச்சாலை; வீரகனூரில் பெரிய விளையாட்டு மைதானம்; குடும்பியம், லத்துவாடி, திட்டச்சேரி கிராமங்களுக்குச் சாலை அமைத்து பேருந்து வசதி; நாவலூருக்கு பேருந்து வசதி; வீரகனூர் அம்பேத்கர் நகருக்குச் சமுதாயக்கூடம் என்று அவர் அளித்த ஒரு வாக்குறுதியைக்கூட நிறைவேற்றவில்லை.

செய்தேனே! - மருதமுத்து, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

கடந்த தேர்தலில் நான் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை. ஆயிரம் கோடி ரூபாயில் கால்நடைப் பூங்கா, ஒரு கோடி ரூபாயில் சார்பதிவாளர் அலுவலகம், தொகுதி முழுவதும் நெடுஞ்சாலைப் பணிகள், லத்துவாடி, கூடமலை, சித்தேரி பகுதிகளில் தடுப்பணைகள், பெரியேரி பகுதியில் உயர்மட்டப் பாலங்கள் என்று பல பணிகளை முடித்திருக்கிறேன். புளியங்குறிச்சி, காமாக்கா பாளையம், கடம்பூர், வெள்ளையூர் பகுதிகளில் கால்நடை மருத்துவமனைகள் கொண்டுவந்தேன். தொகுதி முழுவதுமுள்ள அங்கன்வாடி மையங்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட ஆர்.ஓ வாட்டர் வசதி செய்துகொடுத்திருக்கிறேன்.

ரேகா பிரியதர்ஷினி - மருதமுத்து
ரேகா பிரியதர்ஷினி - மருதமுத்து

கள நிலவரம்: எம்.எல்.ஏ., தொகுதியில் சில நலத்திட்ட உதவிகளைச் செய்திருந்தாலும், இன்னும் மக்களுக்கு அறியப்படாதவராகவே இருக்கிறார். அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ மருதமுத்து, நல்லதம்பி, தம்மம்பட்டி பாலசுப்ரமணியம் எனப் பலரும் சீட் கேட்கின்றனர். சமூகநலத்துறை அமைச்சர் சரோஜாவின் ராசிபுரம் தொகுதி பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்பட்டால், அவருக்கு கெங்கவல்லி அளிக்கப்படலாம் என்ற பேச்சும் ஓடுகிறது. தே.மு.தி.க-வில் முன்னால் எம்.எல்.ஏ சுபா சீட் எதிர்பார்க்கிறார். தி.மு.க-வில் முன்னாள் சேலம் மாநகராட்சி மேயர் ரேகா பிரியதர்ஷினி, கெங்கவல்லி சின்னதுரை, வழக்கறிஞர் கணேசன் எனப் பலர் சீட்டுக்கான ரேஸில் இருக்கிறார்கள். கட்டமைப்பு வலுவாக இருப்பதால், தி.மு.க கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - ஆத்தூர் (சேலம்)

சொன்னாரே? - அர்த்தநாரி, காங்கிரஸ்

வசிஷ்ட நதி, முட்டல் ஏரி தூர்வாரப்படும்; தனிக் குடிநீர்த் திட்டம் மூலம் ஆத்தூர் நகராட்சி மக்களின் குடிநீர்த் தேவை போக்கப்படும்; வேளாண் கல்லூரி, ஆத்தூர் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழிற்சாலைகள், தொழிற்கல்வி நிலையம் அமைக்கப்படும் உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. யானைவாரி நீர்த்தேக்கம், ஆத்தூரில் வேளாண் விளைபொருள்கள் மதிப்புக் கூட்டு மையம், கூட்டுறவுத்துறை மூலம் சேகோ ஆலை போன்ற வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

செய்தேனே! - சின்னதம்பி, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

தொகுதி நிதியில் அனைத்துவிதமான அடிப்படை வசதிகளும் செய்துகொடுத்திருக்கிறேன். தொகுதியில் வருடம் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, தீண்டாமை இல்லாத கிராமமாக ஆக்கியிருக்கிறேன். கோபாலபுரம், உமையாள்புரம், ராமநாயக்கன்பாளையம், பைத்தூர், மேற்கு ராஜாபாளையம், நரசிங்கபுரத்தில் கால்நடை மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்டச் சுகாதார அலுவலகம் கட்டிக்கொடுத்திருக்கிறேன். ஆத்தூர் மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அர்த்தநாரி - சின்னதம்பி
அர்த்தநாரி - சின்னதம்பி

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ சின்னதம்பி, சேலம் இளங்கோவனின் உதவியாளர் கிட்டு, ஏத்தாப்பூர் சாமிநாதன் எனப் பலரும் சீட் கேட்கிறார்கள். பா.ஜ.க மாநிலத் துணைச் செயலாளர் வி.பி.துரைசாமி தன் மகன் பிரேம்குமாருக்கு சீட் எதிர்பார்க்கிறார். தி.மு.க-வில் ஜீவா ஸ்டாலின், சிவராமன் எனப் பலரும் சீட் கேட்டுள்ளனர். காங்கிரஸில் அர்த்தநாரி, அ.ம.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ மாதேஸ்வரன் பெயர்கள் அடிபடுகின்றன. சிட்டிங் எம்.எல்.ஏ மீதான அதிருப்தி அலையால், தொகுதி தி.மு.க கூட்டணிக்குச் சாதகமாக இருக்கிறது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - நாகப்பட்டினம்

சொன்னாரே? - முகமது ஜபருல்லா, மனிதநேய மக்கள் கட்சி

`நாகூரைச் சுற்றுலாத் தலமாக்குவேன்; நாகையில் மீண்டும் துறைமுகம் கொண்டுவருவேன்’ எனச் சொன்னார்; ஆனால் செய்யவில்லை. காரைக்கால் எல்லையில் அமைந்துள்ள தனியார் துறைமுகத்தால், மக்கள் பல பாதிப்புகளைச் சந்திக்கிறார்கள். நிலக்கரி இறக்குமதியால் காற்றில் கலந்துவரும் கரித்துகள்கள் பெரும் பிரச்னை. அதைத் தடுக்க எம்.எல்.ஏ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செய்தேனே! - தமிமுன் அன்சாரி, எம்.எல்.ஏ., அ.தி.மு.க (மனிதநேய ஜனநாயகக் கட்சி)

நாகை தலைமை மருத்துவமனையில் 48 மருத்துவர்களைப் பணியமர்த்தச் செய்திருக்கிறேன். மருத்துவமனைக்கு சி.டி., எம்.ஆர்.ஐ ஸ்கேன் வசதிகளைக் கொண்டுவந்துள்ளேன். நாகை நம்பியார்நகரில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க உதவியுள்ளேன். நாகை தாமரைக்குளத்தைச் சீரமைக்கும் பணிகள் முடியும் தறுவாயிலுள்ளன. நாகூர் தர்கா குளத்தை ரூ.4.34 கோடியில் சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன. நாகூர், நாகை துறைமுகங்களைச் சுற்றுலாத் தலமாக மேம்படுத்தத் திட்ட அறிக்கை தயாராகிவருகிறது.

முகமது ஜபருல்லா, தமிமுன் அன்சாரி
முகமது ஜபருல்லா, தமிமுன் அன்சாரி

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் நகரச் செயலாளர் தங்க.கதிரவன், முன்னாள் அமைச்சர்கள் ஜெயபால், ஜீவானந்தம், திருமருகல் ஒன்றிய சேர்மன் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ ஆசைமணி ஆகியோர் சீட் கேட்கிறார்கள். தி.மு.க-வில் நாகை மாவட்டப் பொறுப்பாளர் கௌதமன், மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் இல.மேகநாதன், நாகை தெற்கு ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பெயரும் அடிபடுகிறது. முன்னாள் எம்.எல்.ஏ நிஜாமுதீன் தி.மு.க-வில் சேர்ந்து போட்டியிடக் கூடுமெனத் தெரிகிறது. அ.தி.மு.க கட்டமைப்பு வலுவாக இருப்பதால், தற்போதைய நிலவரப்படி தொகுதி அ.தி.மு.க-வுக்குச் சாதகமாகவே உள்ளது!

என்ன செய்தார் எம்.எல்.ஏ? - கீழ்வேளூர்

சொன்னாரே? - மீனா, அ.தி.மு.க

`குடிநீர்ப் பிரச்னையைத் தீர்ப்பேன், அனைவருக்கும் வீடு கட்டித்தர முயல்வேன், விவசாயம் சார்ந்த தொழிற்சாலை கொண்டுவருவேன்’ என்றார். இவற்றில் ஒன்றைக்கூட அவர் செய்யவில்லை. சின்னத்தும்பூர், கிராமத்துமேடு உள்ளிட்ட கிராமங்களில் குடிநீரை விலைக்கு வாங்கித்தான் குடிக்கிறார்கள். கஜா புயல் நேரத்தில் சில கிராமங்களில் மக்கள் எம்.எல்.ஏ-வை ஊருக்குள்ளேயே விடவில்லை.

செய்தேனே! - மதிவாணன், எம்.எல்.ஏ., தி.மு.க

தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கீழ்வேளூர் பேருந்து நிலையம் கட்டித் தந்திருக்கிறேன். மகிழி உட்பட குடிநீர் கிடைக்காத பல பகுதிகளுக்குக் குடிநீர் வசதி செய்துகொடுத்துள்ளேன். மருத்துவமனைகளுக்குத் தேவையான உபகரணங்கள், பள்ளிகளுக்குத் தேவையான பெஞ்ச், டெஸ்க் போன்ற பொருள்களை வாங்கித் தந்திருக்கிறேன். அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கென தனிக் கழிப்பறைகள் கட்டித் தந்துள்ளேன். சட்டமன்றத்தில் கோரிக்கைவைத்து, அரசு மருத்துவக் கல்லூரியை என் தொகுதிக்குக் கொண்டுவந்துள்ளேன். விவசாயம் சார்ந்த தொகுதியாக இருப்பதால், விவசாயக் கல்லூரி அமைக்க தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டினோம். அதை அ.தி.மு.க ஆட்சி செய்துதர முன்வரவில்லை.

மீனா - மதிவாணன்
மீனா - மதிவாணன்

கள நிலவரம்: அ.தி.மு.க-வில் வேளாண்மை விற்பனைப் பிரிவு தலைவரான இளவரசன், கடந்தமுறை போட்டியிட்ட மீனா, ஒன்றியச் செயலாளரான குணசேகரன், தாழை சரவணன் ஆகியோர் சீட் கேட்கிறார்கள். தி.மு.க-வில் சிட்டிங் எம்.எல்.ஏ மதிவாணன், மாவட்டப் பொறியாளர் அணியைச் சேர்ந்த செந்தில் ஆகியோர் முட்டி மோதுகிறார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் களமிறங்க முன்னாள் எம்.எல்.ஏ மகாலிங்கம் சீட் கேட்கிறார். இன்றைய சூழலில், கூட்டணி பலத்தால் தொகுதி, தி.மு.க-வுக்குச் சாதகமாக இருக்கிறது!